தற்போது பா.ஜ.க அரசு மக்கள் முன் வைத்துள்ள ‘தேசியக் கல்விக் கொள்கை 2019’ நகல் குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஒரு கட்டுரை இப்படித் தொடங்குகிறது: “பா.ஜ.க அரசின் கல்விக் கொள்கை என்றவுடன் நம் எல்லோருக்கும் வரும் ஐயம் காவிமயமாக்கலை நோக்கமாகக் கொண்டு அது உருவாக்கப்பட்டிருக்கும் என்பதுதான்.

நல்ல வேளையாக அப்படி எதுவும் இதில் இல்லை”. அப்படியெல்லாம் வெளிப்படையாக எதுவும் பேசப்படவில்லை என்பது உண்மைதான். ஆரம்ப மற்றும் உயர்கல்வியில் பன்னாட்டுத் தர அளவில் இந்தியக் கல்வியை இன்றைய உலக அளவிலான கல்விச் சூழலுக்குக் தக தகவமைப்பது என்கிற அடிப்படியில்தான் விண்வெளி விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் இந்த அறிக்கை அமைந்துள்ளது. ஆனால் அது மிக நுணுக்கமாக நமது நாட்டுக்கே உரித்தான சாதி, தீண்டாமை, பெரும்பான்மை மதவாதம் ஆகியன குறித்து வெளிப்படுத்தும் மௌனம் மோடி அரசைப் பொருத்தமட்டில் போதுமானது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலக அளவில் இன்றைய அரசியல், பொருளாதாரம்,தொழில், வணிகம் முத்லான எல்லாத் துறைகளிலும் தனது இருப்பை நிலைநாட்டத் துடிக்கும் மோடி அரசு அப்படியெல்லாம் கல்வியை பழைய குருகுலக் கல்வி அமைப்பாக ஆக்கிவிட முடியாது. ஒருபக்கம் அது இன்றைய நவ தாராளவாத உலகக் கண்ணோட்டத்திற்குப் பொருந்திப் போக வேண்டும். காவிமயப்படுத்தல் முதலான ‘அஜென்டா’வை முன்வைத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தேவைற்ற சர்ச்சைகளை நாம் ஏற்படுத்திவிடக் கூடாது. நாம் செய்ய வேண்டியதை நடைமுறையில் செய்து கொள்ளலாம் என்பதுதான் இன்று மோடி அரசின் அணுகல்முறையாக உள்ளது.

வாஜ்பேயி தலைமையில் 1999 – 2014 காலகட்டத்தில் பா.ஜ.க அரசு அமைந்தபோது சோதிடம், புரோகிதம் குறித்தெல்லாம் பாடங்கள் பல்கலைக்கழகங்களில் தொடங்குவது என முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான மனித வளத்துறை அமைச்சகம் திட்டமிட்டபோது கடுமையான எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் இங்கு உருவாயின. உலக அளவில் முக்கியமான இந்திய விஞ்ஞானிகள் பலரும் கையொப்பமிட்ட அறிக்கைகள் உலகெங்கும் பரவிக் கடும் கண்டனத்திற்கு ஆளாயின. அதற்குப் பின் அது அரசுத் தரப்பில் வற்புறுத்தப்படவில்லை.

ஆனால் இன்று நிலைமை என்ன? தமிழ் வளர்ச்சிக்கென உருவாக்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இன்று சோதிடம் தொடர்பான பட்டயப் படிப்பு சொல்லிக் கொடுக்கப்படவில்லையா? அதுபோல இம்மாதிரியான அதன் இந்துத்துவத் திட்டங்களை அது வெளிப்படையாக முன்வைக்காமல் நடைமுறையில் செய்லபடுத்துவதுதான் இன்று அதன் அணுகல்முறையாக உள்ளது என்பதை நாம் மனங்கொள்வது அவசியம்.

மோடி அரசு பதவி ஏற்றவுடன் முன்னாள் அரசு அதிகாரி டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இன்றைய இந்த தேசியக் கல்விக் கொள்கை அறிக்கையை உருவாக்குவதற்கான அடிப்படைக் அணுகல்முறைச் சட்டகம் இயற்றப்பட்டது. அது பல மாதங்கள் வரை அன்றைய கல்வித்துறைக்குப் பொறுப்பேற்றிருந்த அமைச்சர் ஸ்மிருதி ராணியால் மக்கள் முன் வைக்கப்படாமையைக் கண்டித்து சுப்பிரமணியம் பின் அதைத் தானே வெளியிட்டார். அதற்குப்பின் மனித வளத்துறை அமைச்சக இணையத்தளத்தில் அவ்வரைவின் முக்கிய கூறுகள் வெளியிடப்பட்டன. அப்போதும் அது முழுமையாக வெளியிடப்படவில்லை.

2017 ல் அமைக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை தயாரித்து முடிக்கப்பட்டபின்பும் பலமாதங்கள் வரை அது அரசிடம் அளிக்கப்படவில்லை. இப்போது இரண்டாம் முறையாக மோடி அரசு இன்னும் அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பின்பு அது உடனடியாக வெளியிடப்பட்டு, அந்த 484 பக்க விரிவான அறிக்கை குறித்து மக்களின் கருத்துக்கள் கோரப்பட்டன. ஆனால் அவ்வாறு கருத்து அறிவிக்க மக்களுக்குக் கொடுக்கப்பட்ட நாட்கள் வெறும் 27 மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது.

நாமும் அவசர அவசரமாக அதை முழுவதும் படித்தும் படிக்காமலும் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டுள்ளோம். ஒரு வேளை தனது முதல் நூறுநாள் வேலைத் திட்டத்தின் அங்கமாக மோடி அரசு இந்த அறிக்கையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

கல்வி, மருத்துவம் முதலான சேவைத்துறைகளையும் ‘காட்’ வணிக ஒப்பந்தத்திற்குள் கொண்டுவரும் ‘காட்ஸ்’ (GATS) ஒப்பந்தத்திற்கு இந்திய மக்களை ஒப்புக் கொடுக்கும் அவசரத்துடன் இயற்றப்பட்ட சுப்பிரமணியம் குழு அறிக்கைக்கும் கஸ்தூரிரங்கன் குழு அறிக்கைக்கும் இடைப்பட்ட இந்த நான்காண்டுகளில் இன்று உயர்கல்வித் துறையில் பல புதிய திட்டங்கள், மாற்றங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டக சிலவற்றைiச் சொல்வதானால் GIAN Initiative எனும் பெயரில் வெளிநாடுகளிலிருந்து 20 மணிநேர விரிவுரைக்கு 5,00,000 ரூ ஊதியத்தில் பேராசிரியர்களைத் தருவித்தல், பெரிய அளவில் ‘ஆன் லைன்’ படிப்புகள் (MOOCs) தொடங்குதல், 5ம் வகுப்பிற்குப் பின் பாஸ்- ஃபெயில் முறையை நடைமுறைப்படுத்துதல், பொருளாதாரத் தன்னாட்சி (Financial autonomy), NET, NEET முதலான தேசியத் தேர்வுகள் (National Testing Agency), உயர்நிலை தன்னாட்சிப் பல்கலைக் கழகங்கள் (Institute of Eminence -IoE), உயர் கல்வி நிதி நல்கை முகமை (Higher Education Financing Agency-HEFA) முதலான செயல்பாடுகள் மற்றும் அமைப்புகள் உருவாக்கம் ஆகியவற்றைச் சொல்லலாம்,
இத்தனைக்கும் பின்புதான் இன்று இந்த தேசியக் கல்விக் கொள்கை நம்முன் வைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்தச் செயல்பாடுகளுக்கும், இன்றைய இந்த அறிக்கைக்கும் வேறுபாடுகள் உள்ளன. எனில் இவற்றில் எவை நிறைவேற்றப்படும்? எவை புறந்தள்ளப்படும்?

அதேபோல இந்த கஸ்தூரிரங்கன் அறிக்கைக்கும், அந்த அறிக்கைக்கான கொள்கைத் திட்டமாக அறிவிக்கப்பட்ட சுப்பிரமணியம் குழு அறிக்கைக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக சுப்பிரமணியம் குழு அறிக்கை தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது. ஆனால் கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை மும்மொழித்திட்டம், இந்தி கட்டாயம் எனச் சொல்லி கடும் எதிர்ப்பை இன்று எதிர்கொள்ள நேரிட்டது.

கடந்த ஐந்தாண்டுகால மோடி அரசின் செயற்பாடுகளுக்கும் கஸ்தூரிரங்கன் குழு முன்வைக்கும் பார்வைகள் சிலவற்றிற்கும் இடையில் உள்ள சில முரண்பாடுகளை டெல்லியிலுள்ள “கல்வி தொடர்பான திட்டமிடல், நிர்வாகம் ஆகியவற்றுக்கான தேசிய நிறுவனத்தின்’ (IEPA) சுதான்ஷு பூஷன் சுட்டிக்காட்டுவது குறிப்பிடத்தக்கது. மோடி அரசு உயர்கல்வியை அதிகபட்சமாகத் தனியார் மயமாக்கல் சந்தைக்குரியதாக்குதல், போட்டியை மையமாக்குதல், தர நிர்ணயம் செய்து வேறுபடுத்துதல் என்கிற நிலைக்கு இந்த ஐந்தாண்டுகளில் மாற்றியுள்ளார்.

சுயமாகவும், சந்தையில் கடன் வாங்கியும் நிதிதிரட்டல் என்பதையும் செயல்படுத்தியுள்ளார். இந்நிலையில் அரசு நிதியுதவியில் இயங்கும் உயர்கல்விக்கு முதன்மை அளிப்பதைப் பற்றி கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை பேசுவதற்கு ஏதாவது பொருளுண்டா? – என்கிற கேள்வியை முன்வைக்கிறார் பூஷன், அரசாதரவுடன் கூடிய உயர் கல்வியைப் பரிந்துரைக்கும் கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரையின் இந்த வரவேற்கத்தக் தக்க அம்சங்கள் உயர்கல்விச் சந்தை ஒன்றை உருவாக்கியுள்ள மோடி அரசால் புறக்கணிக்கப் படுவதிலேயே முடியும் என பூஷன் கூறுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் பொருளென்ன? கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையில் உள்ள இதுபோன்ற உயர்கல்வி தொடர்பான சில வரவேற்கத்தக்க பரித்துரைகள் தூக்கி எறியப்படும். உயர்கல்வி சந்தைப்படுத்தப்படுதல் தொடரும்.

கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையில் உள்ள மோசமான பரிந்துரைகளான
1.எல்லா மட்டங்களிலும் தகுதி / திறமை என்பதை முக்கியப்படுத்துதவன் மூலம் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் மிக்க இந்தியச் சமூகத்தில் இட ஒதுக்கீட்டிற்கு இருக்கும் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளுதல்,
2.தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு தேவையில்லை எனப் பரிந்துரைத்தல்,
3.நமது சமூகம் ஒரு மோசமான சாதியம், தீண்டாமை ஆகிவற்றைக் கடைபிடிக்கும் சமூகமாகவும், இன்னொருபக்கம் மத அடிப்படையில் பெரும்பான்மை மதவாதத்தை வன்முறையுடன் வெளிப்படுத்தும் சமூகமாகவும் உள்ள நிலையில் கல்விச் செயற்பாடுகளில் “சமூகம்” (community) என்கிற கருத்தாக்கத்தை முதன்மைப்படுத்துத்தல்; அதாவது கல்விச் செயற்பாடுகளில் ‘சமூகத்தின்’ பங்கை வலியுறுத்தல்,
4. இந்திய மொழிக் குடும்பங்களில் சமஸ்கிருதத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை திராவிட மொழிக் குடும்பத்திற்கு அளிக்காமை
5. மாணவர் மற்றும் ஆசிரியர் சங்கங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமை
6. கல்விநிறுவனங்களில் தலித் மாணவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பற்றிப் பேசாமை
முதலான கூறுகளை மட்டுமே மோடி அரசு கஸ்தூரிரங்கன் அறிக்கையிலிருந்து எடுத்துக் கொண்டு செயல்படுத்தும் என்பது உறுதி.
மற்றபடி மோடி அரசு கடந்த ஐந்தாண்டுகளில் கல்வித்துறையில் தொடர்ந்த நடவடிக்கைகள் அனைத்தும் இன்னும் வேகத்துடன் தொடரும் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *