கு. அழகிரிசாமியை வாசிப்போம்!

 ச.தமிழ்ச்செல்வன்

 இந்த ஆண்டு உலகப் புத்தகதினத்தை எழுத்தாளர் கு.அழகிரிசாமியை வாசித்துக்கொண்டாடுவோம். ஏன் அழகிரிசாமியில் துவங்க வேண்டும் என்பதற்கு நான் உணரும் காரணங்கள் சில உண்டு. என்னைப் பொறுத்தவரை தமிழின் முதல் முற்போக்குச் சிறுகதையாளர் கு.அழகிரிசாமிதான் என்பதை நான் அவரது கதைகளை முதன் முதலாக வாசித்த 70களில் அழுத்தமாக உணர்ந்தேன். Ôவெறும் நாய்Õ ஒரு கதை போதும். என்ன மாதிரி அரசியல் கதை அது! இரு முரண்பட்ட வர்க்கங்களின் பிரதிநிதிகளாக பணக்கார டாக்டரும் தோட்டக்காரனும் அவர்களின் நிழல் படைப்புக்களாக டாக்டர் வீட்டுச் செல்ல நாய்க்குட்டியும் தோட்டக்காரர் குடிசைக்கு வெளியே மீந்ததைத் தின்றுவிட்டுத் தெருவைச்சுற்றும் பெயரில்லாத வெறும் நாய். பணக்கார வீட்டு நாய்களுக்குத்தான் செல்லப்பெயர்கள் உண்டு. டைகர், டாமி, புஸ்ஸி, புஷ்கி என்றெல்லாம். ஆனால் ஏழைகளுக்கு சொந்தமாக நாய்கள் கிடையாது. தெரு நாய்களில் ஏதாவது ஒன்று அடிக்கடி குடிசைப்பக்கம் வந்து போனால் அல்லது ராத்திரி வந்து முடங்கிக்கொள்ள நம்ம வீட்டு வாசலை அது தேர்வு செய்தால் அது அந்த ஏழையின் வீட்டு நாய் என அறியப்படும். அப்படி ஒரு வெறும் நாய் பற்றி கு.அழகிரிசாமி எழுதிய அக்கதை உண்மையில் நாயைப்பற்றிய கதை அல்ல. அப்படிப் பெயரற்ற கோடானுகோடி ஏழை எளிய இந்திய மக்களைத்தான் வெறும் நாய் என்கிற குறியீட்டில் உணர்த்துகிறார். எளிய மக்களின் கதை இது. என்ன கொடுமை நடந்தாலும், என்ன அவமானப்பட்டாலும் பொறுத்துப் பொறுத்துப் போகிற வர்க்கத்தோடு நிற்கிற அந்த வெறும்நாய் கடைசியில் பணக்கார வீட்டு நாயையும் பணக்காரனையும் வசமாகக் கடித்துக் குதறுவதோடு கதை முடிகிறது. அத்தோடு முடிக்காமல் கு.அழகிரிசாமி கடைசியில் ஒரு வரி சொல்லி முடிக்கிறார். ”மனுசன் தன் குணத்தை மறந்தாலும் நாய் அதன் குணத்தை மறக்குமா?” ஆம். மனிதனின் ஆதித் தோழனான நாயை முன்னிறுத்தித் தன் சொந்த வர்க்கமான எளிய வர்க்கத்துடன் அரசியல் பேசியிருக்கிறார் கு.அ. பிரச்சாரம் என்று எவரும் ஒரு வார்த்தை பேசிவிட முடியாத கலைஅழகுடன் மிளிரும் இக்கதை எப்போது வாசித்தாலும் புதியசக்தி தருவதாக இருக்கிறது. அன்பளிப்பு என்றொரு கதை. தமிழகத்தின் அரசு மற்றும் தனியார் பள்ளி என நடக்கின்ற 60ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிக்கூடங்களின் ஆசிரியர் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய கதை இது என நான் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன். குழந்தைகளே இயற்கை நமக்களித்த மிகப்பெரிய அன்பளிப்புத்தான். அதிலும் பெரியவர்களாகிவிட்ட நம்மோடு எந்தக் குழந்தையேனும் பிரியமாகப் பழகினால் அல்லது இன்னும் கூடுதலாக நட்பு பாராட்டினால் அடடா அதை விடப் பேறு என்ன இருக்கிறது இந்த வாழ்க்கையில். அப்படி ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை கு.அழகிரிசாமிக்கு இருந்திருக்கிறது. அந்த கணங்களை அந்தக் குழந்தைகளுடனான அற்புதமான தருணங்களை விரலிடுக்குகளில் கசிந்து வழிந்து விடாமல் அப்படியே நமக்கு அள்ளித்தந்திருக்கும் கதைதான் அன்பளிப்பு. கு.அ. நமக்களித்துள்ள மிகப்பெரிய அன்பளிப்பு இக்கதை. கதைக்குள் சாரங்கன் கொண்டுவரும் டைரி என்கிற அன்பளிப்பு எத்தனை வேதனை தரும் அன்பளிப்பு? இக்கதை ஒவ்வொரு பெற்றோரும் வாசிக்க வேண்டிய கதையும்தான். குழந்தைகளைப் புரிந்துகொள்ள விழையும் ஒவ்வொருவரும் வாசித்தாக வேண்டும். தம்பி ராமையா என்கிற அவருடைய மிகச் சின்னக் கதை ஒன்று. 80களின் முற்பகுதியில் செம்மலரின் கரிசல் சிறப்பு மலரைத் தயாரிக்கும் பணி எங்கள் கோவில்பட்டிக் குழுவுக்குக் கிடைத்தபோது
நாங்கள் ஒருமனதாக தம்பி ராமையா கதையை மலரில் சேர்த்தோம். அப்போது எங்களில் பலருக்கு வேலை கிடைக்காமல் ஊரைச்சுற்றிக்கொண்டிருந்தோம். வேலை கிடைத்து அல்லது வேலை தேடி அல்லது வேலை தேட என்று சொல்லிக்கொண்டு சென்னை கிளம்பிய ஒவ்வொருவரையும் வழியனுப்பிவிட்டு கோவில்பட்டி ரயில்வே ஸ்டேசன் பிளாட்பாரத்தில் உட்கார்ந்து நாங்கள் தம்பி ராமையா கதையைப் படித்து அழுதிருக்கிறோம். குறைவான ஊதியத்தில் சென்னையில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் அண்ணன் கிராமத்துக்கு வந்து போகும் ஒருநாளைப்பற்றிய துயரக்கவிதைதான் தம்பி ராமையா. இன்று படித்தாலும் அக்கதை சென்னைக்கும் திருப்பூருக்கும் ஓசூருக்கும் பொருத்தமாக இருக்கிறது. அப்புறம் தேவ ஜீவனம் என்று ஒரு கதை. எந்தக் கதையிலும் வாசகனோடு நேரடியாகப் பேசாத கு.அ. (இதுதானய்யா பொன்னகரம் என்று புதுமைப்பித்தன் பேசியதுபோல) இந்தக்கதையில் மட்டும் இங்கு நடக்கும் அநியாயங்களைப் பார்த்துப் பொறுக்காமல் உடைந்து பேசுகிறார். குடும்ப வாழ்க்கை தரும் மகத்தான மனநிலைகள் பற்றியதாகவும் பெண்களை மதியாத இத்தமிழ்ச்சமூகத்தின் மீதான சாட்டையடியாகவும் இக்கதை வாசிக்குந்தோறும் நம் முதுகில் உறைக்கிறது. இன்னும் நிறையச் சொல்லலாம். ஆகவே நாம் கு.அழகிரிசாமியிலிருந்து துவங்குவது ரொம்பவும் பொருத்தம். தமிழ் நவீன இலக்கியகர்த்தாக்களில் இரண்டு ரகம் உண்டு.ஒன்று பழந்தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையோடும் உலக இலக்கியங்களை நுட்பமாக உள்வாங்கியும் எழுதும் ஒரு ரகம். இன்னொரு வகை படைப்பாளிகளுக்கு உலக இலக்கியங்களோடு மட்டும் பரிச்சயம் இருக்கும். நம் பழந்தமிழ் இலக்கியங்களோடு அறிமுகம் கூட இருக்காது. புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, ரகுநாதன் ஆகிய நம் மும்மூர்த்திகள் முதல் ரகம். அதிலும் குறிப்பாக கு.அழகிரிசாமி கம்பனில் தோய்ந்து கிடந்தவர். அந்தப் பாரம்பரியம் வலுவாகத் தொடராது போனது தமிழ் நவீன உலகத்துக்குப் பேரிழப்புத்தான். புதுமைப்பித்தனைத் தன் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர் கு.அழகிரிசாமி. ரகுநாதனும் புதுமைப்பித்தனும் அழகிரிசாமியும் சென்னை வாழ்க்கையைக் கூட்டாக எதிர்கொண்ட கூட்டாளிகள்.முதலாளித்துவம் தன் அரசாட்சியை ஆவேசத்துடன் நடத்தத்துவங்கியிருந்த -அதே சமயம் பொருளாதார வரலாற்றில் பெருமந்தம் ஏற்பட்ட- 1930களின் தமிழ் வாழ்க்கையை தமிழ் அடையாளத்தோடு இம்மூவரும் தம் கதைகளில் அவரவர் பாணியில் பதிவு செய்திருக்கிறார்கள். புதுமைப்பித்தன் மகாமசானம் என்று சென்னையைச் சொன்னார். கு.அழகிரிசாமி ஆங்கிலேயர் கொண்டு வந்த பஞ்சத்தை திரிபுரம் கதையாக எழுதினார். ரகுநாதன் பஞ்சும் பசியும் என நாவலாக விரித்தார். எழுத்தில் அவரைவிட மிகவும் பின்னால் வந்தாலும் அவருடைய பக்கத்து வீட்டுக்காரரும் பிள்ளை விளையாட்டுத் தோழனுமாகிய கி.ராஜநாராயணன் அழகிரிசாமியின் கதைகளைப் பற்றிக் கூறும்போது ÔÔஇந்தக் கதைகள் தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் ஒரு முப்பது ஆண்டு கால வாழ்க்கை நிலையை உள்ளது உள்ளபடியே பதிவு செய்திருக்கின்றன.அவன் வாழ்ந்த காலத்தில் யாரும் நினைத்துப் பார்க்காத அபூர்வ விஷயங்களை வைத்து இவனைப்போல கதைகள் எழுதியது யாரும் கிடையாது. நினைத்து நினைத்துப் பெருமைப்படத்தக்க சிறுகதைப் படைப்பாளி இவன்” என்கிறார். ஆகவே கு.அழகிரிசாமியை வாசிப்போம் என உலகப்புத்தக தினத்தின் சார்பாக வேண்டுகிறேன். என் தனிப்பட்ட முறையிலும் இப்படி வேண்டுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் ‘திரிபுரம்’ என்கிற ஒரு கதை என் வாழ்வின் திசையையே மாற்றி விட்டதே அதற்காக அவரை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். பாலியல் வன்முறைகள் பெருத்துவிட்ட காலம் இது என்ற
ு இன்று நம்மில் பலரும் புலம்புகிறோம். இது காலம் காலமாக நிகழ்ந்து வரும் கொடுமைதான். மத்திய தர வர்க்கம் தொடப்பட்டதால் செய்தியாகிறது என்பதுதான் புதுசு. நாம் திரிபுரம் கதையை வாசிக்க வேண்டும். வறுமை துரத்தும் வாழ்க்கை பாலியல் வல்லுறவுக்கு அடித்தளமாக அமைவதே கதையின் சாரம். முதல்முறை திரிபுரம் கதையை வாசித்து முடித்த அன்று இரவு எனக்குக் காய்ச்சல் கண்டது.பத்துநாள் காய்ச்சலில் கிடந்து எழுந்தேன். ஒரு கதைக்கு இவ்வளவு சக்தி இருக்கிறதா என்று காய்ச்சலோடு வியந்தேன். முழுசாக நம் வாழ்க்கையை இலக்கியத்தின் பக்கமே வைத்திருக்க வேண்டும் என மனம் தீர்மானம் கொண்டது திரிபுரம் வாசிப்பினால்தான் என்பேன்.ஆனால் அந்த முதல் வாசிப்புக்குப் பின் மீண்டும் அக்கதையை முழுசாக வாசிக்கும் மனத்திடம் இன்று வரை எனக்கு வரவில்லை. ஒரு கதை என்ன செய்து விடும்? என்னவெல்லாம் செய்துவிட முடியும் என எனக்குக் காட்டிய கதை திரிபுரம். அதிலிருந்து சில வரிகள்: ”பஞ்சம் வந்து விட்டது. பஞ்சம் வந்து விட்டால் என்ன? மக்கள் பட்டினி கிடப்பதோடு மட்டுமல்லாமல் மற்றொரு பரிதாபகரமான காரியத்தையும் செய்வார்கள். அதாவது ஒரு பஞ்சப் பிரதேசத்தை விட்டு அதைவிடக் கொடுமையான மற்றொரு பஞ்சப் பிரதேசத்திற்குக் குடி பெயர்ந்து செல்லுவார்கள். பட்டினிப் பட்டாளங்கள் ஏதோ நம்பிக்கையுடன் ஒரு சாலையில் எதிர் எதிர்த் திசையில் பிரயாணம் செய்வது பஞ்சத்தின் கோரமான அலைக்கழிவுகளில் ஒன்று.’’
 அப்புறம் என்ன? வாசிப்போம் கு.அழகிரிசாமியை.வாசிப்போம் நம்மை நாமே.

Show 1 Comment

1 Comment

  1. காலச்சுவடு வெளியிட்டு உள்ள
    கு அழகிரிசாமியின் சிறுகதைகள்
    தொகுப்பு ஒரு பொக்கிஷம்
    என எண்ணுகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *