உலகின் தொல்பெரும் நாகரிகத்தின் அறியப்பட்ட நிலங்களுள் சிந்து நதிக்கரையில் இருந்த ஹரப்பா, மொஹஞ்சதாரோவிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. மனித சமூகம் நாகரிக சமூகமாக உருவாகிய காலத்தை கணிப்பதற்கு, உலகின் பல ஆய்வாளர்களுக்கும் 1924 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட இந்த அகழாய்வு நிலங்கள் பெரும் பங்கினை வழங்கின; வழங்கிக்கொண்டிருக்கின்றன.
அந்தப்பழம்பெரும் நாகரிகம் இந்திய சமூகத்தில் இருக்கும் ஆரிய நாகரிகம், திராவிட நாகரிகம் இவற்றுள் எதற்கு மிகவும் நெருக்கமானது அல்லது சொந்தமானது என்கிற தீவிர கருத்துப்போர்கள் கடந்த 90 ஆண்டுகளாகவே நடந்து வருகின்றன. அதில் திராவிட நாகரிகத்தோடு, சிந்துவெளி நாகரிகமே மிகவும் நெருக்கமானது என்கிற கருத்தே சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட தொடக்க நாள் முதலாக வலுவாக இருந்து வருகிறது. ஆனால் வலதுசாரி ஆய்வாளர்களால் அந்த ஆய்வின் உண்மைத்தன்மையை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், தொடர்ந்து மறுத்துவருகிறார்கள். திராவிடம் சார்ந்த ஆய்வுகளுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக பாரதிபுத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ள நூல் தான் “சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்”. இந்த நூலின் ஆசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன் .
இவர் தற்போது ஒடிசா மாநிலத்தின் கூடுதல் தலைமைச்செயலாளராக உள்ளார். 1984ல் ஐ.ஏ.எஸ்.தேர்வை முதலில் தமிழில் எழுதி வெற்றி பெற்றவரும் இவரே. இவரின் 30 ஆண்டுகால சிந்துவெளி நாகரிகம் குறித்த ஆய்வின் விளைவாக வந்துள்ள இந்த நூல் இதுவரை ஆய்வாளர்கள் அறியாத பல புதிய திறப்புகளை தந்துள்ளது. இதன் காரணமாகவே கடந்த 2016 ஜூன்மாதம் நடைபெற்ற சென்னை புத்தகக்கண்காட்சியில் அதிகம் விற்பனையான ஐந்து நூல்களுள் இதுவும் ஒன்றாக தேர்வானது. அதோடு வெளிவந்த முதல் ஆறு மாதத்திற்குள்ளாக நான்கு பதிப்புகளையும் இந்த நூல் கண்டுள்ளது, இன்றும் தொடர்கிறது. இதுவே இந்த நூலின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள மிகச்சிறந்த சான்றாகும். இனி நூலிற்குள் பயணிப்போம்.
இந்த நூலில் இரண்டு கட்டுரைகள் இருக்கின்றன. ஒன்று சிந்துவெளிப் புதிரும் இடப்பெயர் ஆய்வு தரும் புத்தொளிச்சான்றுகளும் என்கிற கட்டுரை. இந்த நூலாசிரியரின் 30 ஆண்டுகால ஆய்வில் இடப்பெயர்கள் குறித்த ஆய்வே முக்கியமானது. எந்த வரலாற்றுத்தடயங்களும் கிடைக்காத நிலையில் ஒரு இடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்கு செல்லும் மக்கள் தங்கள் நினைவாக தாங்கள் வாழ்ந்த ஊரின் பெயர்களை எடுத்துச்செல்கின்றனர் என்று சொல்கிறார். இது உலகம் முழுவதும் நடந்துள்ளதாக சான்றுகளுடன் கூறுகிறார். அதற்கு ஆதாரமாக தமிழ்த்தொன்மங்களில் உள்ள கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற பெயர்கள் இன்றைய சிந்துவெளிப்பகுதியான பாகிஸ்தான், அதனைத் தாண்டி ஆப்கான், ஈரான் போன்ற பகுதிகளில் பல இடங்களில் அதே பெயர்களிலான ஊர்கள் இருப்பதைக் கூறுகிறார். தமிழ்த்தொன்மத்தில் இருக்கும் சோழத்தலைநகர் மண்மூடிப்போனது என்பதையும், பாண்டியர்களின் தலைநகர் கடல் சீற்றத்தால் அழிந்தது என்பதையும் தெற்கேஉள்ள லெமூரியா கண்டத்தில் தமிழ்த்தொன்ம ஆய்வாளர்கள் தேடுகிறார்கள்.
தெற்கில் நிலம் இருந்ததாக சொல்லப்பட்ட காலத்தில் உலகத்தில் மனித இனமே தோன்றவில்லை என்று நிலவியல் ஆய்வாளர்கள் கூறுகையில், ஏன் அந்த நிலம் இந்தியாவின் வடமேற்கில் இருந்திருக்கக்கூடாது என்கிற கேள்வியையும் எழுப்புகிறார். இரண்டாவது கட்டுரை சிந்துவெளி நகரங்களின் மேல்-மேற்கு, கீழ்-கிழக்கு என்கிற வடிவமைப்பும் அதன் திராவிட அடித்தளமுமாகும். அந்தக்கட்டுரையில் நமது தமிழ்நாகரிகத்தில் இன்றைக்கும் நம் ஊரில் உள்ள மேற்கு வீதிகள் மேட்டுப்பகுதியாகவும், அது மேல்+வீதி என்கிற புரிதலோடும், கிழக்கு வீதி அதைவிடத் தாழ்வான பகுதிகளில் கீழ்+வீதி என்கிற புரிதலோடும் இருக்கின்றன. இது அப்படியே சிந்துவெளி நாகரிகத்திலும் இருக்கின்றது. ஆனால் இந்தோ ஆரியநாகரீகத்தில் அப்படியான வடிவமைப்பு முறைகள் கிடையாது. அதே போல்கோட்டை என்பது நம் ஊர் பெயர்களில்உள்ள அடைமொழி. அதுவும் சிந்து வெளிப்பகுதிகளிலும், வடமாநிலங்களிலும் எப்படி ஊர்ப்பெயர்களாக இருக்கின்றன என்று பட்டியலிடுகிறார். உயரமான, மலை போன்ற பகுதிகள் கோட்டை என்பதாக சொல்வழக்கில் இருந்ததையும் உதாரணங்களோடு சுட்டிக்காட்டுகிறார்.
அதோடு மலை போன்ற உயரமான பகுதிகளில் வாழும் மக்களை உயர்வாக பார்க்கும் வழக்கம் திராவிட நாகரிகத்தில் உள்ளது. அதே வழக்கம் சிந்துவெளி நாகரிகத்திலும் உள்ளது. ஆனால் மலைவாழ் மக்களை கீழாக பார்க்கும் வழக்கமே இந்தோ ஆரிய நாகரிகம். இதன் மூலம் சிந்து வெளிநாகரிகத்திற்கும், திராவிட நாகரிகத் திற்கும் உள்ள ஒற்றுமைகளையும், இந்தோ ஆரியத்திற்கு உள்ள வேற்றுமைகளையும் விளக்கிக்காட்டுகிறார். அந்த ஆய்வை மேலும் வலுப்படுத்தும் விதமாக சிந்துவெளியில் தமிழ் நிலத்தோடு நெருக்கத்தில் உள்ள எல்லா ஊர்ப்பெயர்களையும் இணையதளத்தின் உதவியோடு, பன்னாட்டு நிலவியல் வரைபடங்களிலிருந்தும் சேகரித்து அட்சரேகைகள், தீர்க்க ரேகைகள் உள்ளிட்ட எல்லா துல்லியமானவற்றையும் அறிவியல் பூர்வமாக விளக்கி தனது ஆய்வுகளை பட்டியலிட்டு சொல்லியுள்ளார்.
அதே போல் சிந்துவெளியில் கிடைத்தசேவல் சண்டை சிற்பத்தோடு, சோழர்களின் தலைநகரான திருச்சி உறையூரில் உள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் சிலையில் உள்ள சேவல் சண்டை சிலை என்று எல்லா நிலைகளிலும் ஒப்புமைக்கான தரவுகள் என்னென்ன உள்ளன என்பது போன்ற பலவற்றை தனது நூலில் விளக்கியுள்ளார். நமது தொன்மையான இலக்கியம், தொல்பழங்கதைகள், நிலஅமைப்புகள், பழக்கவழக்கங்கள் என்றுஎல்லாவற்றின் மூலமாகவும் சிந்துவெளியின் அழிவையும், திராவிட நாகரிகத்தின் தொடக்க நிலையையும் இணைக்கும் புள்ளி ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளார். சிந்துவெளி நாகரிகத்தோடு திராவிட நாகரிகம் நெருக்கமானது என்று சொல்லும் ஆய்வாளர்களுக்கு புரியாத இரண்டு செய்திகள், ஒன்று சிந்து வெளி நாகரிகம் அழிந்து சுமார் 3900 ஆண்டுகள் ஆகின்றன. சிந்துவெளியோடு நெருக்கமானது என்று கருதப்படும் திராவிட நாகரிகத்தின் தொடக்கம் எது வென்று தெரியவில்லை. திராவிட மொழிகளில் மூத்த மொழியான தமிழ் மொழியில் கிடைத்த சங்க இலக்கியங்களே (கி.மு.மூன்றாம் நூற்றாண்டு) காலத்தால் முற்பட்டது. சிந்துவெளியின் அழிவிற்கும், சங்க இலக்கிய காலத்திற்கும் சுமார் 1500 ஆண்டுகள் இடைவெளி இருக்கின்றன,
இரண்டாவதாக சங்க இலக்கியம் புழங்கிய நிலத்திற்கும், சிந்துவெளி நிலத்திற்கும் சுமார் 2000 கி.மீ.இடைவெளி, இந்த இரண்டும் தான் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும். இதற்குத் தீர்வு காண வேண்டும் என்றால் இதுவரை படிக்கப்படாமல் இருக்கும் சிந்து வெளி எழுத்துக்களை படிப்பதன் மூலமே அது சாத்தியம் என்று சொல்கிறார் நூலின் ஆசிரியர். இவரே தமிழ் இலக்கிய மாணவராக இருப்பதால், தமிழ் தொன்மத்தின் சாட்சியாக இருக்கும் சங்க இலக்கிய அறிவின் மூலம் அந்த எழுத்துக்களை தேடும் முயற்சி தொடங்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். இந்த நூல் வெளிவந்த அதே காலக்கட்டத்தில், மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் காலத்தால் முற்பட்ட நாகரிக நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தில் கிடைத்த தரவுகளை வைத்து ஆய்வு செய்வதற்கான வாய்ப்புகள் இந்த நூலில் அதிகமாக உள்ளது. ஒரு சிறந்த நூலை நான்கு அடிப்படையில் தேர்வு செய்யலாம் . முதலாவதாக அது பேச எடுத்துக்கொண்ட பொருளுக்கு முழுமையான நியாயத்தை செய்துள்ளதா என்று பார்க்க வேண்டும். அடுத்து அந்தநூலின் பேசுபொருள் கையாளப்பட்டுள்ள அகலத்தையும் ஆழத்தையும் பார்க்கவேண்டும். மூன்றாவதாக மொழிவளத்தைப் பார்க்கவேண்டும். எல்லா வற்றிற்கும் மேலாக அந்த நூல் காலத்தின் அரசியல் பண்பாட்டுத்தேவையை நிறைவு செய்கிறதா என்று பார்க்கவேண்டும்.
அந்த வகையில் பேசுபொருளின் நியாயத்திலும், அகலமாகவும், ஆழமாகவும் செய்யப்பட்ட ஆய்வுத்தளத்திலும், மொழிவளத்திலும், எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாகரிகத்தின் தொன்மைக்கான கீழடி அகழாய்வை மூடி மறைக்க மோடி அரசு செய்துவரும் சூழ்ச்சிகளுக்கிடையில், கீழடி ஆய்வை மேலும் முன்னெடுத்துச்செல்ல துணைநின்று காலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் விதத்திலும் சிறந்து விளங்கும் நூலாக சிந்துவெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளம் இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே 2016ஆம் ஆண்டிற்கான சிறந்த தொன்மைசார் நூலுக்கான தோழர். கே.முத்தையா நினைவு விருதினை சிந்துவெளிப்பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்னும் இந்தநூலுக்கு தமுஎகச வழங்கி கௌரவித்துள்ளது.
– நன்றி தீக்கதிர் நாளிதழ்