சூத்திரதாரியின் கைகளில் வரையறைக் குழு…

கஸ்தூரிரங்கனின் வார்த்தைகளில் சொல்வதானால், வரைவறிக்கை குழுவிற்கான விழிப்பூட்டல்களை வழங்கி, உத்திகளை வடிவமைத்துக் கொடுத்த ஸ்ரீதர் கர்நாடக மாநில புத்தாக்க குழுவின் முன்னாள் உறுப்பினர் மற்றும் கர்நாடகா மாநில அறிவாணையத்தின் முன்னாள் உறுப்பினர் செயலாளர் என்பதாக வழக்கம் போல வரைவறிக்கை உறுப்பினர் பட்டியலில் முன்னாள் பிரபலமாக மட்டுமே அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.

இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், அப்போது கர்நாடக மாநில அறிவாணையச் செயலாளராக என்ன செய்திருந்தார் என்பதை அறிந்து கொள்ள ஸ்ரீதரைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டிய தேவை நமக்கு ஏற்படுகிறது. அவற்றை அறிந்து கொண்டால், அவர் வெறுமனே கர்நாடகா மாநில அறிவாணையத்தின் முன்னாள் உறுப்பினர் செயலாளர் மட்டுமாகவே இருக்கவில்லை என்பதுவும், அதற்கும் மேலானவராக இருந்திருப்பதுவும், இப்போதும் இருந்து வருவதுவும், குழுத் தலைவர் கஸ்தூரிரங்கனுக்கும் அவருக்குமிடையே இருந்த உறவும், தொடர்புகளும்கூட நமக்குத் தெரிய வரும்.

1954 செப்டம்பர் 15 அன்று ஆந்திரப்பிரதேசத்தில் பிறந்த ஸ்ரீதர் தன்னுடைய நான்காவது வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டு, உடல் செயல்பாடுகளை இழந்தவர். மிக இளம் வயதான பத்தாவது வயதிலேயே தன்னுடைய பெற்றோரைப் பிரிந்து, சென்னை அடையாறில் இருக்கின்ற எலும்பியல் மையத்துடன் இணைவிக்கப்பட்டுள்ள உறைவிடப் பள்ளியில் பயில்வதற்காகத் தனித்து வாழ்ந்தவர்.

சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே நடமாடிய இவர், தன்னிடமுள்ள உடல்ரீதியிலான குறைபாடுகள் தன்னுடைய நடவடிக்கைகளை ஒருபோதும் பாதித்ததேயில்லை என்கிறார். அதுதான் உண்மையாகவும் இருக்கிறது. வணிகவியல் பட்டதாரியான இவர் 1979 முதல் 1999 வரையிலும் விஜயா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி இருக்கிறார். பின்னர் மைசூர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்று பெங்களூரு பல்கலைக்கழகத்தின் கனரா வங்கி நிர்வாகவியல் துறையில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்திருக்கிறார்.

கர்நாடக மாநில புத்தாக்க குழுவின் உறுப்பினராக ஸ்ரீதர் இருந்த போது, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட கர்நாடக மாநில அறிவாணையத்தின் முதல் உறுப்பினர் செயலாளராகவும், நிர்வாக இயக்குநராகவும் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டார்.

கர்நாடகத்தில் பாஜகவின் எடியூரப்பா முதல்வராக இருந்த போது, மாநில உயர்கல்வித்துறைச் செயலாளர் சுரஞ்சன் தலைமையில் 2008 செப்டம்பர் 5 அன்று மூன்றாண்டு காலத்திற்கு நிறுவப்பட்ட இந்த அறிவாணையத்தின் இருப்புக் காலம், 2011 செப்டம்பரில் முடிவடைந்தது. பின்னர் அப்போதைய பாஜக முதல்வர் சதானந்தா கவுடாவால் 2013 ஜூன் வரைக்கும் காலநீட்டிப்பு வழங்கப்பட்டது. கோவாவிற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்தில்தான் இந்தியாவிலேயே இரண்டாவதாக இத்தகைய மாநில அறிவாணையம் அமைக்கப்பட்டது.

அறிவாணையத்தின் காலம் 2013 ஜூன் வரை நீட்டிக்கப்படிருந்தாலும், 2013 பிப்ரவரி மாதத்திலேயே அது கலைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. 2013 மார்ச் மாதம் மாநில சட்டமன்றத்திற்கான வேலைகள் துவங்கவிருப்பதால் ஆணையத்தைக் கலைத்து விடுவது என்று முடிவெடுக்கப்பட்டதாக ஆணையத்தின் செயலாளரான ஸ்ரீதர் அப்போது தெரிவித்தார்.

மாநிலத் தேர்தலுக்கும், 2013 ஜூன் வரை தன்னுடைய இருப்பைக் கொண்டிருந்த அறிவாணையம் தொடர்ந்து செயல்படுவதற்கும் என்ன தொடர்பு இருந்தது என்பது புரியவில்லை. ஆணையத்தில் பணி புரிந்தவர்களின் தன்விவரக் குறிப்புகளை பல அரசு நிறுவனங்களும் கேட்டு வாங்கிக் கொண்டிருப்பதால், அவர்கள் பணி இழப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் ஸ்ரீதர் அப்போது தெரிவித்தார். அந்தப் பணியாளர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசாங்கம் முன்கூட்டியே செய்து முடித்திருப்பதையே அது நமக்கு காட்டுகிறது.

மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பாஜகவிடமிருந்து காங்கிரஸின் கைகளுக்கு ஆட்சி சென்று, சீத்தாராமையா முதல்வரான பிறகு 2013 டிசம்பர் 28 அன்று கஸ்தூரிரங்கன் தலைமையிலேயே அந்த ஆணையம் மீண்டும் அமைக்கப்பட்டது. கஸ்தூரிரங்கன் தலைமையிலேயே அந்த ஆணையம் திரும்ப அமைக்கப்பட்டாலும், பெங்களூரு பல்கலைக்கழக கனரா வங்கி நிர்வாகத்துறைப் பேராசிரியர் பணிக்கே திரும்பிச் சென்றிருந்த ஸ்ரீதர் மாநில அறிவாணையத்தின் பணிக்கு மீண்டும் அழைக்கப்படவில்லை.

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக் வெற்றி பெற்று மோடி தலைமையில் மத்திய அரசு பதவியேற்ற பிறகு, 2015ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளி என்ற அடிப்படையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியால் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற மத்திய கல்வி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக ஸ்ரீதர் நியமனம் செய்யப்பட்டார். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பிற்கான தேசிய துணைத்தலைவராக ஏற்கனவே சேவை புரிந்திருந்த இவர், 2017 நவம்பர் 26 அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் கர்நாடகப் பிரதேசத்திற்கான பொறுப்பாளர்களுக்கான தேர்தலில் பெங்களூரு மாநகர சங்சாலக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கர்நாடக மாநில அறிவாணையத்தின் செயலளாராக ஸ்ரீதர் செயல்பட்டுக் கொண்டிருந்த வேளையில், கர்நாடக மாநில அரசால் வழங்கப்படும் கர்நாடக மாநில அரசின் உயர் விருதான ராஜ்யோத்சவ விருது 2010ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது.

பல்கலைக்கழகப் பேராசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று பெங்களூருவில் தற்போது வசித்து வரும் இவர் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் நிர்வாகவியல் படிப்புகளுக்கான வாரிய உறுப்பினர், குஜராத் மத்திய பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வருகின்ற ஆசிரியர்கள் மற்றும் கற்பித்தலுக்கான பண்டிட் மதன்மோகன் மாளவியா தேசிய திட்டத்தின் கீழ்  பல்வேறு திட்டங்களுக்கான ஒப்புதலை வழங்குகின்ற வாரியத்தின் உறுப்பினர், மாணவர் கல்விச் சேவை அறக்கட்டளை சார்பில் நடத்தப்படுகின்ற கல்வி மற்றும் சமூக ஆய்வுகளுக்கான மையத்தின் கௌரவத் தலைவர், சேவைக்கான இளைஞர்கள் அமைப்பின் ஆலோசகர், மாநில ஆளுநர் வஜுபாய் வாலா தலைவராக இருக்கின்ற கர்நாடக செஞ்சிலுவைச் சங்கத்தின் துணைத் தலைவர் என்று பல பதவிகளையும் ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வருவதின் பின்னணியில் மத்திய பாஜக அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு இருப்பது தெரிகிறது.

வரைவறிக்கை குழுவின் செயல்பாடுகளிலும் ஸ்ரீதருக்கு அளிக்கப்பட்டு வந்த முக்கியத்துவம்  பல்வேறு தளங்களில் வெளிப்பட்டிருக்கின்றது. பெங்களூருவில் வசித்து வரும் வரைவறிக்கைக் குழு உறுப்பினரான ஸ்ரீதர் தலைமையிலே, வரைவறிக்கை தயாரிக்கும் குழு அன்றாடம் உரிய முறையில் செயல்படுவதற்கென்று தொழில்நுட்பச் செயலகம் பெங்களூருவிலேயே தனியாக உருவாக்கப்பட்டது.  இந்த செயலகத்திற்காக தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் அலுவலகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடனான அலுவலகத்தை பல்கலைக்கழக மானியக் குழு

ஏற்படுத்திக் கொடுத்தது.  கிடைக்கின்ற தரவுகளை ஒருங்கிணைப்பது, ஆய்வு செய்வது போன்ற இந்த செயலகத்தின் பணிகளைச் செய்வதற்கென்று ஒன்பது பேர் நியமனம் செய்யப்பட்டனர்.

வரைவறிக்கை குழுவிற்காக அமைக்கப்பட்ட இந்த தொழில்நுட்பச் செயலகம் 2017 ஆகஸ்ட் 1 அன்று பெங்களூருவில் திறந்து வைக்கப்பட்ட போது, புதிய தேசிய கல்விக் கொள்கை ஒட்டுமொத்த தேச முன்னேற்றத்திற்குத் தேவையான கருத்துக்களை மிகவும் சுருக்கமானதாக முன்வைப்பதாக இருக்கும் என்று கூறிய கஸ்தூரிரங்கன், தக்சசீலா, நாளந்தா பல்கலைக்கழகங்களின் மூலம் இந்த உலகிற்கு அறிவை வழங்கிய தேசமாக இருந்த இந்தியா இன்றைய காலகட்டத்தில் அந்தப் பெருமையை இழந்து நிற்கிறது என்றும், இந்திய உயர்கல்வியை உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

தேசிய தர மதிப்பீட்டு நிறுவனத்தின் இயக்குநர் D.P.சிங், நவீன அறிவு, பழமையான பாரம்பரிய அறிவு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தரும் வகையிலே முழுமையான கல்விக்கான தேவை இப்போது இருப்பதாக குறிப்பிட்டுப் பேசினார். கல்வியுடன் தொடர்புடைய அனைவரின் கருத்துக்களும் கேட்கப்பட்டு அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த ஆண்டு இறுதிக்குள் வரைவறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று வரையறைக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் உறுதியளித்தார்.

வரைவறிக்கை குழுவின் கூட்டங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் 11 கூட்டங்களில் 8 கூட்டங்கள் பெங்களூருவிலேயே நடைபெற்றிருக்கின்றன. எஞ்சிய 3 கூட்டங்கள் மட்டுமே புதுடெல்லியில் நடைபெற்றிருக்கின்றன. வரைவறிக்கை குழு கூட்டங்கள் பெரும்பாலும் பெங்களூருவிலே நடைபெற்றிருப்பதற்கான காரணம் ஸ்ரீதரின் உடல் நிலை குறித்ததாக இருக்கலாம் அல்லது கஸ்தூரிரங்கன் பதிவு செய்திருக்கின்ற பாராட்டுக்குள் ஒளிந்திருக்கலாம்.

இப்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரைவறிக்கையில், ”கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலை கவனமாக மதிப்பாய்வு செய்தல், கூட்டங்களில் கலந்து கொள்கிற தனிநபர்கள் / நிறுவனங்கள் / முகமைகளை அடையாளம் காணுதல் போன்ற நடவடிக்கைகளோடு, விவாதங்களை நடத்துவதற்கான பல வழிகளையும் வழங்கி குழுவின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் பேராசிரியர் M.K.ஸ்ரீதருக்கு மிகச் சிறந்த பங்கு இருந்தது.

மேலும் கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் தொடர்பாக பல முனைகளில் இருந்தும் ஏற்படும் தாக்கங்கள் குறித்து சரியான நேரத்தில் அவர் விழிப்பூட்டல்களை வழங்கி வந்தார். இந்தக் குழு வெவ்வேறு பகுதிகள் தொடர்பான பொருத்தமான உத்திகளை வடிவமைப்பதற்கு, கல்வித்துறையில் அவருக்கிருந்த பரந்த அறிவும் அனுபவமும் மிக முக்கியமான சொத்தாக இருந்தன” என்று ஸ்ரீதரைப் பாராட்டி கஸ்தூரிரங்கன் பதிவு செய்திருக்கிறார்.

ஸ்ரீதரைப் பொறுத்தவரை கஸ்தூரிரங்கன் வெறுமனே கல்விக் கொள்கை வரையறைக் குழுவின் தலைவராக மட்டும் இருக்கவில்லை. இருவருக்குமிடையிலான தொடர்புகள் கர்நாடக மாநில அறிவாணையம் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டிலிருந்தே மிக நெருக்கமாக இருந்தது நன்கு தெரிந்ததே. காங்கிரஸ் ஆட்சியில் அறிவாணையப் பணிகளில் ஸ்ரீதர் இணைக்கப்படவில்லை என்றாலும், கஸ்தூரிரங்கனிடம் தனக்கு இருந்த தொடர்பை ஸ்ரீதர் தொடர்ந்து நீட்டித்து வந்திருப்பது, 2016 டிசம்பர் 15 அன்று பெங்களூரு தேசிய கல்லூரி மைதானத்தில் ஆர்எஸ்எஸ்சின் துணை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ‘ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி – 2016’ நிகழ்ச்சியின் மூலம் தெரிய வருகிறது. ஸ்ரீதர் கலந்து கொண்ட அந்த கண்காட்சியில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டவர் கஸ்தூரிரங்கன்.

”பொருளாதார முன்னேற்றத்தைப் பொறுத்தவரை இந்தியா 6 அல்லது 7ஆவது இடத்தில் நிற்கிறது. இதே அளவிலான முன்னேற்றத்தை நாம் பராமரித்து வந்தால் 2030க்குள் மூன்றாவது இடத்தை எட்டி விடுவோம். ஆயுர்வேதம், வானியல், யோகா மற்றும் கணிதம் தொடர்பாக உலகிற்குத் தேவையான மகத்தான பங்களிப்புகளை இந்தியா செய்துள்ளது” என்று இந்தியாவின் பாரம்பரியப் பெருமை குறித்து பேசி புளகாங்கிதம் அடைந்தவராக ஸ்ரீதருடன் அந்தக் கூட்டத்தில் காவித்துண்டு அணிந்து கஸ்தூரிரங்கன் கலந்து கொண்டிருந்தார்.

ஆன்மீக கண்காட்சியில் கஸ்தூரிரங்கனின் பங்கேற்பு அறிவியலாளர் என்ற அவரது முகத்திரையை அகற்றியிருந்தது. இந்த கண்காட்சி நடந்தது 2016 டிசம்பரில்… 2017 ஜுனில் கஸ்தூரிரங்கன் கல்விக்கொள்கை வரவறிக்கை குழுத் தலைவர், ஸ்ரீதர் அதில் முழுப் பொறுப்புடனான உறுப்பினர். இடையில் உள்ள ஆறு மாதங்களுக்குள்ளாக அனைத்தும் பேசி முடிக்கப்பட்டிருக்கலாம்.

அந்தக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ஸ்ரீதர் குறுகிய மனப்போக்கு கொண்ட மதமாக ஹிந்து மதம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் அது மிகவும் பரந்த மனப்பான்மை கொண்டு, அனைவரையும் ஒருங்கிணைக்கின்ற மதமாகவே இருக்கிறது என்றார். மதமாற்றத்தின் மூலமாகப் பரவுவதாக இல்லாமல், மனவுறுதியால் பரவுவதாக ஹிந்து மதம் இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மகத்துவத்தை எடுத்துரைத்துக்கும் வகையில், ”சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து உலகமெங்கிலும் இருந்து கண்டனக் குரல்கள் எழும்பத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவின் கவனம் எப்போதுமே பிரச்சனைகள் உருவாவதைத் தடுப்பதிலேயே இருந்திருக்கிறது. பிரச்சனைகள் வந்த பிறகு எதிர்வினையாற்றுபவர்களாக நாம் ஒருபோதும் இருந்ததில்லை” என்றும் ஸ்ரீதர் பேசினார்.

கல்விக் கொள்கை வரையறைக் குழு உறுப்பினராக இருந்த ஸ்ரீதர், குழுத் தலைவர் கஸ்தூரிரங்கன் உள்ளிட்ட மற்றெந்த உறுப்பினர்களையும் விட வரையறுக்கப்பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்கி அதீதமாகச் செயல்பட்டுக் கொண்டு வருகிறார். ”மக்களின் கைகளில் அளிக்கப்பட்டுள்ள இந்த வரைவறிக்கை குறித்து அவர்கள் கருத்து கூறலாமே தவிர, அதை விடுத்து கல்விக் கொள்கைகளை எதிர்ப்பது போன்ற பிற விஷயங்களில் ஈடுபடுவது தேவையற்றது” என்று ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கின்ற ஸ்ரீதர்,  கல்விக்கொள்கைகள் குறித்து எழுகின்ற விமர்சனங்களுக்கு ஊடகங்களின் வழியாக விளக்கம் அளிக்கின்ற வேலைகளிலும் அதிதீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பது உண்மையிலேயே வேடிக்கையானதுதான்.

வரைவறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட உடனே மும்மொழிக் கொள்கைகள் குறித்து எதிர்ப்பு எழுந்த போது, “மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பவர்கள், போராட்டம் நடத்துபவர்கள் முதலாவதாக அந்த வரைவறிக்கையை குறிப்பாக மொழிகள் பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை பற்றி படிக்க வேண்டும். ஏற்கனவே தேசியக் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்ற மும்மொழிக் கொள்கையை நடைமுறையில் கடைப்பிடித்து அமல்படுத்த வேண்டும் என்றே நாங்கள் கூறியிருக்கிறோம்.

ஹிந்தி பேசுகின்ற மாநிலங்களுக்கும் நாங்கள் அந்த மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தி இருக்கின்றோம். ஹிந்தியுடன் மற்றுமொரு இந்திய மொழியை அங்கிருப்பவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இதுகுறித்து பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களைச் சமர்ப்பிக்கலாம் எனும் வாய்ப்பு இருக்கும் போது, இதுபோன்று எழுகின்ற எந்த ஆட்சேபணைகளுக்கும் வரைவறிக்கை குழு பதில் சொல்லப் போவதில்லை.

நாங்கள் ஏன் அவ்வாறு பதில் சொல்ல வேண்டும்? அனைத்து மதத் தலைவர்களையும் கலந்தாலோசித்த பிறகே மதரசாக்கள் குறித்த கருத்தை நாங்கள் கூறியிருக்கிறோம். மதரசாக்களில் படிக்கின்ற லட்சக்கணக்கான குழந்தைகள் தேசிய நீரோட்டத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகவே மதரசாக்களை மட்டும் குறிப்பிட்டு நாங்கள் எழுதியிருக்கிறோம். மத்திய அரசாங்கம் கொடுத்த பணியை வரைவறிக்கை குழு முடித்துக் கொடுத்திருக்கிறது. பணியை எங்களுக்கு கொடுத்த அரசாங்கம் அதனை உறுதியாக நிறைவேற்றும்” என்பதாக ஸ்ரீதர் பல்வேறு கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

வரைவரிக்கை வெளியிடப்பட்ட இந்த ஜுன் மாதத்தில் மட்டும், மங்களூர் பல்கலைக்கழகத் துணைவேந்தருடன் கனரா கல்லூரியில் ஏபிவிபி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி, மாணவர் கல்விச் சேவை அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய தேசிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கம்,  2019 ஜூன் 20 அன்று கல்வி மற்றும் சமூக ஆய்வுகளுக்கான மையத்துடன் இணைந்து ஜெயின் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் நடத்திய கூட்டம் என்று கர்நாடகத்தில் பல கூட்டங்களில் கலந்து கொண்டு, கல்விக் கொள்கைகளுக்கு ஆதரவு திரட்டுகின்ற செயலை, வரையறைக் குழுவில் இருக்கின்ற வேறெவரும் முன்னெடுக்காத செயலை, ஸ்ரீதர் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.

கேள்வி எழுப்புகிறவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று சொல்லி விட்டு, சங் பரிவார அமைப்புகளின் துணையுடன் கர்நாடகம் முழுவதிலும் தனது ஆதரவுப் பிரச்சாரத்தை துவக்கி இந்தக் கருத்துக்களுக்கு பதில் அளித்து வருவது புரியாத புதிராகவே இருக்கின்றது.

தேசிய கல்விக் கொள்கைகள் குறித்த வரைவறிக்கை தயார் செய்வதற்காக ஸ்ரீதருடன் பெங்களூருவில் சந்தித்துக் கொண்ட கஸ்தூரிரங்கனுக்கு ஸ்ரீதர் இல்லாத கர்நாடகா அறிவாணையத் தலைவர் பதவி புளித்துப் போய் விட்டதா என்பது நமக்குத் தெரியவில்லை. 2018 மே மாதம் கர்நாடக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட குமாரசாமி, ஜூன் 7 அன்று பெங்களூருவில் கஸ்தூரிரங்கன் தலைமையில் நடைபெற்ற கர்நாடக அறிவாணையக் கூட்டத்தில் கலந்து கொண்டார். வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தன்னைத் தலைவர் பதவியில் இருந்து விடுவித்து விட்டு, வேறொரு பொருத்தமான தலைவரை நியமிக்குமாறு அப்போது முதலமைச்சர் குமாரசாமியிடம் கஸ்தூரிரங்கன் வேண்டிக் கொண்டார்.

கஸ்தூரிரங்கனின் அறிவாணையப் பணி முற்றிலும் நிறைவேறும் வரை தொடர்ந்து தலைமைப் பதவியில் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பதாக குமாரசாமி அப்போது தெரிவித்திருந்தார்.  2018 ஜுன் மாதம் உடல் நிலை சரியில்லாமல் இருந்த கஸ்தூரிரங்கன், 2018 டிசம்பர் வரைக்கும் ஏறத்தாழ ஏழு மாதங்களாக தன் உடல்நலம் கருதாது தேசிய கல்விக் கொள்கையை வரையறுத்திருப்பதை அறிந்து கொள்ளும் போது, கஸ்தூரிரங்கனின் தேசபக்தி குறித்து நம்மால் வியப்படையாமல் இருக்க முடியவில்லை.

கட்டுரையாளர்

முனைவர் தா.சந்திரகுரு