பேரா.பொ.இராஜமாணிக்கம்
அறிவியல் தொழிநுட்பம் குறித்து தேசியக் கல்விக் கொள்கை கூறுவது என்ன?
புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையின் ஆரம்பமே இந்திய மையக் கல்வி என்பது தான். ஏனென்றால் இந்தியா நீண்ட காலமாக புகழ் மிக்க முழுமையடைந்த கல்வியை வழங்கி வந்திருக்கிறது எனப் பெருமையுடன் அறிவிக்கிறது. இந்திய மையக் கல்வியின் நோக்கமாகக் குறிப்பிடுவது என்னவெனில்..
இந்திய மக்களின் பன்முகத்தன்மை, அவர்களின் பாரம்பரியம், பண்பாடு, மொழிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அறிவுசார் சமூகம் என அறிவிக்கிறது…..பண்டைய கல்வியின் முக்கிய நோக்கம் அறிவைப் பெறுவது மட்டுமல்ல இந்த உலகில் வாழ்வதற்கான தயாரிப்பிற்காகவும் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதும் தன்னை விடுவித்துக் கொள்வதும் ஆகும் எனக் கூறுகிறது.
இந்தியக் கல்வி முறை சரக்கா, சுஸ்ருதா, ஆரியப்பட்டா, பாஸ்கராச்சாரியா, சாணக்கியா, பதஞ்சலி, பாணினி போன்ற அறிஞர்களை உருவாக்கியுள்ளது என்றும் கணிதம், வானவியல்,உலோகவியல், மருத்துவம், அறுவை சிகிச்சை, சிவில் மற்றும் கட்டிடக் கலை, கப்பல் கட்டுதல், கடல் பயணங்கள், யோகா, நுண் கலை, சதுரங்கம் உள்ளிட்டவற்றில் உலக அறிவிற்கு இந்தியா பங்களித்துள்ளது எனப் பேசுகிறது. உண்மை தான்.
இளம் குழந்தை பாதுகாப்பு, முன் பருவக்கல்வியின் நோக்கமாகக் குறிப்பிடுவது…பல்லாயிரம் ஆண்டுகளாக கலை, கதைகள், செய்யுள்கள், பாடல்கள்…. ஆகியன சிறு குழந்தைகள் வளர்ப்பு & கல்வியில் சேர்க்கப்படும் எனவும் இதன் மூலம் உள்ளூர்த் தன்மையும், மகிழ்ச்சியும், ஆச்சரியமும், பண்பாடும், அடையாளமும் சமூக உணர்வும் உருவாக்கப்படும்…
எல்லா நிலையிலும் இந்திய மற்றும் உள்ளூர் பண்பாடு இணைக்கப்பட்டு நேர்மையான அணுகுமுறையும், சமூக உணர்வும், கணக்கிடும் முறையில் சிந்திப்பதும், நவீன டிஜிடல் அறிவு பெறுவதும், இதனோடு அறிவியல் மனப்பான்மை உருவாக்குவதும் என குறிப்பிடப்பட்டுள்ளது…
அறிவியல் மனப்பானமை குறித்து தேசியக் கல்விக் கொள்கை கூறுவது என்ன?
அறிவியல் மனப்பான்மை என்ற பகுதியில் அறிவியல் மனப்பான்மையை உருவாக்குவது எனவும், ஆதாரத்துடன் கூடிய சிந்தனையை வளர்ப்பது எனவும் இதற்கான முறைகள் கலைத்திட்டம் திட்டம் முழுவதும் உருவாக்கப்படும். ஆதாரத்தின் மூலம் சிந்திப்பதும், அறிவியல் வழிமுறைகளை உள்ளடக்கிய கலைத் திட்டம் உருவாக்கபப்டும். இது அறிவியலிலும் பாரம்பரிய அறிவியல் சாரா பாடஙகளிலும் கடைப்பிடிக்கப்படும். இதன் மூலம் பகுத்தறிவு, அலசுதல், லாஜிகல், கணக்கீடு உள்ளிட்ட பண்புகளை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து கலைத் திட்டத்திலும் கடைப்பிடிக்கப்படும்.
கலைத்திட்டம், பாடத்திட்டம் முழுவதும் ஆதாரம் கொண்டதும், அறிவியல் சிந்தனையும் கொண்டதாக இருப்பின் பகுத்தறிவு, ஒழுக்கம், அன்பு ஆகிய பண்புகள் உருவக்கப்பட்டு நல்ல, திட்டமிட்ட அருமையான முடிவுகளை வாழ்நாள் முழுவதுமெடுக்க உதவிடமுடியும். ஆதாரம் மீதான சிந்தனையும் அறிவியல் மனப்பான்மையும் கற்றுக் கொடுப்பதில் முக்கிய காரணியாகக் கைக்கொள்ளப்பட்டு மாணவர்கள் எவ்வாறு கற்றுக் கொள்வது, புதிய நிலைக்கு தக்கவாறு தகவமைத்துக் கொள்வது வாழ்நாள் முழுவதும் கற்பவராக மாறுவது எனக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளாது.
பாரம்பரியப் பெருமை பேசும் தேசியக் கல்விக் கொள்கை
இந்தியாவின் கல்வி எனபது பிரிட்ஷார் வரும் வரை பல்வேறு படையெடுப்புகளின் வழியாக பல்வகைப் பண்பாடுகள் உருவாகி உள்ளதென்றும் அவற்றை உள்வாங்கிக் கொண்டு தனித் தன்மையுடன் விளங்கி வருகிறதென்றும் குறிப்பிடப்படுள்ளது.
உலகப் பாரம்பரியத்தில் இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட தொட்டில் என்கிறது. பன்மொழிகள், அதன் உப மொழிகள், ஏழு வகையான நாட்டியங்கள், இரண்டு பழமையான இசைகள், தலைசிறந்த கிராமியக் கலைகள், இசைகள், மட்பாண்டம், தொழில்சிற்பம் வடித்தல், உலோக கலைகள், கட்டடக் கலைகள், உணவு வகைகள்..என பாரம்பரியமிக்க பண்பாடு கொண்டுள்ளது. இந்த பெருமைமிகு உலகப்புகழ் மிக்க பாரம்பரியததை நமது கல்வியுடன் இணைத்து புதிய பயன்பாட்டிற்கு உகந்ததாக கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரப்படும். இவைகள் தாராளக் கலைப் படிப்புகள் மூலம் கல்லூரிக் கல்வியில் இணைக்கப்படும்.
மேலும் ஐன்ஸ்டீன் குறிப்பையும் மேற்கோள் காட்டுகிறது:
“பள்ளியில் நீங்கள் படிக்கும் அற்புதமானவை எல்லாம் பல தலை முறைகளில் உருவாக்கப்பட்டது ஆகும். அவைகள் யாவும் உங்கள் கையில் கொடுக்கப்படுகிறது, அதை மரியாதை கொடுத்து மேன்மையாக்கி அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும். இதன் மூலம் நமது அழிவன என்பதெல்லாம் அழியாமல் நிரந்தரமானவைகளாகத் தொடரும்”
நமது உடலையெல்லாம் மெலிதாக்கி வானத்தில் பறக்கச் செய்யும் வகையில் இந்த தேசியக் கல்விக் கொள்கையில் அறிவியல், தொழிநுட்பம் பற்றிப் பேசப்படுகிறது. அதாவது முழுக்க முழுக்க பாரம்பரிய அறிவியல் தொழில்நுட்பம் பற்றியே பேசி வருகிறது. தற்போது முன்னேறிவரும் அறிவியல், தொழிநுட்பம் குறித்த பார்வை மிகக் குறைவாகவே உள்ளது.
பாரம்பரியம் பேசி குலத் தொழிலை நிறுவுகிறது:
முன்பருவக் கல்வி முதல் உயர்கல்வி வரை பாரம்பரிய அறிவு, கைத் தொழிலை கற்றுக் கொடுக்கும் ஏற்பாடு மிகுதியாக காணப்படுகிறது. களிமண்ணில் பொருட்கள் செய்தல், தோட்ட வேலை செய்தல் என ஆரம்பித்து விளையாட்டு, யோகா, நடனம் நாட்டியம், சிற்ப வேலைகள், மண்பாண்டம் தொழில், மரவேலைகள், மின்சார வேலைகள் ஆகியன பாடம் சார் கல்விகளாகப் பயிற்றுவிக்கப்படும். அகடெமிக் பிரிவுக்கும் தொழிற்கல்விக்கும் வேறுபாடில்லாமல் சமமானதாகக் கற்றுக் கொடுக்கப்படும்.
கலை அறிவியல் கல்லூரிகளிலும் உள்ளூர் பாரம்பரியத் தொழில் குறித்த அறிவும் அதனை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு உயர்கல்வியில் வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது. இதன் மூலம் பாரம்பரியத்தொழில்கள் என்பது நவீன வடிவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இவர்கள் உள்ளூரில் அழகுக் கலை தொழிலாளிகளாகவும், சமையல்கலைத் தொழிலாளியாகவும், ஃபிட்டர், எலெக்ட்ரிசியன் தொழிலாளியாகவும் உள்ளூர் அளவில் நிலை நிறுத்தப்படும் அவலம் எற்படும்.
அனைவருக்குமான அறிவியல் தொழிநுட்பக்கல்வியை மறுக்கிறது..
குழந்தைப் பருவக்கல்வி முதல் உயர்கல்வி வரை பாரம்பரியம், பண்பாடு பற்றிய பெருமை விரவிக்கிடக்கிறது. ஆனால் அந்த பாரம்பரிய அறிவும் தொழில்நுட்பமும் எவ்வாறு பண்டைய இந்தியாவில் ஒவ்வொரு குறிப்பிட்ட சமூகத்திற்கு உரியதாகவும், அனைத்துப் பாரம்பரியத் தொழில்கள் யாவும் இழி தொழிலாகவும் ஒதுக்கி வைக்கப்பட்டது எனவும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த பாரம்பரியத் தொழில்கள் தான் இன்று நவீன அறிவியல் தொழில்நுட்பமாக மாறியுள்ளது.
மண்பாண்டத் தொழில் செராமிக் தொழில்நுட்பமாகவும், தோல் பதனிடும் தொழில் இன்று லெதர் தொழில்நுட்பப் படிப்பாகவும், நெசவு நெய்தல் டெக்ஸ்டைல் தொழில் நுட்பமாகவும், பிள்ளைப் பேறு பார்த்தல், உடலின் கட்டி, புண் போன்ற அறுவைச்சிகிச்சை செய்த சவரத்தொழிலாளியின் குடும்பத் தொழில் மருத்துவக் கல்வியாகவும் மாறியுள்ளது என்பது தானே உண்மை. ஆனால் இந்த பாரம்பரியச் சமூகங்கள் முன்னேற்றம் இல்லாமல் அப்படியே தான் உள்ளன. இது போன்ற அறிவியல் தொழில்நுட்பப் படிப்புகளை சமூக நீதியின் அடிப்படையில் வழங்காமல் நீட் போன்ற அனைத்து உயர்கல்விக்கும் சொல்லப்போனால் கலை அறிவியல் படிப்புகளுக்கும் கூட 12ம் வகுப்புப் படித்த பின்னர் தேசிய நுழைவுத் தேர்வுகள் மூலம் இச் சமூகத்திற்குக் கிடைப்பதைத் தடை செய்து அனிதா போன்ற மாணவிகள் தற்கொலைக்குத் தான் இந்தக் கல்விக் கொள்கை மேலும் வழிவகுக்கிறது.
அறிவியல் கண்ணோட்டம் அழிப்பிற்கான கல்வி:
குழந்தைப் பருவ முதல் குடும்பப் பாரம்பரியக் கதைகள், நீதிக் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள், ஜாதகக் கதைகள், கீதா உபதேசம் ஆகியவை வழங்குவதற்கு இக்கொள்கை வழி வகுக்கிறது. இந்த முறையற்ற உபதேசங்களைச் செய்வதற்கு உள்ளூரில் இருந்து கல்விப் பயிற்சியாளர்கள் (TUTORS), மனநல ஆலோசகர்கள் (COUNSELLORS) மூலம் மாணவர்களுக்கு நீதி போதனை ஒழுக்கக் கல்வி கற்றுக் கொடுக்கப்படும் என்கிறது. இதற்கென தேசிய அளவில் பயிற்சி அளிக்கப்படும் தேசிய கல்விப் பயிற்சியாளர்கள் திட்டம் ஆரம்பிக்கபப்டும் என்கிறது. இதன் மூலம் உள்ளூர் இளைஞர்கள், பிறர் பயிற்சி அளிக்கப்படுவர். உள்ளூர் சாமியார்கள், ஆன்மிக வாதிகள், கதாகாலேட்சேப குழுக்கள் பள்ளிகளில் நுழைந்து நீதிக் கதைகள் மூலம் மாணவர்களின் கேள்விகேட்கும் அறிவியல் கண்ணோட்டத்தை அழிப்பதற்கான வழிமுறைகள் காணப்படுகின்றன.
அதே போல் பள்ளி சார்ந்த கல்வியைப் பலப்படுத்தாமல் மதரசா, குருகுலம், பாடசாலா, வீட்டில் இருந்து கற்றல் ஆகியன மதம் சார், குலம் சார் கல்வியை நீட்டிக்கவே செய்யும். இக் க்லவிஅனைத்துமே அறிவியல் கண்ணோட்டத்திற்கு எதிரானதாகவே அமையும்.
அறிவியல் மன்ப்பான்மை குறிந்து ஜவஹர்லால் நேரு அவர்கள் டிஸ்கவி ஆஃப் இந்தியாவில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:
உண்மையையும் புதிய அறிவையும் தேடுவது. சோதனையும் செய்முறையும் இல்லாமல் எதையும் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது.புதிய ஆதாரங்களின் வெளிச்சத்தில் பழைய முடிவுகளை மாற்றிக் கொள்வது.. ஒவ்வொன்றாகக் கூறுகிறார்.
இதண்டிப்படையில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் 1976ல் 42வது சட்டத் திருத்தத்தின் வழியாக பகுதி 4ல் 51 ஏ அடிப்படைக் கடமைகளில் ஒன்றாக அறிவியல் மனப்பான்மையை சட்டமாக்கி இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அறிவியல் மனப்பான்மை மனித நேயம், விசாரித்தறியும் தன்மை மற்றும் சீர்திருத்தம் ஆகியனவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறது.
ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் பாரம்பரியம், பண்பாடு, நீதிக் கதைகள், கீதா உபதேசங்கள் ஆகியன போதிப்பதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் அறிவியல் மனப்பன்மைக்கு எதிரானது. இந்த நாட்டின் பாரம்பரியம் என்பது தேசிய அளவில் இந்துத்வா பாரம்பரியமாகவும் கிராம அளவில் இந்துத்வாவின் உட் கூறான ஜாதியப் பாரம்பரியமும் கட்டமைக்கப்பட்டுள்ள சூழலில் அதை உடைத்தெறிய தேசிய கல்விக் கொள்கையில் எந்தவித முன்னுரிமையும் கொடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக இந்திய மையப்படுத்திய கல்வி முறையென அறிவித்து இந்துத்வா கொள்கைகளை அமுல்படுத்துவதற்கான கல்விக் கொள்கையாகவே இதனைப் பார்க்கலாம். u