நார்வே நாட்டில் கடும் உழைப்பாளியான கணவர் ஒருவர் இருந்தார். அவர் தன் மனைவி எப்போதும் வீட்டில் சுகமாக இருப்பதாக நினைத்தார். ஒருநாள் வயலில் கதிரடித்து விட்டு வீட்டுக்கு வந்து, தன் வேலையில் உள்ள கஷ்டங்களைப் பற்றிப் புலம்பிக்கொண்டே இருந்தார்.

”என்னங்க, இப்படிப் புலம்பாதீங்க” என்றார் மனைவி ஆறுதலாக.

“நீ ஏன் சொல்ல மாட்டே? வீட்டில் சும்மா சுகமா இருந்துகிட்டு என்ன வேணாலும் பேசிடலாம். வயல் வேலைக்குப் போனால்தான் தெரியும்” என்றார் கணவர்.

“வீட்டில் நான் சும்மா இருந்தால் எப்படி மேஜைக்கு உணவு வரும்? எல்லா வேலைகளும் கடினமானவைதான்” என்றார் மனைவி.

”நாளைக்கு வேணா நாம நம்ம வேலைகளை மாத்திப்போம். நீங்க வீட்டையும் பாப்பாவையும் பாத்துக்கோங்க, நான் வயக்காட்டில் வேலை பார்க்கிறேன்.”

கணவருக்கும் இந்த யோசனை நல்லதாகப் பட்டது. நான் வீட்டில் ஜாலியாக இருக்கிறேன் என்றார். வீட்டில் இருப்பது எளிதாகத்தான் இருக்கும் என்று நினைத்தார்.

மறுநாள் காலை மனைவி அரிவாளை எடுத்துக்கொண்டு வயலுக்குப் போனார். கணவர் வீட்டு வேலைகளைச் செய்வதற்காக வீட்டிலேயே தங்கினார்.

முதலில் மோரைக் கடைந்து வெண்ணை எடுக்கலாம் என்று முடிவு செய்தார். கடைய ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தாகமாக இருந்தது. கொஞ்சம் திராட்சை ரசம் சாப்பிடலாம் என்று சமையலறைக்குச் சென்றார். பீப்பாய் குழாயைத் திறக்கும்போது, சமையலறைக்குள் பன்றிக்குட்டி நுழையும் சத்தம் கேட்டது. பாதி கடைந்த மோரை பன்றிக்குட்டி தட்டிவிட்டு விடக் கூடாதே என்று அவசரமாக ஓடினார். அதற்குள் பன்றிக்குட்டி மோர் முழுவதையும் கொட்டிவிட்டு, சுவைத்துக்கொண்டிருந்தது. தரை முழுக்க மோர், வெண்ணை பிசுபிசுப்பு. கோபத்தில் திராட்சை ரசப் பீப்பாயைத் திறந்துவிட்டதை மறந்துவிட்டு, ஆத்திரத்தோடு பன்றிக்குட்டியை அடிக்கப் போக, அது வேகமாக ஓடிவிட்டது.

“ஐயையோ, திராட்சை ரச பீப்பாய் திறந்து இருக்கிறதே” என்று சமையல் அறைக்கு ஓடினார். அங்கு திராட்சை ரசம் முழுக்க கீழே கொட்டியிருந்தது.

திரும்பவும் தொழுவத்துக்குச் சென்று வேறு பாத்திரத்தில் மோர் கொண்டு வந்து கடைய ஆரம்பித்தார். அப்போதுதான் மாட்டை மேய்ச்சல் நிலத்துக்குக் கொண்டு போய் விடவில்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது. இனி அவ்வளவு தூரம் மாட்டை இழுத்துச் செல்ல நேரம் இருக்காது. அவர்களது வீடு ஒரு மலையடிவாரத்தில் இருந்தது. அங்குள்ள வீடுகளின் கூரையில் புல் வளர்ப்பது வழக்கம். எனவே, வீட்டுக் கூரைக்கு ஏறிச் செல்வது போல ஒரு பலகையைச் சரிவாகப் பாலம் மாதிரி வைத்து, மாட்டை அதில் ஏற்றி கூரையில் உள்ள புல்லை மேயவிடலாம் என்று திட்டம் போட்டார்.

Little Baby Bum Songs and Stories Magazine Launched – downthetubes.net

வீட்டுக்குள் குழந்தை தவழ்ந்துகொண்டிருந்தாள். பாப்பா மோர் பாத்திரத்தைத் தட்டிவிட்டுவிடக் கூடாது என்று பாத்திரத்தைக் கையோடு எடுத்துக்கொண்டார். முதலில் மாட்டுக்குத் தண்ணீர் வைக்க வேண்டும் என்று கிணற்றில் நீர் இறைக்க முயன்றபோது, கிணற்றுச் சுவரில் வைத்த மோர்ப் பாத்திரம் கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. சரி போகட்டும் என்று, மாட்டைச் சரித்து வைத்த பலகை மூலம் கூரை மேல் ஏற்றிவிட்டார். அது மேய ஆரம்பித்தது.

சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது. ஆனால், ரொட்டிச் சாப்பிட வெண்ணை இல்லை. சரி, கொஞ்சம் கஞ்சி காய்ச்சலாம் என்று நினைத்தார். பானையில் தண்ணீரை நிரப்பி, அடுப்பின் மீது வைத்தார். அப்போதுதான் கூரையிலிருந்து மாடு விழுந்துவிட்டால் என்ற பயம் வந்தது. மேலே போய் மாட்டின் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டினார். அந்தக் கயிற்றைப் புகைபோக்கி வழியே சமையலறைக்கு இறக்கினார். மாடு விழுந்துவிடாமல் இருக்க, கயிற்றின் மற்றொரு நுனியைத் தன் காலில் கட்டிக்கொண்டார்.

பானையில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்துவிட்டதால், வேகமாக ஓட்ஸை அரைத்து மாவாக்க ஆரம்பித்தார். இவர் மாவு திரிக்க ஆரம்பித்தபோது மாடு கூரையிலிருந்து இறங்க முயல, கயிறு இவரைப் புகைபோக்கி வழியே மேலே இழுத்தது.

சிறிது நேரத்தில் மனைவி வயலிலிருந்து வந்தபோது, மாடு கூரையிலிருந்து தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே தன் கையில் இருந்த அரிவாளால் கயிற்றை வெட்டிவிட்டார். அப்போது உள்ளே கணவர் அலறும் சத்தம் கேட்டது. வீட்டுக்குள் ஓடிப் போய்ப் பார்த்தால், புகைபோக்கியின் கரி முழுவதும் உடல் முழுக்க அப்பியிருக்க, கணவர் கீழே விழுந்து கிடந்தார். குழந்தை அலறிக்கொண்டிருந்தது. உணவு எதுவும் தயாராகவில்லை.

”என்னங்க, சும்மா ஜாலியாக இருந்தீங்களா?” என்று கேட்டார் மனைவி.

“ஐயையோ… இதுக்கு வயல் வேலை எவ்வளவோ எளிதுன்னு இப்போதான் புரியுது. எப்படித்தான் ஒரே நேரத்துல பல வேலைகளைப் பார்க்கிறாயோ? என்னால முடியலைம்மா. வேலை களும் நடக்கலை. பொருட்களும் வீணாகிவிட்டன. தயவுசெய்து நாளைக்கு வயலுக்கே வேலைக்குப் போறேன்” என்றார் கணவர்.

“இனிமேல் நான் சும்மா இருப்பதாகச் சொல்வீங்களா?”

“ஐயையோ… இனி விளையாட்டுக்குக்கூட அப்படிச் சொல்ல மாட்டேன்” என்று அலறினார் கணவர்.

– தமிழில் : ச. சுப்பாராவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *