சொல்லியும் தீராது எழுதியும் முடியாது
ஆதவன் தீட்சண்யாவின் சொல்லவே முடியாத கதைகளின் கதை
நூல் : சொல்லவே முடியாத கதைகளின் கதை-ஆதவன் தீட்சன்யா
ஆசிரியர் : ஆதவன் தீட்சன்யா
விலை : ரூ. ₹ 100/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
மொத்தமே எட்டு படைப்புகள்தான் இந்நூலில். சிறுகதைகள் யாவும் குட்டி குறுநாவல் நீளம். எதுக்கு சிறுகதையை சற்றே நீண்ட சிறுகதை கணக்காக எழுதியிருக்கிறார் என்று யோசித்துக் கொண்டேதான் ஒவ்வொரு கதையையும் வாசித்தேன். ஒரு கதையை வாசித்தப் பின்னர் புத்தகத்தை மூடி வைத்து விடுவேன். அதற்கு மேல் வாசிக்க முடியாது. இரண்டொரு நாள் கழித்தே அடுத்த கதைக்கு போவது என தீர்மாணிக்க வேண்டியிருந்தது. காரணம் கதைகளின் கணம் அப்படி.
ரெட் டீ நாவலின் தமிழாக்கம் வாசித்தவர்களுக்கு தெரியும், எவ்வாறு அந்த தொழிலாளர்கள் ஏமாற்றி கொண்டு செல்லப்படுவார்கள் என்று. அதே போல்தான் “பொங்காரம்” கதையில் வரும் மாந்தர்களும் கல்லுடைக்கவும் சாலை போடவும் கொண்டு செல்லப்படுகிறார்கள். ஓராண்டில் திரும்பி விடலாம் எனும் உறுதியில் செல்பவர்களுக்கு தாங்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டோம் என்பதே தெரியாமல் ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாய் கொத்தடிமைகளாய் அல்லல்பட, வழக்கம் போல் பெண்கள் கணவனின் கண்முன்னே இழுத்து செல்லப்படுவார்கள் கங்காணியின் தேவைக்கு. உணவு உண்ண ஒரு தட்டு இல்லாமல், மொட்டைப்பாறையை சுத்தம் செய்துவிட்டு, ஆக்கியது எதுவென்றாலும் அந்த பாறையிலேயே பரிமாற, சாப்பிட்டு போகும் தொழிலாளர்கள். எத்தனை நாள் பொறுப்பது இந்த கொடுமைகளை, கங்காணிகளின் அடாவடி அராஜகத்தை? சந்தர்ப்பம் வாய்த்த நாள் ஒன்றில் உடுப்புக்காரனையும், கங்காணியையும் கொன்று, பெட்ரோல் ஊற்றி எரிக்கிறார்கள்.
அடுத்து? மூலைக்கொரு திசையாக பிரிந்து செல்வது என மாறுகோலத்தில் தப்பி செல்கிறார்கள். கைகால் வலுவாக இருக்க, எந்த வேலையும் பார்க்க முடியும் என்ற தெம்பு இருக்கிறது மனதில். ஆனால், கையில் தூங்கும் குழந்தை விழித்தெழுந்தால் கஞ்சி காய்ச்சவும் அவர்களிடம் ஒரு பண்டபாத்திரமில்லை. ரயிலேற அவர்களிடம் பணம் இல்லை. இதற்கெல்லாம் அவர்களுக்கு கொஞ்சம் முன்பணம் தேவையாயிருக்கிறது என முடிக்கிறார் ஆசிரியர். நமக்கு நெஞ்சில் பாரம் குமிகிறது.
கடவுளுக்குத் தெரியாதவர்கள் என்பது நூலில் இருக்கும் மூன்றாவது கதை. ஆவணப்படம் ஒன்றை இயக்கியவர் அதை ஏனோ வெளியிட மறுக்கிறார். அவரின் நண்பர்தான் இந்த கதையை தன் மொழியில் நமக்கு கடத்துகிறார். கோபால் எனும் பெயரிடப்படும் அந்த இயக்குனருக்கும் பாராட்டு வசைமொழி எல்லாமும் கிடைக்கிறது. அவருக்கு மேடையும், விருதும் அலர்ஜி. மக்களின் நிஜ துயர் அறியாதவர்களின் விருது மேடையை அவர் நிராகரிக்கிறார். கதை அவரை பற்றியதோ என்றால் அதுவுமில்லை. அவர் ஒரு படத்தை இயக்கி வெளியிடாமல் இருக்கிறாரே அதைப்பற்றி.
விதவை கோலம் பூண்டு இருட்டறையில் இருக்க வேண்டிய சிறுமி ஒருத்தி, தன் தலையை மழித்து விட வரும் நாவித இளைஞனோடு ஒன்று கூடி, அவளை கொல்ல வரும் குடும்பத்தாரை நாவிதனின் கத்தியாலேயே கிழித்து விட்டு, அவனோடு ரயிலேறி விடுகிறாள். நாவிதனுக்கோ, ஒரு பிராமண பெண்ணை கூடினோமே, இந்த பாவத்துக்கு என்ன தண்டனை என உள்மன விசாரம் தாங்காமல் ஓடும் ரயிலில் இருந்து ஆற்றில் குதித்து விடுகிறான். கையில் டிக்கேட் இல்லாத காரணத்தால் எங்கோ ஒரு நிலையத்தில் இறக்கி விடப்பட்டு, திக்கு திசை தெரியாமல், ராணுவ வீரர்களின் முகாம் அருகே படுத்துக் கிடப்பவளை தங்கள் டெண்டுக்குள் தூக்கிப் போக அவர்கள் எத்தனிக்க, அவர்களிடமிருந்தும் தப்பி ஓடிவந்து, எங்கோ ஓர் இல்லத்தில் அடைக்கலமாகி 72 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இப்பவோ அப்பவோ என மரண படுக்கையில் கிடக்கும் ஆனந்தியம்மாவின் கதையைத்தான் அந்த படம் பேசுகிறது. (விதவைகளுக்கு வீட்டின் பின்னறையில் நடக்கும் அத்தனை கொடுமைகளையும் விவரிக்கிறார்). படிக்கும் நமக்கு ஆவியே துடிக்கிறது. இருட்டு உலகம் ஒன்றை படம் பிடித்தவர் ஏன் அதை வெளியிட மறுக்கிறார்? அந்த படத்தில் ஆனந்தியின் அத்தனை துயரத்தையும் படம் பிடித்தவர் ஒன்றை மட்டும் விட்டு விடுகிறார். அதுவே அவரது மனசாட்சியை இடிக்கிறது. என்ன அது? புத்தகம் வாங்கி வாசியுங்கள்.
சொல்லவே முடியாத கதையின் கதையும் அவலம்தான். ரத்தப்போக்கு நிற்காத நேரத்திலும் கணவனின் இழுப்புக்கு போகவேண்டிய நிலையும், அந்நிய ஆடவனோடு பேசிவிட்டால், உடனே எத்தனை நாளா இந்த தொடுப்பு எனும் கேள்வியும் அதையெல்லாம் வெளியே சொல்லிக் கொள்ள முடியாமையும், தொடர்ந்து அவள் பெற்ற பெண்பிள்ளையும் அவல பேச்சுகள், இரவு ஷிப்ட் வேலை செய்யும் தனக்கு எவ்வாறெல்லாம் வரக்கூடும் என்று கூறுவதும்…. இன்று வரைகூட பெண்களுக்கு விடிவு பிறக்கவேயில்லை.
இப்படி ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு அவலம். ஆம், மலம் அள்ளும் தொழிலாளர்களின் வேலை நிலவரத்தை புகைப்படங்கள் வழியேயும் இதில் ஆவணப்படுத்தியுள்ளார். துயரம்… துயரம்… மனித குலத்தின் பெருந்துயரம்.
இதற்கு மேல் என்ன எழுத என்று தெரியவில்லை. ஆதவன் தீட்சண்யாவின் இந்த படைப்பை முதலாவது நான் சரியாக உள்வாங்கினேனா என்பதிலும் சந்தேகம்தான். வாசித்தவர்கள் யாரேனும் இருந்தால் கருத்து பிழைகள் இருந்தால் சுட்டுங்கள்.
– மங்கள கௌரி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

