எப்போதும் நான் சற்றுப் பதற்றத்தோடு படிக்கும் பகுதி – பாடத் திட்டமும் பயிற்று முறையும். அதிகாரத்தின் வழி வாய்ப்பு பெற்றவர்கள் வந்து குப்பை கொட்டும் இடம்! புதிய கல்விக் கொள்கை 2019ஐ எடுத்ததும் முதலில் நான் வாசித்தது- Curriculum and Pedagogy. வாசித்து முடித்ததும் ஒரு பூனைக் கதை ஞாபகத்துக்கு வந்தது. வயதான பூனை அது. எலியைப் பிடிக்க முடியவில்லை.
அசையாமல் செத்தது போல் கிடந்தது.உண்மையில் பூனை செத்து விட்டதாக எலிகள் கருதின. பூனையின்
பக்கத்தில் வந்து விளையாடின.அப்போதும் பூனை அசையவில்லை. ஓர் எலி உற்சாகம்
மிகுதியால் பூனையின் தலையில் ஏறி விளையாடியது. உடனே பூனை சட்டென்று அந்த எலியைப் பிடித்தது. பிற எலிகள் ஓட்டம் பிடித்தன. எலிகள் உலகின் மாறாத பாடம்: “ பூனையை நம்பாதே!”.
இந்தியா பாகிஸ்தானை வென்ற கிரிக்கெட் விளையாட்டைக் கூட ‘பாகிஸ்தான் மீது மற்றொரு தாக்குதல்’ என வெட்கங்கெட்டு வர்ணிக்கும் மதவாத ஆட்சியாளர்களின் கல்விக் கொள்கையை நம்புவது நடிக்கும் பூனையை நம்புவது போலத்தான்!
கட்டாயம் சமஸ்கிருதம்;
கருணையோடு பிற மொழிகள்!
பாடத்திட்டப் பளுவைக் குறைக்க வேண்டும் (Reduce Curriculum Content) என்று இந்தப் பூனை ஒரு கட்டத்தில் பேசுகிறது.போதாக்குறைக்கு யஷ்பால் கமிட்டி அறிக்கையையும் (Learning Without Burden, 1993), தேசிய பாடத் திட்டக் கொள்கையையும்(NCF2005) ஞாபகப்படுத்துகிறது. நம்பி நெருங்குகிறோம்.
நெருங்கியதும் சத்தமாகச் சொல்கிறது. “மூன்று வயது முதலே குழந்தைகள் மூன்று மொழிகளைப் பயில வேண்டும். மூன்றுக்கு மேலேயும் படிக்கலாம்” என்கிறது. (three or more languages). அப்போதுதான் தேச ஒருமைப்பாடு சாத்தியமாம்! இதுதான் பாடத்திட்டத்தைக் குறைக்கும் வழி!
மூன்று, நான்கு என்று எண்ணிக்கையில் பூடகமாகச் சொன்னாலும் சமஸ்கிருதம், இந்தி இரண்டைக் கற்பதைத்தான் கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள பெரிய ஆராய்ச்சி மூளைகள் தேவையில்லை.
பள்ளிகளில் ஆங்கிலம் நீடிப்பதை துரதிர்ஷ்டமான போக்கு (Unfortunate Trend) என்கிறது கல்விக்கொள்கை. இந்தி, சமஸ்கிருதம் நுழைய ஆங்கிலம் தடையாக இருப்பதுதான் கல்விக்கொள்கை குறிப்பிடும் துரதிர்ஷ்டம்! மும்மொழித் திட்டத்தில் தாய்மொழியும் இருக்கட்டும் என்கிறது. அதுதான் இந்தப் பூனை எலிகளிடம் வைத்த கருணை!
இந்திய மொழிகளைப் பற்றிப் பேசும் போதெல்லாம் ‘சமஸ்கிருதமும் மற்ற மொழிகளும்’ (Sanskrit and other languages) என்றே இந்தக் கல்விக்கொள்கை பேசுகிறது. சமஸ்கிருதத்துக்குக் கதாநாயக அந்தஸ்து; மற்ற மொழிகள் துணைப் பாத்திரங்கள்!
சமஸ்கிருதத்தின் புகழ் பாடும்போது கல்விக்கொள்கையின் வாய் அகலத் திறந்து கொள்கிறது. எல்லா இந்திய மொழிகளுக்கும் மரபுகளுக்கும் ஆதாரம் சமஸ்கிருதமாம்! சமஸ்கிருதம் அறிவின் களஞ்சியமாம் (Repository of Knowledge). பழமைக்குப் பழமையாய் இருக்கிறதாம். இன்றைய நவீன மொழியும் சமஸ்கிருதம்தானாம் (important modern language). அது மட்டுமா? சமஸ்கிருதம் அறிவியல் பார்வை கொண்ட மொழியாம். எனவே காளிதாசர், பாஷா போன்றோரின் இலக்கியங்கள் எல்லாப் பள்ளிகளிலும் பாடமாக வேண்டுமாம்! பாஸ்கராவின் சமஸ்கிருதக் கவிதைகள் கணிதப் பாடத்திலும் இடம் பெற வேண்டுமாம்!
தமிழ், தெலுங்கு பற்றியும் ஓரிரு இடங்களில் போகிற போக்கில் சொல்லப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதம், இந்தி பற்றிப் பேசும் போதெல்லாம் புலியின் குரலில் உருமும் இந்தப் பூனை, மாநில மொழிகளைப் பற்றிப் பேசுகையில் மியாவ், மியாவ் என்கிறது.
இந்தியாவில் இந்தி 45 % பேர் பேசும் மொழி என்கிறது கல்விக் கொள்கை. ‘உருது, பஞ்சாபி, மைதிலி, போஜ்புரி, சுவாதி, அங்கிகா, பிராஜ்’ போன்ற மொழிகளையும் இந்தியின் கணக்கில் சேர்த்துச் சொல்லப்படும் பொய் இது என்பது ஆய்வாளர் கருத்து. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 25 % மட்டுமே என்கிறது ஆய்வு.( இந்து தமிழ், 17.6.2019)
இசை பாடமாக வேண்டும் என்கிற கல்விக் கொள்கை, கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி இசை இரண்டுக்கு மட்டுமே முன்னுரிமை தருகிறது. அந்தந்த மாநிலத்தின் இசையையும் பாடத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என வழக்கமான ‘வஞ்சகக் கருணை’யோடு அனுமதி வழங்குகிறது.
ஆரம்ப வகுப்புப் பிள்ளைகள் வகுப்பில் பேசிப் பழக மேற்கு நாடுகளில் Show and Tell என்றொரு விளையாட்டு இருக்கிறது. ஏதாவது ஒரு பொருளைக் காட்டி- அது பென்சிலாக இருக்கலாம், பூவாக இருக்கலாம், ஏதாவது ஒரு பொருள் – அது பற்றி ஒரிரு நிமிடங்கள் பேசவேண்டும். அந்தப் பழக்கத்தை நம் பள்ளிகளிலும் கொண்டு வரவேண்டும் என்கிறது கல்விக் கொள்கை. “ஆரம்பத்தில் குழந்தை தாய்மொழியில் பொருளை அறிமுகப்படுத்திப் பேசலாம். பையப் பைய தான் கற்கும் மும்மொழிகளில் ஒன்றில் (நம் குழந்தைகளுக்கு இந்தி அல்லது சமஸ்கிருதம்) சொல்ல வேண்டுமாம். என்ன கொடுமை!
அடிக்கடி கல்விக்கொள்கை இந்திய மரபு, இந்திய மரபு என்று அலறுகிறது. இந்தியச் சிந்தனை மரபு பாடப் புத்தகங்களில் கட்டாயம் இடம்பெற வேண்டுமாம். வாழ்க்கையை வெற்றுச் சடங்குகளாக மாற்றும் ‘வேதக் கல்வி’, சகோதரனாயினும் கொல்லு என்ற ‘கீதோபதேசம்’, வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் ‘மநு தர்மம்’ போன்றவை பாடமாக வேண்டும் என்ற மதவாத அரசின் நோக்கத்தை வர்ணம் பூசிய வார்த்தைகளில் எழுதிப் போகிறது கல்விக் கொள்கை
தந்திரம்தான் நீதியா?
நீதிநெறிக் கருத்துக்கள் (Ethics) இனிப் பாடத்திட்டத்திலும் தேர்விலும் இடம் பெறவேண்டும் என்று வலியுறுத்தும் கல்விக்கொள்கை அதற்கு உபாயமாக சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பஞ்ச தந்திரக் கதைகளையும் , இதோபதேசக் கதைகளையும் பரிந்துரைக்கிறது.
பஞ்சதந்திரக் கதைகளில் மிகப் பெரும்பான்மையானவை ஒருவரை ஒருவர் எப்படி ஏமாற்றுவது, பழிவாங்குவது- என்று கற்றுத் தருபவை. கொக்கு உறிஞ்ச முடியாத தட்டில் நரி விருந்து வைக்கும்; பதிலுக்கு நரியின் முகம் நுழைய முடியாத ஜாடியில் கொக்கு விருந்து வைக்கும். சிங்கம் குள்ளநரியிடம் தினசரி தனக்கொரு இரை கேட்கும்; அப்பாவி கழுதையைச் சிங்கத்தின் முதலமைச்சர் ஆக்குவதாகச் சொல்லி ஏமாற்றி அழைத்துப் போய்ச் சிங்கத்துக்கு இரையாக்கும் குள்ளநரி. தந்திரக் கதைகளில் கழுதை ஒரு முட்டாள்; கழுதை ஒரு கேலிப் பொருள்!
கழுதையும் உப்பு வியாபாரியும் கதை நமக்குத் தெரியும். உப்பு மூட்டையைத் தினசரி சுமக்க முடியாமல் சுமந்து செல்லும் கழுதை. வியாபாரிக்கு இரக்கம் கிடையாது.
ஒரு நாள் ஆற்றைக் கடக்கையில் கழுதை தவறித் தண்ணீரில் விழுந்துவிடும். உப்பு கரைந்து பாரம் லேசாகும். கழுதை அடுத்த நாளும் தண்ணீரில் நனைந்து பாரத்தை லேசாக்கும். வியாபாரி விடுவாரா? பஞ்ச தந்திரக் கதைதான் விடுமா? மறுநாள் பருத்தி மூடையைக் கழுதையின் முதுகில் ஏற்றுவார். தண்ணீரில் நனைந்ததும் பாரம் மேலும் கனமாகும். கழுதைக்குப் புத்தி வந்ததாம். உப்பு மூடை சுமந்து முதுகு வலித்த கழுதை தோற்றால் பஞ்ச தந்திரக் கதைக்குக் கொண்டாட்டம். எசமானர்களுக்கான கதை!
இதோபதேசக் கதைகள் செய்யும் உபதேசமும் விவாதத்துக்குரியது. குள்ளநரி, மான், காகம் நண்பர்களாக இருக்கும் கதையில் குள்ளநரி மானை ஏமாற்றித் துன்பத்தில் சிக்க வைக்கும். பசித்த புலி ஒன்று தங்கக் காப்பைக் காட்டி ஏமாற்றி பிராமணனைச் சேற்றில் சிக்கவைத்துக் கொல்லும். கதைகளில் பெரும்பாலானவற்றில் ‘கூடா நட்பு’ குறித்த உபதேசம்தான். சேர்ந்து வாழ்வது குறித்த நீதி அபூர்வம்!
புறாக்கள் சேர்ந்து வேடனின் வலையைத் தூக்கிச் செல்லும் பிரபலமான நாட்டுப்புறக் கதை இதோபதேசத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது சிறு சிறு மாற்றங்களுடன். பொதுவாக யாரை விலக்குவது (Exclusion) என்பதுதான் பழைய சமஸ்கிருதக் கதைகளின் மையம்.
குழந்தைகளுக்குப் போதிக்கவேண்டிய நீதிகளாகஒரு பெரிய பட்டியலே கல்விக் கொள்கையில் இருக்கிறது.சேவை, அகிம்சை எனத் தொடங்கி வேதச் சரக்குகளையும் உள்ளிறக்குகிறது. ‘நிஷ்காம கர்மா’வைப் போதிக்க வேண்டுமாம்.நிஷ்காம கர்மா என்பது பலனை எதிர்பாராமல் உழைத்தல். அதாவது ‘கர்ம யோகத்தை’க் குழந்தைகளுக்குக் கற்பித்தல். அட கர்மமே! கர்ம யோகம் என்பது வேதத்தின் சரக்கு மட்டுமல்ல; முதலாளிகளின் சரக்கும் கூட.
பிரதமரின் தூய இந்தியாவும் (Swacch Bharat) குழந்தைகளுக்கான கட்டாயப் பாடங்களில் ஒன்று. யாரும் மறந்துவிடக்கூடாது என்று கல்விக் கொள்கையில் இது அடிக்கடி சொல்லப்படுகிறது.
தொழிற்கல்வி யாருக்கு?
தொழிற்கல்வி புதிதல்ல. நான் பள்ளியில் படிக்கும்போது, எங்களுக்குப் பாடமாக நெசவுத் தொழில் இருந்தது. ஏதோ பேருக்கு இருந்தது. ஆதாரக் கல்வியில் காந்தியடிகள் ‘உடலுழைப்பு பொதுவானது; உடலுழைப்பு பள்ளிக்கல்வியில் இடம் பெறவேண்டும். எல்லாக் குழந்தைகளும் எல்லா வேலைகளையும் சரிசமமாகச் செய்யப் பழக்கவேண்டும்’ என்று சொன்னபோது, ‘ஆ! அநியாயம்! எல்லாக் குழந்தைகளும் எல்லா வேலைகளையும் செய்யப் பழக்குவதா? இது வர்ணாசிரமத்திற்கு எதிரானது!’ என்று கத்திக் கூச்சல் போட்டவர்களின் வாரிசுகள் இன்றும் இருக்கிறார்கள் -நாற்காலிகளிலும், நாற்காலிகளுக்குப் பின்னாலும்!
தேர்வு பிரதானமானதும் தொழிற்கல்வியின் நோக்கமும் பயனும் புதையுண்டு போயின.
இன்று மீண்டும் தொழிற்கல்விக்கு கல்விக் கொள்கை 2019 அழுத்தம் தருகிறது. காந்திஜி சொன்ன பார்வையில் அல்ல; வர்ணாசிரமத்தின் கோணத்தில்!
தச்சு வேலை, மின் வேலை, உலோக வேலை, பானை செய்தல் போன்ற பல வேலைகளை ஆரம்ப வகுப்பில் இருந்தே பிள்ளைகளுக்குக் கற்றுத் தரவேண்டும் என்கிறது கல்விக் கொள்கை. நல்லதுதான். தேசிய அளவிலான வரையறைகளுடன் நுழைவுத் தேர்வுகளும் கூடி வருகின்றன. மெட்ரிகுலேசன் பள்ளிகள், குலோபல், இண்டர்நேசனல் எனப் பெயர் சூட்டிக் கொண்ட பள்ளிகள் – பிள்ளைகளைத் தயார் செய்யப் போவது எதற்கு?நுழைவுத் தேர்வுகளுக்கா? அல்லது பானை செய்யும் தொழிலுக்கா? அந்தப் பணக்காரப் பள்ளிகளைக் கட்டுப்படுத்தும் முதுகெலும்பு அரசுகளுக்கு உண்டா? அரசு அதிகாரிகளுக்கு உண்டா? அப்படியானால் தொழில் கற்பித்தல் ஈராசிரியர் கொண்டு போராடிக் கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமா?
அது போகட்டும்.10+2 என்றிருந்த பள்ளிப் பருவத்தை, 5+3+3+4 என்று கல்விக் கொள்கை புதுவிதமாய்க் கூறு போட்டிருக்கிறதே! இது எதற்காக? 5+3+3 முடிந்ததும் பிள்ளைகள் வேறு வேறு வழிகளில் பிரிந்து போவார்களாம்! சிலர் பல்கலைக் கழக உயர் படிப்புக்குத் தயார் ஆவார்களாம். சிலர் தொழில் தொடங்க அல்லது வேலை செய்யத் தயார் ஆவார்களாம்!
பல்ககலைக் கழக உயர் படிப்புகளுக்குச் சொகுசாகப் போகப் போகிறவர்கள் யார்? 14 வயதிலேயே படிப்பை நிறுத்தி வேலை தேடி வீதிக்கு வரப்போகிறவர்கள் யார்? இதையெல்லாம் விளக்க வேண்டுமா?
எல்லாம் மையம்!
எல்லா அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்ட – பிரதமரைத் தலைவராகக் கொண்ட- தேசிய அளவிலான ஒரு கல்வி அமைப்பை (Rashtriya Shiksha Ayog) ஏற்படுத்துவது குறித்த ஆலோசனையுடன் தான் கல்விக்கொள்கை தன் உரையைத் தொடங்குகிறது.
பள்ளிகளுக்கான பாடங்களைத் தேசிய அளவிலான கல்வி ஆராய்ச்சி மையம் (NCERT) இனி தயாரிக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள SCERT அந்தப் பாடங்களைக் கும்பிட்டு ஏற்றுக்கொள்ளும். (SCERTs may simply adopt NCERT textbook). தேவையானால் சிறு சிறு மாற்றங்களைச் செய்து கொள்ளலாம்.
இனி தேசிய அளவில் தயாராகும் பாடப்புத்தகம் எப்படி இருக்கும்? உதாரணம் இருக்கிறது. ராஜஸ்தானில் பி.ஜே.பி ஆட்சிக் காலத்தில் கல்வித்துறை வர்லாற்றுப் பாடப் புத்தகத்தில் செய்த மாற்றங்கள்தான் உதாரணம். காந்தியைக் கொன்ற கோட்சே பெயர் நீக்கப்பட்டது.(அந்தக் கிழவர் எப்படிச் செத்தாரோ?). நேரு இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பாடம் நீக்கப்பட்டது. (மோடி அல்லவா முதல் பிரதமர்?). அக்பரைப் பற்றிய பாடம் நீக்கப்பட்டது. (முஸ்லீம் மன்னர்களைக் கொண்டாடுவதா?). அறிவியலாளர் நியூட்டன், பிதாகொரஸ் பெயர்களும் நீக்கப்பட்டன. (கிறிஸ்தவர்கள் கண்டுபிடிப்பு எங்களுக்கு எதற்கு?).
மகாராஷ்டிர பி.ஜே.பி சிவசேனா அரசின் கல்வித்துறை வெளியிட்ட சமூக அறிவியல் பாடம் ஒன்று வரதட்சணைக்கான காரணத்தை ஆராய்கிறது. “அழகாய் இல்லாத பெண்களுக்குத் திருமணம் செய்யும் போதுதான் வரதட்சணை கொடுக்கும் பழக்கம் வந்தது” என்பது பாடத்தின் ஆராய்ச்சி முடிவு. இந்தியக் கல்வியாளர்கள் அனைவரும் காரி உமிழ்ந்த ஆராய்ச்சி உண்மை!
பாடப் புத்தகம் ஒரு பக்கம். பரீட்சை விசயம் என்ன? இதற்கும் தேசிய அளவில் ஒரு அதிகாரம் மிக்க அமைப்பு. பெயர்-National Testing Agency(NTA). இனி பல்கலைக்கழகங்களுக்குப் பதிலாக NTA வினாத்தாள்களைத் தயாரிக்கும். பல்கலைக் கழகங்களின் சுதந்திரமும் பரிதாபம்; மாணவர்களின் நிலையும் பரிதாபம்!
தேர்வில் மாற்றம் வேண்டும் என்கிறது கல்விக்கொள்கை. என்ன மாற்றத்தைப் பரிந்துரைக்கிறது? State Census Examinations கொண்டு வருமாம். தேர்வுக்கு மாற்று இன்னொரு தேர்வா? இத்தேர்வை, மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புப் பிள்ளைகள் எழுத வேண்டுமாம்.
அறிவொளியிலேயே பார்த்திருக்கிறோம்- தேர்வுக்குப் பயந்து பிஞ்சுப் பிள்ளைகள் தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வந்ததை! இப்போது மூண்றாம் வகுப்புப் பிள்ளைகளையே தேர்வு என்ற பிரம்பெடுத்துத் துரத்த வருகிறது இந்தப் புதிய கல்விக் கொள்கை. அதனாலென்ன? கோச்சிங் செண்டர்கள் இனி கொழிக்கும். அதுதானே புதிய இந்தியாவின் தேவை!
கிராமங்களில் பூனை திரியும்போது ‘பால் பத்திரம்’ என்று எச்சரிப்பார்கள். புதிய கல்விக்கொள்கை வந்திருக்கிறது. ‘பாலகர்கள் பத்திரம்!’என்று நாம் சொல்கிறோம்.