பிச்சை என நாவலுக்கு பெயர் சூட்ட நினைத்தார் ஆனால் யாரையும் காயப்படுத்தாமல் அமையவேண்டும் என்பது ஆசிரியர் எம்.எம்.தீன் அவர்களின் எண்ணம் அதான் நூலின் பெயரை யாசகம் எனச் சூட்டியுள்ளார்.
ராம் ராபர்ட் ரஹிம்,சங்கர் சலீம் சைமன் என்ற தலைப்பில் திரைப்படங்கள் வந்துள்ளதை அனைவரும் அறிவோம். இப்புதினத்தில் நிறைகுளத்தான், சூசை,தக்கரை பீர்முகம்மது என்ற மூன்று முக்கிய கதாநாயகர்களை உருவாக்கி இவர்களோடு முத்தாச்சி அவள் மகன் துரைக்குட்டியை இணைத்துள்ளார்
நாவல் மர நிழலின் கீழே நாவல் தொடங்குகிறது. ஐவரையும் அறிமுகப்படுத்திவிட்டு அவர்கள் யார் எங்கே பிறந்து எப்படி வளர்ந்து எதற்காக பிச்சையெடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை நாம் உணர்ந்துகொள்ள ஐவரோடு ஆறாவது நபராக இணைந்துகொண்டு அந்த ஐவரும் நாமும் அறியாவண்ணம் கனகச்சிதமாக நாவலாசிரியர் யாசகனாக நடைபயின்றுள்ளார்.
பிச்சைக்காரர்களுக்கு தனி வாழ்வும், தனி மொழியும் உண்டு. கிடைக்கும்போது கழுகுபோலச் சாப்பிடுவதும்,கிடைக்காதபோது பட்டினியா கிடப்பதும் பிச்சைக்காரர்களின் குணம், பட்டாங்கல்லூர் வில்லுப்பாட்டு நடந்துகொண்டிருந்தபோது சாப்பிடாமல் மயங்கிவிழுந்த தக்கரையை தண்ணீர் தெளித்து எழுப்பி உணவளித்த முத்தாச்சி பேட்டையிலுள்ள தன் வீட்டிற்கு அழைத்துச்சென்று தங்க வைத்தபோது இருவருக்கும் நெருக்கமாயிற்று. முத்தாச்சியின் அம்மா வெளியேறியபின் அவனிடம் அன்பாக பேசிப்பழக நினைத்த நேரத்தில் அவன் வீட்டைவிட்டு வெளியேறி பேருந்திலிருந்து கங்கை கொண்டான் பிளவர் மில்லில் இறங்கி தர்கா நோக்கி சென்றவனை வரவேற்கும் தொனியில் முத்தாச்சியும் அவள் மகன் பார்வைக்குறைபாடுள்ள துரைக்குட்டியும் அமர்ந்திருக்கும்போது காதலை அள்ளித்தெளித்திருப்பார்.
சோத்துப்பெட்டி நிறைகுளத்தான் மனைவியை அவனோட அப்பனே சேர்த்துக்கொண்டதனால் செங்கல் கம்பெனி அக்கவுண்டன்ட் வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு பிச்சையெடுத்துவரும் நிலைக்கு தள்ளப்பட்டதை அவனுடடைய உறவினரான அய்யாக்கண்ணு வக்கீல் மட்டும் அறிவார்.
வசதியான குடும்பத்தில் கடற்கரையோரம் பிறந்த சூசை மாணிக்கம் வீட்டில் பொண்ணு பார்த்தபோது தட்டிக்கழித்து தான் விரும்பிய முனியம்மாளை கைபிடிக்க நினைத்தவனுக்கு கைவிரல்கள் சுருங்கி வளைய ஆரம்பித்து பெருநோய் வந்தவுடன் முனியம்மாள் பாளையங்கோட்டையில் வேறொருவனை கல்யாணம் பண்ணிட்டு வாழ்றா, இவனோ அதே பாளையங்கோட்டையில் அவள் கடந்து செல்லும்போது கண்டும்காணாமல் போறளவுக்கு தொழுநோய்சிகிச்சைபெற்று மொட்டைவிரலுடன் பிச்சைக்காரனாக உலாவருகிறான்.

வியாழன் ராமசாமி கோவில், வெள்ளி தர்கா, ஞாயிறு சர்ச் இப்படி சாதி மத வித்தியாசமின்றி பறவைகள் போல் பறந்துசென்று தங்கள் உணவை தாங்களே அடைந்துகொள்வர் யாசகர்கள்.
திருநெல்வேலியைச் சுத்தி வலம்வந்து பிச்சையெடுக்கும்போதே வரலாற்றையும் மறக்காமல் சொல்லியிருப்பார் ஆசிரியர். கிபி 1750-ல் தஞ்சாவூர் மராத்திய சரபோஜி மன்னர் குடும்பத்தைச்சேர்ந்த கோகிலா என்பவளின் கணவன் இறந்தவுடன் சதித்தீயில் அதாவது உடன்கட்டையில் விழச்செய்து கொல்ல முற்படும்போது ஆங்கிலப்படைத்தளபதி மிடில்டன் குதிரையில் கடத்திவந்து பாளையங்கோட்டையில் விட்டதாகவும் பின் அவள் கிறித்தவ மதம் மாறி தொண்டுகளாற்றி பள்ளிகளும் சர்ச்சுகளும் கட்ட ஆரம்பித்ததாகவும் அவள் பெயரான குளோரிந்தா பெயரில் பாளையங்கோட்டை சர்ச் அழைக்கப்படுவதாகவும் வரலாற்றின் வாசத்தை மணக்கச்செய்துள்ளார்.
எவ்வளவு வக்கத்துப்போயிருந்தாலும் தெறந்துபோட்டு அலையமாட்டோம்
மனசுக்குப் பிடிச்சாத்தான் படுப்போமே மானங்கெட்டு பள்ள இழிச்சுட்டு அலையமாட்டோமென பிச்சையெடுப்பவர்களின் ஒழுக்கநெறியை காட்சிப்படுத்தியுள்ளார் முத்தாச்சி மூலம்.
தெருவியாபாரிகள் தங்கள் சரக்கை வேறுரூபத்தில் சொல்லி வாடிக்கையாளரை கவனிக்கவைப்பர், அதேபோல்தான் பிச்சை எடுப்பவர்கள் வீட்டிலுள்ளவர்கள் என்ன வேலை பார்த்தாலும் வித்தியாசமான கொடுங்குரலோடு வீட்டினரை அழைத்து வீட்டு வாசலுக்கு வரவைத்துவிடுவர் என்பதை உணர அப்பல்லோ காலனியில் பிச்சையெடுக்கச் சென்ற ஏழுபேரில் நம்மையும் ஒருவராக
முக்காடு அணிவித்து யாரும் அறியா வண்ணம் அனுப்பிவைத்திருப்பார் ஆசிரியர்.
நாவலின் முக்கிய நாயகன் தக்கரை, அவன் யார் எப்படி வீட்டைவிட்டு வெளியேறி யாசகனாகிவிட்டான் என்பதை மானூர் தர்காவில் சுலைகா கேட்கும்போது நாவலின் 102-வது பக்கத்தில்தான் ஆசிரியர் தக்கரையாக மாறிக்கூறுவார். கங்கைகொண்டான் தர்காவுக்கு மூன்றுநாள் நடக்கும் கந்தூரியில் கலந்துகொள்ள வண்டிமாடுகட்டி குடும்பத்தோடு வருவோம். மிக வசதியான குடும்பம் எல்லோரும் ஓடியாடி வேலை செய்து சம்பாதிக்கிறவங்க நான் மட்டும் தான் இப்படி பிச்சைக்காரனாக மாறிட்டேன். பருவத்தே பயிர் செய்ய வேண்டுமென்பதையும் இயற்கைவகுத்த பாதையை புறந்தள்ளியதாலும், வயதுக்கு மீறிய செயலினாலும், என்னோடா சுயநலத்தாலும், காமக் களியாட்டத்தாலும் சீரழிந்துநிற்கிறேன் என்பதை விரிவாக சிறிது நேரம் விட்டுவிட்டு அவளிடம் கூறுவான்.
பருவ வயதில் யாரைச்சந்தித்து தன் குறியின் ஆசைக்கு கட்டுப்பட்டவனாக வாழ்வை கேள்விக்குறியாக்கி கேலிக்குறியதாக்கினான் என்பதையும், யாசகனாக கடைசிவரை பயணித்து தன் வாழ்வை முடிக்கிறானா அல்லது கண் குறைபாடுள்ள துரைக்குட்டியை கண்பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்துவிட்டு சந்தோசமாக முத்தாச்சியை கரம்பிடித்து குடும்பத்தலைவனாகி வாழ்வை நகர்த்திச்செல்ல வேலைக்குப்போய் சம்பளம்பெற்று யாசகன் பட்டத்தை துறக்கிறானா, சூசை, சோத்துப்பெட்டி நிறைகுளத்தான் நிலை என்ன என்பதை நீங்களும் இந்நாவலை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.
இயற்கையின் மீதும் மனிதர்கள் மீதும் தீராக்காதல் கொண்ட ஆசிரியர் மரங்களின் அசைவுகளையும், பறவைகளின் அழகையும், கடந்து செல்லும் மனிதர்களின் நடவடிக்கைகளையும் நாவலில் ஆங்காங்கே புகுத்தியவிதம் அருமை.
சில நாவல்களை வாசிக்கும்போது ச்சே..நம்ம வாழ்க்கையிலும் இந்த மாதிரி நிகழ்வு நடந்திருக்கே என்ற எண்ணத்தை தூண்டச்செய்யும், அதுபோல் இந்நாவல் முழுக்க நான் சந்தித்த நிகழ்வுகள் கண் முன்னே வந்துசென்றன.
இராஜபாளையம் பகிர்வு அறக்கட்டளை மூலம் வறியவர்களுக்கு கடந்த இரண்டாண்டுகளைத்தாண்டி தினமும் தொடர்ச்சியாக உணவளித்து வருகிறோம். ஒவ்வொரு யாசகர்களையும் சந்தித்து பேச்சுக்கொடுக்கும்போது சிலரின் நடவடிக்கை மிக நகைச்சுவையாக இருக்கும், சிலரின் வாழ்க்கை மன வேதனையைத் தூண்டும். உணவுப்பொட்டலம் கொடுக்கும்போது ஏற்கனவே உணவு இருக்குமெனில் அய்யா போதும் வேறு யாருக்காவது கொடுங்கள் என்பர். ஒரு சிலர் அய்யா இன்னும் ரெண்டுபேரு வருவாக அவர்களுக்கும் கொடுத்தா நல்லாயிருக்குமென்பர் சரியெனக் கொடுத்துவிட்டு சிறிது தூரம் கடந்து சென்று திரும்பி பார்த்தால் அந்த இரண்டு பேர் அப்பொட்டலதை வாங்கிக்கொண்டிருப்பர். பனிக்காலங்களில் புதுப் போர்வைகள் இரவு பத்து மணிக்கு மேல் சென்று வழங்குவோம் சந்தோசமாக பெற்றுக்கொள்வர். ஏற்கனவே போர்வை வைத்திருப்போர் வேண்டாம் யாருக்காவது கொடுங்களென்பர். வித்தியாசமான நிகழ்வுகளை உடனிருந்து அனுபவித்தவர்களுக்கே புரியும். இந்நாவலை உருவாக்கிய ஆசிரியர் எத்தனை வேடங்கள்பூண்டு உள்வாங்கியிருப்பாரோ. ஆசிரியரை சந்தித்து இந்நாவலில் வரும் யாசகர்களை சந்திக்கலாமா என்றால் போதும் திருநெல்வேலியைச்சுற்றி யார் யார் எங்கே இருப்பர் என்பதையும் கூறி அவர்களை நேரில் சந்திக்கவைத்துவிடுவார். முதலில் அனைவரும் நாவலை வாசித்து பின் யாசகர்களை நேரில் சந்திக்கலாம்.
நாவல்: யாசகம்
ஆசிரியர்: எம்.எம். தீன்
பதிப்பகம்: ஜீவா படைப்பகம்
காஞ்சிபுரம்- 603209.
விலை: ரூ.220/-
இரண்டாம் வெளியீடு: 2019
நாவல் விமர்சனம்:
செல்வக்குமார் இராஜபாளையம்

