மக்களின் கைகளில் மார்க்ஸ்!

என்.குணசேகரன்

மார்க்சின் மூலதனம் மூன்று தொகுதிகளைக் கொண்டது. மூன்று தொகுதிகளையும் படித்து உள்வாங்குவது அதிக முயற்சிகள் தேவைப்படுகிற ஒரு பணி. அவ்வாறு வாசிக்க விரும்புபவர்களுக்கு உதவிடும் வகையில் ஜெர்மானிய சமூக ஜனநாயக இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜூலியன் போர்ச்சார்ட் மக்களின் மார்க்ஸ் என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியான 1919 முதல் உலகம் முழுவதும் ஏராளமான மார்க்சிய இயக்க ஊழியர்களுக்கு மூலதனத்தின் சாராம்சத்தை உட்கிரகிக்க பேருதவியாக விளங்கி வருகிறது. இந்த நூலை தமிழில் தோழர். கி.இலக்குவன் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். அதனை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. மூலதனம் மூன்று தொகுதிகளையும் சேர்த்து கிட்டத்தட்ட 2200 பக்கங்கள் கொண்ட மிகப்பெரிய நூல். இந்த மூன்று தொகுதிகளிலும் இருக்கிற சில அடிப்படை கோட்பாடுகளையும் கருத்துக்களையும், 400 பக்க அளவில் இந்த நூல் எளிய தமிழில் விளக்குகிறது. இந்த நூலை வாசிக்கிற போது மூன்று தொகுதிகளையும் மார்க்சின் விரிந்து பரந்துள்ள சிந்தனை ஓட்டத்தையும் புரிந்து கொள்ள உதவிகரமாக உள்ளது.

மூன்று தொகுதிகளிலிருந்து கருத்துக்களை தொகுக்கிற போது ஒழுங்கற்றுப்போகும் அபாயம் உள்ளது. ஆனால்,ஜூலியன் போர்ச்சார்ட் தர்க்கவியல் ரீதியாக ஒரு ஒருங்கிணைப்புடன் மார்க்சின் சிந்தனைக்கு எவ்வித பாதிப்பும் நேராமல் மிகத் திறமையாக தொகுத்து விளக்கியுள்ளார். ஜூலியன் போர்ச்சார்ட்டர் 30 ஆண்டு காலமாக மார்க்சின் மூலதனத்தை வாசித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வந்தவர். அந்த கடும் உழைப்பு இந்த நூலின் தெளிவான விளக்கங்களில் இழையோடுகிறது. தீவிர களச் செயல்பாட்டாளராக விளங்கிய ஜூலியன் போர்ச்சார்ட்டர் முதல் உலக யுத்தம் நடந்தபோது மார்க்சிய இயக்கத்திற்கு ஜெர்மனியில் ஒரு தேக்கம் நிலவிய சூழலில் கிடைத்த ஓய்வினைப் பயன்படுத்தி இந்த நூலை எழுதி முடித்தார்.

நூலின் உள்ளடக்கத்தின் முதல் அத்தியாயமே மூலதனத்தின் மூன்றாவது தொகுதியிலிருந்து துவங்குகிறது. முதல் அத்தியாயத்தில் பண்டங்கள்விலைகள்இலாபங்கள் என்கிற தலைப்பில் சில அடிப்படைகள் விவரிக்கப்படுகிறது. குறிப்பாக முதலாளியின் உற்பத்தி செலவு கொண்டுள்ள மூன்று பிரிவுகளான, 1. உற்பத்தி சாதனங்கள், 2. நில வாடகை, 3.கூலி ஆகியனவற்றை விளக்கி இதற்குள்ள தொடர்புகள்முரண்பாடுகள் விவரிக்கப்படுகின்றன.

அதன் பிறகுசரக்கு சுற்றுமூலதன சுற்று அவற்றையொட்டி உருவாகிற இலாபம் போன்ற விசயங்கள் எல்லாம் விளக்கப்படுகிறது. சரக்கின் உள்ளே புதைந்துள்ள பயன் மதிப்புபரிவர்த்தனை மதிப்பு ஆகியவற்றிற்குரிய தொடர்புகள் விளக்கப்படுகிறது. பிறகுபொருட்களின் மதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்கிற அடிப்படைக் கேள்வி எளிமையாக விளக்கப்படுகிறது. இயற்கையின் மீது மனித உழைப்பு செலுத்தப்படுவதுதான் உற்பத்தி நிகழ்வு. அனைத்து உற்பத்திப் பொருட்களிலும் மனித உழைப்பு உறைந்து கிடக்கிறது. பொருட்களின் மதிப்பை நிர்ணயிப்பது,அதில் சமூக ரீதியில் அவசியான உழைப்பு நேரம் என்பதை ஏற்கனவே மார்க்ஸ் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்.

முதலாளித்துவ சமூக அமைப்பில் உழைப்பு சக்தியும் ஒரு சரக்காகவே சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. முதலாளி கூலி என்கிற விலையைக் கொடுத்து உழைப்பு சக்தியை வாங்குகிறார். இது உற்பத்தி நிகழ்வு நடப்பதற்கு முன்பே இந்த பேரம் முடிவடைந்து உழைப்பாளி தனது உழைப்பை செலுத்த முனைகின்றார்.

உழைப்பு சக்தியை வாங்குதல்-விற்றல் என்ற அத்தியாயத்தில் உற்பத்தி நிகழ்வின் போது புதிய மதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை ஜூலியன் போர்ச்சார்ட் விளக்குகிறார். இந்த அத்தியாயம் முதலாளிக்கு கிடைக்கிற இலாபம் சந்தையின் ஏற்ற இறக்கங்களால் உருவாகிறது என்கிற கட்டுக்கதையை உடைத்தெறிகிறது. உற்பத்தி நிகழ்வின் போது தொழிலாளி செலுத்துகிற உழைப்பு சக்திதான் ஏற்கனவே இருக்கிற மூலப்பொருட்கள்இடுபொருட்கள் உள்ளிட்டவற்றில் செயலாற்றி புதிய மதிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு உற்பத்தி நிகழ்வின்போது ஏற்படும் உபரி மதிப்புதான் முதலாளிக்கு இலாபமாக கிடைக்கிறது.

முதலாளித்துவ உற்பத்தியில் இரு துருவங்களாக இயங்குவது முதலாளி வர்க்கமும் தொழிலாளி வர்க்கமும். மூலதனம்,கச்சாப் பொருட்கள்இடுபொருட்கள்உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்கக் கூடிய பணம்உற்பத்தி சாதனங்கள் ஆகிய அனைத்தையும் உடைமையாகக் கொண்டது முதலாளி வர்க்கம். ஆனால்தொழிலாளி வர்க்கத்திற்கு இதுபோன்ற எந்த உடைமையும் இல்லை. அவர் தன்னிடம் உள்ள திறமையால் இயக்குகிற உற்பத்திக் கருவிகளும் அவருக்கு உடைமை இல்லை. அவருக்கு இருக்கிற ஒரே உடைமை அவரிடம் இருக்கிற உழைப்புச் சக்தி. இதைப் பற்றி மார்க்ஸ் குறிப்பிடுகிற போது அவர் சுதந்திரமானவர் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார். யாரிடம் வேண்டுமானாலும் தன்னுடைய உழைப்பு சக்தியை விற்பதற்கு அவர் தயார் நிலையில் இருக்கக் கூடியவர். இந்த உழைப்பு சக்தியை சந்தையில் விலை கொடுத்து பொருள் வாங்குவது போலகூடியவரை குறைந்த விலையில் வாங்கிட முதலாளி முயற்சிக்கிறார்.

உற்பத்திக் கருவிகள்மூலப்பொருட்கள்இடுபொருட்கள் உள்ளிட்ட முதலாளியின் மூலதனத்தை மார்க்ஸ் மாறா மூலதனம் எனப் பெயரிடுகிறார். ஏனென்றால் இதில் எதுவும் புதிய மதிப்பை உருவாக்குவதில்லை. உற்பத்திப் பொருள் உருவாவது உழைப்பாளி தனது உழைப்பு சக்தியை செலுத்தி மதிப்பை ஏற்படுத்துகிற போதுதான் உற்பத்திப் பொருள் சந்தை விற்பனைக்கு செல்வதற்கு ஏற்றவாறு தயாராகிறது. அதாவது பரிவர்த்தனை மதிப்பு கொண்ட உற்பத்திப் பொருள் உழைப்பாளியின் உழைப்பு சக்தியால் படைக்கப்படுகிறது. இந்தப் பொருள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு முதலாளி ஏற்கனவே வைத்திருக்கிற மாறா மூலதனத்தில் கூடுதல் மதிப்பு ஏற்றப்படுகிறது. உதாரணமாக முதலாளியின் மாறா மூலதன மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய் என்றால் சந்தையில் பொருள் விற்பனைக்குப் பிறகு பத்து கோடி லாபம் சேர்க்கப்பட்டு ஆயிரத்து பத்து கோடி முதலாளிக்கு கிடைக்கிறது. தனது ஏனைய செலவுகள் போக அந்த லாபத்தில் கணிசமான பகுதியை ஏற்கனவே உள்ள மூலதன மதிப்போடு முதலாளி சேர்த்து விடுகிறார். இவ்வாறு உற்பத்தி நிகழ்வின் போது உழைப்பாளியின் உழைப்பு சக்தி ஏற்படுத்துகிற புதிய மதிப்பு உபரி மதிப்பு எனவும் அந்த உபரி மதிப்பு இலாபமாக முதலாளிக்கு சென்று சேர்கிறது என்பதையும் மார்க்ஸ் விளக்குகிறார். இந்த லாபம் மேலும் மேலும் மூலதனம் பெருகவும்மூலதனக் குவியலுக்கும் வித்திடுகிறது. மார்க்சின் இந்த கண்டுபிடிப்புக்களை ஜூலியன் போர்ச்சார்ட் கோர்வையாக எடுத்துரைத்து விளக்குகிறார்.

இதில் உழைப்பு சக்திக்கு செலவிடப்படுகிற கூலி ஏற்கனவே பேரம் பேசி முடிக்கப்பட்டது. அதாவதுஉற்பத்தி நிகழ்வு துவங்குவதற்கு முன்னதாகவே கூலி நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால்உற்பத்தி நிகழ்வின் போது உழைப்பு சக்தி ஏற்படுத்துகிற உபரி மதிப்பு பற்றி அப்போது பேரத்தில் பேசப்படுவதில்லை.

இதனை விளக்குகிற போது மார்க்ஸ் உழைப்பாளியின் உழைப்பு சக்தி செலவிடப்படுகிற உழைப்பு நேரத்தை இரு வகையாகப் பிரிக்கின்றார். ஒன்று அவசியான உழைப்பு நேரம்மற்றொன்று உபரியான உழைப்பு நேரம். இந்த இரண்டும் சேர்ந்தாக உழைப்பாளியின் உழைப்பு சக்தி செலுத்தப்படுகிறது. முதலாளி அளிக்கும் கூலித் தொகை அவசியான உழைப்பு நேரத்திற்கு மட்டுமே. உபரியான உழைப்பு நேரம் முதலாளிக்கு இலவசமாக கிடைக்கிறது. அறிவியல்பூர்வமாக முதலாளித்துவ அமைப்பினுடைய இந்த விதிகளை மூலதனத்தில் மார்க்ஸ் விளக்குகிறார். அந்த விளக்கத்தின் சாராம்சத்தை ஜூலியன் போர்ச்சார்ட் அன்றைய பல நிகழ்வுகளை எடுத்துக்காட்டுகளாக்கி விளக்குகிறார்.

உபரி மதிப்பு என்பது மூலதனக்குவியலுக்கான உயிர்நாடி. எனவேஇலாப வேட்டை நடத்த எப்போதுமே முதலாளி துடித்துக் கொண்டிருப்பார். முதலாளித்துவம் பட்டறைத் தொழில் துவக்க காலத்திலிருந்து தொழில்துறை உருவாகியுள்ள இக்காலம் வரை இந்த இலாப வேட்டைக்கான மூலதனத்தைக் குவிக்கும் வெறியுடன் செயல்பட்டு வருகிறது. மூலதனக் குவியலுக்கு உபரி மதிப்பை அதிகரிக்க வேண்டும். இது நேரடி உபரி மதிப்பை அதிகரிப்பது,சார்பு உபரி மதிப்பை அதிகரிப்பது என்ற வழிகளில் நடைபெறுகிறது. இதை போர்ச்சார்ட் விளக்குகிறார்.

வேலை நாள் 10 மணி நேரத்துக்கு நீடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் உழைப்புச் சக்தியின் மதிப்பை இட்டு நிரப்புவதற்கு 6 மணி நேரம் செலவிடப்படுகிறது என்றால்எஞ்சியுள்ள 4 மணி நேரத்தில் ஒரு திட்டமான அளவில் உபரி மதிப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. வேலை நாளின் கால அளவை 11 மணி நேரத்துக்கு நீட்டிக்க முடியுமானால்அல்லது உழைப்பின் உற்பத்திப் பொருளை 10 மணி நேரத்துக்குள் அதிகரிக்க முடியுமானால்அல்லது இந்த இரண்டு செயல்பாட்டு முறைகளையும் இணைத்துக் கொள்ள முடியுமானால் உபரி மதிப்பு அதே விகிதாசாரப்படி அதிகரிக்கும். இதன் மூலம் உபரி மதிப்பு அறுதி அதிகரிப்பைப் பெற முடியும்.

பட்டறைத் தொழில் துவக்க காலத்தில் இலாபத்தை அதிகரிக்க முதலாளித்துவத்தின் முயற்சிகள் நூலில் பத்தாவது அத்தியாயத்திலிருந்து விளக்கப்படுகிறது. தொழிலாளி வர்க்கத்தினர் முன்பு தொழில்துறை முன்னேற்றம் ஏற்படுத்தும் தாக்கம் என்கிற தலைப்பில் ஒரு விரிவான விளக்கங்கள் முன்வைக்கப்படுகிறது. அதில் உபரி மதிப்பை அதிகரிக்க தொழிலாளியின் உழைப்பு நேரத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் முதலாளிகளுக்கு ஏற்படுகிறது. ஆரம்பத்தில் கூலியை மேலும் மேலும் குறைக்க முயற்சி செய்கிறார்கள். கூலியை குறைப்பது இலாபத்தை அதிகரிப்பதற்கான ஒரு வழிமுறை. இதற்கு ஆண் தொழிலாளிகளை குறைத்து பெண்கள்குழந்தைகளின் உழைப்பைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றனர். பிடெரிக் ஏங்கெல்ஸ் இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தின் நிலை என்கிற நூலில் பெண்களையும் குழந்தைகளையும் முதலாளித்துவம் சுரண்டுகிற குரூரங்களை விளக்கியிருக்கிறார். பல சட்டங்கள் மக்களின் நிர்பந்தத்தால் கொண்டுவரப்பட்டாலும் அந்தச் சுரண்டல் நீடித்தது.

வேலை நாளின் நீட்டிப்பு என்கிற அத்தியாயத்தில் வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலம் தங்களது இலாபத்தை அதிகரிக்க முதலாளிகள் செய்த கொடூரங்களை அவர் விளக்குகிறார். எடுத்துக்காட்டாகதீக்குச்சியில் பாஸ்பரசை பொருத்துகின்ற வேலையில் அதிகளவில் குழந்தைத் தொழிலாளர்கள்அரைப் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் விதவைகள் ஆகியோரை ஈடுபடுத்தினர். இரவு நேரப் பணிமுறையற்ற உணவு நேரங்கள்பாஸ்பரசின் நெடியினால் சூழப்பட்டுள்ள அறைகளில் சாப்பாட்டை உட்கொள்வது போன்ற படுபயங்கரமான சூழலில் அவர்கள் சுரண்டப்பட்டனர்.

நீராவி வண்டி இயங்கத் துவங்கிய காலத்தில் அது முதலாளிகளுக்கு பொருட்களை கொண்டு செல்ல பெரும் உதவியாக இருந்தது. உற்பத்திப் பொருட்களை அதிகப்படுத்த வேண்டுமானால் அதிக நேரம் நீராவி எந்திரம் இயங்க வேண்டும். 1866 இல் ஒரு பெரும் விபத்து நேரிட்டு ஒரு கார்டுஒரு எஞ்சின் ஓட்டுநர்ஒரு சிக்னல் ஊழியர் ஆகிய மூன்று ரயில்வே ஊழியர்கள் விசாரிக்கப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட்டனர். அதில் வந்த முக்கியமான ஒரு உண்மை வெளிவந்தது. தண்டிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் இடைவெளியின்றி 40 அல்லது 50 மணி நேரங்கள் வேலை வாங்கப்பட்டுள்ளனர். இதனால் மூளை சிந்திப்பதை நிறுத்திக் கொள்வதும்கண்கள் பார்ப்பதை நிறுத்திக் கொள்வதும் நிகழ்ந்து அவர்கள் செயலிழந்த நிலையில் விபத்துக்கள் அதிகரித்தது. இவ்வாறு ஏராளமான வழிமுறைகளில் தொழிலாளிகளின் உழைப்பு சூறையாடப்பட்டது. ஆடை தயாரிப்பு போன்ற தொழில்களில் இடைவேளை இன்றி 26 மணி நேரம், 30 மணி நேரம் பெண்கள் வேலை வாங்கப்பட்ட தகவல்கள் எல்லாம் அடுக்கடுக்காக சொல்லப்படுகின்றன.

எனவேமூலதனக் குவியலுக்கு வேலை நாள் நீட்டிப்பு ஒரு முக்கியமான வழிமுறையாக பின்பற்றப்பட்டுள்ளது. இதற்கு ஒரு கட்டத்தில் கடுமையான எதிர்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. தொழிலாளி வர்க்கப் போராட்டங்களும் நடந்தன. அதனால்முதலாளித்துவம் இந்த வழிமுறையை குறைத்துக் கொண்டு வேறு ஒரு வழியை கையாளத் துவங்கியது. இது உழைப்பை மும்முரமாக்குதல் என்கிற அத்தியாயத்தில் விளக்கப்படுகிறது. வேலை நேரத்தை நீட்டிக்காமல் சில சமயம் குறைத்தும் வேலை வாங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதேநேரத்தில் இயந்திரங்களை மேம்படுத்துவதுஇயந்திரங்களின் வேகத்தை அதிகமாக்குவது போன்ற பல நடவடிக்கைகள் மூலமாக உழைப்பு நேரத்தை குறைத்து உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்தார்கள். இப்படிப்பட்ட முயற்சிகள் இங்கிலாந்தில் எந்த அளவிற்கு முதலாளிக்கு உற்பத்தியை பெருக்கி இலாபத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது என்பதை பல விளக்கங்களோடு ஜூலியன் விளக்குகிறார்.

ஆனால்இயந்திரங்களின் வேகத்தை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் ஏற்படுத்திய வேறு சில விளைவுகளும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அதீத வேகம் காரணமாக தொழிலாளிகள் விபத்துக்கு உள்ளாவது அதிகரித்திருக்கிறது. உதாரணமாக துணி ஆலைகளில் சக்கரங்களும்உருளைகளும்ஊடுநூல் ஓட்டங்களும் விரைவாக செலுத்தப்படுகிற போது உழைப்பாளியின் விரல்கள் முன்னிலும் துரிதமாக திறமையுடனும் இயங்க வேண்டும். தயக்கமோகவனக்குறைவோ இருந்தால் விரல்கள் பலியாகிற சம்பவங்கள் ஏராளமாக நிகழ்ந்தன. வேலையை விரைவாக செய்து முடிக்க வேண்டுமென்ற கட்டாயத்தினால்தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையிலான விபத்துகளுக்கு ஆளாகிற நிலை ஏற்பட்டது.

எனவேமுதலாளித்துவ இலாப வேட்டை உழைப்பு நேர குறைப்பு இருந்த போதும்அதற்கு மாறாக வேலை நேரத்தை குறைத்து உழைப்பின் உற்பத்தித் தரத்தை மேம்படுத்துகிற போதும் அதிக ஆபத்துக்கும் அவதிக்கும் ஆளானது உழைப்பாளி மக்களே. இந்த முதலாளித்துவ கொடூரச் சுரண்டல் இன்று வரை நீடிப்பதைக் காண்கின்றோம்.

முதலாளித்து வளர்ச்சியின் வரலாறே பெருவாரியான உழைப்பாளி மக்கள் சுரண்டலிலும்கோடிக்கணக்கான உழைப்பாளிகளின் மரணத்திலும் தான் எழுதப்பட்டுள்ளது. இந்த விவரங்களை மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தங்களது நூலிலும் தொகுத்துள்ளனர்: அந்த அடிப்படையில் போர்ச்சார்ட்டும் தனது நூலில் விளக்கியுள்ளார். இதனைப் படிக்கிற ஒவ்வொருவருக்கும் பெரும்பகுதி மக்களின் மரண ஓலத்திலும்கொலைக்ளத்தலும் வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ முறை இன்னமும் நீடிக்க வேண்டுமா என்கிற ஆவேசத்தை நிச்சயமாக ஏற்படுத்திடும்.

வேலைநேரம் அதிகப்படுத்துவது அதன் பிறகு இயந்திர மேம்பாடு என்ற இந்த தொடர்ச்சியின் அடுத்தகட்டமாக அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி தோன்றுகிறது. இது முதலாளித்துவ உற்பத்தி முறையை புரட்சிகரமான முறையில் மாற்றி பெரும் முன்னேற்றங்களை சாதிக்கிறது. அதேநேரத்தில் இதுவும் இரண்டு விளைவுகளை ஏக காலத்தில் ஏற்படுத்துகிறது.

இப்போது முதலாளிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான தொழிலாளிகள் தேவையில்லை. மாறும் மூலதனம் என்று மார்க்சினால் அழைக்கப்பட்ட உழைப்பு சக்திக்கு செலவிடப்படுகிறது தொகையை இப்போது முதலாளி மிச்சப்படுத்துகிறார். தொழிலாளிகளின் தொழில்நுட்ப ரீதியான திறன் மேம்பட்ட நிலையில் அவரால் அதிக அளவில் உற்பத்தி பொருட்கள் மீதான மதிப்பினை உயர்த்த முடிகிறது. உபரி மதிப்பின் அளவு கூடுகிறது. இன்றைய நிலையில் பிரமாண்டமான சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ள உலக கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலதன வளர்ச்சிக்கு அறிவியல்-தகவல் தொழில்நுட்ப யுகத்தில் உபரி மதிப்பு அதிகரித்ததன் விளைவே ஆகும். இந்த நிகழ்வுப் போக்கு இயக்கவியல் ரீதியாக மார்க்சின் மூலதனத்திலும் மக்களின் மார்க்ஸ் நூலிலும் விளக்கப்படுகிறது. இத்துடன் ஒட்டிய நிகழ்வாக பெருமளவு உழைப்பாளிகள் வேலையிலிருந்து விரட்டப்படுகிற நிலை உருவாகிறது. தயார் நிலையில் உள்ள வேலையில்லா ராணுவப் பட்டாளம் என்கிற சொற்றொடரை மார்க்ஸ் பயன்படுத்துகிறார். இந்தப் பட்டாளம் சமூகத்தில் இருப்பது ஏற்கனவே வேலையிலிருக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பின்மையை அதிகரித்து அவர்களுக்கு ஊதியத்தைக் குறைக்கவும் அதிகமாக உழைப்பைச் சுரண்டியும் முதலாளிகளுக்கு வாய்ப்பினை உருவாக்குகிறது. ஆகஇந்த நவீன யுகத்திலும் முதலாளித்துவத்தில் ஏராளமான மாற்றங்கள் உருவான பிறகும் பெருவாரியான உழைப்பாளி மக்கள் நிம்மதியற்ற வாழ்கையை தொடர வேண்டிய நிலையுள்ளது. இன்றைய அறிவியல்-தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சரியாக பயன்படுத்தப்பட்டால் மனித குலம் அனைத்திற்கும் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்திட உதவிடும். ஆனால் இது தனியொரு கூட்டத்திற்குமுதலாளிகளின் இலாப வேட்டைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையும் ராஜபாட்டையில் நடைபோடுவதில்லை. தொடர்ச்சியான நெருக்கடிகளை முதலாளித்துவம் சந்திக்கிறது. ஜூலியன் போர்ச்சார்ட் தற்கால வணிக நடவடிக்கைவணிக மூலதன வளர்ச்சி,வங்கிகளின் செயல்பாடு ஆகியவற்றை விரிவாக விளக்கிய பிறகு முதலாளித்து பாதை எதிர்நோக்கும் நெருக்கடிகளை தனியொரு அத்தியாயத்தில் விளக்குகிறார். உண்மையில் நுகர்வுத் தேவைகளுக்கும் பரிவர்த்தனைத் தேவைகளுக்கான முரண்பாட்டில் நெருக்கடி உருவாகிறது. ஒருபுறம் மனிதத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கேற்ற உற்பத்தி திட்டமிடப்படாமல் மக்கள் வறுமையாலும் வாழ்வாதாரங்கள் இழந்தும் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதேநேரத்தில் அதீத உற்பத்தி நிகழ்ந்து பொருட்கள் தேக்கமடையும் சூழல் ஏற்பட்டு உற்பத்தித் தேக்கம் மற்றும் வேலையின்மையை அதிகரிக்கிற நிலைமை ஏற்படுகிறது. உற்பத்தியில் ஏற்படும் இந்த அராஜகத்தோடு வேறு சில நிகழ்வுகளும் சேர்ந்துவிடுகிறது. முதலாளிகள் தங்களுடைய உபரி மதிப்பை அதிகரிப்பதற்காக எடுக்கிற முயற்சிகள் எவ்வாறு வீழ்ச்சியடையும் இலாப விகிதம் என்கிற சிக்கலை ஏற்படுத்துகிறது என்கிற விளக்கத்தை போர்ச்சார்ட் கடைசிப் பக்கங்களில் விளக்கியுள்ளார். இன்று 2008-க்கு பிறகு ஏற்பட்டுள்ள நெருக்கடியும் அன்று மார்க்ஸ் விளக்கிய நெருக்கடி பற்றிய கோட்பாடுகள் சரியானது என்பதை நிரூபித்துள்ளன.

இதைப்போன்று முதலாளித்துவம் தொடர் நெருக்கடிகளால் ஆளாவதும் அதன் எதிர் விளைவுகளாக உழைப்பாளி மக்களின் வாழ்க்கை மீது தொடர் தாக்குதல் நீடிப்பதும் நிகழ்ந்து  கொண்டிருக்கிறது. மனித சமூகம் தற்போது சிக்கியிருக்கிற இந்த முதலாளித்துவ வலைப்பின்னல் மனித சமூகத்தின் எதிர்கால இருப்பையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. முதலாளித்துவ இலாப வேட்டை சுற்றுச் சூழலையையும் பாதித்து வருகிறது. இந்நிலையில் முதலாளித்துவ வரலாற்று வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணத்தில் மனித சமூகம் வந்திருக்கிறது. ஏற்கனவேமார்க்ஸ் கூறிய அடிப்படையில் இந்த முற்றுப்புள்ளி வைக்கிற படலத்தின் கதாநாயனாக தொழிலாளி வர்க்கம் விளங்குகிறது. தொழிலாளி வர்க்கமே முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டுகிற வர்க்கம்.

ஆனால்கோடானுகோடி உழைப்பாளி வர்க்கத்திற்கு முதலாளித்துவ சுரண்டல் முறை குறித்து விழிப்புணர்வு தேவைப்படுகிறது. கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளன. இந்த விழிப்புணர்வு உருவாக்கும் பணிக்கு சிறந்த கருவியாக ஜூலியன் போர்ச்சார்ட்டின் மக்களின் மார்க்ஸ் விளங்குகிறது.

marxமூலதனத்தின் மூன்று தொகுதிகள்: சுருக்கமான மக்கள் மதிப்பு:

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

ஜூலியன் போர்ச்சார்ட்

தமிழில்: கி.இலக்குவன்

பக்கங்கள்: 400                                              

விலை: ரூ.250/-

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *