மொழிபெயர்ப்பு | க. நா. சுப்ரமண்யம்

மொழிபெயர்ப்பு | க. நா. சுப்ரமண்யம்

மொழிபெயர்ப்பு என்பதைச் சாதாரணமாக ஒரு கலை என்று சொல்வது வழக்கமில்லை. கலையோ, தொழிலோ – மொழிபெயர்ப்பு என்பது இலக்கியத்திலே ஒரு தனித் துறை. அது மிகவும் அவசியமானது. இலக்கிய வளர்ச்சியின் அடிப்படையான காரியங்களிலே மொழிபெயர்ப்பும் ஒன்று. மொழிபெயர்ப்புகள் அதிகம் இல்லாத காலத்திலே இலக்கிய வளர்ச்சி வேகமாக நடைபெறுவதில்லை என்பது சரித்திரபூர்வமாக நமக்குத் தெரிகிற உண்மை.

தமிழிலே மொழிபெயர்ப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டன. கம்பனை மொழிபெயர்ப்பு நூல் என்று சொல்லமுடியாது; ஆனால் திருக்குறளின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு நூல் என்று திடமாகச் சொல்லலாம். மனு, பரதர், கெளடில்யர் முதலியவர்களின் சம்ஸ்கிருத சூத்திரங்களைக் குறளாசிரியர் மொழிபெயர்த்துத் தமிழாக்கித் தந்திருக்கிறார்.

தமிழாக்கி என்று சொல்வதிலே ஒரு விஷயம் அடங்கியிருக்கிறது. தமிழிலே வெளிவருகிற மொழிபெயர்ப்புகள் தமிழாகத்தான் இருக்கவேண்டுமா என்று என்னை யாராவது கேட்டால், வேண்டாம் இருக்கக்கூடாது என்றே நான் பதில் சொல்லுவேன். எந்த மொழிபெயர்ப்புமே முதல் நூல் போலாகிவிடக்கூடாது – முழுதும் தமிழாகிவிடக்கூடாது.

மொழிபெயர்ப்பாசிரியன் முதல் நூலில் ஏதோ சில தனிக் குணாதிசயங்கள் இலக்கியபூர்வமாக – நாம் இலக்கியத்தைப்பற்றி மட்டும்தான் இங்கு பேசிக்கொண்டிருக்கிறோம், விஞ்ஞானத்தையோ, சரித்திரத்தையோ பற்றியல்ல – இருப்பதைக் கண்டு அந்த நூலை மொழிபெயர்க்க முற்படுகிறான். தமிழில் அந்தக் குணாதிசயங்கள் தோன்றினால் தமிழ் இலக்கியம் வளம் பெறும் என்று எண்ணுகிறான். மொழிபெயர்ப்பைத் தமிழாக்கிவிட்டால். அந்தத் தனிக் குணாதிசயங்கள் என்ன ஆவது? முதல் தர ஆசிரியனைப் பின்பற்றியேதான் என்றாலும் மொழிபெயர்ப்பாசிரியன் தமிழாக்கித் தருகிறபோது இலக்கியபூர்வமாகத் தமிழுக்கு லாபம் இல்லாது போய்விடும்.

ஆகவேதான் மொழிபெயர்ப்பு நூல், மொழிபெயர்ப்பாகவேதான் இருக்கவேண்டும் என்கிறேன் நான். ஜெர்மன் மொழியிலிருந்து மொழிபெயர்த்ததாக அது தமிழிலும் இருக்கவேண்டும். ஜெர்மன் மொழியில் வசனத்தின் நெளிவு-சுளுவுகள், சில வார்த்தைச் சேர்க்கைகள், சில வாக்கிய சந்தங்கள், சில பதப் பிரயோகங்கள் எல்லாம் தமிழுக்கு வரவேண்டும். அப்போது தான் அம்மொழிபெயர்ப்பால் தமிழ் இலக்கியத்துக்கு லாபம் இருக்கும். தமிழ் வசன வளம் ஜெர்மன் வசனச் சேர்க்கையால் விரிவடையவேண்டும். இதே போலத்தான் ஸ்வீடிஷ், நார்வேஜிய, ஆங்கில மொழிகளினின்றும் வருகிற மொழிபெயர்ப்புகள் தமிழுக்கு வளம் கொணர்ந்து தருபவையாக இருக்க வேண்டும்.

சில இலக்கிய கர்த்தாக்கள், சொந்த நூல்கள் எழுதிப் புகழ் பெற்றவர்கள், மொழிபெயர்ப்பது கெளரவக் குறைவு என்று எண்ணுகிறார்கள். அது சரியல்ல. எந்த இலக்கியாசிரியனும் எக்காலத்திலும் முதல் தரமான சொந்த சிருஷ்டியில் ஈடுபட்டிருப்பது என்பது முடியாது. பெரும் பகுதி சோம்பலாக இருப்பதிலும், சிறு பகுதி தெரிந்தே இரண்டாந்தர இலக்கிய சிருஷ்டியிலும், மிகச் சிறு பகுதி முதல் தர இலக்கிய சிருஷ்டியிலும் அவன் செலவு செய்வான் என்று வைத்துக்கொள்ளலாம். தெரிந்தே இரண்டாந்தர இலக்கிய சிருஷ்டி செய்வதில் ஈடுபடுவதைவிட, தெரிந்தே பத்திரிகை எழுத்தில் ஈடுபடுவதைவிட, இலக்கியாசிரியன் பிரியமான ஒரு புஸ்தகத்தை மொழிபெயர்ப்பதில் ஈடுபடுவது நல்லது.

நம்மிடையே இப்போது நடக்கிற மொழிபெயர்ப்புகளில் பெரும்பாலானவை ஏதோ எப்படியோ யாருடைய செளகரியத்துக்காகவோ நடப்பவை. விரும்பிப் படித்து அனுபவிப்பதைத் தமிழிக்குக் கொணரவேண்டும் என்று செய்யப்படுகிற மொழிபெயர்ப்புகளினால்தான் தமிழுக்கு இலக்கிய பூர்வமான லாபம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்புகளாலும் தமிழுக்கு லாபம் இராது. முதல் நூலின் மொழியிலேயிருந்து தமிழுக்கு நேரில் மொழிபெயர்க்க வேண்டியது அவசியம் என்றும் நான் எண்ணுகிறேன்.

இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்புகள் பல வரவேண்டும் தமிழிலே. ஒரு நூலுக்கு ஒரு மொழிபெயர்ப்பு மட்டும் இருந்தால் போதாது; பல மொழிபெயர்ப்புகள் வேண்டும். சாதாரணமாக எந்த மொழிபெயர்ப்பிலேயும் முதல் நூலிலிருந்து மூன்றில் ஒரு பங்கு நயங்கள்தான் வரமுடியும். அதுவும் ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய வளர்ந்த ஐரோப்பிய மொழிகளிலிருந்து இன்னும் வளம் பெறாத தமிழில் மொழிபெயர்க்கும்போது நூலில் இன்னும் குறைவாகவே நயங்கள் தெரியவரும். ஆகவேதான் ஒரு நூலுக்கு நாலு மொழிபெயர்ப்புகள் இருந்தால் முதல் நூலின் நயங்களில் ஒரு பகுதி, நூற்றில் ஐம்பதாவது வரலாம். இப்படி நான்கு மொழிபெயர்ப்புகள் தோன்றுவதற்குக் குறுக்கே நிற்கின்றன காபிரைட் உரிமைகள். இது புது நூல்கள் பற்றி உண்மைதான்; ஆனால் பழைய classics என்று சொல்கிற நூல்களில் சிறந்தவற்றிற்குப் பத்திருபது மொழிபெயர்ப்புகள் வரலாம்.

நாவல், சிறுகதை, நாடகம். கட்டுரை முதலிய இலக்கிய வசன உருவங்களில் அந்தந்த மொழிகளில் அவர்கள் எப்படி எப்படி என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதனால் நமது தமிழ் நாவலும், சிறுகதையும், நாடகமும் வளரும் என்பதில் சந்தேகம் இல்லை. மொழிபெயர்ப்பினுடைய முதல் உபயோகம் இதுதான். இரண்டாவது உபயோகம் தமிழை வளப்படுத்துவது – பிறமொழிச் சேர்க்கையால், வார்த்தை, வாக்கிய அமைப்பு முதலியவற்றை விஸ்தாரமாக்குவது. மூன்றாவது உபயோகம் இலக்கியத்தில் சோதனைகள் நடத்துவதற்கு இலக்கியாசிரியனுக்குத் தெம்பு தருவது இம்மொழிபெயர்ப்புகள்தான். உதாரணத்தால் மட்டுமல்ல – செய்யக்கூடியதை. சொல்லக்கூடியதை அதிகப்படுத்தி இன்னும் சொல்லலாம், இன்னமும் சொல்லலாம் என்று சோதனைக்காரர்களுக்கு இலக்கியத்தில் தெம்பு தரக்கூடியது மொழிபெயர்ப்புகளைப் போன்றது வேறு எதுவும் இல்லை. நாலாவது ஒரு உபயோகமும் உண்டு; ஆனால் இது அவ்வளவாக முக்கியமானதல்ல; இலக்கிய விமரிசகனுடைய அளவுகோல்கள் ஓரளவுக்கு உருவாவதற்கும், உபயோகப்படுவதற்கும் மொழிபெயர்ப்புகள் பயன்படுகின்றன.

இலக்கியபூர்வமாகக் கவனித்தால் உலக இலக்கியம் என்கிற பரப்பை ஓராயிரம் நூல்களில் அடக்கிவிடலாம். இந்த ஆயிரம் நூல்களுமாவது அடிப்படையான அவசியமாக, முறையாகத் தமிழில் வரவேண்டியது அவசியம் என்று எனக்குத் தோன்றுகிறது. மேலும் வரலாம். ஆனால் அடிப்படை ஓராயிரம் – கிரேக்க லத்தீன் ஐரோப்பிய அமெரிக்க சீன ஜப்பான் மற்றும் ஆசிய இலக்கியங்கள் பூராவையும் இதிலே அடக்கிவிடலாம்.

ஆங்கிலத்திலே இலக்கிய வளமே மொழிபெயர்ப்புகளினால்தான் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்வதில் தவறில்லை. மற்ற வளர்ந்த மொழிகளில்கூட ஆங்கிலத்தில் போல அத்தனை விஸ்தாரமாக மொழிபெயர்ப்பு நடைபெறுவதில்லை என்பது நிச்சயம். இதெல்லாம் காரணமாகத்தான் ஆங்கிலம் உலக மொழிகளிலே சிறந்ததாக இருக்கிறது.

மொழிபெயர்ப்பு இலக்கியம் தமிழிலே வளரவேண்டும். அதற்கான முயற்சிகள் நடைபெறாமல் இல்லை. போதுமா என்று கேட்டால் போதாது என்றுதான் சொல்லவேண்டும். இன்னும் நிறையவே செய்யவேண்டும்.

அவ்வளவும் தமிழாகிவிடக் கூடாது – முதல் நூலாக வேஷம் போடக்கூடாது – மொழிபெயர்ப்புகளாக, அந்தந்த முதநூலாசிரியனுடைய தனித்வம் தொனிக்க மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று நான் என்ணுகிறேன்.

உலக இலக்கியத்தின் ஆயிரம் அடிப்படை நூல்கள் என்ன என்று பட்டியல் தயாரித்துப் பார்க்கவேண்டும் என்றும் எனக்கு ஆசையுண்டு. பின்னர் ஒரு சமயம் செய்வேன்.

Show 1 Comment

1 Comment

  1. Keerthi

    இரு நகரங்களின் கதை pdf kidaikumaa?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *