பதினொரு பேருடன் இருந்த குழு ஒன்பது பேர் கொண்ட குழுவாக மாறியது ஏன் என்பதற்கான பதிலை, 2019 மே 31 அன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரைவறிக்கையில், ஜவடேகருக்கு குழு உறுப்பினர்கள் எழுதிய கடிதத்திற்கு அடுத்ததாக வெளியிடப்பட்டிருக்கிற குழு உறுப்பினர்களின் பட்டியலில் இருந்து நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

K.J.அல்போன்ஸ் அமைச்சராகி விட்டதால் விலகி விட்டதாகவும், ராஜேந்திர பிரதாப் குப்தா ராஜினாமா செய்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு, ஒன்பது உறுப்பினர் மட்டுமே கொண்ட குழுவாகவே அந்த குழு உறுப்பினர் பட்டியல் வரைவறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது.

K.J.அல்போன்ஸ்

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி

வரைவறிக்கைக் குழு அமைக்கப்பட்ட போது, அமைச்சகம் வெளியிட்ட கடிதத்தில் உறுப்பினர் பட்டியலில்  ஸ்ரீ K.J.அல்போன்ஸ் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, அந்தக் குழு அமைக்கப்பட்ட நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக மாறியிருந்தார். 1953ஆம் ஆண்டில் பிறந்த இவர், 1979ஆம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியில் சேர்ந்து, பணி நிறைவடைய எட்டு ஆண்டுகள் இருந்த நிலையில் முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்காக 2006ஆம் ஆண்டு தனது அரசுப் பணியைத் துறந்தார்.

2006 முதல் 2011 வரை இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் கேரள சட்டமன்றத்தில் கஞ்சிரப்பள்ளி தொகுதி சுயேட்சை உறுப்பினராக இருந்தார். 2011ஆம் ஆண்டு நிதின் கட்கரி தலைமையில் இருந்த பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 2017 ஜூன் 24 அன்று தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவறிக்கை தயாரிப்பதற்கான குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்ட இவர், இரண்டு மாதங்களுக்காகவே 2017 செப்டம்பர் 3 அன்று மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பொறுப்புகளுடன் சுற்றுலாத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் 2017 நவம்பர் 11 முதல் ராஜஸ்தானிலிருந்து பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  2019 நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிட்ட போது சாலக்குடி தொகுதியில் தனக்காக வாக்கு கேட்டு பிரசாரம் செய்து தோற்றுப் போனதும், மாநிலங்களவை உறுப்பினராகத் தொடர்கிற இவருக்கு இந்த முறை அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு கிடைக்காமல் போனதும் இங்கே தொடர்பில்லாத தகவல்கள்தானே!

2017 செப்டம்பர் 3 அன்று அமைச்சராக்கப்பட்ட பிறகு, அந்தக் குழுவில் இருந்து இடையிலேயே அவர் விலகிக் கொண்டதாக அந்த வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், 2017 டிசம்பர் 27 அன்று 2018 மார்ச் 31க்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், 2018 ஏப்ரல் 6 அன்று 2018 ஜூன் 30க்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் குழுவிற்கான கால நீட்டிப்புகள் வழங்கப்பட்ட போது, அந்த கடிதங்களின் நகல் அல்போன்ஸிற்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன.

உண்மையில் 2017 செப்டம்பரில் அமைச்சரானதுமே அவர் குழுவில் இருந்து விலகிக் கொண்டாரா? அல்லது 2018 ஜூன் இறுதி வரைக்கும் குழுவில் உறுப்பினராகத் தொடர்ந்து கூட்டங்களில் பங்கேற்றுக் கொண்டாரா? அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டவுடனேயே குழுவில் இருந்து அல்போன்ஸ் விலகி விட்டதாகக் கருதினால், அதற்குப் பிறகும் அவருக்கு கடிதங்களை அனுப்பி வைத்து செயல்பட்ட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயல்பாடுகளின் தன்மை நமக்குத் தெளிவாகிறது. அதுமட்டுமல்ல ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குள்ளாகவே பதினொரு பேருடன் இருந்த அந்தக் குழு பத்து பேர் என்றாகி விட்டதுவும் நமக்குப் புலப்படுகிறது. .

ராஜேந்திர பிரதாப் குப்தா

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சரின் முன்னாள் ஆலோசகர்

ஒத்திசைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வரைவுக்குழு உறுப்பினர்

அல்போன்ஸிற்கு அடுத்ததாக, ஒத்திசைவு உறுப்பினராக குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ராஜேந்திர பிரதாப் குப்தா 2017 டிசம்பரில் ராஜினாமா செய்து விட்டார் என்று இப்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரைவறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஏப்ரல் 6 அன்று 2018 ஜூன் 30க்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அந்தக் குழுவிற்கான கால நீட்டிப்பு வழங்கப்பட்ட போது, இடை விலகி விட்டு அமைச்சரான அல்போன்ஸிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல் ராஜேந்திர பிரதாப் குப்தாவிற்கு அனுப்பப்படவில்லை என்பதன் மூலம் 2017 டிசம்பரிலேயே ராஜேந்திர பிரதாப் குப்தாவின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு அமைச்சகம் தெளிவாகச் செயல்பட்டிருப்பது தெரிய வருகிறது.

அல்போன்ஸ் அமைச்சரானதால் இடைவிலகினார் என்று காரணம் வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், ராஜேந்திர பிரதாப் குப்தா குழுவிலிருந்து ஏன் ராஜினாமா செய்தார் என்பதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. குழுவிலிருந்து ராஜேந்திர பிரதாப் குப்தா ஏன் ராஜினாமா செய்தார் எனும் கேள்விக்கான விடை நம்மை மேலும் அதிர்ச்சியடைய வைப்பதாகவே இருக்கின்றது.

அமைச்சரின் ஆலோசகர்

2014ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியில் ராஜேந்திர பிரதாப் குப்தா தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கிறார். ஐந்தரை மாதங்கள் மட்டுமே மோடியின் முதலாவது அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷ்வர்தனுக்குப் பதிலாக, தற்போது பாஜகவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜேபி நட்டா 2014 நவம்பர் 9 முதல் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராகப் பதவியேற்றிருந்தார். நட்டா சுகாதாரத்துறை அமைச்சரான பிறகு 2016ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று நட்டாவின் ஆலோசகராக ராஜேந்திர பிரதாப் குப்தா நியமனம் செய்யப்பட்டார்.

வெளிநாட்டு நிதி ஊழல்

ராஜேந்திர பிரதாப் குப்தாவும், அவரது மனைவி கோபல் குப்தாவும் இயக்குநர்களாக இருந்த ’உலகளாவிய ஆலோசனைக் கழக சேவை’ என்கிற மும்பை தனியார் நிறுவனம், மும்பையில் இருந்த அரசு சாரா நிறுவனத்தின் மூலமாக வெளிநாட்டு அரசு சாரா நிறுவனத்திடமிருந்து ஒன்றே முக்கால் கோடி ரூபாய் பணத்தை விதிகளை மீறி பெற்றுக் கொண்டதாக புகார் எழுந்தது. உள்துறை அமைச்சகத்தின் அனுமதியைப் பெறாமலேயே வெளிநாட்டு நிறுவங்களுடன் ராஜேந்திர பிரதாப் குப்தா தொடர்பு கொண்டு பயனடைந்ததாகவும், வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் உதவியுடன் முப்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணங்களை அவர் மேற்கொண்டதாகவும் தகவல்களை பிரதமர் அலுவலகத்திற்கு உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்தது.

உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் பேரில், 2010ஆம் ஆண்டைய வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திற்குப் புறம்பாக வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றதாக ராஜேந்திர பிரதாப் குப்தா மீது குற்றம் சுமத்தப்பட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாகவும் தெரிய வருகிறது. 2018 ஆகஸ்ட் 3 அன்று சுகாதாரத் துறை அமைச்சரின் ஆலோசகர் பதவியில் இருந்து குப்தா தூக்கியெறியப்பட்டார்.

அமைச்சரின் ஆலோசகர் என்றும் பாராமல் மோடி அரசாங்கம் ஊழலுக்கெதிரான நடவடிக்கையை எடுத்திருப்பதாக அப்போது பாஜக ஆதரவாளர்கள் மார் தட்டிக் கொண்டனர். ராஜேந்திர பிரதாப் குப்தா 2017 டிசம்பரில் வரைவறிக்கை தயாரிக்கும் குழுவில் இருந்து ராஜினாமா செய்தது என்பது அவர் மீதான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையிலேயே நடந்திருக்கக் கூடும். அதற்குப் பிறகே அவர் மீதான நடவடிக்கைகள் செய்தியாக கசிந்திருக்கக் கூடும். ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் குழுவில் இருந்து அவரை நீக்கி விடாமல், வெறுமனே ராஜினாமா மட்டும் செய்ய வைத்தது என்பது உண்மையிலேயே ஊழலுக்கெதிரான மோடி அரசாங்கத்தின் சாதனைதானே!

மோடியைப் பாராட்டும் குப்தா

”கல்வித் தொழில்நுட்பத்திற்கான தேசிய அமைப்பு உருவாக்கப்படும் என்று தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கொள்கைகள் சரியாக அமல்படுத்தப்படுமேயானால், தேசிய கல்விக் கொள்கை 2019 என்பதே மனிதர்களால் எழுதப்பட்ட இறுதி அறிக்கையாக இருக்கும். இதற்கு அடுத்ததாக கல்விக் கொள்கை தொடர்பாக எழுதப்படும் எந்தவொரு அறிக்கையும் நிச்சயம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்டு எழுதப்படுவதாகவே இருக்கும்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்த வரைவறிக்கை முழுமையானதாக, எதிர்காலத்திற்கானதாக களத்தில் நிலவுகின்ற நிலைமைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மருத்துவத்துறையில் சீர்திருத்தங்களை முன்னிறுத்தியது. இப்போதைய மூன்றாவது தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் கல்வி குறித்த சீர்திருத்தங்களை நிச்சயமாக அமல்படுத்தும்” என்று தேசிய கல்விக் கொள்கை குழுவின் முன்னாள் உறுப்பினர் எழுதியதாகக் குறிப்பிடப்பட்டு ராஜேந்திர பிரதாப் குப்தா பெயரில் 2019 ஜூன் 15 அன்று எக்கானமிக் டைம்ஸ் செய்தித்தாளில் கட்டுரை வெளியாகி இருக்கிறது. அந்தக் கட்டுரையில் ”தன்னுடைய இதயத்திற்கு மிக நெருக்கமாக இருக்கின்ற புதிய இந்தியாவை பல்வேறு கொள்கைகள், திட்டங்களின் மூலமாக கட்டியெழுப்புவதற்கான பெரிய அளவிலான சீர்திருத்தங்களை சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் நடத்திக் காட்டியிருப்பதன் மூலமாக நீண்ட காலத்திற்கு தான் நிலைத்து நிற்கப் போவதை மோடி வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார்.

தூய்மை இந்தியா, பெண் குழந்தைகளைப் பாதுகாப்பது, சமையல் எரிவாயு இணைப்பு, திறன்மிக்க இந்தியா மற்றும் ஏழைகளுக்கான சுகாதார காப்பீடு போன்ற சமூகத்தின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்ற பல்வேறு திட்டங்களின் நீண்ட பட்டியலிலிருந்து இதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். தற்போது ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் வாரத்திற்குள்ளாகவே அரசாங்கத்தின் தேசிய கல்விக் கொள்கை – 2019 பொதுத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. மோடியின் சீர்திருத்தங்கள் அடங்கிய அந்த நீண்ட பட்டியலில் இப்போது கல்வி சீர்திருத்தங்களும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

தட்டித் தடுமாறி மெதுவாக காரியங்களைச் செய்து முடித்தால் போதும் என்ற எண்ணமின்றி, ஒரே மூச்சில் அனைத்து காரியங்களையும் உடனடியாகச் செய்து காட்டுகிற பிரதமரை இப்போதுதான் நான் முதன்முறையாகக் காண்கிறேன்” என்று ராஜேந்திர பிரதாப் குப்தா மோடியைப் புகழ்ந்து தெரிவித்திருக்கும் கருத்துக்கள், வெளிநாட்டிலிருந்து சட்டத்திற்குப் புறம்பாக நிதி பெற்றதாக அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், அறிவிக்கப்பட்ட சிபிஐ விசாரணை ஆகியவற்றின் இன்றைய நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதைத் தெளிவாகவே காட்டுகின்றன.

கேள்விகள் ஆயிரம்

ஆக 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் அல்போன்ஸ், டிசம்பரில் ராஜேந்திர பிரதாப் குப்தா ஆகியோர் குழுவில் இருந்து விலகியதால் ஐந்து மாதங்களுக்குள்ளாகவே உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதைத் தொட்டு விடுகிறது. இந்த ஒன்பது பேர்தான் இறுதி அறிக்கையுடன் உள்ள ஜவடேகருக்கு எழுதப்பட்ட கடிதத்தை எழுதியவர்கள். அமைச்சராகி விட்ட அல்போன்ஸ் குழுவில் இருந்து விலகி விடுகிறார். பிரச்சனை எதுவுமில்லைதான். ஆனால் அவர் அமைச்சராகி குழுவிலிருந்து இடைவிலகிய பிறகும், அந்தக் குழுவில் அவர் தொடர்ந்து இருந்து பணியாற்றினாரா என்பதுதான் மிகப் பெரிய கேள்வியாக நம் முன்பு நிற்கிறது. இடைவிலகிய ஒருவருக்கு இரண்டு முறை அலுவலகரீதியான கடிதங்கள் அனுப்பப்பட்டிருப்பது நமக்குள் ஏற்படுகின்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவே இருக்கிறது.

ஆனால் ராஜேந்திர பிரதாப் குப்தாவின் ராஜினாமா குறித்தோ, நம்மிடையே ஏராளமான கேள்விகள் எழுகின்றன. ராஜேந்திர பிரதாப் குப்தா சுகாதாரத்துறை அமைச்சரின் ஆலோசகராக எவ்வாறு நியமனம் பெற்றார்? ராஜேந்திர பிரதாப் குப்தாவைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒத்திசைவு இந்த வரையறை தயாரிப்புக் குழுவிடம் எவ்வாறு ஏற்பட்டது?  அந்த ஒத்திசைவு தானே ஏற்பட்டதா அல்லது ஏற்படுத்தப்பட்டதா? எந்த அடிப்படையில் அல்லது யாருடைய பரிந்துரையின் பேரில் இந்தக் குழு அவரைத் தனக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது? ஏதோவொரு காரணத்தால் இவ்வாறு ஒத்திசைந்து நியமிக்கப்பட்ட ராஜேந்திர பிரதாப் குப்தா பின்னர் எந்த காரணத்தை முன்னிட்டு குழுவிலிருந்து ராஜினாமா செய்தார்? இது போன்ற கேள்விகளுக்கான விடைகள் நிச்சயமாக இந்தக் குழுவால் வடிவமைக்கப்பட்டிருக்கும் கல்விக் கொள்கைகளின் தரம் குறித்தும் விளக்குபவையாக இருக்கக் கூடும்.

குழுவில் இருந்து விலகிக் கொண்ட அல்லது ராஜினாமா செய்தவர்களின் கதை இதுவென்றால், இறுதி வரை குழுவில் இருந்து பணியாற்றி நாளந்தா போன்ற பல்கலைக்கழகங்களைக் கட்டியெழுப்பப் போகின்ற வருங்கால இந்தியாவின் நவீன கல்விக் கொள்கையை உருவாக்கியிருக்கின்ற பிறரின் கதை எவ்வாறு இருக்கிறது? இதோ தொடர்கிறது…

(தொடரும்)

கட்டுரையாளர்

முனைவர் தா.சந்திரகுரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *