₹2000 Tamil Movie Direction View Of Director Ruthran. அரசியல் சாசனத்திற்கு உள்ளிருந்து வெளியே வராத கருத்துரிமை - இயக்குநர் ருத்ரன்

திரைப்பட அனுபவம்: அரசியல் சாசனத்திற்கு உள்ளிருந்து வெளியே வராத கருத்துரிமை – இயக்குநர் ருத்ரன்



பின்கதைச் சுருக்கம் :

ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டு விட்டது. தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்காக, ஒன்றிய தணிக்கை வாரியத்தின் பார்வைக்குத் திரையிடப் படுகிறது. சென்னை மண்டலத் தணிக்கை வாரியத்தின் தலைமை அலுவலர் லீனா மீனாட்சி உள்ளிட்ட ஐவர், படத்தைப் பார்க்கின்றனர். பிறகு, படத்தின் இயக்குனரை அழைத்து, “படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க முடியாது. தடை விதிக்கப் படுகிறது “என சொல்லப்படுகிறது. கருத்துப் பரிமாற்றம் செய்வதற்குக் காத்திருந்த இயக்குனர், “பேசுவோம்” என்கிறார். “பேசுவதற்கு எதுவும் இல்லை. நீங்கள் போகலாம்.” என்கிறார், லீனா மீனாட்சி.

அறைக்குள் சென்று, உடனே வெளியே வந்த இயக்குனரைப் பார்த்த சகாக்களுக்கு குழப்பம். ‘இவர் ஒரு கோபக்காரர். உள்ளே ஏடாகூடமாக நடந்திருக்குமோ ‘ என்னும் அச்சம். இந்த நிலையில், “படத்திற்குத் தடை” என இயக்குனர் சொல்லியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவரே பேசினார்:”சிக்கல் வரும்னு எதிர்பார்த்தேன்.தடை வரும்னு நினைக்கல. பரவாயில்ல, பாத்துக்கலாம். ”

ஓரிரு நாட்களில், திரைப்படம், மறுஆய்வுக் குழுவுக்கு (ரிவைசிங் கமிட்டி) அனுப்பப்படுகிறது. பல நாட்களாகியும், மறுஆய்வுக்கழு படத்தைப் பார்ப்பதற்கான நாளும் நேரமும் குறிக்கப்படவில்லை. தணிக்கை வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, “மறுஆய்வுக் குழுவின் தலைவர், சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்காக, பாஜக-வுக்கு ஆதரவுப் பரப்புரையில் இருப்பதால், வாக்குப் பதிவுக்குப் பிறகுதான் படத்தைப் பார்ப்பார் ” என தெரிவிக்கப்பட்டது. இத்தகைய காரணம், ஏற்புடையதல்ல என்பது மட்டுமல்ல, நியாயமானதுமல்ல. கோடிக்கணக்கானப் பணத்தை செலவழித்து, வருடக் கணக்கில் உழைத்து உருவாக்கப்பட்ட கலைப்படைப்பு, ஒரு சராசரி அரசியல்வாதியின் பார்வைக்காக காத்திருக்க வேண்டும் என்பது அவலத்திற்குரியது மட்டுமல்ல, கடும் கண்டனத்திற்கும் உரியதாகும்.

ஏப்ரல் 6, 2021-ல், வாக்குப்பதிவு முடிந்தது. அதற்கடுத்த இரண்டாவது நாளில், நடிகை கவுதமி தலைமையிலான பத்துப் பேர் அடங்கிய குழுவினர் படத்தைப் பார்த்தனர். இரண்டரை மணி நேரம் நீளம் கொண்ட படத்தைப் பார்த்துவிட்டு, மூன்றரை மணி நேரம் உள்விவாதம் நடத்தப்பட்டது. அதன்பிறகு, இயக்குனரை அழைத்து, நீக்கப்படவேண்டிய காட்சிகள், காட்சித் துண்டுகள்(ஷாட்ஸ்), உரையாடல்கள் மற்றும் மவுனிக்கப்பட வேண்டிய சொற்கள் ஆகியவைப் பற்றிய பட்டியல் சொல்லப்படுகிறது. நூற்றுக்கும் மேலான வெட்டுகளை லீனா மீனாட்சி முன்மொழிய, அவைகளை, எந்தச் சலனமும் இன்றி, நடிகை கவுதமி வழிமொழிகிறார்.

₹2000 Tamil Movie Direction View Of Director Ruthran. அரசியல் சாசனத்திற்கு உள்ளிருந்து வெளியே வராத கருத்துரிமை - இயக்குநர் ருத்ரன்

“கடவுளை ஏற்கமுடியாது “, “சனாதனத்தை நீக்கவேண்டும் “, “பார்ப்பனியத்தை அனுமதிக்க மாட்டோம் “, “பாரத் மாதா கீ ஜே என சொல்லக்கூடாது ” என பட்டியல் போடுகிறார், லீனா மீனாட்சி. அதனை ஆமோதித்து தலையசைக்கிறார், நடிகை கவுதமி. படத்தின் ஜீவனான உரையாடல்கள் நறுக்கப்படுகிறதே என்னும் வருத்தம் இருந்தாலும், அவர்களை அவ்வாறெல்லாம், ‘முழங்க ‘ வைத்ததற்காக மனதிற்குள் மகிழ்ச்சியடைகிறார், இயக்குனர்.

அரசின் லஞ்சக் கலாச்சாரத்தை அம்பலப்படுத்தக் கூடாது, கார்ப்பரேட்டுகளை விமர்சிக்கக் கூடாது, மதவெறியைக் கண்டிக்கக் கூடாது, ரிசர்வ் வங்கியைக் குற்றவாளியாக்கக் கூடாது, ஒன்றிய அரசைக் குற்றவாளியென அறிவித்து தண்டிக்கக் கூடாது என்பன போன்ற, ‘கூடாதுகளால் ‘ பட்டியல் நிரம்பி வழிந்தது.

ஏறத்தாழ ஒருமணி நேர விவாதத்திற்குப் பிறகு, ஒரு முன்முடிவோடுதான் குழு செயற்படுகிறது என்பதை உணர்ந்து கொண்ட இயக்குனர், ‘பேசிப் பயனில்லை ‘ என்னும் முடிவுக்கு வருகிறார். ‘மக்கள் விரோத அரசியல் ‘, அதன் முகத்தைக் காட்டுகிறது என்பதைப் புரிந்து கொண்ட இயக்குனர், அண்ணல் அம்பேத்கர் புகைப்படத்தைக் காட்டக்கூடாது எனவும், திருக்குறளை உச்சரிக்கக் கூடாது எனவும், சாட்சியம் சொல்வதற்காக ஒரு அமைச்சரை நேரில் அழைக்கும் அதிகாரம் வழக்காடு மன்றத்திற்கு இல்லை எனவும் சொல்லப்பட்டபோது அதிர்ச்சியடைகிறார். தணிக்கைக் குழுவின் ஆணவத்தை எதிர்த்து, ஆவேசமாக, கேள்விகளை எழுப்புகிறார். ஆனாலும், அவர்கள், அவர்களின் நிலையிலிருந்து மாறவில்லை.

ஒருவழியாக, படம், குதறப்பட்டு விட்டது. முன்பு, வெளிப்படையாகத் தடை விதிக்கப்பட்டது. இப்போது, மறைமுகமாகத் தடை விதிக்கப் பட்டிருக்கிறது. அதாவது, வெளியிட இயலாத நிலைக்கு படம் சீரழிக்கப்பட்டு விட்டது.

ஒருசில நாட்களுக்கு முன்புதான், டெல்லியில் இயங்கி வந்த திரைப்படத் தணிக்கைத் தீர்ப்பாயத்தைக் (ட்ரிபூனல்) கலைத்திருந்தது, மோடி அரசு. அதன்மூலம், படைப்பாளிகளின் இறுதி நம்பிக்கை அழிக்கப்பட்டது. மறுஆய்வுக் குழுவின் முடிவினை ஏற்கவில்லையெனில், வழக்காடு மன்றத்திற்குப் போவதுதான், இப்போதைய சூழலில் இருக்கும் ஒரே வாய்ப்பு. வழக்கு நடத்தினால் வெற்றி உறுதி என்றாலும், காலக்கெடு ஏதுமற்ற இந்த வழியில் பயணிப்பதற்கான வலிமை, திரைப்பட நிறுவனத்திற்கு இல்லை. எனவே, வெட்டுகளைக் குறைப்பதற்கான ஆதாரங்களையும் ஆவணங்களையும் கொடுப்பதாக சொல்லிவிட்டு, ‘கலந்தாய்வு ‘ அறையிலிருந்து வெளியேறுகிறார், இயக்குனர்.

பிறகு, முப்பத்து ஐந்து பக்கங்களில் காட்சிகளுக்கான ஆதாரங்களும் ஆவணங்களும் கொடுக்கப்படுகிறது. சில, ஏற்கப்படுகின்றன. சில, நிராகரிக்கப் படுகின்றன. இறுதியாக, நூற்றுக்கும் அதிகமான வெட்டுகள், இருபத்து நான்கு வெட்டுகளாகக் குறைக்கப்படுகிறது. பதினைந்து நிமிடங்களுக்கான படத்தின் நீளத்தை, விழுங்கி ஏப்பம் விடுகிறது, தணிக்கை முதலை.

இப்படியாக, தணிக்கை வாரியம் பலிகொள்ளவிருந்த ஒரு திரைப்படம் உயிரோடு மீட்கப்பட்டது. ‘மீட்கப்பட்டது ‘ என்னும் ஒரு சொல்லுக்குள் அடங்கியிருக்கும் பாடுகள் ஏராளம். இந்திய மக்களுக்கு அரசியல் சாசனம் அளித்திருக்கும் அடிப்படை உரிமையான கருத்துரிமையை மறுக்கும் பாஜக அரசின் வன்முறைக்குப் பொருத்தமான சாட்சியம்தான், அந்தப் பாடுகள்.

₹2000 Tamil Movie Direction View Of Director Ruthran. அரசியல் சாசனத்திற்கு உள்ளிருந்து வெளியே வராத கருத்துரிமை - இயக்குநர் ருத்ரன்

முன்கதைச் சுருக்கம் :

நவம்பர் 8, 2016, இரவு 8 மணிக்கு, தொலைக்காட்சிகளில் தோன்றிய இந்திய ஒன்றிய முதன்மை அமைச்சர் நரேந்திர மோடியின் வார்த்தைகளிலிருந்து பிறந்ததுதான், ‘₹2000’ திரைப்படம். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிப்புக்கு உள்ளாகும் ஒரு எளிய விவசாயிக்காக ஒரு வழக்குரைஞர், ஒன்றிய அரசுக்கு எதிராக பொதுநலன் வழக்குத் தொடுத்து, வாதாடி, ஒன்றிய அரசு ஒரு குற்றவாளி என்னும் தீர்ப்பினைப் பெறுவதுதான், படத்தின் கதை. கிளைக்கதையாக, சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட பெண்ணை – தனது இணையரை, ஆணவப் படுகொலை செய்த தனது தந்தைக்கும் அவரது கூட்டாளிகளுக்கும், வழக்காடு மன்றத்தின் மூலம் தண்டனையைப் பெற்றுத் தரும் இளைஞனின் கதையும் உண்டு. தணிக்கை வாரியத்தின் நெற்றிக் கண்களைத் திறப்பதற்கு, இந்தக் கதைக் கருக்கள் போதுமானவையல்லவா!

அதுமட்டுமல்ல. இந்தப் படத்தில், ஆபாசம் மற்றும் கவர்ச்சி இருக்காது, ரத்தம் தெறிக்காது, இரட்டை அர்த்த உரையாடல்கள் கிடையாது, மது இல்லை, புகை இல்லை, சமூகத்தைச் சீரழிக்கும் அம்சங்கள் எதுவுமே இல்லை. இத்தகைய, ‘ இல்லாமைகள் ‘ பாஜக-வினரின், அதாவது, தணிக்கையாளர்களின் கண்களை உறுத்தியிருக்க வேண்டும். பொழுதுபோக்குக்காக அல்லாமல், பொழுதின் மதிப்பினைக் கூட்டும் படம் என்பதால், மக்களுக்குத் திரையிடும் அனுமதியை அளிப்பதற்கு, ஆட்சியாளர்கள்- தணிக்கை வாரியத்தினர் தயங்கியிருக்க வேண்டும். இத்தகைய, கருத்துரிமை மீதான வன்முறைத் தாக்குதலை முறியடித்து, ஆதிக்கவாதிகளின் தடைகளைத் தகர்த்து மக்களிடம் விரைந்து வரவிருக்கிறது, ‘₹2000’.

ஃபீனிக்ஸ் திரைப்படைப்பகம் தயாரித்திருக்கும் இப்படத்தின் இயக்குனர், ருத்ரன்.

ஒரு முக்கிய குறிப்பு:

பொதுவாக, தணிக்கைச் சான்றிதழ்களின் இறுதியில், மண்டல அலுவலரின் கையொப்பம் இடப்படும். தமிழ் திரைப்பட வரலாற்றில், முதன்முறையாக, தணிக்கைச் சான்றிதழில் இரண்டு இடங்களில் மண்டல அலுவலரின் கையொப்பம் இடம்பெற்ற படம் என்னும் சிறப்பினை, ‘₹2000’ பெற்றிருக்கிறது. படத்தின் தலைப்பில் உள்ள, ‘ ரூபாய் ‘ என்பதைக் குறிக்கும், ‘ ₹ ‘ என்னும் குறியீட்டினை அச்சில் அமைக்க முடியவில்லை எனக் கூறிய தணிக்கை வாரியம், ‘தீவிர யோசனைக்குப்’ பிறகு, பேனாவில் எழுதியது. அதனால், அந்த இடத்திலும் மண்டல அலுவலரின் கையொப்பம் இடப்பட்டது. கூடவே, தணிக்கை அலுவலகத்தின் முத்திரையும் வைக்கப்பட்டது. இந்தக் கூடுதல் கையொப்பமும் முத்திரையும் இடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதை, அநீதி இழைத்த தணிக்கை வாரியத்திற்கு, ‘₹2000’ திரைப்படம் வழங்கிய தண்டனையாகவே கருதவேண்டியிருக்கிறது.

கட்டுரையை எழுதியவர் படத்தின் இயக்குநர் ருத்ரன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *