குஃபா என்ற ஒரு ஊரில் ஒரு கஞ்சன் வாழ்ந்து வந்தான். பக்கத்து ஊரான பஸாரோவில் தன்னைவிட பெரிய கஞ்சன் ஒருவன் இருப்பதாக அறிந்தான். அவனிடம் சென்று பாடம் கற்று வந்தால் நல்லது என்று நினைத்து பஸாரோ சென்று அவனைச் சந்தித்தான். பஸாரோ கஞ்சனை வணங்கி, ”கஞ்சத்தனத்தில் தாங்கள் மிகப் பெரியவர் என்று கேள்விப்பட்டேன். தங்களுடைய மாணவனாக இருந்து கஞ்சத்தனத்தை மேலும் நன்கு கற்க விரும்புகிறேன்,” என்றான். பஸாரோ கஞ்சன் மிகவும் மனமகிழ்ந்து, ” நல்லது. வா, முதலில் சந்தைக்குப் போய் சாப்பிட ரொட்டி வாங்கி வருவோம்,” என்றான்.

சந்தையில் ஒரு ரொட்டிக் கடைக்கு அழைத்துச் சென்றான். ”என்னப்பா, நல்ல ரொட்டி இருக்கிறதா?” என்றான் பஸாரோக் கஞ்சன். ”அருமையான ரொட்டி ஐயா… வாயில் வைத்தால் அப்படியே வெண்ணெயாகக் கரையும்,” என்றான் கடைக்காரன். பஸாரோக் கஞ்சன், குஃபா கஞ்சன் பக்கம் திரும்பி, ”தம்பி, பார்த்தாயா, ரொட்டிக்கு வெண்ணெயை ஒப்பிடுகிறான். பேசாமல் வெண்ணெயை கொஞ்சம் வாங்கித் தின்றுவிட்டால், செலவு மிச்சம், நாம் இப்படித்தான் புத்திசாலித்தனமாக முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் சேமிக்க முடியும்,” என்று சொல்லி வெண்ணெய்க் கடைக்கு அழைத்துச் சென்றான்.

வெண்ணெய்க் கடையில் நல்ல வெண்ணெய் இருக்கிறதா? என்று கேட்டார்கள்.

” நல்ல வெண்ணெயா? அப்படியே புத்தம் புது வெண்ணெய்… ஆலிவ் எண்ணெய் மாதிரி அத்தனை வாசனையாக இருக்கிறது,” என்றான் கடைக்காரன். கஞ்சக் குருநாதன் தன் புது சிஷ்யனிடம், ” கவனி! வெண்ணெயை ஆலிவ் எண்ணெயுடன் ஒப்பிட்டுச் சொல்கிறான். நாம் அதையே வாங்கி சாப்பிட்டுவிட்டால், இன்னும் சிக்கனமாக சாப்பாட்டுப் பிரச்சனை முடிந்து விடும்,“ என்று சொன்னான்.

அடுத்தபடியாக ஆலிவ் எண்ணெய் விற்கும் கடைக்குப் போனார்கள். ”ஆலிவ் எண்ணெய் நல்ல தரமானதாக இருக்கிறதா?” என்றான் பஸாரோக் கஞ்சன். ” அருமையான தரத்தில் இருக்கிறது… அப்படியே வெள்ளை வெளேரென்று, ஒரு கலங்கல் இல்லாமல், பச்சைத் தண்ணீர் மாதிரி தளதளவென்று தெளிவாக!,” என்றான் கடைக்காரன்.

”கவனி… இவன் சொல்வதைப் பார்த்தால் தண்ணீர்தான் மிகவும் சிறந்ததாகப் படுகிறது. என் வீட்டில் ஒரு பானை நிறைய தண்ணீர் பிடித்து வைத்திருக்கிறேன். உனக்கு அதைத் தாராளமாகத் தந்து விருந்து வைக்கிறேன்,” என்று தன் வீட்டிற்கு குஃபா கஞ்சனை அழைத்துச் சென்றான். ”ரொட்டியை விட வெண்ணெய் சிறந்தது. வெண்ணெயை விட ஆலீவ் எண்ணெய் சிறந்தது. ஆலீவ் எண்ணெயை விட தண்ணீர் சிறந்தது,“ என்றவாறு தண்ணீர் விருந்து வைத்தான்.

குஃபா கஞ்சன், ”கடவுளுக்கு நன்றி! நான் இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தது வீணாகவில்லை,” என்றவாறு தண்ணீர் குடித்தான்.

Image may contain: 1 person, standing and outdoor

எழுத்தாளர் ச.சுப்பாராவ்

6 thoughts on “உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 3: இரு கஞ்சர்கள்( ஹீப்ரூ மொழிக்கதை) – தமிழில் ச.சுப்பாராவ்”
  1. வழக்கமாகப் பெரிய கதைகளாக இருக்கும். கஞ்சன் கதை என்றதும் வரிகளிலும் கஞ்சம். பரவாயில்லை….. தண்ணீர் நன்றாக இருக்கிறது.

  2. என்ன இருந்தாலும் மாந்தோப்பு கிளியே படத்தில் வரும் கஞ்சனுக்கு நிகரில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *