தூய்மைத் தூதுவர்  வாழ்வின் துயரம்!
தொடர  வேண்டுமா, இனியும் அவலம்!?
முனைவர். பா. ராம் மனோகர்.

சுற்றுசூழல் தூய்மை, பேணுவது நம் ஒவ்வொரு குடிமகன் கடமை என்று நாம் அறிந்து, நடந்தாலும் கூட, நம் இல்லங்களில் மட்டும், தனிப்பட்ட முறையில் அதனை கடைபிடிக்க முயற்சி செய்து வருகிறோம்!ஆனால் பொதுவிடங்களில், உள்ள கழிவுகள் பற்றிய அக்கறை, நம்மில் பலருக்கும் குறைவு. மேலும் அவற்றை அகற்ற, மேலாண்மை செய்ய அரசு துறை பணியாளர்கள், இருக்கிறார்கள் என்பது ஒரு புறம், ஆனால் அவர்களும் நம்மை போல் மனித இனம் என்பதை நாம் சிந்திப்பது இல்லை! அவர்கள் பிரச்சனை, துயரம், பொருளாதார சிக்கல் போன்றவை சமகால சுற்று சூழல் சவால்களில் முக்கிய ஒன்று ஆகும்.

நம் இந்திய நாட்டில் முறை சாரா, கழிவு நீக்கும் தொழிலாளர்கள் அதிகம், அறிவியல் பூர்வ கழிவு மேலாண்மை இயந்திரம், கருவிகள் போன்ற நவீன முறைகள் செயல்பட துவங்கினாலும், மனித உழைப்பு மூலம் மேற்கொள்ளவேண்டிய சுத்திகரிப்பு பணிகள் ஏராளம். தொடர்ந்து நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்கள் அபரிமிதமாக அதிகரித்து வரும் நிலை உள்ளது. அதனால் திடக் கழிவு மேலாண்மை நம் இந்திய நகரங்களில், கிராமங்களில் மேலும் சிக்கலாகிக்கொண்டு வரும் நிலையில் துப்புரவு பணியாளர் அல்லது தூய்மை தூதுவர் பணிகள் அதிகம் ஆகியுள்ளது.

துப்புரவு பணியாளர் தம் பணியில் மட்டுமல்லாமல் , அவர்கள் வசிக்குமிடங்கள் பாதுகாப்பற்ற நிலை, அபாயகரமான சூழலில் அமைந்துள்ளது. அவர்கள் செய்யும் முக்கிய பணிகளுக்கு உரிய அங்கீகாரம் இல்லை. உள்ளாட்சி நிறுவனங்களில், இந்த நிரந்தர பணியாளர்கள் எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த தொழிலாளர்கள் ஆக பெரும்பான்மை நபர்கள் பணி செய்து வருகின்றனர். அங்கு உரிய உரிமை, சலுகை, சரியான உழைப்பூதியம் கிடைக்கும் நிலை கேள்விக்குறியது. மேலும் குழந்தை தொழிலாளர் உருவாகும் வாய்ப்பு உள்ளது. துப்பரவு பணியாளர் வாழ்க்கையில், அவர்கள் குழந்தை கல்வி மேம்பாடு, பழக்க வழக்கங்கள், சுகாதார நிலை, உணவு பற்றாக்குறை, போன்றவை பிரச்சனைகளாக உள்ளது.

துப்புரவு பணியாளர்களுக்கு என தனிப்பட்ட சட்டம், எதுவும் நம் நாட்டில் வரையறுக்கப்படவில்லை. அரசு துறை அளவிலும் எவ்வித கொள்கை இல்லாத நிலை நாம் வளர்ச்சி பெற்று விட்டோம் என்று நமக்கு நாம்

பறை சாற்றிகொள்வது எவ்வளவு பேதமை!?. வட்ட பொருளாதார கோட்பாடு மூலம் கழிவு மீள் சுழற்சி செய்து நம் சுற்றுசூழல் மேம்பாடு, அடைய உதவி வரும் இவர்கள் பற்றி சிந்தனை செய்யும் நிலையும் பொதுமக்களுக்கும், அரசு கொள்கை உருவாக் குப்பவர்களுக்கும் வரவேண்டும்.

துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் பெரும்பான்மை மக்கள், குப்பை கிடங்குகள் அருகில் வசிக்கிறார்கள்.

அதனால் அவர்கள் பல்வேறு நோய்களுக்கு இலக்காகிவிடுகின்றனர். குறிப்பிட்ட ஆய்வு முடிவுகளின் படி 95% பணியாளர்கள் மயக்கம், 89% நபர்கள் தலைவலி போன்ற பிரச்சனைகள் எதிர்கொண்டு வருகின்றனர். பாக்டீரியா, வைரஸ் நோய்கள், வயிற்று நோய்கள், (40%) போன்றவற்றாலும், சுவாச நோய்கள் (28%), காய்ச்சல் (78%), சளி (83.5%) ஆகிய உடல் ஆரோக்கிய சீர்கேடுகள் அறியப்பட்டுள்ளன.

பணிசூழல் என்பது இந்த பிரிவு தொழிலாளர்களுக்கு எப்போதும் ஒரு சவால் ஆகவே உள்ளது. ஆம். மக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதார கழிவு போன்றவை பற்றிய விழிப்புணர்வு அதிகம் அரசு துறைகள் மூலம் மேற்கொண்டு வரும் நிலை இருப்பினும், அது செயல்படும் நிலை வருந்துதற்குரியது.அதனால் இந்த பணியாளர்கள், பல்வேறு குப்பைகளை பிரிக்கும் வேலை கூடுதல் ஆக செய்கின்றார்கள். எனவே இவர்களுக்கு வெவ்வேறு வகையில்

வீட்டு கழிவு, மருத்துவ கழிவு, மனித, விலங்கு இறப்பு கழிவு, உலோகம், கண்ணாடி என பிரிக்கும் போது விபத்து, உடல் காயம்,ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். எனவே இப்பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு கருவிகள், கையுறை, (Gloves ), முழு மறைப்பு காலணிகள், (Gumboots ), முழு மறைப்பு உடல் ஆடை (apron )ஆகியவை தரப்படும் திட்டங்கள் அரசு உருவாக்கி வருகிறது. ஆனால் அவை அனைவருக்கும் கிடைக்கும் என்ற உத்திரவாதம் இல்லை. அதிலும் குறைபாடு உள்ளது.

இயல்பாக இந்த பணியில் ஈடுபட்டு வரும் மகளிருக்கு இரத்த சோகை,காச நோய், ஊட்ட சத்து குறை பாடு என்ற ஆரோக்கிய பிரச்சனை அதிகம் உள்ளன.

மனித இனத்தின் ஒரு குறிப்பிட்ட சாரார் எவ்வித பாதுகாப்பின்றி, வசிக்கும் இடம் முறையாக இல்லாமலும், சூழல் கழிவு அகற்றும் நம் சமுதாயம் சிந்தித்து வருகிறதா!? இது ஒரு புறம் இருக்க கழிவுகளிலிருந்து , பயன் தரும் பொருட்கள் தேடி, தேடி அலைந்து சேகரித்து வாழ்க்கை நடத்தி வரும் சிலரும் பல துன்பங்கள் அடைகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, தெலுங்கானா மாநில ஐதராபாத் நகரில் குப்பை குவியல் மலை ஒன்றில் ஒரு பெண்மணி, மற்றும் 15 வயது சிறுவன் உட்பட மூவர் இறந்து கிடந்த செய்தி!, மும்பை மாநகர் பகுதிகளில் இரவில் குப்பைகளில் பயன் தரும் பொருட்கள் தேடி அலையும் குழுக்கள் அதிகம் ஆகிவிட்டது. அதில் 85% பெண்கள்,

5%குழந்தைகள், 10%ஆண்கள், 98% படிப்பறிவில்லாத இவர்கள்மட்டும் 60,000 எண்ணிக்கையில் உள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

ஆமாம், துப்புரவு பணியாளர்கள் பெயரில் மாற்றம் செய்து தூய்மை தூதுவர் என அழைப்பது மகிழ்ச்சி!ஆனால் அவர்கள் பெயரில் உள்ள கவுரவம் வாழ்க்கை நடைமுறைகளில் வருவதற்கு மேலும் பல முயற்சிகள் அரசு எடுக்க வேண்டும். பொது மக்கள், கற்றறிந்தவர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த உண்மையான சுற்று சூழல் ஆர்வலர்கள் பிரச்சினைகள் பற்றி சிந்திக்க வேண்டும். அதற்குரிய வளமான தீர்வு செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடுதல் நன்று.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *