அக்டோபர் 2023ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி திரைப்படம். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அனுராக் பதக் 2019 ஆம் ஆண்டு எழுதிய அபுனைவை திரைப்படமாக்கியுள்ளார்கள். விது வினோத் சோப்ரா திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்துள்ளார். இப்போது ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் கொள்ளைக்காரர்களுக்கு பெயர்போன சம்பல் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவன் மனோஜ் குமார் ஷர்மா. அவனுடய தந்தை நேர்மையான அரசு ஊழியர். ஊழல் செய்ய சொல்லும் மேலதிகாரியுடன் நடந்த மோதலில் இடை நீக்கம் செய்யப்படுகிறார். அந்த கிராமத்திலுள்ள ஒரே பள்ளி பஞ்சாயத்து தலைவரால் நடத்தப்படுகிறது. அங்கு தேர்வுகளில் காப்பியடிப்பதை அவரே ஊக்குவிக்கிறார். அதுபோல் ஒரு வருடம் 12ஆம் வகுப்பு தேர்வில்
நடக்கும்போது அங்கு வரும் காவல் அதிகாரி லஞ்சம் வாங்க மறுத்து புகார் பதிவு பண்ணுகிறார். அதனால் அனைவரும் ஃபெயில் ஆகிறார்கள். அதில் மனோஜ்
குமாரும் ஒருவன். அவர் சொன்னது அவன் மனதில் பதிந்து விடுகிறது.அடுத்த வருடம் அவன் மட்டும் காப்பி அடிக்காமல் எழுதி மூன்றாம் டிவிஷனில்
தேர்ச்சி அடைகிறான்.
காவல் அதிகாரி ஆகும் ஆசையில் குடிமை பணி தேர்வு(UPSC) எழுத டெல்லி செல்கிறான். ஒரு ஒப்பந்தாரரின் மகனான பாண்டேயுடன் நட்பாகிறான். பாண்டே
அதிகாரியானால் தான் மேலும் ஒப்பந்தங்கள் எடுத்து சம்பாதிக்கலாம் என்பதற்காக அவனை குடிமை பணி தேர்வு எழுத சொல்லியிருக்கிறார் அந்த ஒப்பந்ததாரர். வசதியில்லாமல் ஐஏஎஸ் தேர்விற்கு பயிற்சி எடுப்பவர்களுக்கு உதவும் கவுரி என்பவர் இவர்களுக்கு உதவுகிறார். அவரும் ஐஏஎஸ் தேர்விற்கு தயாராபவர்தான். பிற்பட்ட வகுப்பை சேர்ந்த அவர் தனது ஆறாவது இறுதி வாய்ப்பிலும் தேர்ச்சி பெற தவறிவிடுகிறார். அங்கு பயிற்சி எடுக்கும் வசதியான குடும்பத்தை சேர்ந்த ஷிரத்தா என்ற பெண்ணும் மனோஜும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள். ஒரு நூலகத்தில் பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே மனோஜ் படிக்கிறான். தன் நேர்மையை சந்தேகிப்பதனால் அங்கிருந்து விலகி ஒரு மாவு மில்லில் தங்கி வேலை செய்துகொண்டே படிக்கிறான். பல கடின முயற்சிகளுக்கு பின் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று காவல் அதிகாரியாகிறான். ஷிரத்தாவும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுகிறாள். இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இயக்கம், ஒளிப்பதிவு, டப்பிங், நடிப்பு என எல்லாமே சிறப்பாக உள்ளன. குறிப்பாக கதாநாயகனாக நடிக்கும் விக்ராந்த் மாசேயை பாராட்ட வேண்டும்.)
மாவு மில்லில் வேலை பார்க்கும் போதும் சரி , அதிகாரியாக வரும்போதும் சரி அவரது நடிப்பும் வேடமும் கன கச்சிதமாக உள்ளது. ஐஏஎஸ் பயிற்சி நிலையங்கள்
என்னென்ன குறுக்கு வழிகளை கையாளுகின்றன என்பதை அம்பலப்படுத்துகிறது படம். பயிற்சி எடுப்பவர்களின் பரபரப்பு, பதட்டம், நட்பு, காதல், பொறாமை
எல்லாவற்றையும் இயக்குனர் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். அன்றாட செலவுகளுக்கு தன் பென்ஷன் பணத்தை தர மறுக்கும் பாட்டி, பேரன் காவல்
அதிகாரியாக படிக்கப் போக மட்டும் தன் சேமிப்பு பணத்தை தருவது நம் மூத்த பெண்களின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.
கிராமத்திலிருந்து வருபவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், வசதியில்லாதவர்கள், இந்தி மீடியத்தில் படிப்பவர்கள் இவர்களுக்கும் நகரத்திலிருந்து வருபவர்கள், வசதியான ‘மேல் வகுப்பினர்’, ஆங்கில மீடியத்தில் படித்தவர்கள் இவர்களுக்கும் உள்ள சமனற்ற நிலையை இயக்குனர் ஆங்காங்கே சுட்டிக்காட்டி செல்கிறார். தமிழ்நாட்டிலிருந்து மத்திய அரசு தேர்வுகளுக்கு செல்பவர்கள் கேள்வித்தாள் ஆங்கிலத்திலோ தமிழிலோ இருக்க வேண்டும்; விடைகளை அதுபோல எழுத அனுமதிக்க வேண்டும் என்கிற போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். சு.வெங்கடேசன் போன்ற மக்கள் பிரதிநிதிகள் அதற்காக வாதாடி பெற்று தருகிறார்கள். ஆக தென்னாட்டிற்கும் வட நாட்டிற்கும் ஒரே பிரச்சினைதான். தீர்வு அவரவர்கள் தாய் மொழியில் எழுத அனுமதிப்பதுதான். அதை இந்த படம் சொல்லவில்லை.
அதேபோல் இந்தப் படம் வலியுறுத்துவது, இந்தியா முன்னேற வேண்டுமென்றால் அதிகாரிகள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதுவே. பஞ்சாயத்து தலைவர்,
ஒப்பந்ததாரர் ஆகியோர் லேசாக சுட்டிக் காட்டப்பட்டாலும் அதிகாரிகள் சரியாக இருந்தால் அவர்களும் சரியாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
நேர்மையான அதிகாரிகள் முக்கியம்தான். ஆனால் அவர்கள் மட்டுமே நாட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியுமா? இன்னொரு விசயமும் விவாதிக்கப்பட வேண்டும். ஏழை மாணவர்கள் சிரமப்பட்டு படித்தால் முன்னேறலாம் என்கிற கருத்தும் இதில் வலியுறுத்தப்படுகிறது. சமமில்லாத போட்டியில் ஒரு சிலர்
வெற்றி பெறலாம். எல்லோராலும் இயலாது என்பதே எதார்த்தம். பின்தங்கிய வகுப்பினருக்கு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதே நீதியாகும்.
தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் அவை செய்யப்படுகின்றன. வட மாநிலங்களிலும் அத்தகய கோரிக்கைகள் எழுப்பப்பட வேண்டும்.![]()
நேர்முகத் தேர்வில் ‘முதல் வகுப்பில் தேர்வானவனை விட மூன்றாம் வகுப்பில் தேர்வான நேர்மையானவன்தான் இந்தியாவிற்கு தேவை’ என்று மனோஜ்
சொல்வது அருமை.
வசூலிலும் விமர்சனங்களிலும் விருதுகளிலும் இப்படம் சிறந்து விளங்குகிறது என்று தெரிகிறது.
எழுதியவர்
ரமணன் ராமர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

