அ.சீனிவாசன் கவிதைகள்
**********************************************
1.
உன்னை நினைவுபடுத்தும்
எல்லாவற்றிலிருந்தும்
விலகி நின்று பார்க்கிறேன்.
ஆனால் என்னிலிருந்து
என்னால் ஒருபோதும்
விலக முடியவில்லை — அன்பே!
**********************************************
2.
பெரிய கதவுகள்—
பெரும்பாலும்
மூடியே இருப்பவைதான்.
**********************************************
3.
நீ என்னை விரும்புகிறாய்
என்று நினைத்துக்கொள்கிறேன்;
குறைந்தபட்சம்
என் நினைவுகளையாவது
சமாதானப்படுத்திக் கொள்ள.
**********************************************
4.
நிராகரிப்புகள்
வருத்தமளிக்கின்றன;
ஆனால்
அச்சுறுத்துவதில்லை.
நிபந்தனையற்ற அன்பு
சந்தோஷப்படுத்துகிறது;
ஆனால்
பயமுறுத்துகிறது.
**********************************************
5.
புலம்பலுக்கும் கவிதைக்கும்
சின்ன வித்தியாசம் தான் —
உனக்குப் பிடித்தால் கவிதை,
பிடிக்காவிட்டால்…
புலம்பல்.
**********************************************
6.
நிராகரிப்புகளை
நேசிக்கிறேன் நான்.
என்னை நேசிக்காதவர்களையே
நேசிக்கும் போது,
என்னை நேசிப்பவர்களை
நேசிக்காமல்
எப்படி இருக்க முடியும்?
ஆகையால்
நிராகரிப்புகளையே
நேசிக்கிறேன் நான்.
**********************************************
7.
உன் அன்பிற்கு ஈடாகவும்
அதிகமாயும் வைக்க
ஆயிரம் மடங்கு அன்பு
என்னுள் உண்டு.
ஆனால்
உன் நிராகரிப்பிற்கு ஈடாக
வைக்க —
இந்தக் கவிதையைத் தவிர
வேறொன்றில்லை.
என்னை விடவும் அதிகம்
நிராகரிக்கப்பட்டதும்,
என் கவிதையை விடவும்
வேறொன்றில்லை.
கவிதையோடு தான்,
கவிதைக்குள் தான்,
கவிதையால் தான்,
இந்தக் கவிதையாகத்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
**********************************************
8.
மின்(மினி)மனிதா!
நீண்ட கயிறு,
மின் ரம்பம்,
கீழே இருவர்,
மேலே ஒருவர்,
பக்கவாட்டில் இருவர் —
பத்து நிமிடத்தில்
பெரும் விருட்சமே
துண்டு துண்டாக!
மரத்தின் நிழல்
எங்கே போனது
என்று கவிதை எழுதுகிறேன்.
இன்னும் மின் மயானத்தைச்
சந்தித்ததே இல்லை நான்.
**********************************************
9.
வாழ்க்கை —
சொந்த வாசல் என்று
குதூகலிக்கிறோம்;
வெளியேறும் வாசலை
நுழைவாயில் என
நம்பிக்கையுடன்
தாண்டுகிறோம்.
வெளியேறிக் கொண்டிருப்பதை
தெரியாததால்,
குதூகலத்திலேயே
வெளியேறி வருகிறோம்.
**********************************************
10.
உன்னைச் சந்தித்ததால் தான்
என்னை நான்
புரிந்துகொண்டேன்.
**********************************************
11.
எதிரெதிராக வரும் வண்டியின்
முகப்பு விளக்கு —
சிறு சூரியக்குஞ்சாய்
குளிரை எடுத்துக் கொள்கிறது.
ஆனால்
எந்த சூரியக்குஞ்சும்
வளருவதில்லை;
சூரியன் வந்ததும்
சுருங்கிப் போகின்றன.
**********************************************
12.
நிழலாக நீ
எனைத் தொடர
வேண்டாம்.
பயன் தரும்
மரமாக
என் மனத்தோப்பில்
வளர வேண்டாம்.
புயலாக வந்து
என் கவலை
தீர்க்க வேண்டாம்.
செயலால்
என் உயரம்
கூட்ட
வேண்டாம்.
நீராக
என் கோபம்
தணிக்க வேண்டாம்.
நீ மட்டும்
வேண்டும்—
நீயாகவே வேண்டும்.
**********************************************
13.
முதிர்ச்சியென்பது யாதெனில்
நினைத்ததையெல்லாம்
பேசினாய்!
.
.
.
நினைத்ததையெல்லாம்
பேசிவிட நினைத்தாய்!
**********************************************
14.
.
நினைத்ததையெல்லாம்
பேசிவிட்டதாய் நினைத்துக்
கொள்கிறாய்!
.
.
மறந்தும்
நினைக்கவே மாட்டாய்!!!!
**********************************************
15.
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு
பார்க்கும்
முதலாம் வகுப்புப் பள்ளி –
கான்கிரீட் காடுகளுக்குள்
கச்சிதமாய் ஒரு கோட்டை.
பளிச்சென்ற வாசல்கள்,
இரும்புக் கதவுகள்,
தூரத்து மாணவர்களும்
வந்து செல்ல வசதியாய்
பேருந்துகள்.
பக்கத்து மரத்திலிருக்கும்
அணில்களுக்கு மட்டும் –
பாவம், வந்து செல்ல
ஒரு வழியும் இல்லை.
வாசல் முன்னே –
அதே சிறிய
திண்பண்டக் கடை.
உறையணிந்த உணவுகளின்
குளிர் வாசனை.
இலந்தை வடை இருப்பதை
பார்த்து
மனதிற்குள்
உறுதி செய்துகொண்டேன்.
வாங்கவில்லை.
படிக்கும் காலத்திலும்
இலந்தை வடையின்
இருப்பை உறுதி செய்துகொள்வேன்
வாங்கியதில்லை.
எல்லாம் மாறிவிடாது.
**********************************************
16.
அப்போதெலாம்
பறவை பார்ப்பேன்.
பூக்களைக் கொஞ்சுவேன்.
பட்டாம்பூச்சி தொடுவேன்.
அணிலோடு விளையாடுவேன்.
நிலாவோடு பேசுவேன்.
நாய்க்குட்டியை மிரட்டுவேன்.
அப்போதெலாம்
வாய்விட்டுச் சிரிப்பேன்
நீ மெதுவாக
வளர்ந்து கொண்டிருந்தாய் மகளே.
**********************************************
📚 எழுதியவர்:
அ.சீனிவாசன்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.