இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை பார்த்தவுடன் எனது மகனின் ஞாபகம் வந்தது. ஒரு சிறுமி ஒரு நாயுடன் இருக்கும், வளர்ப்பு பிராணி மீது ஈர்ப்புடையவர் எனது மகன், குறிப்பாக நாய் என்றால் மிகவும் பிடிக்கும். ஆதலால் அவரை படிக்க வைக்க இது தூண்டுதலாக இருக்கும் என்று இந்த புத்தகத்தை வாங்கினேன்..
ஆனால் அவரை விட இந்த புத்தகத்தை நான் விரும்பி படித்தேன். மிக எளிமையான நடையில் குழந்தைகளுக்கு வரலாற்றைப் பற்றிய ஆர்வத்தை தூண்டும் ஒரு புத்தகம் இது..
சரீனா பஞ்சாப் சிறுமி, இந்த கதையின் நாயகியாக உலா வருகிறார். அவரது சுட்டித்தனமும், பொறுப்பும், தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆர்வமும் வாசிப்பவரை கண்டிப்பாக கவர்ந்திழுக்கும்.
பஞ்சாபில் 1919 ஏப்ரல் 13 அன்று நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை என்ற ஒரு வரலாற்று நிகழ்வினை மிக எதார்த்தமாக குழந்தைகளுக்கு புரியும் கோணத்தில் கதையாக நகர்த்தியுள்ளார்.
இந்த நிகழ்வின் ஊடாக, இந்துகளின் ராமநவமி, சீக்கியர்களின் வைசாகி திருவிழா, பஞ்சாபின் புத்தாண்டு போன்ற பண்டிகைகளின் சிறப்பையும், மத நல்லிணக்கத்தையும் பதியும்படி எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர்..
சரீனாவின் நீச்சல் திறமை, கணக்கின் மீதான கற்றல் ஆர்வம், கணக்கை எங்கு எப்படி அன்றாட வாழ்வில் உபயோகிக்க வேண்டும் , பிற உயிர்கள் மீது அவளது அன்பு, பெரியவர்களிடம் அவளுக்கு இருக்கும் மரியாதை, கீழ்படியும் பண்பு, ஒரு சிறிய பொறுப்பாக இருந்தாலும் தன்னுடைய முழு கவனத்தையும் அதில் செலுத்தும் முறை இப்படி பல விஷயங்களை சரீனா மூலம் மிகத் தெளிவாகவும் அழகாகவும் ஆசிரியர் இக்கால குழந்தைகளுக்கு கூறியிருப்பது மிக சிறப்பு..
இந்த காலத்தில், கல்வி குழந்தைகளிடத்தில் திணிக்கப்பட்டு வருகின்றது. இதனால் பல குழந்தைகளுக்கு கல்வி என்பது ஒரு இயந்திரத்தனமான ஒரு விஷயமாக உள்ளது..அதை உடைக்கும் வகையில் வரலாற்றையும் , கணிதத்தையும் மிக இயல்பாகவும் எளிமையாகவும் ஆர்வத்துடனும் கற்கும் தூண்டலை இந்நூல் ஏற்படுத்துகிறது
பத்தாயிரம் பேர் கூடியிருந்த ஜாலியன் வாலா பாக் பூங்காவில்,1650 பேர் மிகக் கொடூரமாக சுட்டு கொன்ற சம்பவத்தை வன்மம் இல்லாமல் கடத்துகிறார். அதே சமயத்தில் நாம் இன்று அனுபவிக்கும் இந்த சுதந்திரம், எவ்வகையான கொடுமைகளையும் கொடூரங்களையும் கடந்து வந்துள்ளது என்பதையும் குழந்தைகளுக்கு பதிய வைத்துள்ளார்..
ரௌலட் சட்டம், ஜெனரல் டயர் , சாலைகள்,ரயில் பாதைகள் அமைத்தன் நோக்கம், கல்வியின் அவசியம், ஒற்றுமையின் வலிமை போன்ற எண்ணற்ற விஷயங்களை குழந்தைகளுக்கு புரியும் படி விளக்கியுள்ளார் அதை சார்ந்த விஷயங்களை தேடும் ஆர்வத்தையும் தூண்டியுள்ளார்..
இந்த குழந்தைகளுக்கான புத்தகத்தை வாசிக்கும் போது ஒவ்வொருவரும் அவரது குழந்தை பருவத்தை தொட்டு வருவோம்..
இந்திய சுதந்திர வரலாற்றின் ஒரு நிகழ்வை மையமாக கொண்டு குழந்தைகளுக்கு,
வரலாறு, தேசப்பற்று, கணிதம், பிற உயிர்களிடத்தில் அன்பு, பெரியவர்களை மதித்தல், கீழ்ப்படிதல், அவர்களிடத்திலிருந்து கற்று கொள்ளுதல் போன்ற பல விஷயங்களை கடத்த முயன்றுள்ளார்.
இந்த முயற்சி வெற்றிபெறவும், இன்னும் இதுபோன்ற பல முயற்சிகள் தொடரவும் வேண்டி, நன்றிகளும்!! வாழ்த்துகளும்!!
நூலின் பெயர்: 1650 முன்ன ஒரு காலத்திலே
ஆசிரியர்: திரு.விழியன்
பதிப்பகம்: வானம் பதிப்பகம்
மகிழ்ச்சியுடன்
பாக்ய லக்ஷ்மி. P
சென்னை.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

