ஆசிரியர் : ஆயிஷா. ரா. நடராசன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 80
விலை : ₹ 65
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/1729-ayisha-era-natrasan/
என்பதே அதே!
ஹார்டி இதை வெளியுலகிற்கு விவரித்த பின், 1729 என்பது ‘ராமானுஜன் – ஹார்டி எண்’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது. இந்த நாவலுக்கு, இந்த எண்ணை விடப் பொருத்தமான தலைப்பு வேறென்ன இருக்க இயலும்!?
80 பக்க நாவல் தான் என்றாலும் படிக்க அவ்வளவு சிரமமாக உள்ளது. முன்னுரை எழுதியுள்ள ச.தமிழ்ச்செல்வன், “பல இடங்களில் கண்களில் நீர் திரையிட வாசித்தேன். சில இடங்களில் மேற்கொண்டு தொடர்ந்து வாசிக்க முடியாமல் கண்ணீருடன் அப்படியே சாய்ந்து கிடந்தேன்” என்கிறார்.
ஆம்! கண்கள் கலங்காமல் இந்தப் புத்தகத்தை வாசித்து விடவே முடியாது. மனதிற்கு அவ்வளவு கனத்தினை ஏற்படுத்துகிறது நாவல்.
நாவலின் பிரதான பாத்திரங்களான 26 குழந்தைகளும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். மனதை ரணமாக்கும் வர்ணனைகள் இல்லை என்றாலும், சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு முள் குத்தியது, கீழே விழுந்து சிராய்ப்பு ஏற்பட்டது, சுரத்தில் துடித்தனர் எனப் படிக்க நேர்வதே பதற்றத்தைக் கொடுத்துவிடும். அப்படியிருக்கையில், குழந்தைகள் மரணத்தை வலியுடன் எதிர்கொண்டுள்ளனர் என்ற வரிகள் மிகுந்த அயற்சியையும், வாழ்வின் மீதான பயத்தையும் பதற்றத்தையும், அனைத்தின் மீதும் நம்பிக்கையற்ற சோர்வையும் ஏற்படுத்துகிறது.
ஆனால், அக்குழந்தைகள் கணிதத்தை வலி நிவாரணியாக முன் வைக்கிறார்கள். மகாகவி பாரதியாரையே பதற்றம் கொள்ள வைத்த கணிதத்தை, அவ்வளவு எளிதாக்கி, ‘கணிதம் ஒரு போதை வஸ்து’ என்பது போல் பித்து பிடிக்க வைக்கிறார்கள். ‘கணிதம் என்றால் நூறடி தள்ளிப் போவேன்!’ என்பவர்கள் இந்த நாவலைப் படித்தால், கணிதம் மேல் அவர்களுக்கும் காதல் எழுவதைத் தவிர்க்கவே முடியாது. கூடவே, குழந்தைகள் புற்றுநோய் குறித்த புள்ளிவிபரங்களையும் திணிக்காமல் இடையூடாக, அதையும் கணிதத்துடன் இயைந்து தந்துள்ளார் ஆயிஷா இரா.நடராசன்.
மிஸ்டர் எக்ஸ், மேடம் வொய், டாக்டர் இசட் என நாவலில் மேலும் மூன்று கதாபாத்திரங்கள். எக்ஸ் தன் அனுபவங்களைச் சொல்வதாகத்தான் நாவல் விரிகிறது. பித்தாகரஸ் என்றால் முகம் சுளிப்பவர்கள், குழந்தைகள் விவரிக்கும் பித்தாகராசின் நட்பு எண்கள், நம்பிக்கை வட்ட எண்கள் முதலியவற்றைப் படித்தால் அவர் மீதொரு மதிப்பும் மரியாதையும் எழுவது உறுதி. தன் மரணத்தை எப்படி பெர்னாலி வடிவமைத்துக் கொண்டார், நாயகி தன் நோயுடன் ஒப்பிட்டுச் சொல்லும் ட்ரூயல் (treble) புதிர், மாறனின் ட்ரெயின் புதிர், சோஃபி ஜெர்மெய்ன் எப்படி மாறுவேடத்தில் கணிதம் பயின்று உலக புகழ் பெற்றார், நம்பர் 6 ஏன் பெர்ஃபெக்ட் எண், கொறுக்கையூர் காரி நாயனாரின் கணக்கதிகாரம் என நாவல் நெடுகும் மனதைக் கவரும் கணிதச் சுவாரசியங்கள். 5, 16, 26 முதலிய எண்களின் சிறப்பு எனத் திகட்டும் அளவிற்கு நாவலில் பொக்கிஷங்கள். இந்நாவலை ‘சிறுவர் நாவல்’ என்று வரையறைக்குள் கொண்டு வந்தாலும், இது சிறுவர்கள் பற்றிய நாவல் என்பதே சரியாகும்.
கஜா புயல் விளைவித்த நாசம் பற்றியும் நாவலில் வருகிறது. அப்புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்தக் குழந்தைகள் எப்படி உதவுகிறார்கள் என்பதும், அதற்காக அந்தக் குழந்தைகளுக்கு என்ன பரிசு கிடைக்கிறது என்பதும் அதி சுவாரசியம். 1729 எனும் எண் எப்படி கணித உலகில் ராமானுஜரால் முக்கியமான இடம்பெற்றதோ, அப்படி இலக்கிய உலகில் இந்த நாவலுக்கான இடமும் அமையும் என்பது உறுதி.
நன்றி – ithutamil.com
நூல் : 1729
ஆசிரியர் : ஆயிஷா. ரா. நடராசன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 80
விலை : ₹ 65
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/1729-ayisha-era-natrasan/