நூல் அறிமுகம்: 1729 எனும் மருத்துவ-கணித நாவல்..! – மதுசுதன்

1729
1729நூல் : 1729
ஆசிரியர் : ஆயிஷா. ரா. நடராசன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 80
விலை : ₹ 65
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/1729-ayisha-era-natrasan/

நீண்ட நாட்களுக்கு பிறகு நெஞ்சத்திற்கு நெருக்கமானதொரு நாவல்.இனி எப்போதும் இந்த நாவலை மறக்கமுடியாது என்றே நினைக்கிறேன்.புற்றுநோய் பாதிக்கப்பட்ட 26மாணவர்களை மையமாகக்கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் இக்கதைகளத்தில், கணிதமேதை ராமானுஜத்தின் எண்கள் தொடர்பான புதிர்கள்,அதனையொட்டிய வரலாற்று தரவுகள் என நீளும் கதை சில வருடங்களுக்கு முன்பு தஞ்சை டெல்டாவை சூரையாடிய கஜாபுயலின் கோரத்தாண்டவம் என அடுத்தடுத்து வெவ்வேறு தளங்களுக்குள்ளாக பயணித்து அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஒருசேர நமக்குள் கொட்டி குவித்து விடுகிறது. மருத்துவத்துறையில் துவங்கி கணிதத்துறையில் மையம் கொண்டு நிகழ்கால வாழ்வியல் பிரச்சனைகளை பேசுபொருளாக்குவதில் முடித்திருப்பது அபாரம்.கணிதம் என்றாலே தூர ஓடும் என் போன்றோர்களையும் வசப்படுத்தி இருப்பதே இந்நாவலின் சிறப்பு.
இதையொரு “மருத்துவ-கணித” நாவல் என்று சொன்னால் கூட அது மிகையாகாது.துறைசார் இலக்கியங்கள் தமிழில் அரிதெனினும் தொடர்ந்து இந்த களத்தில் சளைக்காது தனது நீண்ட படைப்புப் பட்டியலில் வருடந்தோறும் இப்படிப் பல படைப்புகளை இணைத்துக்கொண்டே போகும் தோழர் ஆயிஷா நடராசன் அவர்களை பார்க்கும் போதெல்லாம் வியப்பே மேலிடுகிறது.இதை வெறும் ஒரு சிறார் நாவல் என்கிற வட்டத்தில் மட்டும் சுருக்கி விடமுடியாது.சிறார் படைப்பு என்பதே பெரிய களம் தான்.அதில் எங்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் தோழர் ஆயிஷா இரா.நடராசன்.இந்நாவலை வாசித்துமுடித்த கணத்திலேயே இது குறித்து விரிவானதொரு அறிமுகம் எழுதலாம் என நான் உணர்ச்சி வசப்பட்டிருந்த நிலையில்,காலம் அதற்கான சூழலை மெல்ல தள்ளிப்போட்டு இந்தளவில் தான் எழுதவைத்திருக்கிறது.சென்ற வருடத்தில் வெளியான சிறார் படைப்புகளில் முதன்மையானது 1729 என்றால் அது பிழையாகாது.