நூல் அறிமுகம்: 1801 நாவல் – கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம்: 1801 நாவல் – கருப்பு அன்பரசன்

1801 நாவல்
வடிவான அந்தப் புலர் காலைப் பொழுதினில்
“அக்காக்கா” என தனதின் சோகம் வழிந்தோடும் தேன் குரலில் இசைத்துக் கொண்டிருக்கும் குயிலின் ஒற்றைக்குரல் வீட்டு சன்னலின் திரச்சீலை ஒதுக்கி எனதின் செவிகளுக்குள்ளும் மனசிற்குள்ளும் ஏதோ செய்து கொண்டிருக்க..
“1801” புதினத்தின் இறுதி அத்தியாயத்திற்குள் நுழைந்தேன்.. வாசிக்க வாசிக்க மனது என்னையும் அறியாமல் பதட்டத்தோடே
இருதயத்தின் லப்டப் ஒலியெழுப்பவதின்
இடைவெளியைக் குறைத்துக் கொண்டே இருந்தது.. அக்னீயூவால் சிறப்பிடிக்கப்பட்ட
பெரிய மருதுவும்.. தலைமட்டும் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்ட இரும்புச் சிறைக்குள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கும் சின்ன மருதுவும்,  விலங்கிடப்பட்ட மகன்கள், மருமகன்கள், ஏதுமறியா அப்பாவிப் பேரக் குழந்தைகளையும் சேர்த்து ஐநூறு போராளிகளும்.. ஐநூறு தலை சீவப்பட்ட
உயர்ந்த வலு மிக்க பனைமரங்களும்..
அதில் தொங்க விடப்பட்ட கயிறுகளும்
திருப்பத்தூரின் உயர்ந்த கோட்டைக்கு எதிரிருக்கும் மைதானத்திற்குள்
பொதுமக்கள் சூழ்ந்து நிற்க ஆணவத்தின் உச்சத்தில் பிரிட்டீஷ் படையின் ஆக்னியூவும், சிப்பாய்களும் குரூரமான சிரிப்பொலி.. உண்மைகளூடான இந்தப் புனைவு மனசை ரத்தம் கசியப் பிராண்டிக் கொண்டே இருந்தது அந்தக் குயிலின் அக்கக்கா சோகத்தைவிட ஆழமாக.. ஆமாம் நண்பர்களே தென் தமிழகத்தின் நாங்குநேரி தொடங்கி வடக்கில் பூனாவரையிலான போராளிகளை, போராட்டக் குழுக்களை பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்திற்கெதிரான புரட்சியின்-மூச்சுக்காற்றின் குரல்வளை அந்த 1801ம் வருடத்தின், அக்டோபர் 24 அன்று சொந்த நாட்டில் நக்கிப் பிழைக்கும்  துரோகக்கூட்டங்களின் துணையோடு
அறுத்தெறிப்பட்டது.
“1801” இந்திய சுதந்திரப்போராட்டத்தின்
மக்கள் திரட்சி, திட்டமிட்டோ அல்லது ஏதோச்சையாகவோ இல்லையென்றால்
கவனக்குறைவின் முகமுடிக்குள் மறைந்து கொண்டோ சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றினை எழுதியவர்களின் நோக்கத்தில் இருந்து வரையப்பட்ட வட்டத்திற்குள் இருந்தோ  மூடப்பட்டு,
இனி போராடமாட்டோம், போராளிகளுக்கும் எங்களுக்கும் யாதொரு சம்ந்தமும் இல்லையென்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவர்களின் குறிப்பில் இருந்து இந்தச் சுதந்திர இந்திய அரசு 1857 ல்  டெல்லியில் நடைபெற்ற சிப்பாய் கலகம்தான் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் என அறிவித்தது பெரும் சோகத்தில் ஒன்று என்பது மட்டுமல்லாமல்
தென்னிந்தியாவில் நடைபெற்றை சுதந்திரப் போராட்டத்தின் தியாகத் தழும்புகள் அனைத்தையும் வரலாற்றுப் பக்கங்களை அழித்தொழிப்பதாகும்.
“1801” தென்னிந்தியாவில் கட்டமொம்மன், பிரிட்டீஷ் ஆட்சியாளர்களால்
பாஞ்சாலங்குறிச்சியின் புளியமரத்தில் தூக்கில் ஏற்றிய நாள் முதல் தொடங்கி
கைது செய்யப்பட்ட கட்டபொம்மனின் தம்பிகள் சிவத்தையா, ஊமைத்துரையின்
பாளையங்கோட்டை சிறை உடைத்து மீட்டெடுப்பின் வழியாக
வெங்கம் பெரிய உடையணத் தேவர், ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி, விருப்பாச்சி கோபால் நாயக்கர், சித்திராங்குடி மயிலப்பன், பூனாவைச் சார்ந்த மராத்தியன் தூந்தாஜிவாக்
போன்ற போராளிகளின் நிஜங்களில் இருந்தும்.. பிறந்த மண்ணுக்கும்.. போராளிகளுக்கும் துரோகத்தின், சுயநலத்தின் அடையாளமாக நின்ற விஜயரகுனாத தொண்டைமான்,  சேதுபதி மங்களேஸ்வரி நாச்சியார், கெளரி வல்லபர்
நிஜங்களில் இருந்தும், சுதந்திரப் போராட்டத்தின் பிசுபிசுக்கும் ரத்தம் தெரித்துக்கிடக்கும் பெரிய மருது, சின்ன மருதுவின் மெய்யான வரலாற்றுப் பக்கங்களை  புனைவுகளூடாக புதினமாக்கி தமிச் சமூகத்திற்கு அளித்திருக்குக் இருக்கும் நாவலாசிரியர்  டாக்டர் மு. ராஜேந்திரன், இ.ஆ.ப., அவர்களுக்கு விடுதலையை நேசிக்கும், கொண்டாடும் மனங்ககளின் பிரியத்திலிருந்து நன்றியும் பேரன்பின் வாழ்த்துக்களும்.
நாவலாசிரியரின் எண்ணத்தின் குறிப்பறிந்து இணைந்து பயணித்து இந்த வரலாற்று ஆவணத்தை, தரவுகளை நல்லதொரு அழகிய வடிவமைப்பில் நூலாக எமது  மண்ணிற்களித்த  தோழர்கள் வெண்ணிலா, முருகேஷ் உள்ளிட்ட அகநி வெளியீட்டிற்கும் வணக்கங்களையும்
அன்பையும் உரித்தாக்குகிறோம்.
நாவல், நானூறு ஆண்டுகால பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம்  இந்தியாவிற்குள்  நுழைய மொகலாய மன்னர் ஜஹாங்கிரிடம் கையேந்தி அனுமதி கேட்டதால் குத்தகைக்கு கிடைத்த சூரத் நகரில் இருந்து வியபாரத்தை தொடங்கி, போர்ச்சுக்கீசிய வியபாரக் கம்பெனி இனமாகக் கொடுத்த பம்பாய் நகரத்தைக் கொண்டு தன் வியபாரத்தை விஸ்த்தீகரிப்பிற்கு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு
1702 ல் கிடைத்த திமிர் கொண்ட அதிகாரம்தான், இந்திய முழுமைக்கும் தங்களின் ஆட்சியைக் கொண்டுவர அடித்தளமிட்டது.. ஆம் தங்களின் வியபாரத்தை விரிவுபடுத்த எதிர்ப்போரோடு பேச்சுவார்த்தை நடத்த, ஒத்துவராதபோது ராணுவத்தைக் கொண்டு போரிடவும்  அனுமதி கொடுத்தது இந்தக் கிழக்கிந்திய கம்பெனிக்கு இங்கிலாந்து என்பதையும், அதோடு மட்டுமல்லாமல், ராணுவத்திற்கு முன்னால் கொடிபிடிக்கும் சாதாரண சிப்பாயாக இருந்த ராபர்ட் கிளைவ் எவ்வாறு ஆற்காட்டு வீரனாக அழைக்கப்பட்டு தன் கடைசி காலத்தில் கேவலமாக தற்கொலை செய்து செத்துப் போன நிஜத்தை  இந்தியத் தாய்க்கும், வெள்ளைக்காரத் தந்தைக்கும் பிறந்த வீரர்களின் தளபதியாக இருக்கும்
மேஜர் ராபின் கல்யாணி தன் படைவீரர்களோடு சேர்வராயன் மலைப்பகுதியில் நடைபெரும் உரையாடல்கள் வழியாக விருவிருப்பாக
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் வஞ்சகங்களை பிரித்தாளும் சூழ்ச்சிகளை சொல்லி இருக்கிறார் நாவலாசிரியர்.
பாளையங்கோட்டையில் சிறையில் இருந்து சின்ன மருதுவின் பின்புலத்தால் சிறை உடைத்து வெளியேறும் சிவத்தையாவும்,
ஊமைத்துரையும் பாஞ்சாலங்குறிச்சியில்
மண்மேடாகிக் கிடக்கும் கோட்டையை புதியதானதொரு உத்தியால்  நிர்மாணித்து அதற்குள் இருந்து பரங்கியர்களை எதிர்கொள்ள;  சக்திவாய்ந்த அக் கோட்டையை  நிர்மூலமாகிடும் நோக்கில்  கோட்டைக்குள்  விலை உயர்ந்த பொருட்களையும், நகைகளையும்  மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக வஞ்சகம் நிறைந்த ஒரு வதந்தியைக் கிளப்பி அந்த வதந்தியினூடாக கோட்டையில் இருந்து உளவு பார்க்க  வெளியே வரும் பாஞ்சாலங்குறிச்சி சிப்பாய் ஒருவரை கைது செய்து அவரை கொடுமைப்படுத்தி புதியதாக உருவாக்கி இருக்கும் கோட்டையின் கட்டுமான ரகசியம் அனைத்தும் அறிந்து, வெள்ளைக்காரர்களின்  பீரங்கிக் குண்டுகளால் அக் கோட்டை நொருங்கி விழும்போதும், கோட்டைக்குள் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை அள்ள ஓடும் பொது மக்களையும், கோட்டைக்குள் இருந்த படைகளையும் பிரிட்டீஷ் ராணுவம் சுட்டுக்கொல்லும் நிலையில்.. கோட்டையோடு சேர்ந்து வாசிப்பவரும் நொருங்கிப் போவார்கள்.
பாளையங்கோட்டை சிறைதனில் இருந்து சிவத்தையாவையும், ஊமைத்துரையையும் வெளியேற உதவிடும் பேரன்பு கொண்ட கதாப்பாத்திரமாக கேத்தரின் என்பவரை
புனைவாக்கி நடக்கவிட்டுருக்கிறார் நாவலாசிரியர். கேத்தரின் நடந்து வரும் இடமெங்கிலும் தாழம்பூவின் மொத்த வாசதையும் அவரின் அன்பொழுகும் வார்த்தைகளுக்குள் நுகரலாம் வாசிப்பவர்கள். கூடவே வரும் அந்த முஸ்லீம் தாரகை பேகமும் நமது மனசுக்குள்
தனியானதொரு இடமதில் அமர்ந்து கொள்வார்கள்.
பிரிட்டீஷ் அரசு தம்முடைய ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணித்து வருகிறது என்பதை அறிந்தும்
பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து தப்பித்து வரும் ஊமத்துரையை கமுதி சென்று ஊர்மக்கள் குலவையிட ஆரத்தி எடுத்து அழைத்துவரும் போதிலிருந்து தொடங்குகிறது மருது சகோதரர்களின்
வெள்ளையர்களுக்கெதிரான நேரடிப் போராட்டம். சிவகங்கைச் சீமையின் அரசர்களாக இருந்த முத்து வடுகநாதர், வேலு நாச்சியார், வெள்ளச்சி நாச்சியர் அவரைத் தொடந்து வெங்கம் பெரிய உடையணைத் தேவர் ஆகியோருக்கு நம்பிக்கைக்குரிய பிரதானியாக இருந்த பெரிய மருதுவும், அவரின் தம்பி சின்ன மருதுவும் வெள்ளையர்களுக்கு எதிரானப் போராட்டத்திற்கான வியூகம் அமைக்க திட்டமிடத்தொடங்கி களமிரங்கினர்.
சின்ன மருதுவின் முயற்சியால் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்ட தூந்தாஜியின் தளபதிகள், மைசூர் போராளிகள், கோயம்பத்தூர் போராளிகள், தஞ்சை ஞானமுத்து, பாஞ்சாலங்குறிச்சி சிவத்தையா, ஊமத்துரை, ராமநாதபுரம் மயிலப்பன், விருப்பாச்சி கோபால் நாயக்கரின் மகன் உள்ளிட்ட போராட்டக்குழுவினர் கூடி பெரிய மருதுவின் ஆலோசனையோடு சின்ன மருதுவால் வெள்ளையர்களுக்கு எதிரான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  பிரகடனம்  நிறைவேற்றப்பட்டு திருச்சிக் கோட்டையிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள் கோவில் சுவரிலும் ஒட்டபட்டது.
“இம் மண்ணில் வாழும் ஒவ்வொருவரும் தாம் வாழுகின்ற ஊர்களிலும் பாளையங்களிலும் ஆயுதங்களை ஏந்தி ஒருங்கிணைந்து, ஆங்கிலய இழிபிறவிகளின் பெயர்கூட இம்மண்ணில் இல்லாதபடி அழித்தொழிக்க உறுதி பூண வேண்டும். அப்போதுதான் ஏழை எளியவர்கள் உயிர் வாழ முடியும். பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முகம்மதியர்கள் என பிளவுண்டு ஆயுதமேந்தி வெள்ளைக்காரர்களின் பட்டங்களை சுமந்து நிற்கும் வல்லவர்களே உங்களுடைய வீரத்தை ஆங்கில இழிபிறவி யாரைக் கண்டாலும், எங்கு கண்டாலும் உடனே அவர்களை வெட்டி வீழ்த்தி வெளிப்படுத்துங்ககள். கடைசி வெள்ளையன் வரை வெட்டிச் சாயுங்கள்.”  என்ற வாசகங்களை உள்ளடக்கிய சுவரொட்டி வெள்ளையர்களை மருது சகோதரர்காலின்பால் அச்சத்தை ஏற்படுத்தியதின் விளைவே அவர்களை காளையர் கோயிலை நோக்கி படை நடத்த தூண்டுகோலாக அமைந்தது..   கோபமடைந்த அக்னியூவ்
சிறுவயலை கொளுத்தி தனது வேட்டையை தொடங்கினான். காளையார் கோயிலின் காட்டிற்குள் இருந்து தன் திட்டத்தை வகுத்த மருது சகோதரர்களையும் போராளிகளையும்  காட்டு மரங்களும் செடி கொடிகளும் மிருகங்களும் காத்து நின்றன வெள்ளையர்களை பலிகொண்டு. 30 நாள் போரிலும் வெள்ளையர்களின் படை திக்குமுக்காடி திணறியது போராளிகளின் கொரில்லாத் தாக்குதலின் யுத்தி கண்டு.
பழக்கபடாத காடுகளுக்குள் இறங்கி போராடுவது என்பது வெள்ளையர்களுக்கு முடியாமல் போனது. இந்த நிலையில் வெள்ளையர்களுக்கு ஆதரவாக காட்டையும் மரத்தையும் வெட்டி பீரங்கிகளும் சிப்பாய்களும் வெறி கொண்டு தாக்குவதற்கு ஏதுவாக  தொண்டைமான் தன் எல்லைப் பகுதியில் இருந்து மருது சகோதரர்களுக்கு எதிராக
தன் ஆட்களை கொடுத்து பாதையமைத்து உதவிடுகிறான் வெள்ளையர்களுக்கு. காளையார் கோவிலிலும்,  காடுகளுக்குள்ளும் வெள்ளைக்கார சிப்பாய்களின் பிணம் எங்கும் நிறைந்து கிடக்கிறது. சீற்றத்தின் உச்சத்தில் இருந்த அக்னியூவ் சிவகங்கையில் கெளரி வல்லபரை பொறுப்பில் நிர்ணயித்து பொது மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கி நிலக் குத்தகையின் பெயராலும், பரிசுப் பணத்தின் பெயராலும் போராளிகளை உயிரோடு பிடித்துக் கொடுப்பதற்கு ஒரு தொகையும், பிணமாக கொடுப்பதற்கு ஒரு தொகையும் என அறிவித்து தண்டோரோ போடப்படுகிறது. வஞ்சனையாக சொந்த தேசத்து மக்களையே போராளிகளுக்கு எதிராக தூண்டி விடப்படுகிறார்கள் வெள்ளைக்காரர்களின் வஞ்சகத்தால்..
காட்டுக்குள் இருக்கும் மிருகங்கள் போராளிகளை காத்து நிற்க, காட்டுக்கு வெளியே நிற்கும் மனித மிருகங்கள் மனித ரத்தம் வேண்டி அலைந்து கொண்டிருந்தன.
காளையார் கோவில் வெள்ளையர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த கையோடு, தொண்டைமானின் துரோகத்தாலும் மருது சகோதரர்கள் பின் வாங்கிட.. அக்னியூவின் தந்திரத்தால் போராளிகள் இருவரும் தனித்தனியே பிரிய நேர்ந்திட..  வெற்றியூர் காட்டில் மறைந்திருந்த சின்ன மருது கூடவே இருந்த துரோகி கருத்தன் என்ற ஆள்காட்டியால் அடையாளம் காட்டப் பட்டு  காலில் சுடப்பட்டு வெள்ளையர்களால் பிடிபடுகிறார். சின்ன மருது பிடிபட்டக் கையோடு ஊமைத்துரை கைது செய்யப்படுகிறார்.. கொஞ்ச நாளிலேயே அதே கருத்தானால் அடையாளம் காணப்பட்டு பெரிய மருதுவும் மதகுப்பட்டி கனவாய்க் கிராமத்தில் அக்னியூவால் கைது செய்யப்படுகிறார். அதே காலத்தில் பல்வேறு கிராமங்களிலும், காடுகளிலும்
மறைந்திருந்த போராளிகள் பலரும்
ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்படுகிறார்கால் அக்னியூவால் தென்னிந்தியா முழுவதிலும். துரோகத்தின்
அடையாளங்கள் தென்னிந்தியா முழுமையிலும் வெள்ளையர்களின் காலில் சரணடைந்து தங்களின் சுய நலன் காத்து நின்றனர்.
அக்டோபர் 24, 1801
பெரிய மருது, சின்னமருது, அவர்களின் மகன்கள், மருமகன்கள், பேரக் குழந்தைகள், உள்ளிட்ட ஐநூறு போராளிகள் 500 பனைமரத்தில் அந்த சனிக்கிழமையன்று ஆக்னியூவின்
திமிரெடுத்த கொண்டாட்டத்தில்
கைகள் விலங்கிடப்பட்ட நிலையில்
மருது சகோதரர்களின் அழுகுரல்களுக்கிடையே 498 பேரும் தூக்கிலப்பட்டு 499வதாக பெரிய மருதுவும்.. நாங்குநேரி தொடங்கி பூனே வரையிலும் போராளிகளை ஒருங்கிணைத்து தலைமை ஏற்று முதல் சுதந்திரப் போரை நடத்திய சின்ன மருது கடைசியாக தூக்கிலேற்றப்பட்டார்.  அன்றைய சனிக்கிழமை போராளிகளின் வாழ்க்கையை முடித்து வரலாற்றைத் துவக்கியது தென்னிந்தியாவின் ஒட்டு மொத்த சுதந்திர வேட்கை தாகத்தை தன் தொண்டைக் குழிக்குள் ஏந்தியபடி. இவைகளைப் பதிவாக்கிடும் போதினில் போராளிகளுக்குள் நடைபெறும் விவாதங்களையும்.. சின்ன மருதுவுக்கும் அக்னியூவிற்குமான இறுதி உரையாடல், அதே போதினில் பெரிய மருதுவுடனான அக்னியூவ் உரையாடல் இப்படி அனைத்தின் வழியாகவும் நாவலாசிரியர் வாசிப்பவரின் மனதை உச்சத்திற்கு ஏற்றி வைத்திருப்பார் எப்படியாவது பெரிய மருதுவும் சின்ன மருதுவும் தப்பித்திவிடக் கூடாதாவென. எளிய வார்த்தைகள் என்றாலும் ரத்தம் சூடேற்றும் உரையாடல்களாக நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் நாவலாசிரியர்.
எனக்கென்னவோ இன்னும் ரிபெல் சேதுபதி- ஐஸ்வர்யத்தின் உரையாடலை எனக்கு அணுக்கமாகவே உணர்ந்தேன். அதே போன்று சென்னை ஜார்ஜ் கோட்டையில் மயிலப்பன், முத்துக் கருப்புத் தேவர், ஐஸ்வர்யம் உரையாடல், சேதுபதியின் விடுதலைக்காக ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கே குடிபெயர்ந்து வந்து வாழ்ந்த 95 குடும்பங்கள்..
ஆற்காட்டு நாவாப்பின் வீட்டு வாசலில் காத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகம் காலப் போக்கில்  எப்படி தன் பேட்டிக்காக அதே ஆற்காட்டு நவாப்பின் வாரிசுகளை காக்க வைத்தது என்பதின் துரோக வரலாறு..
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளைக்காரர்களால் முதன் முதலாக வெங்கம் பெரிய உடையத் தேவர் என்கிற அரசனொருவருன் சுமித்ரா தீவின் பெனகலன் சிறைக்கு சிறுவர்கள் உட்பட 73 பேரோடு நாடுகடத்தப்பட்ட வரலாறு..
பாளையங்கோட்டை சிறை உடைப்பிற்கு உதவிய கேத்தரினை தன்  நான்கு குழந்தைகளோடும், அவரின் கணவர் ஜெயிலர் வாலரோடும் இணைத்து வைக்கும் பொழுதினில் சந்தோஷத்திற்கெதிரான நுட்பமானதொரு
மன உளச்சல் போராட்டத்தை வெள்ளைப் பரங்கியர் மத்தியில் தொடக்கி இருப்பார்
இந்தியத் தாய்க்கும்.. ஆங்கிலத் தந்தைக்கும் பிறந்து தாய்வழியில் நின்று போராட்டம் நடத்தி வரும் மேஜர் ராபின் கல்யாணி.
இப்படி நிறைய வீரத் தழும்புகளையும்..
கூடவே துரோகத்தின் அடையாளங்களுடனும் 1801 வருடம் தென்னிந்தியவில் நடைபெற்ற மக்கள் திரட்சிப் போராட்டங்களே  முதல் இந்திய சுந்தந்திரப் போராட்டமாக நாவலாசிரியர் டாக்டர் மு.ராஜேந்திரன் அவர்களால்,
உண்மை மெய்யாக அடையாளத்தப் பட்டிருக்கிறது  வரலாற்று நாவலிற்குள்.
இவ்வளவு தரவுகளையும், இத்தனை ஆவணங்களையும் உள்ளடக்கியதாக இந்த புதினத்தை வெளிக் கொண்டு வந்திருப்பதில் அவரின் கடும் உழைப்பினை,கள ஆய்வினை நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் பார்க்க முடிகிறது.
அந்த மெச்சத்தகுந்த உழைப்பிற்கு மீண்டும் நமது நன்றியை உரித்தாக்குகிறோம் ஆசிரியர் அவர்க்கு
அதேவேளையில்
நாவலாசிரியர் இன்னுமொரு தேடலோடு இந்த நாவலை தமிழ்ச் சமூகத்திற்கு  கொடுத்திருந்தால் தேவையற்ற விவாதங்களை தவிர்த்து  முற்று பெற்றிருக்குமோ என்கிற உணர்வும் எனக்குள் எழுகிறது.  இந்தியாவின் சுதந்திரத்திற்கு தன்னை எதிர்ப்பார்ப்பின்றி ஒப்புவித்துக்கொண்ட பல தியாகிகளும், போராளிகளும் ஒரு குறிப்பிட்ட இனவரையரைக்குள்ளே, சாதிக்குள்ளே அடைக்கப்பட்டு  அடையாளப்படுத்திப் பார்த்திடும் ஆபத்தான சூழலில் இன்றைய தமிழ்ச் சமுகம் நவீன சாதிய அடையாள அரசியலுக்குள் பயணித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் இந்த நாவல் சுதந்திரப் போராட்டத்தின் முதல் வித்தை  விதைபதற்கு பதிலாக
ஒரு குறிப்பிட்ட இனத்தின் வீரதீரத்தை உள்ளடக்கியது…பெருமை பேசக்கூடியது என்பதிற்குள் சிக்கிவிடும் வாய்ப்புமிருக்கிறது. ஆசிரியர் அவர்கள் இந்த ஆபத்தை உணர்ந்து  முத்து வடுகநாதர் துவங்கி  வெங்கம் பெரிய உடையணத் தேவர் வரையிலான ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்ற இனக்குழு மக்காளுடனான வாழ்வியல் முறை.. அரசுக்கும் அம்மக்களுக்குமான புரிதல் உள்ளிட்ட விடயங்களிலும் கொஞ்சம் யோசித்து இருக்கலாமோ என்கிற எண்ணமும் மேலோங்கி நிற்பது
எதார்த்தமாகிறது இன்று.
வியபாரம் செய்யவந்த கிழக்கிந்தியக் வியபார நிறுவனத்தின் வஞ்சகத்தாலும்
இங்கே பல இன, சாதி, மதக் குழுக்களாக பிரிந்து கிடந்ததை அவர்கள் குயுக்தியாக
யோசித்து நம்மை பிரித்து நமக்குள்  தீராப்பகையை வளர்த்து அடிமைபடுத்திய வரலாற்றின் தொடர்ச்சியாக இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் வழிகாக நவீன இந்தியாவை அடிமைப்படுத்திடும் முகமாக இந்தியாவின்
கேந்திரமான துறைகளுக்குள் குறிப்பாக
இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறை, ராணுவத்தளவாடங்கள் தயாரிப்பு, மக்கள் சொத்தான பொதுத்துறை நிறுவனங்கள், இந்திய மக்களின் நரம்புகளை ஒன்று சேர்த்து இணைத்திட்ட ரயில்வே துறையின்
தண்டவாளங்கள் ஆங்காங்கொ வெட்டப்பட்டு தனியாருக்கு கொடுத்திடும்
அபாயம்… இப்படி நிறையவே.. நம் தேசத்து மக்களின் இன்றைய அமைதியை ஒப்புதலாக்கி தினம் ஒன்றாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் பேரசைக்கு அடிபணிந்து அன்றைய துரோகத்தின் கூராக இன்று ஆட்சியாளர்கள். வரலாற்றின் அனுபவங்களோடு இன்னொமொரு சுதந்திரப் போராட்டத்தின்
அவசியத்தை உணர்த்துவதாகவே இந்த நாவல்  என்னால் அறியமுடிகிறது.  துரோகத்தின் அடையாளங்கள் இங்கு பெருமை பேசப்படுகிறது, அதுவே இங்கு அடையாளமாக்கப்படுமோ என்கிற அச்சமும் சூழ்ந்து நிற்கிறது இன்று பொது வெளியெங்கும்.
நமக்கான எச்சரிக்கையே இந்தப் புதினம்.
மீண்டும் நமது பேரன்பையும் நன்றியினையும் நாவலாசிரியர் டாக்டர் மு.ராஜேந்திரன் அவர்களுக்கும், அகநி வெளியீட்டிற்கும் தெரிவித்துக் கொள்வோம்
சுதந்திரத்தை நேசிக்கும் அனைவரின்
சார்பிலும்.
கருப்பு அன்பரசன்
1801 நாவல்
டாக்டர்.மு.ராஜேந்திரன் இஆப
அகநி வெளியீடு
Show 1 Comment

1 Comment

  1. Karunakaran

    எவ்வளவு உண்மைக்ளும் எவ்வளவு துரோகங்க்ளும் சரித்திரத்தில் விடுபட்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது நெஞ்சு வலிக்கிற்து.
    கருணாகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *