இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டம் காந்தியின் தலைமையில், அவரின் சத்தியாகிரக அடிப்படையில் கிடைத்தது என்பதுதான் நமக்கு காலங்காலமாக புகட்டப்பட்ட செய்தி. ஆனால் அதற்கு இணையாக, ஆங்கிலேய கப்பல் படையில் பணி புரிந்த மாலுமிகள் முன்னெடுத்த போராட்டம் அவ்வளவாகப் பேசப்படவில்லை. காந்தி, பட்டேல் போன்றவர்கள் இதை சரியாக ஆதரிக்காத காரணத்தால், அது மறைக்கப்பட்ட பக்கங்களில் ஒளித்து வைக்கப்பட்ட வரலாறானது. அதை விவரமாக பதிவு செய்து எழுதப்பட்டது தான் இந்த நூல். பிரமோத் கபூர் எழுதிய ஆங்கில நூலை, ச. சுப்பாராவ் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

1946 ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் தல்வார் என்ற கப்பற்படைத் தளத்தில் போராட்டம் வெடித்தது. சரியான முறையில் உணவு வழங்கப்படவில்லை என்று இந்திய மாலுமிகள் ஆங்கிலேய கம்பெனிக்கு எதிராக குரல் எழுப்பினர். வழக்கம் போல, அதிரடி நடவடிக்கை எடுத்தால் அடங்கி விடுவார்கள் என்று தப்புக் கணக்கு போட்டது ஆல்கிலேய நிர்வாகம். ஏற்கெனவே விமானப் படையில் அப்படி ஒரு பிரச்சினை வந்து, அடக்கிய அனுபவம் அவர்களுக்கு இருந்தது. ஆனால் கப்பற்படை மாலுமிகள் வேறொரு வித்தியாசமான அனுபவத்தைத் தந்தனர். பிப். 19 அன்று ஆரம்பித்த போராட்டம், பிரிட்டிஷாரின் அடக்கு முறையை மீறி, வேறு பல கப்பற்படைத் தளங்களுக்கும் பரவியது. மாலுமிகள் சிறுகச் சிறுக போராட்டத்தை மக்களிடம் கொண்டு செல்கின்றனர். மக்கள் ஆதரவு அருமையாகக் கிடைக்கிறது. தங்கள் இல்லங்களில் இருந்து உணவுகளைக் கொண்டு வந்து தருகின்றனர். இவை எல்லாம் ஒரு விதமான ஒற்றுமை உணர்வை கிளப்புகின்றது. மத வேற்றுமையின்றி மாலுமிகளும் ஒன்று சேர்கின்றனர். விமானப் படை வீரர்களின் ஆதரவும் கிடைக்கிறது. பல்வேறு தளங்களில் போராட்டம் பரவுகிறது.

காங்கிரஸின் அருணா அஸ்ரப் அலி மட்டும் இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறார். காங். தலைவர்களும், முஸ்லீம் லீக் தலைவர்களும் தங்களின் முக்கியத்துவம் குறைந்து விடுமோ என்று பயப்படும் அளவிற்கு போராட்டம் வெடிக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இரண்டு தலைமைகளும் அவர்களைச் சரணடையச் சொல்கின்றன. சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் இவர்களின் போராட்டம் அதைக் கெடுத்து விடும் என்கின்றனர். ஆனால் உண்மையான காரணம் வேறு. போராட்டம் முழுவதும் மாலுமிகளுடன் துணைநிற்பது கம்யூனிஸ்ட்டுகள் தான். தல்வார் படைத்தளத்தில் முதல்நாள் அந்தக் கப்பலைப் பிடித்தவுடன் காங், முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கொடிகள் ஏற்றப்படுகின்றன. இருப்பினும் கம்யூனிஸ்ட் தவிர மற்றவர்கள் அவர்களை கைவிடுகின்றனர். பட்டேல், ஜின்னா பேச்சை நம்பி மாலுமிகள் சரணடைகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த வித தண்டனையும் அளிக்கப்படாது என்ற உத்தரவாதம் காப்பாற்றப்படாமல் 2000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, பல கண் காணாத இடங்களுக்கு கொண்டு செல்லப் படுகின்றனர். நிறைய பேர்கள் என்ன ஆனார்கள் என்பதே மறைக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட போராட்டத்தை, ஒவ்வொரு தருணத்தையும், ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிகளையும், தலைவர்களின் சமாதானங்களையும், கப்பல் காப்டன்களின் துரோகங்களையும், இந்திய மக்களின் எழுச்சியையும் கபூர் அட்டகாசமாக எழுதியுள்ளார். மொழிபெயர்த்த சுப்பாராவ் அவர்களும் அதற்கு இணையாக, படிப்பவர்கள் உத்வேகம் பெறும் அளவிற்கு வார்த்தை அழகுடன் மொழி பெயர்த்துள்ளார். வெளியிட்ட பாரதி பதிப்பகத்திற்கு நம் நன்றி.

அனைவரும் படிக்கவும், இளைய சமுதாயத்திடம் பரப்பவும் வேண்டிய புத்தகம்.

-கோவை பிரசன்னா.

நூல் : 1946 இறுதிச் சுதந்திரப் போர் – கப்பற்படை எழுச்சியின் கதை
பிரமோத் கபூர்
தமிழில் – ச. சுப்பாராவ்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு  தங்களது புத்தகவிமர்சனம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

One thought on “ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் நூல் அறிமுகம்: 1946 இறுதிச் சுதந்திரப் போர்- கப்பற்படை எழுச்சியின் கதை – கோவை பிரசன்னா”
  1. ஆரம்பமே அமர்க்களம்…. இந்த விஷயம் கேள்விப்படவே இல்லை சார்….

    ஒரு பிரச்சனை தான்… வாங்க வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகுது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *