ச. தமிழ்ச்செல்வன் எழுதிய 1947 - நூல் அறிமுகம் | 1947 book published by BharathiPuthakalayam - Sa.TamilSelvan - https://bookday.in/

1947 – நூல் அறிமுகம்

1947 – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் : 

நூல் : 1947

ஆசிரியர்    : ச.தமிழ்ச்செல்வன்

வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்

முதல் பதிப்பு : நவம்பர் 2006

ஒன்பதாம் பதிப்பு :  பிப்ரவரி 2024

பக்கம் : 32

விலை : ரூபாய் 20

ஒன்றுபட்ட இந்தியா ஒற்றுமையுடன் அடிமைத்தனத்தை ஒழிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அகிம்சை வழியில் போராடியதன் விளைவு 1947.

விடுதலைத் திருநாள் கொடியேற்றங்கள் அணிவகுப்புகள் கொண்டாட்டங்கள் இனிப்புகள் என நாடெங்கும் நிகழ்ந்தன. ஆனால் தேசமெங்கும் பற்றிக் கொண்ட வன்முறை நெருப்புக்கு அகிம்சையின் தொடர் போராட்டத்தின் நேர் எதிரான விளைவை விடுதலை இந்தியா மதப் பிரிவினையின் அடிப்படையில் மதப் பகைமையின் தூண்டுதலில் அனுபவிக்க நேர்ந்தது.

இன்று வரை உலகின் லட்சக்கணக்கான பேர் ஒரே சமயத்தில் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றது இந்தியப் பிரிவினையின் போது என்பதை வாசிக்க வாசிக்க அகிம்சையின் மீது இந்தியா வைத்திருந்த நம்பிக்கையையே ஆட்டம் காண வைத்தது என்பதை ஒப்புக்கொள்வது சிரமம்தானே.

ஏன் ஒன்றுபட்ட இந்தியாவால் விடுதலையை எதிர்கொள்ள முடியவில்லை? இந்தியப் பிரிவினைக்கு யார் காரணம்? எந்த அடிப்படையில் பிரிவினையை, தேசத்தை முன்னின்று வழிநடத்திய தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்? இந்துக்கள் கூடிய ஒரு நாடாகவும் முஸ்லிம்கள் சேர்ந்த ஒரு நாடாகவும் இந்தியா பிரிக்கப்பட்டதை இந்திய மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? அப்படி எனில் பரஸ்பரம் முழுமையான மனதுடன் பிரிவினை நடந்து இருக்கலாம் அல்லது அரசே அதை நடத்தி இருக்கலாம். ஏன் மத அடிப்படையில் மோதல்களும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் அவர்கள் வழியே பிறந்த பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் அனாதைகள் ஆக்கப்பட்டு சாலையில் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டதும் நடந்தன என்பதை அலசி ஆராய்கிறது இந்த நூல்.

 ச. தமிழ்ச்செல்வன் எழுதிய 1947 - நூல் அறிமுகம் | 1947 book published by BharathiPuthakalayam - Sa.TamilSelvan - https://bookday.in/
                                                              ச.தமிழ்ச்செல்வன்

பிரிவினைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே இந்தியாவின் வடக்குப் பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் மதப் பிரிவினையின் அடிப்படையிலும் வேகமாக வளர்ந்து வந்த வதந்திகளின் அடிப்படையிலும் ஒவ்வொரு இனமும் தனித்தனியாக படுகொலை செய்யப்படுகின்றன.

முஸ்லீம்கள் அதிகம் உள்ள கிராமங்களில் இந்துக்களின் குண்டர்களும் இந்துக்கள் அதிகம் உள்ள கிராமங்களில் முஸ்லிம் குண்டர்களும் உள்நுழைந்து பல ஆயிரக்கணக்கான பெண்களை கற்பழித்தும் தேசத்தை துண்டாடுவதற்கு மேலும் மேலும் வழியமைத்துவிட்டனர்.

இந்தியாவில் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் பாகிஸ்தானில் இருந்து ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்களும் நாடு விட்டு நாடு அகதிகளாக செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதிகளை அரசாங்கம் செய்திருந்தால் மக்களை பாதுகாப்பதில் அரசு முன் நின்று முழுமையான பணியை செய்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் குறைவு.

ஆனால் இந்தியாவின் வளங்களை கொள்ளை அடிப்பதிலும் இந்தியாவை முழுவதுமான வறுமையில் தள்ளி தங்களுக்குள்ளேயே அவர்கள் அடித்துக் கொண்டு சாகட்டும் என்ற பழிவாங்கும் எண்ணத்திலும் பிரிட்டிஷ் அரசாங்கம் திட்டமிட்டுச் செய்த செயலாகவே இது கருதப்படுகிறது.

முதல் நிமிடம் வரை ஒன்று பட்டு நண்பர்களாக உறவினர்களாக அன்பில் நிலைத்திருந்த இந்தியர்கள் பிரிவினை பேச்சு எடுக்கப்பட்டதும் தங்களுக்குள் அடித்துக் கொண்டு இறந்து போனதற்கு அவர்களுக்குள் உறைந்து கிடந்த மதவெறித் தூண்டுதலா அல்லது போலியான அன்பை வைத்துக்கொண்டு ஆடிய நாடகமா? என்பதை தேசமே எண்ண மறந்து போனது.

பல லட்சம் பெண்களை நிர்மூலமாக்கி விட்டது இந்தப் பிரிவினை. இதன் விளைவால் ஆயிரக்கணக்கான கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக மருத்துவமனை வாசலில் காத்துக்கிடந்த அவலங்கள் அரங்கேறின. அப்படிப் பிறந்த குழந்தைகளின் நாடு எது? என்பதில் இரு நாடுகளும் தனித்தனி சட்டங்கள் இயற்றியும் தீர்வு காண முடியாமல் அவர்கள் தெருவில் அனாதைகளான அவலங்களும் நடந்தேறின.

தொடர்வண்டிகள் மூலமும் பேருந்துகள் மூலமும் கடுமையான நீண்ட நடைப்பயணத்தின் மூலமும் இடம் பெயர்கையில் மரணமடைந்த காணாமல் போன மனிதர்களின் குடும்பங்களின் குமுறல் இன்றும் தேசத்தின் விடுதலைக் கொண்டாட்டங்களை பார்த்துச் சிரித்துக் கொண்டே இருக்கிறது

அவலங்களின் தகவல்களைச் சேகரிப்பதில் காட்டிய அக்கறை வன்முறையின் தடயங்களை எடுத்தியம்பிய எழுத்துகள் என ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் உழைப்பு அபாரமானது. தேசத்தின் மீதான நம்பிக்கையையும் மக்களின் மீதான பொது நலத்தையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒவ்வொரு இந்தியர்களும் 1947 ஐ வாசிப்பது மிக அவசியம்.

நூல் அறிமுகம் எழுதியவர் : 

 ச. தமிழ்ச்செல்வன் எழுதிய 1947 - நூல் அறிமுகம் | 1947 book published by BharathiPuthakalayam - Sa.TamilSelvan - https://bookday.in/

இளையவன் சிவா: கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *