ச. தமிழ்ச்செல்வன் (Sa.TamilSelvan) எழுதிய 1947 - நூல் அறிமுகம் - பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) வெளியீடு

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய 1947 – நூல் அறிமுகம்

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய 1947 – நூல் அறிமுகம்

1947, தோழர் ச. தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய ஒரு சிறிய நூல்.

பெரிது பெரிதாக கனத்த நூல்களையே கையில் எடுத்துப் பழகிய எனக்கு இந்த சிறிய நூல் ஏதோ ஒரு நோட்டீசைப் போல் தெரிந்தது.

படித்து முடித்து விட்டோம் இனி எதையும் படிக்க மாட்டோம், என்று சபதம் எடுத்து விட்டவர்களைப் போல. புத்தகங்களையும், புத்தகங்களின் கனத்தையும் கண்டு ஓடி ஒழிபவர்களுக்காகவோ? படித்து முடித்துவிட்டு ஒன்றுமே தெரியாத மண்ணாகவே இருக்கும் படித்தவர்களையும் கணக்கில் கொண்டு, சிறியதாக இருந்தாலாவது வாங்கி வாசிப்பார்கள் என்றோ?

கடல் கொள்ளா விவரணைகளை கையளவாகச் சுருக்கி, 1947 இல் மதத்தின் பெயரால், கடவுள்களின் சாட்சியாக, மனிதர்கள் ஆடிய கோரத்தாண்டவத்தினை, மனிதர்கள் பட்ட துன்ப துயரங்களை, மனிதர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், 1947 ஐ தோழர் தமிழ்ச்செல்வன். கடல் அளவை கையளவாய் படைத்தளித்துள்ளார்.

சுதந்திரத்திற்கு முன் அன்னியர் ஆட்சி. வறுமைகளாலும் நோய்களாலும், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடியதாலும், ஆங்கிலேயர்கள் கடுமையாக நடந்து கொண்டதாலும் எத்தனையோ லட்சம் பேர் மடிந்து மண்ணாகிப் போயிருக்கிறார்கள். ஆனால், சுதந்திரம் பெற்றதற்குப் பிறகும் அதே அளவில் மடிந்தும், மடியாமலும், துன்பமும், துயரமும், பெருத்த அவமானங்களாலும் அலைக்கழிக்கப்பட்டு இருக்கிறார்கள். என்பது எவ்வளவு அநியாயமானது. சுதந்திரத்திற்கு முன் இறந்தவர்கள் அதிகமா? சுதந்திரத்திற்கு பின் இறந்தவர்கள் அதிகமா? என ஒரு பட்டிமன்றமே கூட நடத்தலாம்!

அன்னியரின் ஆட்சி முடிந்து, சுதந்திரம் பெற்ற பிறகு ஏன் அத்தனை லட்சம் பேர் செத்துப் போக வேண்டும்? 1947 இல் வடக்கே என்ன நடந்தது என்பது இப்போது வரை தெற்கே இருக்கும் பலருக்கும் தெரியாது.

1947 இல் நடந்ததுதானே அதை ஏன் இப்போது பேச வேண்டும்? பேச வேண்டும், பேசத்தான் வேண்டும். ஏன் அத்தனை லட்சம் பேர் செத்தார்கள், எது அவர்களைக் கொன்றது. என்பதை அறிந்தால்தான். இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும், அதனிமிருந்து எப்படி விலகி இருக்க வேண்டும் என்பது உங்களுக்குப் புரியும்.

1947 ஜூன் 3 அன்று இந்தியா இரண்டாக பிளக்கப்படுகிறது. பிளக்கும் திட்டத்தை பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. அப்போது இந்தியாவில் இடைக்கால அரசு ஆட்சியில் இருந்தது. ஜூன் 18 1947-ல் பிரிட்டிஷ் பாராளுமன்றம் இந்திய விடுதலை மசோதாவையும், பிரிவினை மசோதாவையும் நிறைவேற்றியது. அந்த தேசப் பிரிவினை மசோதாவை அமுல்படுத்த பத்து பேர் கொண்ட நிபுணர் குழுவை பிரிட்டிஷ் அரசாங்கம் அமைக்கிறது.

இப்போது இந்தியாவை பிரிக்க வேண்டும் அது யாரை வைத்து பிரிப்பது. உடனடியாக, இந்தியாவின் கடைசிப் பிரதிநிதியும்,முதலாவது கவர்னர் ஜெனரலுமான மவுண்ட்பேட்டன்: இந்தியாவை பிரிப்பதற்கு என்று இங்கிலாந்தில் இருந்து ஒருவரை இங்கே வரச் செய்கிறார். அவர்தான் ரெட்கிளிஃப் (John radcliffe) இவர் ஒரு வழக்கறிஞர். இதற்கு முன் இவர் இந்தியா வந்ததும் இல்லை. இந்தியாவைப் பார்த்ததும் இல்லை இந்தியாவைப் பற்றி எதுவும் தெரியாது. இந்தியாவின் மேப்பை கையில் வைத்துக்கொண்டு ஒரு கோட்டைக் கிழித்து, இது இந்தியா, இது பாகிஸ்தான் என்று கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

மிகப்பெரிய தேசமான இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிப்பதற்கு மவுண்ட்பேட்டன் கொடுத்த கால அவகாசம் என்பது வெறும் ஐந்து வாரம் தான். இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் பண்பாடுகளையும், பழக்கவழக்கங்களையும் புரிந்து கொள்வது என்றாலே 5 வாரம் ஆகும். அண்ணன் தம்பி அக்கா தங்கை என இருக்கும் ஒரு குடும்பத்தின், அசையும் அசையா சொத்துக்களை வகை பிரித்து. இன்னாருக்கு இன்ன பாகம் சம்மதமா? என்று கேட்டு சம்மதிக்க வைத்து, ஒரு குடும்பச் சொத்தை பாகம் பிரிப்பதற்கே 5 வாரங்கள் ஆகும், இந்தியா என்கிற பெரும் தேசத்தை ஒருவன் ஐந்தே வாரத்தில் பிரித்து கொடுத்துவிட்டுப் போய்விட்டான்.

1947 ஆகஸ்ட் 17 அன்று இரு நாட்டு பிரதமர்களும் அம்பாலாவில் சந்தித்து. இந்துக்களையும் சீக்கியர்களையும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கும். முஸ்லிம்களை இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கும். பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டனர்.

ஆனால், இந்த ஒப்பந்த தேதிக்கு முன்னரே, லட்சோப லட்சம் மக்கள் இடம் பெயர்ந்தார்கள். நவகாளியிலும், ராவல் பிண்டியிலும் நடைபெற்ற மதக்கலவரங்களை, எவ்வளவு எழுதினாலும் எழுதித் தீராது. எவரும் முழுவதுமாக ஏட்டில் எழுதிச் சொல்லி விடவும் முடியாது. இத்தனை லட்சம் மக்கள் இடம் மாறிச் செல்ல வேண்டியதிருக்கும், இத்தனை லட்சம் மக்கள் கலவரத்தில் செத்து ஒழிவார்கள் என்பதை மகாத்மா காந்தியும் கூட நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், எவரும் நினைத்தே பார்த்திராத, எவரும் திட்டமிடாத மிகப் பயங்கரமான செயல்கள் அரங்கேறியது. திட்டமிடவில்லை ஆனாலும் அனைத்து பயங்கரங்களும் நடந்தது. அது ஏன் எப்படி? மதங்களெல்லாம் மனிதர்களை அந்த மாதிரியான மிருகங்களாகத்தான் வடிவமைத்ததா? அல்லது சந்தர்ப்பம் சரியாக அமையாத வரை மட்டும்தான் மனிதனா?

கிராமங்களில் திடீரென வதந்திகள் பரவும். முஸ்லீம் கிராமங்களாக இருந்தால், இந்து குண்டர்கள், இந்துக்களின் கிராமமாக இருந்தால் முஸ்லிம் குண்டார்கள். நமது ஊரை நோக்கி ஆயுதங்களோடு வந்து கொண்டிருக்கிறார்கள். என வதந்தி பரவியதும். உடனே ஊரே பதறி எழும். பெண்கள் குழந்தைகள் எல்லோரும் ஒரே வீட்டில் பாதுகாப்பாக கூடுவார்கள். ஆண்கள் ஆயுதபாணியாகி எதிர்த் தாக்குதலுக்கு தயாராவார்கள். பல இடங்களில் மோதல்கள் நடந்தன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மக்கள் கொல்லப்பட்டார்கள். கட்டாய மதமாற்றத்திற்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்.

இது போன்ற சம்பவங்கள் நடக்க..நடக்க நாளுக்கு நாள் பீதி அதிகரித்தது. பல கிராமங்கள் ஊரைக் காலி செய்து விட்டு கால்நடைகளுடன், தட்டுமுட்டு சாமான்களுடன் இந்தியாவை அல்லது பாகிஸ்தானை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். வழியில் உள்ள கிராம மக்களும் சேர்ந்து கொள்வார்கள். சாலைப் பயணத்தில் நீள நீளமாக நடக்கின்ற கூட்டமானது பத்தாயிரம் பேர், இருபது ஆயிரம் பேர் என பெருகும். இந்த ஊர்ந்து போகும் மக்கள் திரளை கஃபிலா என்று அழைத்தனர். மிகப்பெரிய கஃபிலாவில் ஒரு சமயம் 4 லட்சம் பேர் நடந்து வந்தனர். இந்த அனாதரவான கஃபிலா ஒரு இடத்தை கடக்க எட்டு நாள் ஆனது.

இடையில் மதவெறியர்களின் தாக்குதலுக்கு இந்த கஃபிலா ஆளாகும். பெண்கள் கடத்திச் செல்லப்படுவார்கள் ஒன்றும் செய்ய முடியாது. கதறி அழுதபடியே கஃபிலாக்களின் பயணம் தொடரும். எதிரெதிர் திசையில் கஃபிலாக்களின் நகர்தல்— குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி செத்துச் செத்து விழந்த மக்கள் ஏராளம்.

இந்தக் கலவரத்தில் குறைந்தது 10 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. பஞ்சாபில் மட்டும் ஒரு கோடிப் பேருக்கு மேல் எல்லை கடந்திருக்கின்றனர். 75 ஆயிரம் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

பல கிராமங்களில் “தாக்குதலுக்கு படை வருகிறது” என்று வதந்தி பரவியதுமே, கற்பழிக்கப்படலாம் என்ற அச்சத்தின் விளைவாக படை எதுவும் வருவதற்கு முன்பே பெண்கள் தீக்குளித்தும், வீட்டுக் கிணறுகளில் விழுந்தும் தற்கொலை செய்து கொண்டார்கள். மானம் காத்துக்கொண்டனர் அல்லது தங்கள் வீட்டு ஆண்களால் முன்கூட்டியே கொல்லப்பட்டனர். இந்த கொலைகள் எல்லாம் முடிந்த பிறகு எந்தத் தாக்குதலும் நடவாமலே வீண் வதந்தியாகப் போன சம்பவங்களும் உண்டு.

1947 இல் நடந்த மதக் கலவரங்களில், எல்லா மதத்தினருக்குமே பெண்களின் உடல் தான் விளையாட்டு மைதானமாக இருந்திருக்கிறது.

பெண்களை இழிவுபடுத்துவது அவர்களுடைய மதத்தை- நம்பிக்கைகளை- அவர்களுடைய தன்மானத்தை ஆழமாக கிழிக்கும் செயல் என்பதாக பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லிம்களும் புரிந்து கொண்டிருந்தனர்.

மாற்று மதத்தவரின் இளம் பெண்களை கடத்திச் சென்றனர், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகினர். அவர்களை கெடுத்ததன் மூலம் தங்கள் மதத்துக் குழந்தை அவர்களின் வயிற்றில் வளர வித்திட்டனர். பெண்களின் உடம்பின் மீது செய்யும் ஆக்கிரமிப்பு பிற மதத்தவர் மீது நாட்டிய வெற்றிக் கொடியானது.

பெண்ளை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓடச் செய்வது. பெண்களின் மார்பகங்களை அறுத்து எறிவது (இதனால் மட்டும் இறந்து போன பெண்கள் ஏராளம் ) பெண் உறுப்பு மற்றும் மார்பகங்களில் பிறைச் சந்திரன், திரிசூலம் சின்னத்தை சூட்டுக்கோளால் வரைவது. என்றும் அழியாத கேவலமாக பெண்களின் அந்தரங்க உறுப்பில் மாற்று மதச் சின்னம்.

1947-ல் நடத்தப்பட்ட பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு மார்புகள் அறுத்தெறியப்பட்ட இளம் பெண்கள், இன்று 80 வயது, 90 வயது தாண்டிய மூதாட்டிகளாக நம் தேசத்தின் மூலை முடுக்குகளில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 60 ஆண்டு காலம் மனதிற்குள் புதைத்து வைத்திருக்கும் கேவலங்களை இன்று அவர்கள் திறந்து பேசுகிறார்கள். மாற்று மதக் குறியீடுகளுடன் சூடுபட்ட தம் உறுப்புகளை தேசத்திற்கு திறந்து காட்டுகிறார்கள். அவர்கள் திறந்து காட்டும் சட்டைகளுக்குள்ளே மார்பகங்கள் இல்லை அறுத்த அடையாளமாக இரண்டு குழிகள் மட்டுமே இந்தியாவை வெறித்துப் பார்க்கின்றன. இதுதான் எமக்கு 1947 என்று பேசாமல் பேசும் தாய்மார்களுக்கு நம் தேசத்தின் பதில் என்ன?. என்று கேட்கிறார் தோழர் தமிழ்ச்செல்வன். தோழர் கேட்கும் கேள்வியில் நெஞ்சம் பதை பதைத்துப் போகிறது.

பகதூர்சிங் என்பவர். ‘தோ ஆ கல்சா’ என்ற ஊரில் வாழ்ந்தவர். இந்த ‘தோ ஆ கல்சா’ எங்கே இருக்கிறது என்றால், கஹுதா தாலுகா, ராவல்பிண்டி மாவட்டம். இப்போது அது பாகிஸ்தானில் உள்ளது. பகதூர் சிங் தன் சிறுவயதில் நடந்த நிகழ்வுகளை பதை பதைக்கும் நெஞ்சோடும் கண்ணீரோடும் விவரிக்கிறார். …..

“…..1947 மார்ச் மாதம் ஆறாம் தேதியிலிருந்து 13-ஆம் தேதி வரை ராணுவம் ஊர்களுக்குள் வரும் வரை கலவரம் தான். தோ ஆ கல்சா சீக்கியர்களே அதிகம் வாழுகிற ஊர் அது. அந்த ஊரை நோக்கி முஸ்லிம்கள் சிறுபடையாக வந்த முசல் மான்களை எங்கள் ஊர் வீரர்கள் சண்டையிட்டு விரட்டி விட்டனர். மீண்டும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பெரும் படையாக வந்து தாக்கிய போது நாங்கள் சண்டையிட்டு தோற்றோம். சரணடைந்து சமாதான பேச்சு வார்த்தைக்கு முன் வந்தோம் ….

பேச்சுவார்த்தையில் 30,000 பணத்தைப் பெற்றுக் கொண்டு முஸ்லிம்கள் அன்றைக்கு திரும்பி விட்டார்கள். ஆனால் மறு தினமே அவர்கள் பெரும் கூட்டமாக மீண்டும் தாக்க வந்து விட்டார்கள். சண்டை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, சர்தார் குலாப் சிங்கின் வீட்டில் இளம் பெண்கள் 25 26 பேர் இருப்பார்கள். என் தந்தையார் தன் மகளை முன்னுக்கு வருமாறு அழைத்தார். கிரந்தத்திலிருந்து சில வார்த்தைகள் சொல்லித் தொழுதார். “ஏ சச்சே பாட்ஷா….. உனது சீக்கியம் கறை படியாதிருக்க இருக்கவே எங்கள் புத்திரிகளை இன்று பலியாக கொடுக்கிறோம்”

என் தந்தையாரின் கை கிர்பானை (வாள்) எடுத்தது…. கை நடுக்கம் குறைந்திருந்த அடுத்த கணம்……நான் கீழே விழுந்து புரண்டு சத்தம் இல்லாமல் கதறினேன். என்னால் நிற்க முடியவில்லை. ஊர்ந்தும் தவழ்ந்துமாக மாடிப் படிகளில் உருண்டு கீழ இறங்கினேன். கிர்ப்பானின் வீச்சொலி கேட்டுக் கொண்டே இருந்தது. 26 வீச்சொலிகள்…….

அடுத்த ஒரு மணி நேரத்திற்கெல்லாம் முசுல்மான்கள் ஊரைக் கைப்பற்றி விட்டார்கள். நான் என் அம்மாவின் மடியிலேயே கிடந்தேன். இன்னும் நூறு பெண்கள் அந்த இடத்தில் கூடியிருந்தார்கள். மாதா லஜ்வந்தி தலைமையில் அவர்கள் குசுகுசுவென பேசிக் கொண்டார்கள்.

அங்கே காவலுக்கு நின்ற முசுல்மான்களிடம் பெண்கள் சென்று ரொம்ப தாகமாக இருப்பதாக கூறினார்கள். உடனே அவர்களை அந்த முசல்மான்கள் அருகே இருந்த கிணற்றுக்கு அழைத்துச் சென்றார்கள். கிணற்றுப் பக்கம் போனதும், மாதா லஜ்வந்தி ஏதோ இரண்டு வார்த்தைகள் சொன்னார். சரியாக காதில் விழவில்லை. சொல்லிவிட்டு உடனே பாய்ந்து கிணற்றில் குதித்து விட்டார். அடுத்து இரண்டு நிமிடங்களில் தபதபவென்று எண்பத்தி எட்டு பெண்கள் கிணற்றில் குதித்து விட்டார்கள். பசந்த் கௌர் என்று ஒரு பெண்மணி அவளின் ஆறு குழந்தைகள் கிணற்றில் விழுந்து செத்துப் போனது. அவளும் கிணற்றில் குதித்தாள். ஆனால் அவளால் சாக முடியவில்லை. பிணங்களால் கிணறு நிரம்பி விட்டது. ஏறி வந்து கதறி அழுவாள் மீண்டும் கிணற்றில் குதிப்பாள். திரும்பத் திரும்ப அவள் குதித்துக் கொண்டே இருந்தாள் பைத்தியம் பிடித்தது போல. ஆனால் அவள் சாகவில்லை இன்னும் இதே டெல்லியில் வாழ்கிறாள்.

அவர்கள் தப்பிச் சென்ற சில தினங்களுக்குப் பிறகு ஜவஹர்லால் நேரு ‘தோ ஆ கல்சா’ கிராமத்துக்கு சென்றார். அந்த கிணற்றைப் பார்த்து அப்படியே நின்று அடக்க முடியாமல் அழுதாராம்.

இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதிகளில் இதே போல கூட்டமாக முஸ்லிம் பெண்கள் தற்கொலை செய்த சம்பவங்களும் நிறைய நடந்தது. பொற்கோவில் வளாகத்தில் ஓர் இரவு முழுக்க 200 முஸ்லிம் பெண்களை நிர்வாணமாக நடமாட நிர்பந்திக்கப்பட்ட செய்தியை அறிந்து அவமானப்பட்டேன். என்று கூறி அழுகிறார் பகதூர்சிங்.

இந்நிகழ்வுகளை: பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் இயக்குனரான ‘சபிஹா சுமர்’ 2000 ஆவது ஆண்டில்
‘காமோஸ் பானி’(Khamosh pani) என்ற பெயரில் திரைப்படமாக வடித்திருக்கிறார்.

உருது மொழியில் எடுக்கப்பட்ட இந்த பாகிஸ்தானியப் படமான காமோஸ் பானி பரவலான கவனத்தையும் ஏராளமான விருதுகளையும் பெற்றுத் தந்திருக்கிறது. கிணற்றில் பெண்கள் குதிக்கும் காட்சியை மிக நுட்பமாக படமாக்கி இருக்கிறார். இப்படத்தை குறித்து இயக்குனர் சபிஹா சுமர் கூறும் போது, “ஒரு துளி ரத்தம் கூட இல்லாமல் அதிதமான வன்முறை மிக்க ஒரு படத்தை எடுக்க விரும்பினேன்” என்கிறார்.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கும் அந்த நேரத்தில் சரியான முறையில் ரயில் போக்குவரத்து இருந்திருந்தால் இவ்வளவு உயிர் சேதமும் இத்தனை ஆயிரம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகி இருக்க மாட்டார்கள்.

தென்னிந்திய ரயில்வே ஊழியர் சங்கத்தின் பத்தாவது மாநில மாநாடு செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரம் பொன்மலை சங்கத்திடலில் துவங்க இருந்த போது, இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு ரயில்வே தொழிலாளர்களிடம். வானொலியின் மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

சுதந்திரம் அடைந்த பிறகு நாடு பேராபத்தில் இருக்கிறது. நாகரீக உலகம் ஏற்றுக்கொள்ளவே முடியாத பயங்கர படுகொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்தந்த எல்லைகளுக்குச் செல்ல வேண்டிய மக்கள் போக்குவரத்து வசதியின்றி தவிக்கிறார்கள். இந்த ஆபத்தான நிலையில் தாய் நாட்டிற்கு சேவை செய்திட தேச பக்தி மிகுந்த தொழிலாளர்கள் தங்கள் கடமையை செய்ய வேண்டும்….கோரிக்கை வைக்கிறார்….ரத்தக் களரியாக மாறிக் கிடைக்கும் பஞ்சாப்பின் எல்லைக்கு, இந்தியாவின் இதர பகுதித் தொழிலாளிகள் எவரும் பணி செய்ய முன்வராத போதும்.

நேருவின் வேண்டுகோளினை ஏற்று தென்னிந்திய தொழிற்சங்கத்தில் இருந்து 150 ஊழியர்கள் 5 மாத காலம் இரவு பகலாக லூதியானாவை மையமாகக் கொண்டு மிக விரைவாக தங்கள் பணியை,உயிருக்கு உத்திர வாதமில்லாத அந்தச் சூழலிலும் தாய் நாட்டிற்குச் செய்யும் கடமையாக நினைத்து சங்கத் தோழர்கள் தங்கள் பணியை சிறப்பாக நிறைவு செய்திருந்தனர். இந்தச் சம்பவங்கள் எல்லாம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு,

லூதியானாவை மையமாகக் கொண்டு இயங்கிய ரயில்வேயில் டிரைவராக பணியாற்றியவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணசாமியும் ஒருவர். அவருக்கு ஒரு நாள் ஒரு கடிதம் வருகிறது. அந்தக் கடிதம் புரியாத மொழியில் இருக்கிறது. ஆனாலும் கிருஷ்ணசாமிக்கு அது புரிகிறது, நிச்சயமாக அது நிக்காஹா பத்திரிக்கையாகத்தான் இருக்கும்.

லூதியானாவில் கிருஷ்ணசாமி ஓட்ட வேண்டிய ரயில் பிளாட்பாரத்தில் நின்றிருக்க மற்றொரு வண்டியின் டிரைவர் தண்ணீர் பிடிக்க சென்று கொண்டிருந்தார். “ரயில் நிலையத்தின் நிலவரம் ஒன்றும் சரியில்லை கவனமாக சென்று வாருங்கள்” என கிருஷ்ணசாமி எச்சரித்து அனுப்பி வைத்தார். சில நிமிடங்களில் அந்த பிளாட்பாரத்தில் ஒரு கலவர ஓசை. தனது தோழனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று கிருஷ்ணசாமி வேகமாக ஓடிச் சென்று பார்த்த போது, தோழன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். காப்பாற்றப் போன கிருஷ்ணசாமியிடம்,

“என்னை விடு அங்கே பார் ஒரு தாய் தன் குழந்தையை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறாள். அவளைக் காப்பாற்று” என்று வேண்டிக் கொள்ள.

கிருஷ்ணசாமி ஓடிச் சென்று தாயும் குழந்தையையும் போராடிக் காப்பாற்றி, அவர்களை என்சினில் தன்னுடனேயே வைத்துக் கொண்டார். அவர்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையம் எதுவென்று கேட்டு அங்கே இறக்கி விட்டார். பிளாட்பாரத்தில் இறங்கி நின்ற அந்தத் தாய் தன் முகத்தை மறைத்திருந்த படுதாவை விளக்கி விட்டு. கண்களில் வழிந்தோடும் கண்ணீரோடு கைகூப்பி நின்றார்,

“ ஐயா என் உயிரையும் மானத்தையும் காப்பாற்றிய உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்” என்று அந்தத் தாய், ஏதோ ஒரு மொழியில் சொல்ல அதனைப் புரிந்து கொண்ட கிருஷ்ணசாமி,” ஒன்றும் வேண்டாம். இதோ இவளுக்கு நிக்கா செய்வீர்கள் அல்லவா, அப்போது எனக்கு ஒரு திருமண பத்திரிக்கையை அனுப்பி வை அது போதும்” சும்மா ஒரு பெயரளவுக்கு சொன்னது தான். ஆனால் அது, நிக்காஹ் பத்திரிக்கையாக இன்று கிருஷ்ணசாமியின் கையில் கனக்கிறது.

1947 ஐ சுதந்திரம் என்று ஒருபுறம் கொண்டாடிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் ஏராளமான உயிர்கள் பறிபோய் கொண்டிருந்தது, பல்லாயிரம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆயிரக்கணக்கான பெண்களின் மார்பகங்களை அறுத்து எறிந்து கொண்டிருந்தார்கள். பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் சூட்டுக்கோளால் தங்களின் மதச் சின்னத்தை வரைந்து கொண்டிருந்தார்கள். கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழிந்து உள்ளே இருக்கும் குழந்தையை எடுத்து அதன் நெஞ்சிலே அவர்களின் மதத்தின் முத்திரையை குத்திக் கொண்டிருந்தார்கள்.இத்தனை அநியாயங்களையும் அக்கிரமங்களையும் செய்தது யார்?

வேற்று நாட்டில் இருந்தோ, அல்லது வேற்றுக் கிரகத்திலிருந்தோ வந்த ஏதோ ஒரு ஜந்துக்கள் அல்ல. ஏதோ ஒரு மதத்தில் இருந்து கொண்டு ஐந்து வேளையும் தொழுது கொண்டு, நாள் தவறாமல் நைவேத்தியம் காட்டிக் கொண்டு, குல்லாவையோ குங்குமத்தையோ வைத்துக்கொண்ட கடவுளின் பிள்ளைகள் தான். ஒரு பெண்ணுக்கு கணவனாகவும், ஒரு பெண்ணுக்கு தந்தையாகவும் அக்கம் பக்கம் வீட்டாரோடு இனக்கமான நண்பனாகவும் இருந்த அந்த மனிதன் தான்,அந்த கடவுளின் பிள்ளைகள் தான், இத்தனை கொடுமைகளை செய்தார்கள், கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால்….

1947, நாற்பத்து ஏழோடு முடிந்துவிடவில்லை இன்னும், இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

தோழர் தமிழ்ச்செல்வன் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 75 நூல்களுக்கு மேல் எழுதிவிட்டார். இன்னும் எழுதிக் கொண்டே இருக்கிறார். அதைவிட இன்னும் ஏராளமான நூல்களை தேடித் தேடி வாசித்துக் கொண்டே இருக்கிறார். அரிய பெரும் தகவல்களை தமிழ் வாசக உலகத்துக்கு தந்து கொண்டே இருக்கிறார். இன்னும் நிறைய எழுதுங்கள் என்று, என்னால் சொல்ல முடியவில்லை. நாம் எதிர்பார்ப்பதை விட ஏராளமாக எழுதிக் கொண்டிருக்கிறார். அது போதவில்லை இன்னும் ஏராளமாக எழுத வேண்டும் என்று பேராவல் கொண்டு இருக்கிறார். எங்களோடு தோழரும், தோழரோடு நாங்களுமாய் என்றும் இணைந்தே இருக்கிறோம். தோழருக்கு எனது அன்பு வாழ்த்துக்கள்.

நூலின் தகவல்கள் : 

நூல்: 1947
நூலாசிரியர்: தோழர் ச. தமிழ்ச்செல்வன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 20.00
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/1947/

நூல் அறிமுகம் எழுதியவர் : 

எழுத்தாளர். பொன் விக்ரம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *