+2 பொதுத்தேர்வை எழுத 50,000 பேர் ஏன் வரவில்லை? – மு.சிவகுருநாதன்




தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தின் +2 பொதுத்தேர்வு மார்ச் 13 (13/03/2023) தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (15/03/2023) இரண்டாவது தேர்வு நடைபெற்றுள்ளது. இதுவரையில் நடந்த இரு தேர்வுகளையும் 50,000 பேர் எழுதவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஊடகங்களில் இது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் கல்வியைத் தொடர்ந்து கவனித்துவரும் எவருக்கும் இது அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாக இருக்காது என்று நினைக்கிறேன். +1 பொதுத் தேர்வில் தமிழ்த் தேர்வை 12,660 பேர் எழுதவில்லை என்றும் செய்திகள் வருகின்றன. 10 ஆம் வகுப்பிலும் இத்தகைய எண்ணிக்கை இருக்க வாய்ப்புகள் அதிகம்.

இதற்கு பல்வேறு காரணங்களைப் பட்டியலிட முடியும்.

1. +1 பொதுத்தேர்வில் தோல்வி.

+1 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த பலர் மீண்டும் தேர்வு எழுத விரும்புவதில்லை. இதற்கு தேர்வு வேண்டாம் என்பதைவிட எளிய மாற்றுத் தேர்வு முறைகள் பற்றி யோசிக்க வேண்டும். கல்வித்துறை அடிப்படைவாத மனநிலையுடன் இயங்கக் கூடாது.

2. பள்ளிக்கு வராதோர் பெயர் நீக்கம் கிடையாது.

மாற்றுச் சான்றிதழ் பெறாவிட்டால், பள்ளிக்கு மாதக் கணக்கில் வராவிட்டாலும் அம்மாணவர் பெயர் நீக்கப்படாது. இதுவும் தேர்வுக்கு வராதோர் எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணம். மாணவர்கள் பள்ளிக்கு வருவதையும் தொடர்க் கற்றலில் ஈடுபடுவதையும் கண்காணிக்க வேண்டும்.

3. பள்ளிக்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகள்

பள்ளிக்கோ, தேர்வுக்கோ வர முடியாத மாற்றுத்திறனாளிகளும் எண்ணிக்கை மற்றும் இதர சலுகைகளுக்காக இணைக்கப்படுகின்றனர். இதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

4. மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விருப்பமில்லாத கட்டாயச் சேர்க்கை.

10 ஆம் வகுப்பு முடித்தோர் வீட்டிலிருந்தால் EMIS எண்ணைக் கொண்டுத் தேடிப்பிடித்துப் பள்ளியில் அவர்கள் விருப்பமின்றி இணைக்கப்படுகின்றனர். மாணவர்களில் பலர் தங்களுக்குப் படிப்பைத் தொடர்வதில் விருப்பமில்லை என்கின்றனர்.

5. பல பள்ளிகளில் மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகள் இல்லாமை.

பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் வரலாறு, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகள் இருப்பதில்லை. அறிவியல் பாடப்பரிவுகள் மட்டுமே உள்ளன. இதை அனைவராலும் படிக்க இயலவில்லை.

6. கிடைக்கின்ற பாடப்பிரிவை கட்டாயமாகத் திணித்தல்.

மாணவர்கள் விருப்பத்திற்கு மாறாக இருக்கின்ற ஒரு பிரிவில் படிக்கக் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். தொழிற்கல்விப் பிரிவுகள் மூடுவிழா கண்டுள்ளன. 10 ஆம் வகுப்பில் தொழிற்கல்வி என்று போகாத ஊருக்கு வழி சொல்லும் நடைமுறை உள்ளது.

7. மடிக்கணினிகள் வழங்கப்படாமை.

சில ஆண்டுகளாக மடிக்கணினி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் படிப்பில் இடைநிற்றல் அதிகரிக்கிறது. இதன் காரணமாக பள்ளிகளில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தவர்கள் உண்டு.

8. குழந்தைத் தொழிலாளர்கள்.

அனைத்து மட்டத்திலும் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவர்கள் கைச்செலவிற்கு பணம் கிடைத்தவுடன் படிப்பைக் கைவிடுகின்றனர். வேறுபல தீய பழக்கங்களுக்கும் அடிமையாகின்றனர்.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த செயல் திட்டம் தேவை. அத்தகைய நடவடிக்கைகள் அறவே இல்லை.

9. மாணவர்களிடையே அதிகரித்துள்ள மது மற்றும் இதரப் போதைப் பொருள்கள் பயன்பாடு.

மாணவர்கள் ஒரு பகுதியினர் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகும் உண்மையை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். வீண் பெருமை பேசுவதும் மாணவர்களைக் குறை சொல்லக்கூடாதெனக் கருதி மூடிமறைப்பதும் இந்த சமூகத்திற்குச் செய்யும் துரோகமாகும்.

மாணவர்களுக்கு டாஸ்மாக் பானங்களும் இதர போதைப் பொருள்கள் மிக எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றைத் தடுக்க அரசால் இயலவில்லை.

10. குழந்தைத் திருமணங்கள்.

குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளனர். பெண்ணின் திருமண வயது 18 ஐ உறுதிப்படுத்த இயலாத நிலையில் 21 ஆக உயர்த்த பரிந்துரை செய்வது அபத்தம். இதற்கும் ஒருங்கிணைந்த செயல்திட்டம் தேவை. இவை வெறும் ஏட்டளவில் இருந்துப் பயனில்லை.

11. பாலியல் நெறிபிறழ் நடத்தைகள்.

குடும்ப, வாழிடச் சூழல்கள், இணையவெளி ஆபாசம் போன்றவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. தெளிவானப் பாலியல் கல்வி இல்லை. மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனைகள் வழங்க ஆசிரியர்கள் மட்டும் போதாது. இது பல துறைகளின் ஒருங்கிணைந்த பணியாக அமைய வேண்டும்.

12. ஊடகத் தாக்கம்.

காட்சியூடகத்தின் பாதிப்புகள் அதிகம். கட்டற்ற இணைய, அலைபேசிப் பயன்பாடுகள், ஆன்லைன் விளையாட்டுகள் என எண்ணற்ற தடைகள் உள்ளன.

13. பாடச்சுமை.

புதிய பாடநூல்களின் சுமை மாணவர்களை கல்விப்புலத்திலிருந்து துரத்துகிறது. எளிய பாடத்திட்டம், எளிய தேர்வுகள் என அனைவரையும் உள்ளடக்கிய கல்வி அவசியம். அவர்களை மருளவைத்து வெளியேற்றும் நடைமுறைகள் ஒழியவேண்டும்.

14. தொடக்கக் கல்வியின் வீழ்ச்சி.

தொடக்கக் கல்வி பெருமளவு வீழ்ந்துள்ளது. இது அரசின் தோல்வியைக் காட்டுகிறது. பள்ளிகளைச் சீரமைக்காமல் ‘இல்லம் தேடிக் கல்வி’ என்கிற தனிப்பயிற்சித் திட்டத்தினால் பலநூறுகள் ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் உள்ளனர். இருக்கிற பள்ளியைக் கெடுக்கும் இவ்வகைத் திட்டங்களால் பலனில்லை.

15. அரசின் தவறான நடவடிக்கைகள்.

ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு நடவடிக்கைகள் அடித்தட்டு மக்களை கல்வியை விட்டு அப்புறப்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் கல்வி சாராப் பணிகளைச் செய்ய கட்டாயப்படுத்தப் படுகின்றனர். வெளிப்படையாகச் சொல்லாமல் கல்வியைச் சீரழிக்கும் முயற்சிகள் அரசுகளால் மேற்கொள்ளப்படுகின்றன.

16. தேர்வு அச்சம்.

தேர்வு பற்றிய அச்சம் பெற்றோர்கள், அச்சு, காணொளி ஊடகங்களால் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. இதில் பல வியாபார நோக்கங்களும் இருக்கின்றன. இவற்றைத் தடுக்க வேண்டும். 70 அல்லது 90 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத சுமார் 3:30 மணிநேரம் குழந்தைகளை அடைப்பது ஒரு வன்முறை.

17. ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள்.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. குறைவான ஊதியம் பெறும் தற்காலிகப் பணியாளர்கள் திறம்பட செயல்பட இயலாது. ஆசிரியர்கள் பலருக்கு மாதிரிப் பள்ளிகளில் மாற்றுப்பணி வழங்குவதால் அப்பள்ளிகள் பாதிப்பிற்குள்ளாகின்றன.

18. தேவையற்ற ‘நீட்’ பயிற்சிகள்.

அனைவருக்கும் தேவையில்லாத ‘நீட்’ பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் தேவையின்றி அலைகழிக்கப்படுகின்றனர். இதனால் +2 தேர்வில் மாணவர் கவனம் திசை மாறுகிறது.

19. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளின்மை.

பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை நீடிக்கிறது. முறையான ஆய்வகங்கள், விளையாட்டுத் திடல்கள் இல்லை. இவற்றை உருவாக்க தனியாரிடம் கையேந்தும் திட்டங்கள் அனைவருக்கும் நன்மை பயக்காது.

20. மாணவர்களின் வன்முறைப் போக்குகள்.

திரைப்படம், தொலைக்காட்சி, சமூகம் பெரும்பாலும் வன்முறைக்களமாக உள்ளது. இவை குழந்தைகளிடம் ஒரு வித சாகச மனநிலையை உண்டு பண்ணுகிறது. அறமற்ற சமூகச் செயல்பாடுகள் அவர்களை ஆக்கிரமிக்கின்றன.

-மு.சிவகுருநாதன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.