ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல்வாரத்தில் அறிவிக்கப்படும் ஆறு நோபல் பரிசுகளில் இயற்கை விஞ்ஞானத்திற்கான மூன்று நோபல் பரிசுகள் பற்றி சர்ச்சைகள் தோன்றியதில்லை. இயற்கை விஞ்ஞானம் என்று நான் கூறுவது இயற்பியல், வேதியல், மருத்துவம் அல்லது உடற்கூறியல் ஆகும். ஏனென்றால் இயற்கை விஞ்ஞானத்திற்காக நோபல் பரிசு பெற்றவர்களின் பங்களிப்பு என்பது சக விஞ்ஞானிகளால் பரிசோதிக்கப்பட்டு அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தடம் பதித்த ஆய்வுகளாகும். மற்ற மூன்று நோபல் பரிசுகள் சமூக விஞ்ஞானத்திற்கானது. அவை இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகியவையே. இவற்றில் சர்ச்சைகள் ஏற்படுவதுண்டு. இவையாவும் அரசியல் கலப்படமற்றது என்று கூறமுடியாது. குறிப்பாக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 1969லிருந்துதான் கொடுக்கப்பட்டு வருகிறது. இப்பரிசானது ஆல்பிரட் நோபல் உயிலில் கூறியபடி ஏற்படுத்தப்பட்டதல்ல அவருடைய உயில் படி ஐந்து நோபல் பரிசுகளே வழங்கப்பட்டு வந்தன. பொருளாதாரத்திற்கான பரிசு பொருளாதார விஞ்ஞானத்திற்கான நோபல் நினைவுப்பரிசு என்றே அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பென் பெர்னன்க், டக்ளஸ் டயமண்ட், ஃபிலிப் டைவிக் ஆகிய மூன்று அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடி காலங்களில் ஏற்படும் வங்கிகள் திவாலாக்கள் நெருக்கடியை நீண்டகாலத்திற்கு இட்டுச் செல்லும் என்று கண்டறிந்ததே இவர்களின் பங்களிப்பு.

இதுவரை வழங்கப்பட்ட 53 பரிசுகளில் அனைத்தும் அறிவியல் பூர்வமற்றது என்று கூறமாட்டேன். அம்ரித்யாசென், ஜோசஃப் ஸ்டிக்லிட்ஸ், லியோன்டியஃப் போன்றவர்களின் பணி அற்புதமானது. இன்னொரு பக்கம் அறிவியலுக்குப் புறம்பான கட்டுரைகளுக்கும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஊகவணிக அம்சங்களை கொண்ட பொருளாதார நடவடிக்கைகளின் மீதான ஆய்வுகளை நான் அறிவியலுக்குப் புறம்பானது என்கிறேன். பொருளாதார ஆய்வுகளை அறிவியல் பூர்மான ஆய்வுகளாக முன்னெடுத்துச் சென்றதில் முதன்மை பங்கு வகித்தவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்காட்லாந்து அறிஞர் ஆதாம்ஸ்மித். பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அறிவியல் ஆய்வுமுறை பாரம்பரியம் டேவிட் ரிக்கார்டோவுடன் நின்றுபோய்விட்டது. அதிலிருந்து அறிவியல் ஆய்வுமுறைக்கும் அறிவியல் அல்லாத ஆய்வுமுறைக்குமான போராட்டம் பொருளாதார அரங்கில் நடந்து வருகிறது.

பொருளாதாரம் என்பது சமூக உற்பத்தியுடனும் செல்வ உற்பத்தியுடனும் தொடர்புடையது. பெருவீத உற்பத்தி என்பது சமீபகாலத்தியது. பெருவீத உற்பத்தி இல்லாமல் சிக்கலான பொருளாதார நடவடிக்கைகள் கிடையாது. சிக்கலான பொருளாதார நடவடிக்கைகள் இல்லாமல் சிக்கல்களை அடையாளம் காணும் ஆய்வுகளும் இல்லை. எனவேதான் நாம் பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த பொருளியல் அறிஞர்கள் பற்றி கேள்விப்பட்டது கூட கிடையாது. இந்தியாவில் பண்டைகாலத்தில் விமானம் தயாரிக்கப்பட்டது பிளாஸ்டிக்சர்ஜரி நடத்தப்பட்டது என்று கூறிக் கொண்டு விமான்சாஸ்த்ரா, பிளாஸ்டிக்சாஸ்த்ரா என்று என்று சமஸ்கிருத இலக்கியங்களைக் கூறுபவர்கள் கூட ஸம்பத்சாஸ்த்ரா அல்லது ஸம்பத்சூத்ரா என்ற இட்டுக்கட்டிய சமஸ்கிருத ஸ்லோகங்களை இதுவரை கூறமுடிவதில்லை.

தற்போது நாம் காணும் சிக்கலான பொருளாதார அமைப்பில் ஒவ்வொரு மனிதர்களும் பங்களிப்பாளர்களாகவும் பங்கெடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஒருவரையொருவர் சார்ந்த உற்பத்திமுறை நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒவ்வொருவரும் அவரவர் உழைப்புச்சக்தியை மதிப்புடைய நுகர்வுப்பொருளாகவோ சேவையாகவோ பொதுச்செல்வத்திற்கு மாற்றிவிட்டு தனக்கு வேண்டிய நுகர்வுப்பொருளையும் சேவையையும் பொதுச்செல்வத்திலிருந்து எடுத்துக் கொள்கின்றனர். இது ஆதாம் ஸ்மித்தின் கருத்து. இதற்குள் உள்ள சிக்கல்களை கையாள்வதே பொருளாதாரம். ஒவ்வொருவரின் உழைப்புச்சக்தியை பொதுச்செல்வமாக மாற்றுவது பொதுச்செல்வத்திலிருந்து ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்வது ஆகியவற்றிற்கான நடைமுறைகள் காலப்போக்கில் தாவிப்பாய்ச்சல் முன்னேற்றத்தில் நடந்துவருகிறது. இதில் தனிநபர்களின் பாத்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. தனிநபர்களே காலப்போக்கில் செல்வாக்கு உடையவர்களாகவும் சமூகத்தின் திசைவழியை தீர்மானிப்பவர்களாகவும் மாறுகின்றனர். எனவே தனிநபர்களின் நலன்களை புறக்கணித்து சிக்கல்களை தூயவடிவில் ஆய்வு செய்ய முடியாது. இயற்கை விஞ்ஞானத்திற்கு இப்பிரச்சனை கிடையாது. அது இயற்கை விதிகளை ஆய்வு செய்கிறது. இயற்கை விதிகள் என்பவை மனிதர்களுக்கோ தனிநபர்களுக்கோ அப்பாற்பட்டு சுயமாக இயங்குவது. பொருளாதாரம் அப்படிப்பட்டதல்ல. எனவே இதில் அறிவியல்முறை அறிவியல் அல்லாதமுறை என்று கோடுகிழிப்பது சிரமமாக உள்ளது.

தற்போதைய உற்பத்தியமைப்பில் பணம் சரக்காக உருவெடுத்து, சரக்கு திறனுடைய உற்பத்திமுறைக்குள் சென்று மற்றொரு மதிப்பு கூட்டப்பட்ட பயனுள்ள சரக்காக மாறி மீண்டும் பணவடிவம் எடுக்கிறது. திரும்பத் திரும்ப நிகழும் இந்த சுற்றோட்டம் தங்குதடையின்றி நடைபெறும்வரை பொருளாதாரச் சிக்கல்கள் என்பது கிடையாது. இவற்றில் பணம் என்பது உற்பத்தி நடவடிக்கையில் இறங்காமல் சுயேட்சையாக மதிப்புக்கூட்டல் நடவடிக்கையில் இறங்கினால் அது ஊகவணிகத்திற்கு இட்டுச் செல்லும் என்ற முடிவுக்கு பொருளாதாரப் போக்குகளை ஆய்வுசெய்த இருபதாம் நூற்றாண்டு அறிஞர்களில் குறிப்பிட்ட சிலர் வந்தனர். மொத்த பொருளாதார இயக்கத்தை இது சீரழித்துவிடும் என்ற முடிவுக்கும் வந்தனர். அத்துடன் மதிப்புக் கூட்டல் உற்பத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்டாலும் சுற்றோட்ட நடவடிக்கைகளே மதிப்புக்கூட்டல் நடைபெறுவதை உத்தரவாதம் செய்கிறது என்றும் சுற்றோட்ட நடவடிக்கைகளில் பணவடிவத்தை சற்று எச்சரிக்கையுடன் கையாளவேண்டும் என்றும் கூறிவந்தனர். எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய பொறுப்பு அரசுகளுக்கு என்பதே ஜான் மேனார்டு கீன்ஸ் போன்றவர்களின் வாதம். அரசு அல்லது சமூகத் தலையீடு இல்லாத தூய நடவடிக்கைகளாகவே பொருளாதார நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அதற்குள்ளேயே சிக்கல்களை சரிசெய்யும் ஏற்பாடு இருக்கிறது என்று கூறுபவர்கள் சுதந்திர சந்தைவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். ஒருபுறம் இந்த இரண்டு முகாம்களும் மோதிக்கொண்டிருக்க, பொருளாதார நெருக்கடிகள் காலவட்டத்தில் தோன்றிக் கொண்டேதான் இருக்கிறது.

நெருக்கடிகளுக்கு காரணம் என்ன அதை எப்படிக் களைவது என்று நடைபெற்ற ஆய்வுகள் வெளிச்சத்துக்கு வரவில்லை. நெருக்கடி காலங்களில் மிகுந்த சிரமத்திற்குள்ளாவது பலவீனமானவர்களும் சிறுகுறு தொழில்களுமே. இவர்களின் எண்ணிக்கை ஆகப்பெரும்பான்மையானது. காலவட்ட நெருக்கடிக்கு தீர்வு கிடையாது என்று முடிவுக்கு பொருளாதார அறிஞர்கள் வந்துவிட்டாற்போல் தெரிகிறது. அதனால்தான் நெருக்கடிக்குள் உள்ள ஒருசில புள்ளிகளை ஆய்வு செய்வது அதைக் களைந்து நெருக்கடியின் தாக்கத்தை குறைக்கலாம் என்ற ஆய்வுகள் பெருகிவிட்டன. அதில் ஒன்றுதான் இந்தாண்டு நோபல் பரிசுபெற்ற ஆய்வு.

ஒரு பலூனை நாம் ஊதிக்கொண்டே போனால் ஒரு கட்டத்தில் அது வெடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். வெடித்த பலூனின் கிழிந்த பகுதியை ஆய்வுசெய்து இந்த இடத்தில் ஏன் கிழிந்தது என்ற ஆய்வை நடத்துவது போன்றதே இதுவும். இந்த இடத்தில் இனி கிழியாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதே அந்த ஆய்வு கொடுக்கும் தீர்வு. ஆனால் ஊதிக்கொண்டே போகும் பலூன் இன்னொரு இடத்தில் வெடிப்பதை இந்த ஆய்வின் முடிவு தடுக்க முடியாது. யாரும் பலூன் வெடிப்பதற்கு ஒட்டுமொத்த காரணமான அதன் அழுத்தம் ஏன் கூடுகிறது அதை எப்படித் தடுப்பது என்ற ஆய்வுக்குள் செல்வதில்லை.

திரும்பத் திரும்ப நிகழும் உற்பத்தி நடவடிக்கைகள், அவற்றை உத்தரவாதம் செய்யும் சுற்றோட்ட நடவடிக்கைள் ஆகிய இரண்டும் செல்வ உற்பத்தியின் அங்கங்களாகும். சுற்றோட்ட நடவடிக்கைகளில் முக்கியமானது உற்பத்திசெய்யப்பட்ட சரக்கு பணமாக மாறி அது மீண்டும் உற்பத்திக்கான அடிக்கூறுகளாக விளங்கும் சரக்குகளாக மாறவேண்டும். இந்த இடத்தில்தான் பணத்தின் பங்கு முக்கியமானது. உற்பத்திக்கான அடிக்கூறுகளுக்கான பணம் இல்லையேல் உற்பத்தி இல்லை (உற்பத்தி என்பதை நான் இங்கே பொருளுற்பத்தி மற்றும் சேவை இரண்டையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன்). பணத்தைக் கையாள்வது வங்கிகளாகும். நெருக்கடிகளில் வங்கிகள் திவலானால் பணம் சுற்றோட்டத்திலிருந்து விலகும், உற்பத்தி நிகழ் முறை நின்றுபோகும். எனவே வங்கிகள் பொருளாதாரத்தைப் பற்றிய சித்திரத்தை வழங்கும் ஒரு கேந்திரமான புள்ளி எனலாம் (Vantage Point). 2022ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற டக்ளஸ் டையமண்ட், பிலிப் டைவிக் ஆகியோர் வங்கிகள் திவாலாகும் போக்கை ஆய்வு செய்து அதற்கான ஒரு புள்ளியில் மாதிரியை உருவாக்கினார்கள். இந்த புள்ளியல் மாதிரிக்கு டையமண்ட்-டைவிக் புள்ளியல் மாதிரி என்று பெயரிடப்படு அழைக்கப்படுகிறது. அந்த புள்ளியில் மாதிரியை 1930-40களில் நடைபெற்ற பெரும் பின்னடைவு (Great Depression) காலத்தில் நிகழ்ந்த வங்கி திவாலாக்களுக்குப் பொருத்தி டையமண்ட்-டைவிக் புள்ளியல்மாதிரி செல்லுபடியாகத்தக்கது என்று பென் பெர்னன்க் நிறுவினர். இதுவே இவர்களின் பங்களிப்பாக கருதி நோபல் பரிசு வழங்கப்பட்டது. அத்துடன் இவர்களின் புள்ளியில்மாதிரி வழியாக 1930களில் நிகழ்ந்தவை சாதாரண பொருளாதாரத் தேக்கம் நீண்டகால பெரும் பின்னடைவாக மாறியது என்பதே இவர்கள் கண்டறிந்தது. இந்த முடிவு பல்வேறு கேள்விகளுக்கு உட்பட்டது. 1930களிள் பெரும் பின்னடைவு பற்றி ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் வந்துவிட்டன.

பொருளாதார காலவட்டம் என்பது பெரு வளர்ச்சி (Boom) – மட்டுப்படல் (Slow down) – தேக்கம் (Stagnation) – பின்னடைவு (Recession) – பெரும் பின்னடைவு (Depression) – மீட்பு (Recovery) – பெருவளர்ச்சி (Boom) என்று பொதுவாக வகைப்படுத்துகிறார்கள். இந்த காலவட்ட சுழற்சியில் அரசு தலையீடு மூலம் தேக்கத்திலிருந்து மீட்புக் கொண்டுவர முடியும். தேக்கத்திலிருந்து பின்னடைவுக்குள் சென்றால் அதை நெருக்கடி கட்டம் என்கிறார்கள். பெரும் பின்னடைவு ஏற்பட்டால் அது கடும் நெருக்கடியாகும். 1930களில் ஏற்பட்டது பெரும் பின்னடைவாகும். 2008ல் ஏற்பட்டதை பெரும் பின்னடைவு என்று கூறத் தயங்குகிறார்கள். அதை உயரிய பின்னடைவு (Great Recession) என்றழைக்கிறார்கள். ஆனால் இதன் தாக்கம் பெரும் பின்னடைவைவிட அதிகம். கடந்த காலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட செல்வமானது இதன் தாக்கத்தை குறைந்தால்தான் 1930கள் அளவிற்கு இது வெடிக்கவில்லை. கடந்த மூன்று நூற்றாண்டுகளில் பலமுறை நெருக்கடி கட்டத்திற்கு சென்றிருக்கிறது. நெருக்கடி ஏன் என்பதில் கவனம் கடந்த காலங்களில் செலுத்தப்படவில்லை.

நோபால் பரிசு பெற்றவர்கள் உருவாக்கிய புள்ளியல்மாதிரி என்ன? அது செல்லுபடியாகத்தக்கது என்று எப்படி நிறுவினார்கள்? என்ற கேள்விகளுக்குள் புகுந்தால் ஆழமாக செல்லவேண்டியதிருக்கும் பொருளியல் கற்றலில் பயிற்சியில்லாதவர்களுக்கு சிரமமாக இருக்கும். எனவே நான் அதற்குள் செல்லவில்லை நானும் தொழில்முறையாக பொருளியல் பயின்றவனில்லை. நான் வாசிப்பு மூலம் கற்றறவைகளுக்கு ஒரு வரம்பெல்லை உண்டு. என்னுடைய பார்வையில் குறைபாடு இருக்க வாய்ப்புண்டு. இருந்தாலும், எனக்கு மாறுபாடு இருக்கும் அம்சங்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அவை அறிவியல் சார்ந்த ஆய்வுமுறை என்ற அளவோடு கூறுகிறேன்.

தகவல் விஞ்ஞானத்தின் (Data Science) அடிப்படைகளில் முக்கியமானது இயல்பான மாற்றங்களை தகவல் கிடங்காக மாற்றினால், மாற்றங்களைப் பற்றிய பயனுள்ள முடிவுகளை எடுக்க முடியும் என்பதுதான். இங்கே ஊகங்களுக்கு இடமில்லை. உதாரணமாக ஒரு நகரின் குறிப்பிட்ட சாலையில் உணவு விடுதி வைத்திருப்பவர், குறிப்பிட்டகாலம் சென்றபின் ஒவ்வொரு நாளும் எந்தவகை உணவுப் பதார்த்தம் எந்தளவு விற்பனையாகும் என்பதை அறிவார். கேட்டால் இது அனுபவத்தின் மூலமாக கண்டறிவது என்பார். தகவல் விஞ்ஞானத்தில் பல நூறு நாட்களாக உண்மையில் விற்பனையான பதார்த்தங்களையும் அதன் அளவுகளையும் தகவல் கிடங்கில் போட்டு தகவல் கிடங்கிலிருந்து பயனுள்ள முடிவைக் கொடுக்கும் மென்பொருளை இணைத்தால் புதன்கிழமை மாலைநேரத்தில் எவ்வளவு இட்லி விற்பனையாகும் என்று சொல்லும். இது ஊகத்தின் அடிப்படையில் நிகழ்வதல்ல. நீண்டகால நிகழ்வுப்போக்குகளின் அடிப்படையில் தீர்மானிப்பது

வங்கிகளை எடுத்துக் கொள்வோம். குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு பணத்தை நிரந்தர வைப்புக் கணக்கில் போடுபவர்களின் பணத்தை எடுத்து அவர்களுக்கு கொடுக்க வேண்டிய வட்டியைவிட அதிக வட்டிக்கு நீண்டகாலத்திற்கு தொழில்முனைவோருக்கு கடனாகக் கொடுத்து, இரண்டு வட்டிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை பயன்படுத்தி லாபகரமாக நடத்தப்படும் தொழிலே வங்கித்தொழில். இதில் வைப்புக்கணக்கில் போடுபவர்கள் குறைந்த கால முதிர்விற்கும் தொழில்முனைவோர் நீண்டகால முதிர்விற்கும் நிற்பவர்கள். இந்த முதிர்வு இடைவெளியானது வங்கிகள் சந்திக்கும் தொழில்-அபாயம் ஆகும். இந்த முதிர்வு இடைவெளியை முதிர்வுமாற்றம் என்று அழைக்கிறார்கள். முதிர்வுமாற்ற அபாயத்தின் உச்சகட்டம் என்பது வைப்புக்கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வைப்புக்கணக்கை முடிக்க விண்ணப்பிக்கும் போது வங்கிகளால் அவர்களுக்கு பணம் செலுத்தமுடியாத நிலை ஏற்படும். இதை வங்கிஓட்டம் (Bank-run) என்றழைக்கிறார்கள். வங்கி ஓட்டம் திவாலாவிற்கு (Bank-rupture or bankruptcy) வழிவகுக்கும். 1930களின் பொருளாதாரப் பெரும்பின்னடைவின்போது பல வங்கிகள் வங்கிஓட்டத்தின் விளைவாக திவாலாகின. முதிர்வு மாற்றத்ததால் நிகழும் தொழில் அபாயத்தை ஆய்வு செய்து அபாயத்தை குறைக்கும் உபாயத்தை நோபல்பரிசு பெற்றவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

வைப்புக் கணக்கு வைத்திருப்போர் தங்களுடைய எதிர்காலச் செலவை குறுகிய காலத்திற்கு மட்டுமே கணிக்க முடியும் என்பதால் அவர்கள் குறுகிய கால முதிர்வை தெரிவு செய்கிறார்கள். அவர்களில் ஒரு சிலருக்கு முதிர்வு காலத்திற்கு முன்பே பணம் தேவைப்படும் வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு கொடுக்கப்படும் வட்டியானது முதிர்வு வட்டியைவிட குறைவாகவே இருக்கும். எனினும் அனைத்து வைப்புக்களுக்கு வாடிக்கையாளர்களும் முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை முடிக்கும் நிலை என்பது வராது. வங்கிகள் திவாலாகும் என்ற அச்சத்தில் அல்லது ஊகத்தில் அனைத்து வைப்புக்கணக்கு வாடிக்கையாளர்களும் முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை முடிக்கும் முடிவை எடுக்கிறார்கள். இயல்பான நிலையில் எத்தனை பேர் முதிர்வுக்கு முன்பே கணக்கை முடிக்க கோருவார்கள் என்பதை நாம் தகவல் விஞ்ஞானத்தை வைத்துக் கூறமுடியும். ஆனால் அனைத்து வாடிக்கையாளர்களும் ஒரே நேரத்தில் கணக்கை முடிக்கக் கோரும் நிகழ்வை நாம் தகவல் விஞ்ஞானத்தைக் கொண்டு கூறமுடியாது, ஏனென்றால் இது ஊகங்களில் அடிப்படையில் நிகழ்வது. நோபல் பரிசாளர்கள் உருவாக்கிய மாதிரியில் லாம்டா என்றொரு நிகழ்தகவு (Probability) வருகிறது. இது முதிர்வு முன்கூடலின் இரண்டு விதங்களையும் உள்ளடக்குகிறது. ஊகத்தையும் உள்ளடக்கிய நிகழ்தகவின் அடிப்படையில் உருவாக்கிய மாதிரியானது எப்படி அறிவியல் ரீதியாகச் சரியாக இருக்கும் என்ற கேள்வி எனக்கு எழுகிறது.

பொருளியல் வளர்ச்சியில் வங்கிகளை சுற்றோட்டத்தை உத்தரவாதப்படுத்தும் இடைநிலை ஏஜண்டுகள் என்று இவர்கள் அழைக்கிறார்கள். பெருவீத உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில் வங்கிகள் கட்டத்தை தாண்டி பல்வேறு இடைநிலை ஏஜெண்டுகள் வந்துவிட்டன. உதாரணத்திற்கு 2008ம் ஆண்டு தோன்றிய சப்பிரைம் நெருக்கடியானது பிணையுறுதியுடைய கடன் பொறுப்பு ஆவணம் (CDO – Collatralised Debt Obligation) மதிப்பிழத்ததன் வாயிலாக தோன்றியது. கடன் கொடுத்த வங்கிகள் கடனாளியிடமிருந்து பெற்ற கடன் பத்திரங்களை பிணையுறுதிகளாகக் கொண்டு இன்னொரு பெரிய நிறுவனத்திடம் கடன் வாங்கும் முறையே CDO. வெறும் வாடிக்கையாளர் – தொழில்முனைவோர் என்ற கட்டத்தைத் தாண்டி, கடன்பத்திரத்தையே ஒரு சொத்தாக அனுமானித்து அதன் உடைமையாளர் அதற்கு பெருங்கடன் கொடுப்பவர் என்ற கட்டத்திற்கு வந்து அடுத்தடுத்த கட்டங்களுக்குச் சென்றுவிட்டது. அடுக்கடுக்கான இந்த இடைநிலை ஏஜண்டுகள் அனைத்தையும் உள்ளடக்கியதுதான் அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட். இது அனைத்துக்கும் இவர்கள் ஆய்வு பொருந்தும் என்று கூறுகிறது நோபல் பரிசு கமிட்டி.

வால்ஸ்ட்ரீட்டை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதை அமெரிக்காவின் பொருளாதார வரலாற்றை ஆய்வு செய்தவர்கள் அறிவார்கள். நோபர் பரிசு பெற்ற பென் பெர்னன்க் 2006 முதல் 2012 வரை அமெரிக்க ரிஸ்ர்வ் வங்கியான பெடரல் வங்கியின் தலைவர். இவரை பணிக்கமர்த்திய அதிபர் புஷ் இவர் ஒரு பொருளாதாரப்புலி, நெருக்கடிகளை ஊதித்தள்ளும் ஆற்றல் படைத்தவர் என்பதால் நியமித்தார். இவர் கண்டுபிடித்த கோட்பாடு இவர் கண்முன்னாலேயே நொறுங்கிப் போனதை இவரே ஏற்றுக் கொள்கிறார். 2008ம் ஆண்டில் பெடரல் வங்கித் தலைவர் என்ற முறையில் இவர் திவாலாகிக் கொண்டிருந்த ஏஐஜி என்ற நிறுவனத்திற்கு பிணையாக விதியை மீறி நிதியளித்தார் என்ற குற்றச்சாட்டு நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. நீதிமன்றத்தில் இவர் அளித்த வாக்குமூலம், “செப்டம்பர்-அக்டோபர் 2008 என்பது 1930களில் ஏற்பட்ட நெருக்கடி உள்ளிட்ட உலகில் ஏற்பட்ட அனைத்து நிதிநெருக்கடிகளிலேயே மிகவும் மோசமானது.” “அமெரிக்காவில் உள்ள 13 முக்கியமான நிதி நிறுவனங்களில் 12 நிதி நிறுவனங்கள் ஒரிரு வாரம் கூட தாக்குப்பிடிக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது” இதையொட்டி பெடரல் வங்கியின் பணவியற் கொள்கை மோசமானது என்ற குற்றச்சாட்டிற்கு உள்ளானது. நெருக்கடியானது ஐரோப்பியாவிற்கு பரவியவுடன் அங்கு இருந்த ஐரோப்பிய மத்திய வங்கி (Eurpean Central Bank ECB)யானது 80 ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகள் கடைப்பிடித்த அதே நெறிமுறைகளை கையாண்டதால்தான் நெருக்கடி வந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆக, இவர்கள் பரிந்துரைத்த வங்கிகள் அல்லது பொருளுற்பத்தியின் இடைநிலை ஏஜண்டுகளுக்கான கட்டுப்பாட்டு ஒழுங்கு முறைகள் செயல்படவில்லை அல்லது அமலாக்கப்படவில்லை அல்லது அமலாக்க முடியவில்லை என்ற முடிவுக்கு வரலாம்.

புஷ் அரசுக்குப் பின் வந்த ஒபாமா அரசும் பெர்னன்க்கையே பெடரல் வங்கியின் தலைவராக தொடர அனுமதியளித்தது. அத்துடன் நெருக்கடி தீர்வுக்கான கொள்கைகளையும் வரையறுக்கும் உரிமையை இவருக்கு வழங்கியது. இவருடைய தீர்வாக Quantitative Easing (அளவு அடிப்படையில் எளிதாக்குதல்) என்ற கொள்கையை முன்மொழிந்தார். அமெரிக்கப் பொருளாதாரத்தில் மூன்று பலமான அமைப்புகளைச் செயல்படுவதாகக் கூறலாம். ஒன்று Treasury எனப்படும் மத்திய அரசின் நிதியமைப்பு, இரண்டு வால்ஸ்ட்ரீட். அனைத்து நிதி நிறுவனங்கள் பங்குச்சந்தை உள்ளிட்ட அனைத்தையும் வால்ஸ்ட்ரீட் என்று வகைப்படுத்துகிறேன். மூன்றவாது பெடரல் வங்கி. பெடரல்வங்கி என்பது பணவியல் அமைப்புமுறையின் (Monetary System) கொள்கை வகுக்கும் அமைப்பு. மக்கள் உற்பத்தியிலும் சேவையிலும் ஈடுபட்டு செல்வத்தைப் படைக்கின்றனர். படைக்கப்பட்ட மொத்த செல்வத்தில் உற்பத்தியாளர்களான மக்களுக்குக் கிடைக்கப் பெற்றதுபோக மீதி அனைத்தும் உபரியே. இது வரிவடிவில் அரசுக்கும் சுற்றோட்ட ஏற்பாட்டாளர் என்பதால் வால்ஸ்ட்ரீட்டுக்கும் செல்கிறது. 2008 நெருக்கடியின் போது வால்ஸ்ட்ரீட் அடிவாங்கி சுருண்டுவிட்டது, மத்திய அரசின் நிதியமைச்சகத்திலோ 240 பில்லியன் டாலர்கள் (தற்போது 1.37 ட்ரில்லியன்) பற்றாக்குறை. பணவியல் கொள்கைவழித் தலையீட்டின் மூலமே உயிரூட்ட வேண்டும் என்ற நிலையில் உருவானதுதான் பெர்னன்க்கின் திட்டம் Quantitative Easing. இத்திட்டப்படி பெடரல் வங்கியே மதிப்பில்லாத CDOக்களை வாங்குவதன் மூலம் சந்தையில் அவை சுற்றோட்டத்திற்கு திரும்பும் என்பதே எதிர்பார்ப்பு. இதுவரை இது நடைபெறவில்லை. மூன்றாம் QE 2021ல் நடந்தது என்றால் 2008 பின்னடைவிலிருந்து மீளவில்லை என்பதே அதன் அர்த்தம். இதன்விளைவு கடுமையான பணவீக்கம், ஏனென்றால் படைக்கப்படாத மதிப்புக்கு பணம் அச்சடிக்கப்பட்டது என்பதாலேயே. இதை சமாளிக்க வட்டிவீதத்தை இப்போது ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். இறந்துபோன சடலங்களுக்கு உயிர் கொடுத்து புனையப்பட்டு எடுப்பட்ட ஜோம்பி திரைப்படங்ளை நினைவூட்டுவது Quantitative Easing.

பிலிப் டைவிக்கின் நிபுணத்துவப் பட்டியலில் சொத்து மதிப்பிடல் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சொத்து மதிப்பிடலில் புதிய கோட்பாடுகளை உருவாக்கி இரட்டை பற்றாக்குறை நாடான அமெரிக்காவை (மத்திய பட்ஜெட் பற்றாக்குறை மற்றும் ஏற்றுமதி இறக்குமதியில் பற்றாக்குறை) நோக்கி உலகத்தில் உருவாகும் உபரிச்செல்வம் பாயவைக்கிறது. டாலர்களில் சொத்தை சேமிக்க விரும்புவர்கள் எந்த வட்டியும் இல்லாமல் அமெரிக்க கருவூல பிணைப்புப் பத்திரத்தை வாங்குவார்கள். கொஞ்சம் வருமானம் வேண்டும் என்று நினைப்பவர்கள் வால்ஸ்ட்ரீட் பாதைக்குத்தான் செல்ல வேண்டும். அங்கே நிறுவனங்களின் மதிப்பை ஊதிப் பெரிதாக்கும் கோட்பாடுகள் வாயிலாக காகிதத்தில் அதிக மதிப்பை பெறும் நிறுவனங்களில்தான் முதலீடு செய்வார்கள். ஓயாமல் அமெரிக்காவை நோக்கிப் பாயும் உலக உபரிப் பணம் அவர்களின் இரட்டைப் பற்றாக்குறைக்கு நிதியளிக்கிறது. 2008ம் ஆண்டு நெருக்கடி இந்த புதிய கோட்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்கிவிட்டது. வங்கி திவாலாக்களில் இந்த புதிய கோட்பாடுகளின் பங்களிப்பை மறுத்துவிட்டு உருவவானதுதான் டையமண்ட்-டைவிக் புள்ளியில்மாதிரி என்று இதிலிருந்து தெரிகிறது.

அத்தோடு நில்லாமல் பெர்னன்க் பெடரல் வங்கித் தலைவராக இருந்தபொழுது இவருக்கு வேண்டிய நிதி நிறுவனங்களுக்குச் சாதகம் செய்தார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. குடியரசுக்கட்சிக்காராரக தன்னை அறிவித்துக் கொண்டவர். அமெரிக்க அரசின் சமூகப்பாதுகாப்பு செலவுகளைக் கடுமையாக எதிர்ப்பவர். குறிப்பாக வலதுசாரி பொருளாதாரக் கொள்கையாளர் அதாவது சுதந்திர சந்தைக் கோட்பாட்டாளர் பொருளாதாரத்தில் அரசு தலையீட்டை எதிர்ப்பவர், எனினும் இவர் பதவி வகித்த காலத்தில் அரசு தலையீட்டின் மூலம் பெருநிறுவனங்களுக்கு சாதகம் செய்தவர். இந்தப் பின்னணியில்தான் நான் நோபல் பரிசு பெற்றவர்களின் பணிகளை பார்க்கிறேன். தோல்வியடைந்த கொள்கைகள், அறிவியல் பூர்வமான நிறுவப்படாத கோட்பாடுகள் ஆகியவை எப்படி பரிசுக்கு தகுதி பெற்றவையாகின்றன என்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது.

அடிப்படையில் டையமண்ட-டைவிக் புள்ளியல்மாதிரி பொருளாதார அம்சங்களை மிகவும் குறுக்கி எளிமைப்படுத்திவிட்டதாகத் தெரிகிறது. பெர்னன்க் ஆய்வானது இந்த புள்ளியல்மாதிரியை நிறுவவேண்டும் என்ற முனைப்புடன் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இது அறிவியல் வழிமுறையல்ல என்றே நான் கருதுகிறேன். நான் புரிந்து கொண்டவரை சமூகஉற்பத்திமுறை மேலும் மேலும் பலமடைந்து சமூக செல்வம் பெருகிவரும் அதேநேரத்தில் அதன்பலன்களை அனுபவிப்பது சமூக அளவில் நடைபெறாமல் தனிநபர்களின் செல்வாக்கில் நடைபெறுகிறது. இந்த முரண்பாட்டை தீர்க்காமல் நெருக்கடிகளை தடுக்க முடியாது. இதற்குள் சென்று ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆய்வுகள் நடைபெறவில்லை என்று கூறமாட்டேன். நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அவை வெளிச்சத்திற்கு வந்து நடைமுறைப்படுத்தினால் சமூகத்தின் திசைவழியை தீர்மானிக்கும் தனிநபர்களின் அங்கம் குறைந்துபோகும் என்பதால் வெளிச்சத்துக்கு வரவில்லை. எனவே இது ஒரு நீண்ட நெடிய போராட்டமாகும்.

எஸ்.விஜயன்
சென்னை
25-10-2022

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *