ஒற்றைவரியில் வரலாற்றைச் சொல்லமுடியாமல் போகலாம். ஆனால், ஒற்றைவரியில் வரலாற்றை வாசிக்க வைத்துவிடமுடியும்.
தொடக்கத்தில் வாராந்திர மற்றும் மாதாந்திர ஜனரஞ்சகப் பத்திரிக்கைகளை வாசித்துத்தான் கொஞ்சம் கொஞ்சமாக நானும் ஒரு வாசிப்பாளரானேன்.
அம்புலிமாமாவும், பாலமித்ராவும், ரத்னபாலாவும் பிற்காலத்தில் வந்த கோகுலமும் என்னுள்ளே செய்த மாயாஜாலம் அளப்பரியது. பி.டி.சாமியின் இரும்புக் கை மாயாவி என்ற புத்தகத்திற்குள்ளேதான் இன்றளவும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

பிறகு தொடர் வாசிப்பில் தீவிர வாசிப்பாளரானேன். தற்போது எழுத்தாளன் என்ற அடுத்த பரிமாணம். வாசிப்பு என்பது ஒருவகை மனஉந்துதல். எதற்கும் கட்டுப்படாத காட்டாற்று வெள்ளம்போல் புத்தகவாசிப்பு, இன்றளவும் உள்மனதிற்குள் எப்போதும் சீறிப்பாய்ந்துகொண்டிருக்கிறது.
புத்தகம் வாசிக்காத நாட்கள் பல இருந்தபோதும், வாசிப்பின் ஈரம் சுத்தமாக வறண்டுபோனதில்லை. யாரேனும் ஒருவர் புத்தகத்தைப் பற்றி பேசினாலோ அல்லது கேட்டாலோ போதும் மீண்டும் வாசிப்புத் ’தீ’ பற்றிக்கொள்ளும்.
இதைத்தான் வாசிக்கவேண்டும் என்று யார் வலியுறுத்தியும் ஒருவரை வாசிப்பாளராக மாற்ற முடியாது. வாசிப்பு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. ஆரம்பத்தில், எனக்கு வார இதழ்களில் வெளியாகும் கவிதைகள் பிடிக்கும். அது புதுக்கவிதையா, மரபுக் கவிதையா அல்லது ஹைக்கூ கவிதையா என்றெல்லாம் தரம்பிரித்துப் பார்க்கத் தெரியாது.
அந்தக் கவிதை காதலைப் பற்றிப் பேசுகிறதா?, சமூகத்தைச் சாடிப் பேசுகிறதா?, பெண்ணியம் பேசுகிறதா?, அல்லது எதார்த்தத்தைக் கவிதை வடிவில் எழுதப்பட்டிருக்கிறதா? என்ற எந்தவொரு ஆதியும் அந்தமும் இல்லாமல்தான் கவிதையை வாசிக்கப் பழகினேன்.
ஒருகட்டத்தில் நானும் வார்த்தைகளை மடக்கி மடக்கி கவிதை மாதிரி ஒன்றை எழுதிக்கொண்டு எல்லோரையும் துரத்தித் துரத்தி வாசிக்க வைத்து வதம் செய்தேன்.
இப்படியே சென்றுகொண்டிருந்த கவிதை வாசிப்பு ஒருதிடீர் திருப்பத்தில் கவிதைகளை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். கண்டமேனிக்கு கவிதை என்றபெயரில் கிறுக்கி கவிஞர்களை அவமதிக்கக்கூடாது என்று தெளிவுகொண்டேன்.
அதுமட்டுமல்ல, எப்படிப்பட்ட கவிதைகள் ஒருவரை வசீகரிக்கிறது என்பதை அறிந்துகொண்டேன். எப்படி கவிதைகளை ரசிக்கவேண்டும் என்பதையும் தெரிந்துகொண்டேன்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல விடலைப்பருவத்தில் அரும்பிய மீசையை காதலித்ததைப் போலவே கவிதைகளைத் தாண்டி காதல் கதைகளையும் உருகி உருகி நேசித்தேன். பழைய புத்தகக் கடைகளில் தேடித்தேடி வாசித்தேன்.
வளர் இளம்பருவத்தின் அடுத்த நகர்வாக துப்பறியும் கதைகளின் தாக்கம் என்னுள்ளே தலைதூக்கியது. அப்போதைய ராணி காமிக்ஸ்தான் எனது அன்றைய அகோர அறிவுப்பசிக்குத் தீனிபோட்டது.
பள்ளிக்கால, நட்பு வட்டத்தில் துப்பறியும் கதைப் புத்தகங்கள் வாசிப்பவர்களை வலிந்து நட்பாக்கிக் கொண்டது மட்டுமல்லாமல், இந்த வாரம் எந்தப் புத்தகம் வெளியாகி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினேன்.
புத்தகம் சார்ந்து பேசுவதும் புத்தகங்கள் வாசிப்பதையும் வாழ்வோடு இயைந்த ஒன்றாகவே எனதுகாலம் கழிந்ததே ஒழிய அதை ஒரு வெட்டி வேலையாக ஒருபோதும் நினைத்ததில்லை.
என்வயதொத்த மாணவர்கள் ஏதேனும் ஒரு புத்தகத்தை வாசிப்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்திருந்தார்கள். அல்லது புத்தகங்கள் வாசிப்பவர்களை நண்பர்களாக்கிக் கொண்டேன். பள்ளிக் கல்லூரி பாடப்புத்தகங்களைவிட அவற்றைத் தாண்டிய புதுப்புது புத்தகங்களோடு என்னை நானே புதைத்துக்கொண்டது சுகமாக இருந்தது.
ஒவ்வொன்றையும் ஒப்பீடு செய்தும் வேறுபடுத்தியும் கூர்ந்து கவனிக்கவும் புத்தகங்கள் எப்போதும் என்னோடு வழித்துணையாக வந்தன. என் மனதோடு பேசவும், என் மன எழுச்சியை ஆற்றுப்படுத்தவும் புத்தகங்கள் துணைநின்றன.
சம்பாத்தியம் புருசலட்சணம் என்ற சூழலில் சிக்கித்தவித்து வேலை தேடி அலைந்தபோது ஒருவித வெறுமை மனதைக் கவ்விப்பிடித்தபடியே இருந்தது. அக்காலகட்டத்தில் எல்லாம் என் வாழ்க்கை தடம்புரளாமல் வைத்துக்கொண்டது புத்தக வாசிப்புதான்.
இப்போது கிடைப்பதுபோலவே அப்போதும் எனக்கு ஏராளமான நேரம் கிடைத்தது. கிடைத்த நேரத்தையெல்லாம் புத்தகங்கள் ஆக்கிரமிப்பு செய்துகொண்டு என்னை எப்போதும் பிஸியாக வைத்துக்கொள்வதிலேயே முனைப்பாக இருந்தன.
புத்தகங்களில் அப்படி என்னென்ன வகையான புத்தகங்களை எல்லாம் வாசித்தீர்கள் என்று கேட்டால் அத்தனை எளிதாகப் பதிலளிக்கமுடியாது. கதைகள் வாசித்தேன். கட்டுரைகள் வாசித்தேன். கதைகளில் காதல் தாண்டி புனைவுகள் இல்லாத இலக்கியங்களை வாசித்தேன். ஒவ்வொரு நகர்வுகளின்போதும் உறுத்தல் இல்லாத உலகத்தை தேடிக்கொண்டே இருந்தேன். இன்றுவரை தேடிக்கொண்டே இருக்கிறேன்.
வரலாற்றுப் புனைவுகள் ஒருகாலத்தில் கோலோச்சிக்கொண்டிருந்தன. கல்கியும் சாண்டில்யனையும் வாசிக்காதவர்களை ஒரு வாசிப்பாளராக ஒத்துக்கொள்ளவில்லை இச்சமூகம்.
அதற்காகவேனும், புரிந்ததோ இல்லையோ வரலாற்று நாவல்களை வாசித்தேன். எனக்கு இன்ன இன்ன கதைகள் தெரியும் என்று சொல்லிக்கொள்வதையே ஒருவிதப் பெருமை இருந்தது. அதற்கு அந்த காலகட்டத்தில் உரிய அங்கீகாரமும் கிடைத்தது.
என்வீட்டுப் பெண்கள் (சித்தி, அத்தை, அடுத்தவீட்டு அக்கா) லட்சுமி, சிவசங்கரி, அனுராதா ரமணன், விமலாரமணி, வாஸந்தி, என்று எழுத்தாளர்களைத் தரம்பிரித்து வாசிப்பு செய்து கொண்டிருந்த அவர்கள் பேச்சின் மூலம் பெண் எழுத்தாளர்களும் சிறுவயதிலேயே எனக்கு அறிமுகமானார்கள்.
எழுத்தாளர் பாலகுமாரனை எழுத்துச்சித்தர் என்று கொண்டாடினார்கள். நானும் சிறிதுநாட்கள் அந்தமோகத்தில் கரைந்துபோனேன். பின் சுதாரித்துக்கொண்டு மற்ற எழுத்தாளர்களின் எழுத்தையும் ரசிக்கவேண்டும் என்ற ஒருவித வெறியை நானாகவே வளர்த்துக்கொண்டேன்.
அதுமட்டுமல்ல, எல்லோரும் ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், புஷ்பா தங்கதுரை, எஸ்.பாலசுப்பிரமணியம் என்று ஒருகூட்டம் கொண்டாடிக்கொண்டிருந்தபோது நான் மட்டும் ராஜேந்திரக்குமார் என்ற எழுத்தாளனை என் மானசீக எழுதாளனாக எண்ணிக்கொண்டு மாங்குமாங்கென்று வாசித்துக்கொண்டிருந்தேன்.
தற்போதைய என் எழுத்தில் ராஜேந்திரக்குமார் அவ்வப்போது எட்டிப்பார்த்தாலும் பார்த்துக் கொண்டிருக்கலாம். கவிதைப் புத்தகங்களில் மு.மேத்தா, வைரமுத்து ஒரு தனிரகம் என்ற போது, தபுசங்கர் என் பால்யகாலத்து கற்பனையை கண்ணுக்குத் தெரியாத கயிற்றால் கட்டி இழுத்து தன்பக்கம் வைத்துக்கொண்டார்.
இத்தனைக்கும் நடுவில் முதல்தலைமுறையில் கல்லூரிக்குச் சென்று ஆங்கில இலக்கியம் படிக்கத் தொடங்கியிருந்தேன். ஆங்கில இலக்கியம் அத்தனை எளிதாக என்னுள் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை என்பது ஒருபுறம் என்றாலும் தேர்வுக்காகவேனும் வாசிக்கவேண்டிய நிர்பந்தம்.
ஒருகட்டத்தில் 14ஆம் நூற்றாண்டுக் கவிஞர்களான சாசர், சர்ரே, வைட், என்று தொடங்கிய கவிதை வாசிப்பு கொஞ்சம்கொஞ்சமாக ஷேக்ஸ்பியர், கீட்ஸ், ஷெல்லி, டபுள்யூ.பீ.யீட்ஸ், என்று எல்லையில்லாமல் விரிந்துகொண்டே சென்றது. எல்லாமே தேர்வுக்கான மதிப்பெண் பெறுவதற்காகத்தான் வாசித்துவைத்ததுதான்.
விரிவுரையாளர்கள் ஒவ்வொரு ஆங்கிலக் கவிதையையும் சிலாகித்துக் கொண்டிருந்தபோது அன்றைய காலத்தில் அர்த்தம் தெரிய ஏதேனும் ஒரு பஜார் கைடு தேவைப்பட்டது. கவிதைவரிகளை மனனம் செய்வது பரிட்சை எழுதுவதற்குமட்டும் என்றாகிப்போனது. தேர்வு எழுதிய அடுத்தநாளே அத்தனையும் மறந்துபோனது.
ஆனால் கவிதையை ஓரளவுக்கு ரசிக்கத் தெரிந்த என்னால், முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியாமல் போராடியதை வார்த்தைகளால் சொல்லமுடியாது. புரிந்துகொள்ளமுடியாமல் போனதற்கான சிக்கல் என்னவென்றால் ஒவ்வொரு கவிதையும் ஏதேனும் ஒரு பின்னணியைக் கொண்டிருந்தன. அதை அறியாமலே அக்கவிதைகளை அணுகியதும் வாசித்ததும்தான் என் பெரும்தவறு என்று பிறகுதான் உணரமுடிந்தது.
எத்தனையோ நாவல்களை ஆங்கிலத்தில் வாசித்தபோதும் தாமஸ் ஹார்டிதான் எனது முதலிடம். இவர்களைப் பற்றியெல்லாம் தற்போது பேசினால் இன்றைய இளைஞர்கள் என்னை ஏதோ வேற்று கிரகத்திலிருந்து வந்த ஜந்துவைப் பார்ப்பதைப் போல பார்க்கிறார்கள்.
சரி அப்படி என்னதான் இன்றைய இளைஞர்கள் வாசிக்கிறார்கள் என்று தேடுதல் வேட்டை நடத்தியபோது பாவ்லோ கொய்லோ என்றார்கள். அவர் எழுதிய மொத்த நாவல்களையும் வாங்கிக் குவிக்கத் தொடங்கினேன்.
பிரேசில் எழுத்தாளராக இருந்தபோதும் அவருடைய எழுத்து இந்திய எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் ஆங்கிலத்தை ஒத்ததாக இருந்ததால் வாசிக்க இலகுவாக இருந்தது. இளம் பெண்கள் சேட்டன் பகத் என்றார்கள். ஒருசிலர் ரவீந்தர் சிங் என்றார்கள். அதையும் முழுமூச்சில் வாசித்துவிட்டு அடங்காப் பசியோடு அடுத்தடுத்து வாசிக்க காத்துக்கொண்டிருக்கிறேன்.
ஒரு பள்ளிக்கூட ஆசிரியராய் இருந்து கொண்டு கல்விசார்ந்த புத்தகங்களை வாசிக்காமல் இருந்தால் பெரும் தவறல்லவா? ஆகவே பள்ளிக்கூடம், ஆசிரியர், குழந்தைகள் என்ற தலைப்பில் எந்தபுத்தகம் வந்தாலும் வாங்கி வாசித்துவிடுவதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன்.
மாடசாமியை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டேன். ஆயிசா நடராஜனை கொஞ்சம் ஓரவஞ்சனையோடுதான் வாசிக்கிறேன் இவர்கள் மூலம்தான் பாவ்லோ ஃப்ரைரேவும் அமனஸ் வீலியும் என்னுள்ளே ஊடுருவினார்கள்.
இன்றைய கல்விச் சிக்கல்களைப் பற்றிப் பேசிய வசந்திதேவியையும், சிவகுருநாதனையும், உமா மகேஸ்வரியையும் வாசித்துக்கொண்டே செல்லச் செல்ல கலகலவகுப்பறை சிவா, சிலேட்டுக்குச்சி எழுதிய முத்துக்கண்ணன் என்று ஏராளமான சமகால எழுத்தாளர்கள் வரிசைகட்டி நின்றார்கள். இருக்கிறேன்.
ஸ்.ராமகிருஷ்ணனையும், ச.தமிழ்ச்செல்வனையும், ஜெயமோகனையும், இமயத்தையும், சாருநிவேதாவையும், பவாசெல்லத்துரையையும், பாரதிகிருஷ்ணகுமாரையும் மிகத்தாமதமாகத்தான் வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் அவர்களின் எழுத்து வேறுமாதிரியானது என்பதோடு இல்லாமல் திரும்பத்திரும்ப வாசிக்க வைக்கும் வசீகரம் அந்தப் புத்தகங்களில் உண்டு என்பதை உணர்ந்துகொண்டேன்.
இதைத்தான் வாசிக்கவேண்டும் என்ற எவ்வித வரைமுறையையும் நான் வைத்துக்கொள்வதில்லை. இதையெல்லாம் வாசியுங்கள் என்று பரிந்துரைக்க இளமைப் பருவத்தில் கிடைத்த நட்புகள் தற்போது இல்லை.
அப்படியே தப்பித் தவறி யாரேனும், இதையிதையெல்லாம் வாசியுங்கள் என்று பரிந்துரைக்கும் புத்தகங்களில் எல்லாவற்றையும் நான் வாசிப்பதில்லை. ஏனென்றால் அவர்களது ரசனை வேறு. எனது ரசனை வேறு. நானே தேர்ந்தெடுத்த புத்தகங்களில் என்னை ஏமாற்றி சூடுபோட்ட புத்தகங்கள் ஏராளம். ஒருவேளை காலப்போக்கில் எனது ரசனை சற்றே மாறியிருக்கலாம். அல்லது அந்த எழுத்து என்னைக் கவராமல் போனற்கு ஏராளமான காரணமிருக்கலாம்.
மின்னிதழில் எழுதப்படும் எழுத்துக்கள் என்னை ஈர்க்காமல் இல்லை. ஆனால், மொபைல் ஃபோனிலும், லேப்டாப் வெளிச்சத்திலும் வாசிக்கும்போது என் கண்கள் சிலபக்கங்களைத் தாண்டுவதற்கு முன்னதாகவே சோர்ந்துபோய் விடுகிறது. அதுமட்டுமல்ல, மூடிவைத்த பக்கங்களில் இருந்து மீண்டும் தொடர்வது அத்தனை சுலபமாக இல்லை..
தற்போதெல்லாம், நாவல்களும் சிறுகதைகளும் வாசிப்பது குறைந்திருக்கிறது. சமகால எழுத்தாளர்கள் ஏராளமானவர்கள் எனக்கு அறிமுகமாகிறார்கள். அவர்கள் எழுதிக்கொண்டே அரசியல், இலக்கியம், சமூகம், ஊடகம், என்று வெவ்வேறு தளங்களில் செயல்பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்களின் எழுத்துக்களையும் ஒரு சுழற்று சுழற்றிவிட்டு ஓடிக்கொண்டே இருக்கிறது எனது வாசிப்பு.
இன்னும் வாசிக்கவேண்டும். ஒரு நாளுக்கு இத்தனை பக்கங்கள் என்று வாசித்துக்கொண்டிருந்த என்னை சமீபகாலமாக மொபைல் ஃபோன் எனது மதிப்புமிகு நேரத்தை திருடிக்கொண்டிருக்கிறது என்பதை உணரமுடிகிறது.
வெறும் காட்சிஊடகங்களை ஒருகட்டத்திற்கு மேல் மீள்நினைவுபடுத்தி கூறவும் முடியவில்லை. ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கும் இடமளிப்பதாகவும் தெரியவில்லை.
பலரும் என்னை கேட்கும் கேள்வி எப்படி இத்தனை புத்தகங்களை வாசிக்கிறீர்கள் என்று. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. புத்தக வாசிப்பு என்பது மனம் சார்ந்தது. புத்தகங்களின்மேல் நான் கொண்டிருக்கும் மதிப்பு சார்ந்தது.
நான் வாசிக்கும் புத்தகங்கள் என்னோடு வெறுமனே வாய்மூடிக்கொண்டு வருவதில்லை. செல்லுமிடமெல்லாம் என்னோடு தொணதொணத்துக் கொண்டே வழித்துணையாக வருகிறது. எந்த மேடை ஏறிப்பேசினாலும் எனக்கு குறிப்பெடுக்க புத்தகங்கள்தான் உடன்வருகிறது.
வாசிக்கும் பல புத்தகங்கள் என்னோடும் என் கொள்கையோடும் முரண்பட்டாலும் என்னிடம் கோபித்துக்கொண்டு நிர்கதியாய் என்னை நடுத்தெருவில் விட்டுவிட்டு விலகிச் செல்வதில்லை.
நான் வெளியேற்றும் மூச்சுக்காற்றில் கொஞ்சம் புத்தகம் சுவாசித்துக்கொண்டும், புத்தகம் வெளியேற்றும் மூச்சுக்காற்றை நான் சுவாசித்துக்கொண்டும் ஒருவருக்கு வழித்துணையாய் பயணித்துக்கொண்டே இருக்கிறோம். பேரமைதியைக் கொண்டாடிக்கொண்டும் புலம்பல்களைப் புறம்தள்ளிக்கொண்டும் சென்றுகொண்டே இருக்கிறோம்.
எந்த நிகழ்வாக இருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்ல புத்தகங்களை விட்டால் நான் எதைப் பற்றிப் பேசமுடியும்? எனக்கு வழித்துணையாய் வந்த புத்தகங்கள் ஏராளம் இனி வரப்போகும் புத்தகங்களும் ஏராளம். வயோதிகத்தில் வதைபட்டாலும் வழித்துணைக்கு புத்தகமே உடன்வர வரம்வேண்டும் தோழர்களே.