கத்திக்கப்பல் சிறுகதை – சக்தி ராணி

கத்திக்கப்பல் சிறுகதை – சக்தி ராணி




இருட்டான அறையில் ஏதோ காகிதத்தை கையில் வைத்து மடித்துக் கொண்டிருந்தான் விஷ்வா…

“என்ன…விஷ்வா…இங்க இருக்க என்ன பண்ற”ஒரு குரல்

நான்…இந்த பேப்பர்ல…கப்பல் செய்யப் போறேன்…

ஆனா…கப்பல் எப்படி செய்யனும்னு எனக்குத் தெரியல மதன்…

இவ்ளோ தானா…இரு…நான் சொல்லித்தாரேன்…

ம்ம்… ம்ம்…என்றே புன்னகைத்தான்…

இரண்டு நிமிடங்களில் கடகடவென செய்து முடித்தான் மதன்…

இந்தா…விஷ்வா…என்றே…கைகளைப் பிடித்து ஒப்படைத்தான்…காகிதக்கப்பலை

தன் விரலால் தடவிப்பார்த்தே…ரொம்ப அருமையா இருக்கு…

இரு…நானும் பண்றேன் என்றே…காகிதத்தை இப்படி…
அப்படி என மடித்து ஒரு உருவத்தைக்கொண்டு வந்தான் விஷ்வா…

இது எப்படி இருக்கு மதன்…

வாவ்… சூப்பர் விஷ்வா…உடனே பண்ணிட்ட…

ஆனா…ஆனா…இது நீ பண்ண மாதிரி இல்லையே…

நான் பண்ண மாதிரி இல்ல…அது விட பெஸ்ட் ஆ இருக்கு…

இதுக்கு பேர் கத்திக்கப்பல் விஷ்வா…கடல் பயணங்கள்ல பயன்படுத்துவாங்க…என்றே விஷ்வா வின் தோள் மேல் கை போட்டுக்கொண்டே வெளிச்சத்தை நோக்கி அழைத்துச்சென்றான்.

புதிய புத்தகம் பேசுது – மே மாத இதழ் – 2022

புதிய புத்தகம் பேசுது – மே மாத இதழ் – 2022



புதிய புத்தகம் பேசுது – மே மாத இதழ் – 2022 – கீழ்கண்ட தலைப்புகளுடன் இப்போது உங்களுக்காக PDF வடிவில்…

♻️ தலையங்கம்: தமிழகத்தின் கல்வியை ’’முன்னுதாரணம்” ஆக்குவோம் – ஆசிரியர் குழு
♻️ முத்துக்கள் பத்து: நான் வாசித்தேன் நீங்கள்? – ஆயிஷா இரா. நடராசன்
♻️புத்தகக் காதல் 5: 13 எழுத்தாளர்கள் 28 கேள்விகள் – ச.சுப்பாராவ்

♻️நூல் அறிமுகம்: அறிவியலை இப்படியும் கற்பிக்கலாம் – வெ‌.பிரித்திகா
♻️நூல் அறிமுகம்: பணமதிப்பு நீக்கம் : இந்திய நாணயப்பரிசோதனை குறித்த பார்வை – நிகழ் அய்க்கண்
♻️ நூல் அறிமுகம்: இன்றைய தேவையை உணர்த்தும் இருநூல்கள் – சா. ஜார்ஜ்டேவிட்
♻️ நூல் அறிமுகம்: கைத்தறியிலிருந்து கணிப்பொறி – ஸ்ரீதர் மணியன்

♻️நூல் அறிம்கம்: பெரம்பலூர் சான்றோர்கள் வளர்த்த ஆளுமை உ.வே.சா -ஆ. தினேஷ்குமார்
♻️நேர்காணல்: மாற்றம் – இளைஞர்கள் இதுவே என் நம்பிக்கை – அ. சவுந்தரராஜன்
♻️வாசிப்பு ரசனை வாழ்க்கை 18: வாசகரின் சொர்க்கம் – எஸ் வி வேணுகோபாலன்

♻️கட்டுரை: இளம்பெண்களின் இலக்கிய வாசிப்பு ஆர்வத்தை அதிகரித்த 18ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா – வே.தூயவன்
♻️நூல் அறிமுகம்: அறிவுக்கு ஆயிரம் கண்கள்- மோகனப் பிரியா. G
♻️ கட்டுரை: சூழலியல் எழுத்து: நம்பிக்கை தரும் ஆழமான முயற்சிகள் – அமிதா
♻️நூல் அறிமுகம்: இந்திய மதங்களும், இந்தியாவிற்கு வந்த மதங்களும் – சு. அழகேஸ்வரன்

தொடர் 10 : கவிதை உலா – நா.வே.அருள்

தொடர் 10 : கவிதை உலா – நா.வே.அருள்



Kavithai Ula Poetry Series 10 By Na ve Arul கவிதை உலா 10 : நா.வே.அருள்
வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

இரவும் நிலவும் மனிதர்களைத் தூங்க வைக்கும் மகத்தான சொரூபங்கள். ஆனால் அந்த இரவையே உறங்க வைக்கிறான் ஒரு கவிஞன். அவன் தனியாக எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால் இரவு உறங்குவதற்கு ஒரு தொட்டில் இருப்பதை அவனது கவிதைக் கண்களால் கண்டுபிடிக்கிறான்….ஆனால் விஷயம் என்னவென்றால் அது தூக்கத்தைத் தொலைய வைக்கும் சுவாரசியமான தொட்டில்!

என்ன முடியும் சிறு பிறையால்?
இரவை உறங்க வைக்கும்
சிறு தொட்டிலென மாறி…

Kavithai Ula Poetry Series 10 By Na ve Arul கவிதை உலா 10 : நா.வே.அருள்
அன்பழகன்.ஜி

ஒரு மீனின் மரணம் மனிதனின் மனசில் கல்லறைப் பெட்டியின் மீது ஆணியைப் போல அறையப்படுகிறது. அமைதியான நீர்ப் பரப்பு தகதகக்கும் தகன மேடையாக மாறுகிறது. யாருமே அஞ்சலி செலுத்தாத மரணமாக ஒரு மீனின் மரணம் நிகழ்ந்துவிடுகிறது. கவிஞனின் வார்த்தைத் தூண்டிலில் வசமாக சிக்கிக் கொள்கிறது ஒரு கவிதை மீன். அது நம் இதயத் தொட்டியில் இசைபாடும் மீன்!

தூண்டிலைச் சுண்ட
வானம் கிழியத் துடிக்கும்
கெண்டை மீன்

Kavithai Ula Poetry Series 10 By Na ve Arul கவிதை உலா 10 : நா.வே.அருள்
நீலச் சங்கியாள் சுகந்தி

தேநீரின் கதை சுவாரசியமானது. தலை வலித்தால் தேநீர். தன்னிச்சையாய்த் தேநீர்.. ஒருவரைச் சந்தித்தால் தேநீர். பிரிவென்றால் தேநீர். தேநீர் இல்லையென்றால் தேசமே இல்லை எனலாம். தேநீர் ஒரு தேசிய பானம். ஒரு தேநீருக்குள் சோகங்களைத் துடைத்தெறியும் சுவை இருக்கிறதாம். ஆனால் ஒரு கவிஞரின் கண்ணுக்குத்தான் தேநீரின் நிறம் தென்படுகிறது. அது ரத்தத்தின் சுவை என்கிற ரகசியம் புரிகிறது.

எத்துணை மோசமான சோகத்தையும்
தேயிலைத்தூளின் மணம்
துடைத்தெறிந்துவிடுகிறது
நினைவில் தேயிலைக்காடுள்ள மிருகமல்ல
தேயிலைக்காக ரத்தம்
சிந்தியவர்களின் ரத்தம் யான்


Kavithai Ula Poetry Series 10 By Na ve Arul கவிதை உலா 10 : நா.வே.அருள்
வீரமணி

இயற்கையைப் படைப்பின் கண்கொண்டு பார்க்கிறான் ஒரு கவிஞன். துன்பம் செய்த அதே இயற்கை இன்பம் செய்வதைக் காண்கிறான். எப்படி இதயத் துடிப்பில் “லப்” உண்டோ அப்படி “டப்” பும் உண்டு. லப் மட்டுமோ, அல்லது டப் மட்டுமோ இல்லை… லப் டப் சேர்ந்தால்தான் இதயத் துடிப்பு. புயல் அடிக்கிற அதே வானிலைதான் மழையையும் கொண்டு வருகிறது. .

நேற்று
வாரித் தூற்றிவிட்டுப்போன
அதே காற்றுதான்
இன்று
என் தோட்டத்திற்கு
மழையை
அழைத்து
வந்திருக்கிறது

முந்தைய தொடர்களை படிக்க: 

தொடர் 1 :  கவிதை உலா – நா.வே.அருள்

தொடர் 2 : கவிதை உலா 2 – நா.வே.அருள்

தொடர் 3 : கவிதை உலா 3 – நா.வே.அருள்

தொடர் 4 : கவிதை உலா 4 – நா.வே.அருள்

தொடர் 5 : கவிதை  உலா 5 – நா.வே.அருள்

தொடர் 6 : கவிதை உலா 6 – நா.வே.அருள்

தொடர் 7 : கவிதை உலா 7 (சிலுவை ஆணிகள்) நா.வே.அருள்

 தொடர் 8: கவிதை உலா 8: மன ஊரின் கவிதைக் குடிசைகள்- நா.வே.அருள்

 தொடர் 9: கவிதை உலா 9: ஒரு சுற்று வாழ்க்கை – நா.வே.அருள்

இடதுசாரி ‘மாடல்’: புதிய சவால்களும், திட்டமும் ! – இரா.சிந்தன்

இடதுசாரி ‘மாடல்’: புதிய சவால்களும், திட்டமும் ! – இரா.சிந்தன்



இடதுசாரி ‘மாடல்’: புதிய சவால்களும், திட்டமும்!

(புதிய கேரளத்திற்கான தொலைநோக்கு ஆவணத்தை முன்வைத்து)

‘மாடல்’ அல்லது ‘முன்மாதிரி மாநிலம்’ என்ற சொல்லாடல் இந்திய அரசியலுக்கு புதிதல்ல. முதலில் ‘குஜராத் மாடல்’ என்ற புனைவுக் கதை, இந்திய மக்களிடையே முதலாளித்துவ ஊடகங்களால் பரவலாக விதைக்கப்பட்டது. அதன் களத்திலேயே, 2014 ஆம் ஆண்டு ‘மோடி பிம்பத்தின்’ பிரம்மாண்ட வெற்றி அறுவடை செய்யப்பட்டதை அறிவோம். அப்போதே கூட நாட்டின் பல்வேறு முற்போக்கு, ஜனநாயக சக்திகளும், ‘ஜிடிபி’ எண்களா? ‘எழுத்தறிவு மற்றும் மக்கள் நல்வாழ்வு குறியீட்டு’ எண்களா? எது முன்மாதிரிக்கான அடித்தளம் என்ற கேள்வியை எழுப்பினார்கள். மிகச் சிறு மாநிலத்தில் அமைந்திருந்த இடது முன்னணியின் ஆட்சியை சுட்டிக்காட்டி, இதுதான் இந்தியாவிற்கே வழிகாட்டும் முன்மாதிரி என்ற அந்தக் குரல், வெகுமக்களை உரிய காலத்தில் சென்று சேராதது, சோகமே.

அதன் பின், ‘மாடல்’ பற்றிய பிம்பங்கள் உடையத் தொடங்கின. மிகச் சாதுர்யமாக, தங்களின் கதையாடலை ‘வகுப்புவாத – தேசிய வெறியை” சுற்றியதாக மாற்றிக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்/பாஜக சக்திகள், பெருமுதலாளிகளோடு கூட்டினை வலுப்படுத்தி, ஊடகங்களின் பெரும் பலத்தோடு, மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள். இப்போது ‘மாடல்’ பற்றிய கேள்விகள் எதிர் தளத்தில் இருந்துதான் வலுவாக எழுகின்றன. ஆர்.எஸ்.எஸ்/பாஜக கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தையும், கூட்டாட்சியையும், பொருளாதார இறையாண்மையையும் அடித்து நொறுக்கி வருகிறது. எனவே, இந்த போக்கிற்கு மாற்றான முன்மாதிரிகளை பேசுவது காலத்தின் கட்டாயம்.

வலதுசாரிகளின் ‘மாடல்’ புனைவை எதிர்கொள்வதற்கு, வேறொரு புனைவை மேற்கொள்ளும் பிரச்சார உத்தியாக அல்ல. இப்போதைய உலக சூழலை அறிவியல் பார்வையில் உற்று நோக்கி, நடைமுறை சாத்தியமான மாற்றினை முன்வைக்க வேண்டும். அதைத்தான் ‘இடதுசாரி மாடல்’ என்று குறிப்பிடுகிறோம்.

இந்தியாவின் ஆளும் வர்க்கங்களுக்கு நேர் எதிரான கொள்கையைக் கொண்ட ஒரு கட்சி, ஒட்டுமொத்த அதிகாரத்தின் பலமுனைத் தாக்குதல்களை எதிர்கொண்டு முன்னேறுவது எப்படி சாத்தியம்? அதுவும் ‘நவதாராளமய’ விதிகளுக்கு உட்பட்டே ஆட வேண்டிய ஒரு ஆட்டத்தில், இரண்டாவது முறையாக வெற்றியை தொடர முடியுமா? இவ்வாறு பல கேள்விகள் நமக்கு முன் எழுகின்றன. இந்தப் பயணம் அப்படியே தொடருமா அல்லது வங்கத்திலும், திரிபுராவிலும் எதிர்கொண்ட தடங்கல் இங்கேயும் நிகழக்கூடுமா என்ற பதட்டமும் பலரிடம் எழுகிறது.

“புதிய கேரளத்திற்கான தொலைநோக்கு” என்ற இந்த ஆவணம் அந்த கேள்விகளை தெளிவாக்குகிறது. பதட்டத்தை சீராக்குகிறது. இந்த செயல்திட்டம், எர்ணாகுளத்தில் நடந்த சி.பி.ஐ(எம்) மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

முதல் கொள்கைத் தலையீடு 1939:

இந்திய விடுதலைக்கு முன்பே, மதராஸ் மாகாண அரசாங்கம் அமைத்த குத்தகை விசாரணைக் குழுவிடம் தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் ஒரு மாற்று அறிக்கையை முன்வைக்கிறார். அப்போது கேரளத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளே நிறைவடைந்திருந்தது. குத்தகை ஏற்பாட்டில் உள்ளார்ந்து நிலவுகிற சுரண்டல் நடைமுறைகளை அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது. நிலப்பிரபுத்துவ அமைப்பை ஒழித்தால்தான் சமுதாய வளர்ச்சி சாத்தியம் என்று அறுதியிட்டு கூறியது. உழுபவருக்கே நிலம் சொந்தமாக வேண்டும் என்றது. இவ்வாறு, அது பழைய சுரண்டல் முறைகளுக்கு முடிவுகட்டச் சொன்னது.

இந்திய விடுதலைக்கு பின், மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்காக களத்திலும், கொள்கை அளவிலும் கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டங்களை நாம் அறிவோம்.

1957 ஆம் ஆண்டில், உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக, கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான ஆட்சி உருவானது. இந்த வெற்றியைப் பற்றிய தேவையற்ற பெருமிதங்கள் கட்சிக்கு இருக்கவில்லை. முதலமைச்சராக தேர்வான இ.எம்.எஸ் நம்பூதிரிபாட், ‘இப்போதுள்ள சூழ்நிலையில், உழைக்கும் மக்களுடையதும், ஏழை மக்களுடையதுமான நலவாழ்வுக்கான திட்டங்களை அமலாக்கி செயல்படுத்துவதுதான் அரசாங்கத்தின் நோக்கம்’ என்றார். ஆம், இந்திய ஆட்சியின் வர்க்கத்தன்மை மாறவில்லை, குறிப்பிட்ட வரம்புகளுக்கு உட்பட்ட மாநில ஆட்சியைத்தான் கட்சி வழிநடத்தியது. எனவே, மாநில ஆட்சிக்கு உள்ள வரம்புகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வருவது அவசியம் என்றார் அவர். அதுபோலவே, கேரளத்தில் சுதந்திர இந்தியா கண்ட முதல் ஆட்சிக் கலைப்பு நடவடிக்கை, வர்க்க ஆட்சியையும், வரம்புகளையும் தெளிவாக்கியது.

நிலச் சீர்திருத்தம், கல்வி, மக்கள் நலவாழ்வு போன்று பல்வேறு துறைகளில் கேரளம் மேற்கொண்டுள்ள சாதனைகளை நாம் அறிவோம். இந்தக் கட்டுரையில் அவைகளை மீண்டும் கூறப்போவதில்லை. மாறாக, அந்த சாதனைகளுக்கு திசைகாட்டும் கொள்கைகளின் தடத்தையே பின் தொடரவுள்ளோம்.

மாற்றுக் கொள்கைக்கு வாய்ப்பு

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம், இதுபோன்ற மாநில ஆட்சிகளை நடத்த வேண்டிய அவசியத்தை குறிப்பிட்டுள்ளது. “மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, அவைகளை நிறைவேற்றுகிற அரசாங்கங்களை அமைக்கும் வாய்ப்புகளையும் கட்சி பயன்படுத்திக்கொள்ளும்” என்பதுடன், உழைக்கும் மக்களின் புரட்சிகர இயக்கத்தை வலுப்படுத்தவும், மக்கள் ஜனநாயக முன்னணியை கட்டவும் உதவியாக இருக்கும் என்கிறது. அதே சமயத்தில் ‘நாட்டின் பொருளாதார, அரசியல் பிரச்சனைகளுக்கு அடிப்படையான தீர்வுகளைப் பெற்றிட முடியாது’ என்ற எச்சரிக்கையும் வெளிப்படுத்துகிறது.

ஒன்றிய அரசாங்கம், திட்டமிடலை முற்றாக கைவிட்டுவிட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். ஐந்தாண்டு திட்டங்களோ, திட்ட ஆணையமோ இனி கிடையாது. ஆனால், கேரள அரசாங்கம் மட்டும், வளர்ச்சிக்கான திட்டமிடலை தொடர்ந்து முன்னெடுக்கிறது. அது, மக்களுக்கு நல்ல பலனையும் வழங்கி வருகிறது. இதற்கான விதை 1967 எல்.டி.எப் ஆட்சிக் காலத்திலேயே போடப்பட்டது ஆகும். அப்போதைய ஒன்றிய அரசாங்கம் ஐந்தாண்டு திட்டத்தை கைவிட்டு, ‘திட்ட விடுப்பு’ என்ற பாதையில் பயணித்தபோது, கேரள மாநிலத்தில் மாற்று கொள்கைக்கான வரைவுச் சட்டகம் முன்மொழியப்பட்டது. அது பொருளாதார திட்டமிடலின் அவசியத்தை எடுத்துக்காட்டியது. இத்தகைய மாற்றுக் கொள்கைகளே ‘இடதுசாரி மாடலின்’ அடித்தளம் ஆகும்.

1980, 1987, 1996 ஆண்டுகளில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி அமைந்தது. இந்த சமயங்களிலெல்லாம் இடதுசாரிகள் முன்னெடுத்த நலத்திட்டங்களை, அடுத்து வருகிற யுடிஎப் ஆட்சி பின்னுக்குத் தள்ளியது. எனவே, ஆட்சியில் போராட்டம், ஆட்சியில் இல்லாத காலங்களில் மக்கள் நல நடவடிக்கைகளை காத்திடும் களப் போராட்டங்கள் என்று அயர்வில்லாமல் கட்சி செயல்பட்டது. முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையின் காரணமாகவும், ஒன்றிய அரசாங்கத்தின் தொடர் தாக்குதல் காரணமாகவும், கேரள மாநிலத்தின் பொருளாதார கட்டமைப்பு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

1990 களில், உலகமய, தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் வேகமெடுத்தன. ‘நவதாராளமயம்’ என்பது வெறும் சொல் அல்ல, அது பல்வேறு கட்டுப்பாடுகளையும், செயல் திட்டங்களையும் தன்னகத்தே கொண்ட ‘புதிய உலக ஒழுங்காக’ அமைந்தது. மார்க்சிஸ்ட் கட்சி, இந்த சவாலை எதிர்கொள்வதற்கு தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.

இந்த சூழலை ஆய்வு செய்திட 1994 ஆம் ஆண்டில் ஏ.கே.ஜி ஆய்வு மற்றும் கல்வி மையத்தின் சார்பில் சர்வதேச விவாதங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.
கேரளாவை பற்றியும் அதன் சமூக பொருளாதார வளர்ச்சியைப் பற்றியும் ஆய்வு மேற்கொண்டுவந்த பல்வேறு அறிஞர்கள் அதில் பங்கேற்று விவாதித்தார்கள். தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் கூறினார், “நாம் சந்தித்துவரும் தீவிர பொருளாதார நெருக்கடியில் இருந்து கவனத்தை திருப்பும் விதத்தில், கேரளத்தின் சாதனைகளைப் பற்றிய விதந்தோதல்கள் வேண்டாம். பொருளாதார வளர்ச்சிப் பாதையில் நாம் இந்தியாவின் பிற மாநிலங்களை விடவும் பின் தங்கியுள்ளோம். நெருக்கடிக்கான தீர்வினை தாமதிக்க முடியாது. வேலைவாய்ப்பிலும், உற்பத்தியிலும் பின் தங்கிய நிலைமையை நாம் புறந்தள்ளினால் அது நமக்குத்தான் ஆபத்தாக முடியும்”

இந்த மாநாட்டின் விவாதங்கள் பலன் கொடுத்தன. 1996 ஆம் ஆண்டில் ‘மக்கள் திட்ட முன்னெடுப்பு’ வந்தது. 2001 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. திட்டமிடலிலும், வளர்ச்சிப் பணிகளிலும் மக்களின் பங்கேற்பை இது அதிகப்படுத்தியது.

அடுத்தடுத்து நடத்தப்பட்ட சர்வதேச மாநாடுகள் கேரளத்தின் வளர்ச்சி பிரச்சனைகளை பல்வேறு கோணங்களிலும் விவாதித்தன. மாற்று திட்டங்களை உருவாக்கின. 2006 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில், பிரபாத் பட்நாயக் கூறினார், “அரசின் வள ஆதாரங்கள் குறைந்துகொண்டே செல்வது தற்செயல் அல்ல, நவ-தாராளமயத்தின் அடிப்படையான வெளிப்பாடு இது. இவ்விசயத்தில் கேரளம் விழிப்போடு இருக்க வேண்டும்” என்றார்.

பெரு முதலாளிகளுடைய மூலதனத்தை தமது மாநிலத்தில் ஈர்ப்பதற்காக மாநிலங்களுக்குள் நடக்கும் போட்டியும் அதன் விளைவுகளும் ‘அதிகாரக் குலைவினை’ ஏற்படுத்துகின்றன. நமக்கு தேவை அதிகார பரவலாக்கமே. நவதாராளமய சூழலிலும் அதனை எவ்வாறு முன்னெடுப்பது என்று கட்சி விவாதித்தது. ஒன்றிய அரசின் கொள்கைகளை எதிர்கொள்வது பற்றியும், நேரடி அன்னிய முதலீடுகள் பற்றியும் தெளிவை தருவதாக இந்த விவாதங்கள் அமைந்தன.

அடுத்து வந்த இடது ஜனநாயக முன்னணி அரசாங்கங்களின் கொள்கைகளை வகுப்பதில் இந்த விவாதங்கள் பங்காற்றின.

மீண்டும் விஜயன் அரசாங்கம்:

கேரள மாநிலத்தின் வரலாற்றில், இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்த பின்னணியில்தான், எர்ணாகுளத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், கேரளத்திற்கான தொலைநோக்கு பற்றி விவாதிக்கப்பட்டது.

‘பல்வேறு வர்க்கங்களின் பிரச்சனைகளையும் கணக்கில் எடுத்து, உள்ளார்ந்த சமூக நீதிப் பார்வையுடன்’ கேரள மாநில அரசாங்கத்தின் கொள்கைகள் அமைய வேண்டும். ‘நவீன அறிவார்ந்த சமூகத்தை’ அமைப்பதற்காக, அறிவியலையும் நுட்பன்களையும் பயன்படுத்திட வேண்டும், அனைத்து சமூக தளங்களிலும் உற்பத்தி சக்திகள் வலுப்படுத்தப்பட வேண்டும். திறன் அதிகரிக்க வேண்டும் அதன் மூலம் உற்பத்தி உயரவேண்டும் என்கிறது ‘புதிய கேரளத்திற்கான தொலை நோக்கு ஆவணம்’.

அதாவது, கேரளத்தின் தொழிலாளர்கள் அதி நவீன இயந்திரங்களை இயக்கிடும் திறனுடன், புதிய தொழில்நுட்ப அறிவுடன் செயல்படும் அடித்தளத்தை வலுவாக அமைக்கும்போதுதான். வாழ்க்கைத் தரம் உயரும். உற்பத்தி அதிகரிப்பதுடன், விநியோகத்தை சமநீதி அடிப்படையில் மேற்கொள்ள முடியும் என்று ஆவணம் தெளிவாக்குகிறது.

முன்பே குறிப்பிட்டதைப் போல, நாட்டில் பொருளாதார திட்டமிடல் முற்றாக கைவிடப்பட்ட காலத்தில், கேரள மாநிலம் மட்டுமே திட்டமிடல் நடவடிக்கைகளை கைவிடவில்லை. இப்போதும் 14 வது ஐந்தாண்டு திட்டத்தை வகுப்பதுடன், ஆண்டு திட்டங்களும் தயாராகின்றன. நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் நிலவும் வாழ்க்கைத்தரத்தை 25 ஆண்டுகளில் எட்ட வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயித்திருக்கிறார்கள்.

வளங்களும், வாய்ப்பும்

இதையெல்லாம் செய்வதென்றால் மாநிலத்திற்கு நிதி அவசியம். ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டும், நவதாராளமய கொள்கைகளின் சட்டகத்திற்கு உட்பட்டுமே அதனை மேற்கொள்ள முடியுமா?. ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கும் வருவாய் மேலும் குறையும் சூழலே உள்ளது. இந்த சூழலை எதிர்கொண்டு ‘இடது மாடலை’ முன்னெடுப்பது, வர்க்கப் போராட்ட தெளிவோடே நடத்தப்பட முடியும். இந்த போராட்டத்தில் வெகுமக்களையும் தொடர்ந்து ஈடுபடுத்திட வேண்டும்.

இந்த ஆவணத்தில் பொதுத்துறை நிறுவனங்களை பற்றி குறிப்பிடப்படும் பகுதி மிக முக்கியமானதாகும். ஏற்கனவே உள்ள பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்துவதுடன், திறம்பட செயல்படுத்தும் அவசியத்தை மக்களிடமும், அதன் ஊழியர்களிடமும் இந்த ஆவணம் முன்வைக்கிறது. மேலும் பொதுத்துறையில் புதிய புதிய நிறுவனங்களை உருவாக்குவதும் அதன் மூலம் வளர்ச்சியை வேகப்படுத்துவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்ற திசையை இந்த ஆவணம் காட்டுகிறது. இது நவதாராளமய விதிகளுக்கு முற்றிலும் முரணான ‘இடதுசாரி மாடலின்’ தனித்துவம் ஆகும்.

அதே போல, சிறு/குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்கப்படுத்தும் விதத்தில், உள்ளாட்சிகள் செயல்பட வேண்டும் என்று குறிப்பிடுவதுடன், பாரம்பறிய தொழில்களில் நவீன முன்னேற்றங்களை புகுத்துவதன் அவசியத்தையும் தெளிவாக்குகிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான அவசியத்தை தெளிவாக்கும் இந்த ஆவணம், மிகவும் சவாலான, நுட்பமான பணிகளை இந்த திசையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வழிகாட்டுகிறது.

புவி வெப்பமாதல் மற்றும் சூழலியல் பிரச்சனைகளை எதிர்கொள்ளல்
உள்ளாட்சி அமைப்புகளில் பொது வெளிகளை உருவாக்குதல்
ஊழல் நடைமுறைகளுக்கு முடிவுகட்ட சமூக தணிக்கை வழிமுறைகளை உருவாக்குதல்
போன்ற முன்மொழிவுகள், கேரளத்தின் சமூக வாழ்வில் பண்பாட்டு தாக்கத்தை ஏற்படுத்தும் ‘இடதுசாரி’ வெளிப்பாடுகள் ஆகும்.
உதாரணமாக, கேரளத்தில் தற்போதுள்ள உள்ளாட்சிகளில் 40 சதவீதத்திற்கும் மேல் எதிர்க் கட்சிகளின் நிர்வாகத்தில் உள்ளதையும், நிதி செலவினங்களை மேற்கொள்வதில் உள்ளாட்சிகளுக்கு உள்ள சுதந்திரத்தையும் இதனோடு இணைத்து நோக்கினால், நம்மால் மேற்சொன்ன முன்மொழிவுகளின் தாக்கத்தை உணர்ந்திட முடியும்.

கட்சியும் அரசாங்கமும்

மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, கேரளத்தின் ஆட்சியை வழிநடத்துகிறது. அதே சமயத்தில் அரசாங்கம் என்பது அனைவருக்குமானது. அனைவரையும் உள்ளடக்கி நடக்க வேண்டியது. இந்த சூழலில், கட்சி தனது பாத்திரத்தை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆவணம் தெளிவாக்குகிறது.

கட்சியின் தொலைநோக்கிற்கு உகந்ததாக அரசின் கொள்கைகள் இருக்கிறதா என்பதை அவ்வப்போது, எச்சரிக்கை உணர்வுடன் பரிசீலித்து உறுதி செய்திட வேண்டும்.
அரசின் திட்டங்கள் பற்றி மக்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்ப்பதுடன், வெகுமக்கள் ஆதரவுடனே திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை கட்சியே உறுதி செய்திட வேண்டும்.
பொதுத்துறைகளை திறன் வாய்ந்த வகையில் இயக்கும் கடமையை தொழிற்சங்கங்களும் கவனத்தில் கொள்வதுடன், கல்வியிலும், சுகாதாரத்திலும் சிறப்பான சேவைகளை உறுதி செய்வதில் ஊழியர் சங்கங்களும் கவனம் செலுத்திட வேண்டும்.

மாநில அரசின் செயல்பாடுகளுக்கு வரம்பிடும் ஒன்றிய அரசின் போக்குகளை மக்களிடம் தொடர்ந்து அம்பலப்படுத்துவது கட்சியின் கடமை என்பதை இந்த ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.

உலகமே, நவதாராளமயம் உருவாக்கிய இடியாப்பச் சிக்கலில் சிக்குண்டிருக்கும் சூழலில் ‘இடதுசாரி’ அரசாங்கங்கள் மட்டுமே மக்களுக்கு நம்பிக்கை வெளிச்சத்தை கொடுத்து வருகின்றன. இந்த பொறியினை விசிறி, மேலும் சுடர் விடச் செய்யும் ஆவணமே இந்த சிறு பிரசுரமாகும். ‘இடதுசாரி மாடல்’ என்பது, இப்போது ஒரு மாநிலத்தின் களத்தில் வார்த்தெடுக்கப்படும் போதிலும் அது ஒட்டுமொத்த இந்தியாவுக்கான மாற்றுப்பாதையை எடுத்துக்காட்டுகிறது. இந்திய மக்களின் நலவாழ்வினை பாதுகாத்திட சாத்தியமான, நடைமுறைக்கு உகந்த அனைத்து வழிகளிலும் முயற்சிப்பதே அதன் தொலைநோக்கு. இந்த முயற்சி, அதற்கே உரிய தனித்துவத்துடன் உலகிற்கு ஒரு முன்னுதாரணமாக அமைகிறது.

– இரா.சிந்தன்

தொடர் 28: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 28: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி



Paadal Enbathu Punaipeyar Webseries 28 Written by Lyricist Yegathasi தொடர் 28: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் “அசுரன்” திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதும் வாய்ப்பு. எப்பவும் போல் இயக்குநரின் அழைப்பின் பேரில் அலுவலகம் சென்றேன். கதையின் அவுட் லைன் சொல்லிவிட்டு பாடலின் சூழலைச் சொன்னார். சூழல் காதல் தான், ஆனால் காலம் 1980. களம் திருநெல்வேலி. அன்று அவர் என்னிடம் சொன்ன விசயம் ரகசியமானது. இன்று எல்லாம் உலகம் அறிந்தது. ஏனெனில் அப்போது படப்பிடிப்பு நடந்திடாத சூழல். ஒரு பாடலாசிரிருக்குச் சொல்லப்படும் கதையை அவர் படம் வெளியாகும் வரை யாரிடமும் சொல்லக்கூடாது. அதேபோல் கொடுக்கப்படும் மெட்டும் இசை வெளியேறும்வரை பாதுகாக்கப்பட வேண்டும்.

அசுரனில் எனக்குக் கொடுக்கப்பட்ட சூழலுக்கு நான் எழுதிய பாடல்,

Paadal Enbathu Punaipeyar Webseries 28 Written by Lyricist Yegathasi தொடர் 28: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசிஆண்:
கத்தரிப் பூவழகி
கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம்
ஒன்னோட நெனப்பு
சொட்டாங்கல்லு ஆடயில
பிடிக்குது கிறுக்கு

பெண்:
வரப்பு மீசக்காரா
வத்தாத ஆசக்காரா
ஒன்ன நா கட்டிக்கிறேன்
ஊரு முன்னால – அட
வெக்கப்பட வேணா என்ன
பாரு கண்ணால

ஆண்:
மையால கண்ணெழுதி
என் வாலிபத்த மயக்குறியே

பெண்:
காத்தாடி போல நானும் – ஒன்ன
நிக்காம சுத்துறேனே

ஆண்:
கழுத போலத்தான்
அழக சொமக்காத
எனக்குத் தாயேண்டி
கொஞ்ச வேணும் நானும்

பெண்:
அருவா போல நீ
மொறப்பா நடக்குறிய
திருடா மொரடா
இருப்பேன் உன்னோடதான்

சரணம் – 2
ஆண்:
கரகாட்டம் ஆடுது நெஞ்சு – ஒன்ன
கண்டாலே தெருவுல நின்னு

பெண்:
நான் குளிக்கும் தாமிரபரணி
கண் தூங்காம வாங்குன வரம்நீ

ஆண்:
ஆலம் விழுதாட்டம்
அடடா தலமயிரு
தூளி ஆடிடத்தான்
தோது செஞ்சு தாடி

ஆண்:
இலவம் பஞ்சுல நீ
ஏத்துற விளக்கு திரி
பத்திக்கும் தித்திக்கும்
அணைச்சா நிக்காதுடா

இப்படியான ஒரு பாடலை எழுதுவதற்கு திருநெல்வேலி மாவட்ட  நாட்டுப்புறப் பாடல்களை வாசித்துவிட்டு அதே வாசத்துடன் எழுத நினைத்து சென்னைக்குள் நூல் தேடி அலைந்தேன். கடைசியாக திருநெல்வேலி நாட்டுப்புறவியல் ஆய்வில் பேர்போன பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் அவர்களின் வீட்டிற்கே சென்று சில நூல்களை அவரின் கைகளாலே வாங்கிக் கொண்டு வந்தேன்.

இந்தப் பாடலின் இதே மெட்டுக்கு நான் எழுதியிருந்த வேறு சில பல்லவிகளையும் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
நீங்கள் “கத்தரிப் பூவழகி” மெட்டில் பின் வரும் பல்லவிகளையும் பாடிப் பார்க்கலாம்.

பல்லவி: (1)
ஆண்:
ஒருதரம் தொட்டுக்கிறேன்
ஒன்னநா கட்டிக்கிறேன்
செல்லமே ஒன்னவிட
ஒண்ணும் நல்லாலே – நம்ம
ரெண்டுபேரும் ஓடிடுவோம்
போடு தில்லாலே

பெண்:
தொட்டுக்க வேணாமுங்க
தொணைக்கும் வேணாமுங்க
மொத்தமா அள்ளிக்கங்க
ஒன்னோட வாறேன் – என்ன
மொழம் போட்டு வச்சுக்கோங்க
முன்னால போறேன்

பல்லவி: (2)
ஆண்:

கொட்டடி சத்தத்துக்கும்
கொல செய்யும் அழகுக்கும்
ஒடம்புல தழும்பாச்சு
ஒன்னப் பாத்தது – நெனச்சா
ஒருவருசம் பெய்யும் மழ
ஒண்ணா ஊத்துது

பெண்:
மல்லுவேட்டி கட்டிவந்தா
மந்தையில திருவிழாதான்
மருகிறேன் ஒண்ணாச் சேர
செம்மறி ஆடா – மனுசா
தாலிஒண்ணு வாங்கிக்கிட்டு
சீக்கிரம் வாடா

கத்தரிப் பூவழகி பாடல் மாபெறும் வெற்றியைப் பெற்றுத்தந்தது. இதை நண்பர் வேல்முருகனும் தங்கை ராஜலட்சுமியும் பாடியது கூடுதல் மண்வாசனையை கொண்டு சேர்த்தது. இந்தப் படத்தில் பாடல்கள் எழுதியதற்காக நானும் நண்பர் யுகபாரதியும் பாண்டிச்சேரி தீண்டாமை முன்னணியினரால் பாராட்டப்பட்டோம்.

Paadal Enbathu Punaipeyar Webseries 28 Written by Lyricist Yegathasi தொடர் 28: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி

“கத்தரிப் பூவழகி கரையா பொட்டழகி”  இதன் இரண்டாவது வரியின் முதல் வார்த்தை “கரையா” , இது பாடகர் வேல்முருகனின் உச்சரிப்புப் பிழையின் காரணமாக மற்றவர்களுக்கு “கரையான்” என்று புரியப்பட்டது, ஆனால் இதையும் பாராட்டியவர்கள் ஏராளம். இதே போல் தான் “ஆடுகளம்” படத்தில் ஒத்துச் சொல்லால பாடலை ஒத்தக் கண்ணால என்று சொல்லி மேடையில் சிலர் அறிமுகம் செய்து வைப்பார்கள் என்னை. இப்படியான காரியங்கள் வெளியுலகில் எங்காவது நடந்தவண்ணம் இருந்து கொண்டேயிருக்கும்.

இதாவது பரவாயில்லை சில மியூசிக் சேனல்கள் என் பாடலுக்கு மற்றவர் பெயரையும் மற்றவர் பாடலுக்கு என் பெயரையும் போட்டுவிட்டு என்னையும் மக்களையும் குழப்புவது வாடிக்கையாகிவிட்டது. இன்னும் கொடுமை என்னவென்றால் எனது திரைப்படப் பாடல்களை வாங்கும் நிறுவனங்கள் என் பெயரை ஏழு விதமான ஸ்பெல்லிங் பயன்படுத்தி எனது ராயல்டிக்கு ஆப்பு வைக்கிறார்கள். ஆதார் கார்டுக்காக எடுக்கிற ஃபோட்டோவும் ஸ்மார்ட் கார்டில் அச்சடித்துள்ள ஸ்பெல்லிங்கும் போலத்தான் இங்கே பல மியூசிக் கம்ப்பெனிகள் டெக்னீஷியன்கள் பெயரை இஷ்டத்திற்குப் போட்டு விடுகிறார்கள்.

அசுரனில்  “எள்ளு வய பூக்கலையே” பாடல் நண்பர் யுகபாரதி எழுதியிருப்பார். உண்மையில் இந்தப் பாடல் என் ஜார்னர். எனது தனி இசைப் பாடல்கள் பெரும்பாலும் இப்படி மக்களின் வாழ்வியல் பிரச்சனை குறித்தது தான். இயக்குநர் வெற்றிமாறனைப் பொருத்தவரை நான் ஒரு காதல் துள்ளல் பாட்டுக்காரன். அவரின் படங்களில் சோகப் பாடல்களும் எழுத வேண்டும் என்பது என் அவா.

இயக்குநர் சீனு ராமசாமி அண்ணன், அவரது இரண்டாவது படமான “தென்மேற்கு பருவக்காற்று” படத்திற்கு வசனம் எழுத என்னை அழைத்து அவரது திரைக்கதையைப் படிக்கக் கொடுத்தார். அவரின் அலுவலகத்திலேயே உட்கார்ந்து வாசித்தேன். அவ்வளவு பிடித்திருந்தது. அவரது கதையில் என் வம்சாவழியின் வாழ்விருந்தது. அந்த கதை நடக்கும் காலம் என் பால்யம் பார்தத்து. ரசித்து ரசித்து வசனம் எழுத நினைத்திருந்த அன்றைய நாளின் இரவில் தான் நான் என் முதல் படத்தை இயக்க ஒப்பந்தமானேன். நான் இயக்குநராகப் பரிணமித்தேன்.

ஆனால் பிற்காலத்தில் மூன்று தேசிய விருதுகளைப் பெற்ற ஒரு படத்தின் வசனகர்த்தா பணியைத் தவறவிட்டேன். ஒரு வேளை அந்தப் படத்திற்கு நான் வசனம் எழுதியிருந்தால் இன்னொரு தேசிய விருது கிடைக்கத் தான் செய்திருக்கும். அப்படியெனில் “தென்மேற்கு பருவக்காற்று” படத்திற்கு மொத்தம் நான்காகியிருக்கும், அதில் ஏகாதசிக்கு ஒன்று என்று தானே கணக்குப் பார்க்குறீர்கள், இல்லை ஏகாதசிக்கு இரண்டு கிடைத்திருக்கும். இது தனிக்கதை.

அதே படத்தில் வசனம் மட்டும் இல்லை எனது “ஆத்தா ஓஞ்சேலை” பாடலை பயன்படுத்துவதாகவும் இருந்தது. அப்படி பயன்படுத்தப் பட்டிருந்தால் நிச்சயமாக இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற வைரமுத்து அவர்களின் “கள்ளிக்காட்டில் பொறந்த தாயே” வுக்குப் பதிலாக “ஆத்தா ஓஞ்சேலை” பாடல் எனக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்திருக்கும். இதுவும் நடந்திருந்தால் நான்கில் எனக்கு இரண்டு என்கிற கணக்கு சரிதானே. விருதுக்கெல்லாம் எனக்குக் குறையில்லை, ஏனெனில் ஆத்தா ஓஞ்சேலை ஒவ்வொரு நாளும் யாரோ ஒரு தாயால் ஒரு மகனால் நிசமான அன்போடு நான் பாராட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறேன்.

சஸ்பென்ஸ் சிறுகதை – நிரஞ்சனன்

சஸ்பென்ஸ் சிறுகதை – நிரஞ்சனன்




Sir, வணக்கம்… ஷண்முகமா? (ஒரு area பெயர் சொல்லி, அந்த காவல் நிலைய SI பேசுறேன்)

ஆமா சார், என்னாச்சு sir?

உங்க பையன் பேரு, திவாகரா?

ஆமா sir…

ஸ்டேஷன் வாங்க, விளக்கம பேசிக்கொள்ளலாம்….. ஷண்முகம், அய்யோ என்ன செய்தான் தெரியல, பொண்ணு வீட்ல தெரிஞ்சா என்ன ஆவது…. என எண்ணி ஸ்டேஷன் விரைகிறார்….

இதே போல், இன்னொரு area SI, உங்க பொண்ணு சுபாஇங்க ஸ்டேஷன்ல இருக்காங்க கொஞ்சம் வாங்க என சீனிவாசனை அழைக்க, கல்யாண முடிய போற பொண்ணு, மாப்பிள்ளை வீட்ல தெரிஞ்சா என்ன ஆக போகுதோ, பதற்றத்தில் காவல் நிலையம் போக….

அங்க போன இரு பெற்றோருக்கும் புது தகவல் காத்து இருந்தது, அதாவது மாவட்ட SP அலுவலகம் போங்க என…..இருவருக்கும் ஒரே மாவட்டம்.

இருவரின் பெற்றோரும் ஒன்று போல் SP அலுவலகம் போக, நுழைய, யாருக்கு தெரியக் கூடாது என நினைத்தோமோ, அவர்கள் முன்னாடியே நிறுத்தி விட்டாயே ஆண்டவா என எண்ணிக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்டு நாணப் பட்டனர், விவரம் தெரியாமல்.

திவாகரும் சுபாவும் ஒன்று போல் இருந்ததால், ஒரு மகிழ்ச்சி, ஆனால் ஏன் இருவரும் இங்கே ஏன் இருக்கிறார்கள்? என சந்தேக நோக்கில் காண, விவரத்தை விளக்கினார் SP.

அதாவது, இது புது கேஸ் sir எங்களுக்கு…. நீங்க இவங்க கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க போய் இருக்கீங்க, இவங்கள தனியா… விட்டு விட்டு…. சரியா….

ஆமா sir….(ஒன்று போல்)

இவங்க, ஒருவரை ஒருவர் சந்திக்க அவங்க அவங்க வீடுகளுக்கு போய் இருக்காங்க சொல்லிக் கொள்ளாமல், மாற்று சாவி எங்க வைத்து இருப்பீங்க என்பது முதல் தெரிந்து கொண்டு இருப்பாங்க போல…..(முன்னாடியே இருவரும் டிஸ்கஸ் பண்ணி இருப்பாங்க போல)

வீட்டுக்கு போனதும் பூட்டி இருந்ததால் , திரும்பி வந்து இருக்கலாம் ஆனால் வரல…. மாற்று சாவி ஞாபகம் வர அதை தேடி எடுத்து உள்ள போய் இருந்து இருக்காங்க…..

ஆள் இல்லாத வீட்டில் சத்தம் கேட்குது, என காவல் துறைக்கு தகவல் வர அந்த அந்த area காவல் ஆய்வாளர்களை முடுக்கி, அங்க உள்ள ஸ்டேஷன்ல வைச்சி விசாரிச்சா…. அவங்க சொன்ன விசயம் அப்பப்பா….. அதான் இங்க கூட்டிட்டு வர சொன்னேன், உங்களையும் வர சொன்னேன்…..

உண்மையில் உங்களை பாராட்டனும், நல்லா வளர்த்து இருக்கீங்க…. இவங்க ஒரு நல்ல முன் உதாரணமாக இருப்பாங்க… எனக்கு உண்மையில் செம சந்தோசம்….. Keep it up…. ஒரு வேண்டுகோள், மாற்று சாவியை வெளியில் வைக்காதீங்க, உங்க பிள்ளைகள் தான், வெளியில் உள்ள ஆளுகளுக்கு தெரிஞ்சி, விபரீதம் நடந்து விட்டால். அதில் கொஞ்சம் கவனம்.

உங்க பிள்ளைகளை கூட்டிட்டு போங்க….
Congratulations guys, Happy anniversary.

Thank you sir.

குறிப்பு:- ஏன் இருவரும் ஒரே நேரத்தில் அவன் வீட்டுக்கு இவளும், இவள் வீட்டுக்கு அவளும் போனார்கள் என்பது தான் சஸ்பென்ஸ்.

எங்களுக்கும் காலம் வரும் கவிதை – வெ.நரேஷ்

எங்களுக்கும் காலம் வரும் கவிதை – வெ.நரேஷ்




எங்களுக்கும் காலம் வரும்
******************************
ஊரோரம் ஒதுக்குகையில
உஞ்சோறு வேவுதடா
ஒவ்வொரு ராத்திரியும்
எம்புள்ள வாடுதடா

எத்தன நாட்களுக்கு
ராப்பகலா முழிச்சிருக்க
எங்கெங்கே அலையுரேனே
எங்குடும்பம் விழுச்சிருக்க

ஊர் வெளியே காவகாக்கும் கருப்பசாமி கேக்கலையே
ஊர் நாடி வந்தோம் எங்கள வீட்டுக்குள்ள சேக்கலையே

சாலையோரம் போகும் போது
சாதி சாயம் பூசுறியே
சாமிகிட்ட போயிச்சொன்னா  

சாமிகூட  கேக்கலையே

பூர்வ குடி மக்க நாங்க
புறந்தள்ளிப்  போறோமையா
பூவுலகில் வாழ்வதற்கு
போறாத காலமையா

எங்களுக்கும் காலம் வரும்
காத்திருந்து பாருமையா

காலம் மாறும்போது

கவலையெல்லாம் தீருமையா

– வெ.நரேஷ்

இசை வாழ்க்கை 68 : பறவைக்கு சிறகு இசையானால் – எஸ் வி வேணுகோபாலன்

இசை வாழ்க்கை 68 : பறவைக்கு சிறகு இசையானால் – எஸ் வி வேணுகோபாலன்



பறவைக்கு சிறகு இசையானால்….
எஸ் வி வேணுகோபாலன்

மார்ச் 8 பெண்கள் தினத்தன்று ஆந்திர பிரதேசத்தில் விசாகப் பட்டினத்தில் அந்தச் சிறப்பு நிகழ்வு நடந்தது, அண்மையில் தமிழகத்திலும் அது சிறப்பாக நடந்துள்ளது. தேன்குரல் இசையரசி பி.சுசீலா அவர்களுக்காக இந்திய அஞ்சல் துறை சிறப்பு உறை வெளியிட்டது. தொழில் நுட்ப உதவியோடு பதிப்பிக்கப்பட்ட
க்யூ ஆர் பிம்பத்தில் நான்கு மொழிகளில் அவரது சிறப்பான பாடல்களையும் கொண்டு வந்திருந்தனர்.Music Life 68: Bird Wing Music - SV Venugopalan இசை வாழ்க்கை 68 : பறவைக்கு சிறகு இசையானால் - எஸ் வி வேணுகோபாலன்

சுந்தரத் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் சுசீலா அவர்களுக்குத்தான், திரைப்படப் பின்னணி பாடகிகளுக்கான முதல் தேசிய விருது வழங்கப்பட்டது – உயர்ந்த மனிதன் படத்தில் இடம் பெற்ற நாளை இந்த…..பாடலுக்காக ! அதன் பின்னரும் வெவ்வேறு ஆண்டுகளில் அந்த விருது பெற்றவர் அவர். பல்லாயிரக் கணக்கான தேனிசைப் பாடல்கள் பல்வேறு மொழிகளில் ரசிகர்களுக்கு வழங்கியிருக்கும் அசாத்தியக் குரல் அவரது! 2016ம் ஆண்டில் கின்னஸ் விருது, 12 மொழிகளில் 17,695 பாடல்கள் இசைத்தவர் என்ற குறிப்போடு வழங்கப்பட்டிருக்கிறது. ஐம்பதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி இருப்பவர் என்ற குறிப்புகளும் உண்டு.

சுசீலா அவர்களது குரலினிமை மட்டுமல்ல, பாடலின் கருப்பொருளை, உணர்வுகளை அப்படியே கடத்துவதில் அவருக்கே உரித்தான தனித்துவம் அபாரமானது.

நெஞ்சில் ஓர் ஆலயத்தின், ‘சொன்னது நீ தானா…’ பாடலின் பல்லவியில், ‘சொல் சொல் சொல் என்னுயிரே’ என்ற இடமும், ‘சம்மதம் தானா?’ என்ற கேள்வியின் நீட்சியில் கேட்பவர் மனத்தைப் பிழிந்தெடுக்கும் உருக்கமும், ‘ஏன் ஏன் ஏன் என்னுயிரே’ என்று தணிந்து வந்து மேலும் சொந்தம் கொண்டாடும் இடமும் விவரிப்புக்கு அப்பாற்பட்டது.

நெஞ்சிருக்கும் வரை படத்தின் ‘எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு’ மட்டும் என்னவாம், ‘அதைத் தானே கொண்டு வந்தேன்’ என்பதில் அந்தத் ‘தானே’வில் பெருகும் துயரம் அளப்பரியது. அந்தப் பாடல் முழுவதுமே, ஒரு சீரான வேக கதியில் அடுத்தடுத்த துயர வீதிகளில் நடையாய் நடக்கும் பெண்ணின் வேதனையை பிரதியெடுக்கும் குரல் அது.

வாழ்க்கைப் படகு படத்தின் ‘உன்னைத்தான் நானறிவேன் மன்னவரை யார் அறிவார்’ பாடல் சமதளத்தில் தொடங்கும், ‘மன்னவரை’ என்ற இடத்தில் மெல்ல சங்கதிகள் கொஞ்சும், ஆனால், அடுத்த அடியில், ‘என் உள்ளம் என்னும் மாளிகையில் உன்னையன்றி யார் வருவார்’ என்கிற போது அடுத்த தளத்திற்குக் கொண்டுபோவார் ரசிகர் நெஞ்சங்களை! ‘யாரிடத்தில் கேட்டு வந்தோம் யார் சொல்லிக் காதல் கொண்டோம்..’ என்று தொடங்கும் சரணத்தில் சொற்களை அவர் கொண்டாடி அழகுபடுத்தல் ஒரு விதமெனில், ‘காதலித்தல் பாவம் என்றால் கண்களும் பாவமன்றோ கண்களே பாவமென்றால் பெண்மையே பாவமன்றோ’ என்ற சரணம் முற்றிலும் வேறொரு தளத்தில் கொண்டு நிறுத்தி, ‘பெண்மையே பாவமென்றால்… மன்னவனின் தாய் யாரோ’ என்பதில் உச்சம் தொடும்!

வசந்த மாளிகை திரைப்படத்தில், சிவாஜி கணேசன் பாத்திரத்திற்கு உருவகமாக வீணையை முன்னிறுத்தி அசாத்திய குறியீட்டில் கண்ணதாசன் படைத்த ‘கலைமகள் கைப்பொருளே’ பாடலில், கே.வி மகாதேவன் அவர்களது கற்பனை மிக்க இசைக்கோவையில் பி.சுசீலாவின் முத்திரைகள் பல்லவியில் தொடங்கி சரணங்கள் வரை நிரம்பித் ததும்பும். ‘விலையில்லா மாளிகையில்’ என்ற அடியில் அவர் கொடுக்கும் பாவங்கள் பாடல் நெடுகத் திரும்பத் திரும்ப ஒலிக்கும் இடங்களில் இதயத்தை நனைக்கும்.

தனிக்குரலிலும், வேறு பெண் அல்லது ஆண் குரலோடு இணைந்தும் இசைத்த எந்தப் பாடலானாலும், சுசீலாவின் இசைக்கான அர்ப்பணிப்பு அதில் மின்னுவதைக் காணமுடியும். பாடலில் சொல்லும் சங்கதியும், பாடலுக்குள் அவர் எடுக்கும் சங்கதிகளும் ஒவ்வொரு பாடலிலும் கேட்டுக் கொண்டே இருக்க வைக்கும்.

பி.சுசீலா எல்.ஆர் ஈஸ்வரி இணை குரலில் ஒலிக்கும் பாடல்கள் காலத்தால் அழியாதவை.

பாத காணிக்கையின் ‘உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே’ பாடலில் அப்பப்பா எத்தனை எத்தனை சங்கதிகள்…. சோகமான ஹம்மிங் கொடுத்துப் பல்லவியை எடுப்பார் சுசீலா. அவரது பல்லவி வரிகளில் மாற்றங்களோடு கொண்டாட்டமான ஹம்மிங்கில் தொடங்குவார் ஈஸ்வரி. கண்ணதாசனின் மிக எளிமையான சொற்களில் ஒலிக்கும் ஒரே காதலுக்கான இரு வேறு உள்ளங்களின் எதிரெதிர் மனநிலையை ஒரே மெட்டில் வார்த்த மெல்லிசை மன்னர்களின் இசை எண்ணியெண்ணி வியக்க வைப்பது.

‘கண் மயங்கிப் பயணம் போகும் உனது தோணி கடலிலே’ என்ற ஈஸ்வரியின் வீச்சுக்கு, ‘காலம் பார்த்து வந்துசேரும் எனது தோணி கரையிலே’ என்ற சுசீலாவின் பதில் வீச்சு அத்தனை நெருக்கமாக உணர்வில் கலக்க வைக்கும். ‘காற்றினாலும் மழையினாலும் எந்த சொந்தம் மாறுமா?’ என்ற கேள்வி அபாரமாக ஒலிக்கும் ஈஸ்வரியின் கேள்விக்கு, ‘காயுமா …….. கனியுமா …………. கையில் வந்து சேருமா, கையில் வந்து சேருமா’ என ஒரு பெருஞ்சோகத்தை அந்த அடியின் ஒவ்வொரு சொல்லிலும் இழை இழையாக நெய்து அல்லவா கொடுத்திருப்பார் சுசீலா!
இரண்டாம் சரணத்திலும் தொடரும் உரையாடலில் எத்தனையெத்தனை உணர்வுகள், உணர்வுகளின் சொற்களுக்கான சங்கதிகள்! பாடலுக்கேற்ற பாவங்களை அற்புதமாக வெளிப்படுத்தும் சாவித்திரியின் உடல்மொழியும், கண்களும், விஜயகுமாரியின் நடிப்பும் பாடல் ஒலிக்கும்போதே மனக்கண்களில் தோன்றிவிடும்.

பி.சுசீலா – எல்.ஆர் ஈஸ்வரி இணை குரலில் ஒலிக்கும் ‘மலருக்குத் தென்றல் பகையானால்…’ பாடல், ஆலங்குடி சோமு எழுதியது.

‘வானகமே வையகமே வளர்ந்து வரும் தாயினமே ஆணுலக மேடையிலே ஆசை நடை போடாதே’ என்ற தொகையறா, அந்தப் பாடலுக்கான பி சுசீலாவின் குரல் வீச்சை வெளிப்படுத்தி விடும். அது மட்டுமா, பல்லவியை எடுக்கையில், ‘மலருக்குத் தென்றல்’ என்ற சொற்களில் தெறிக்கும் உணர்வுகள், தென்றல் என்ற சொல்லின் அந்த ‘ல்’ எழுத்துக்குக் கிடைக்கும் அசாத்திய ஒலி நீட்சி …ஆஹா…ஆஹா.

மெல்லிசை மன்னர்கள் வயலின்களின் வழி சேர்க்கும் சோகச் சுவையும், புல்லாங்குழல் வழி கசியவிடும் இதமான வருடல்களும், பதமாக இணையும் தாளக்கட்டுகளுமாக அந்தப் பாடல் ஒரு மகத்தான படைப்பு.

https://youtu.be/IHKPgbPUNOo

‘மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு’ என்று பல்லவியின் முதல் பகுதியை சுசீலா இசைத்ததும், அந்த ஏக்கக் குரலை வயலின்கள் தானா…தானா. தானா….தானா..என்ற இழைப்பில் பெற்றுக் கொள்வதைப் பின்னர் கடைசி சரணத்தின் நிறைவிலும் பயன்படுத்தி இருப்பார்கள்.

‘நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழியேது’ என்பது துயரத்தை மேலும் கூட்டும் வண்ணம் குழைத்திருப்பார் சுசீலா. ‘பகையானால்’ என்ற சொல் பாடலில் திரும்பத் திரும்ப இடம் பெறும், ஆனால், ஒவ்வொரு முறையும் ஒவ்வோர் அழகில் பொலிவு பெறும். எல் ஆர் ஈஸ்வரியின் குரலில் ஒயிலாக ஒலிக்கும்.

பல்லவியை அடுத்து முதல் சரணத்தை நோக்கிய திசையில் துயர உளவியலை வலுவாக முன்னெடுக்கும் வயலின் இசையும், அதை மெல்ல மெல்லத் தணித்து இழைக்கும் குழலோசையும் நிரப்ப, ‘பறவைக்குச் சிறகு பகையானால் …’ என்று தொடங்கும் முதல் சரணம் எல் ஆர் ஈஸ்வரி உருக்கமாக எடுக்கிறார். உருக்கமாக நிறைக்கிறார் உணர்வுகளை! வல்லின உச்சரிப்புகள் (பறவை, சிறகு) ஈஸ்வரியின் தனித்துவம் எப்போதும்.

அடுத்த சரணத்தை மென்மையான இசைக்கருவிகளின் துடிப்பிலேயே சிக்கலான மனக்குழப்பங்களை வெளிப்படுத்தும் சோகம் இழையோடச் செய்கின்றனர் மெல்லிசை மன்னர்கள். ‘படகுக்குத் துடுப்பு பகையானால்…’ என்று சுசீலா எடுக்கும் சரணத்தில், ‘அங்கு பாய்மரத்தாலே உதவியுண்டு’ என்பதில், ‘பாய்மரத்தில்’ பாய்ந்து இறங்கும் சங்கதிகள்…. ‘கடலுக்கு நீரே பகையானால்’ என்பதில் அந்த ‘நீரே’ என்பதில் எத்தனை நகாசு வேலைகள் செய்திருப்பார்! ‘ அங்கு கதை சொல்லும் அலைகளுக்கிடமேது’ என்ற அடியில், அலைகளைப் போல் நெளிந்துவரும் இசையமைப்பாளர்கள் கற்பனைக்கு உயிர் கொடுத்திருப்பார்.

மூன்றாம் சரணத்தில், ‘கண்ணுக்குப் பார்வை பகையானால் அதைக் கருத்தால் உணர்த்திட வழியுண்டு’ என்ற அடியை ஈஸ்வரி உள்ளத்திற்கு நெருக்கமாக எடுத்து வைக்க, ‘பெண்ணுக்குத் துணைவன் பகையானால் அந்தப் பேதையின் வாழ்வில் ஒளியேது’ என்று அதை அசாத்திய சோகத்தை நிரப்பி நிறைவு செய்கிறார் சுசீலா.

பாடலின் இறுதிப்பகுதியில் பல்லவியை இரண்டு பாடகியரும் ஒருசேர இசைக்க, பிரியாத சோகத்திற்கு வயலின் இழைப்பில் ஒரு முற்றுப் புள்ளி வைத்திருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள். சரோஜாதேவியின் கண்ணீர் பளபளக்கும் முகமும், ரத்னாவின் ஏக்கம் ததும்பும் விழிகளும் சொல்லும் கதைகளினூடே எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் இந்தப் பாடலை மிகவும் அமர்க்களமாகக் காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

குவிகம் இலக்கிய பத்திரிகையின் மே மின்னிதழில் கமலா முரளி என்பவர் ‘சித்திரை’ என்ற சொல்லை வைத்து எழுதப்பட்டிருக்கும் பாடல்கள் சிலவற்றைத் தொட்டு ஒரு கட்டுரை எழுதி இருப்பதில், முதல் பாடலைப் பார்த்ததுமே அத்தனை கொண்டாட்டமாக இருந்தது.

‘சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்….ம்….ம்…’ என்ற பாடல் அது. ரயிலின் வேகத்திற்கு மெல்லிசை மன்னர் இசையமைத்திருந்த பாடலின் பல்லவியில் ரயில் எடுக்கும் வேகம் அபாரம். சந்தங்கள் அதற்கேற்ப அதிரும்.

அக்காலத்திய மக்களுக்கு ரயில் என்றால் கரி எஞ்சின் தான். அதன் கம்பீர உருவமும், குரலோசையும், அதன் ஓட்டுநர் துணி சுற்றிய தலையோடு எட்டியெட்டிப் பார்ப்பதும், சங்கிலியைப் பற்றி இழுக்கையில் குப்பென்று பெருகும் புகையும், கூவென்ற இசையும் மறக்க முடியாதது. ரயில் பயணங்களை விரும்பாத பிள்ளைகள் உண்டா…

பெரிய தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் ஏற்கெனவே ரயிலோசையை இசையில் கொணர்ந்திருந்தவர்தான் என்றாலும், மெல்லிசை மன்னர் இந்தப் பாடலில் இசைப்படுத்திய ரயிலோசை அபாரம். கல்லூரிக் காலத்தில், சிவகாமியின் செல்வன் படத்தில் வரும் உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று பாடலை, உப்பு காகிதத்தைத் தேய்த்து இசையெழுப்பிப் பாடுவார் நண்பர் ஒருவர். சித்திரை மாதம் பாடலுக்கு உண்மையில் உப்புக் காகிதம், குழலோசை, டிரம்ஸ் இசைக்கருவி வைத்துத் தான் இந்தக் கலக்கு கலக்கி இருப்பார் எம் எஸ் வி என்பதை, எம் எஸ் வி டைம்ஸ் இணையதளத்தில் ராம்கி எழுதி இருப்பார்.

இசையமைப்பாளர் எந்த அளவுக்கு உழைப்பைச் செலுத்தினாரோ அதை மிகுந்த பொறுப்புணர்வோடு திரையில் கொணர்ந்திருப்பார்கள். கரி எஞ்சினின் அழகு, அதன் சக்கரங்களுக்கிடையே இருக்கும் நெருக்கமான உறவு. இளவயதில் ஒரு கையை முகத்திற்குக் குறுக்கே வைத்து கூ என்று கூவலிட்டு அப்புறம் இரண்டு கைகளையும் இணையாக நிறுத்திச் சக்கரங்கள் போல் இயக்கியபடி வீதியில் ரயிலாகவே ஓடாத இளமைப்பருவம் உண்டா…

இசைக்கேற்பச் சக்கரங்கள் வேகமெடுக்கவும், பி.சுசீலா தொடங்குகிறார் பல்லவியை, ‘சித்திரை மாதம் பவுர்ணமி நேரம், முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்’ என்று தத்தகாரத்திற்கு ஏற்ப வேக சந்தங்கள்….ஆனால், போகும் என்று நிறுத்தினால் எப்படி ரயில் போகும்? போகும் என்று முடிக்காமல், அந்த ‘ம்’ எழுத்தில் ஒரு நீட்சியாக சுசீலாவை ஹம்மிங் எடுக்க வைக்கிறார் எம் எஸ் வி! உடனே ரயிலோடும் இசையைக் கலக்கிறார் எம் எஸ் வி. அப்புறம், ‘தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்….’ என்ற வரியில் காதலை எடுத்துவைக்கிறார் சுசீலா. ‘தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம்…’ என்று தொடரும் அடியில் மேலும் சுகம் பரவ வைக்கிறார்.

அடுத்த அடியில், ரயிலின் கூவுதலுக்கேற்ப சங்கதியை மெல்லிசை மன்னர் வைக்கிறார், சொர்க்கமோ என்ற சொல்லில், அந்த ‘மோ’வை என்னமாக எடுக்கிறார் சுசீலா! ‘நீயும், நானும், போகுமிடம்….’ என்ற பல்லவியின் கடைசி அடியில் ஒவ்வொரு சொல்லுக்கும் எத்தனை எத்தனை சங்கதிகள்…அப்புறமென்ன உப்புக் காகித உரசலில் பறக்கும் ரயில். அதையடுத்துப் புல்லாங்குழல் எடுத்துக் கூவி வெளியே பரப்புகிறது காதலை !

சரணங்கள் இரண்டுமே எத்தனை அம்சமான ரயில் பயணக் கொண்டாட்டத்தை மனத்திற்கு மாற்றித் தருகின்றன! ‘அந்நாளிலே நீ கண்ட கனவு’ என்று புறப்படும் சுசீலா ரயில், ‘என் நெஞ்சிலே’ என்ற இடத்தில் அந்த ‘லே’வில் இழைக்கும் சந்தம்…..அப்பப்பா!

‘மின்னல் இளமேனி ஆசை தீர மெல்ல மெல்லத் தேறாதோ, பொன்னழகுக் கன்னம் காதல் தேவன் பூஜையில் மலராதோ’ என்ற அடியின் சொற்கள் ஒவ்வொன்றும் ஒரு பூக்கூடை போல் அத்தனை சங்கதிகளால் மணக்கும்! ‘சேராதோ’, ‘மலராதோ’ என்ற இடங்களில் எத்தனை கிறக்கம்… ‘பூஜையில்’ என்பதில் எத்தனை அலங்காரச் செதுக்கல்!

பல்லவியைத் தொடுகிறார் சுசீலா மீண்டும், ‘தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்’ என்றதும் மேலும் கரியெடுத்துப் போட்ட வேகம் எடுக்கும் ரயிலின் கூவலில் பிறக்கும் குழலிசை சுவாரசியமான ஆலாபனை செய்து முடிக்க, சுசீலா, ‘பூமாலைகள்…’ என்று தொடங்கும் சரணத்திலும் ஒவ்வொரு சொல்லுக்கும் அற்புதமான சங்கதிகள் போட்டு நீட்டி ஒலித்து ரசமான அனுபவத்தில் நிறைவு செய்கிறார்.

‘பங்கு கொள்ள வந்தேன் கண்ணா உந்தன் சங்கம் வரக் கூடாதோ’ என்ற இடம் சுவையான சுவையாக ஒலிக்கும். அதிலும், ‘கண்ணா’, ‘கூடாதோ’ என்பதில் எத்தனை எத்தனை வேலைப்பாடுகள்! ஒரு முறை கேட்டால், திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருக்க வைக்கும் பாடல்களில் ஒன்று இது. நடிகர் திலகத்தின் காதல் ததும்பும் பார்வையும், குழலிசைக்கான நடிப்பும், புன்னகை அரசியின் பாவங்களும் பாடலை வசப்படுத்தும்.

மே 22, 2022 அன்று மாலை வள்ளுவர் மன்றத்தின் இணையவழி நிகழ்ச்சியில், ‘இன்பத்திற்கும் இசை என்று பேர்’ என்ற தலைப்பில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நரம்பியல் சிறப்பு மருத்துவரும், தமிழ் பற்றாளருமான சுப.திருப்பதி, இராமநாதன், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பாரி ஆகியோர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியின் நிறைவில், திருப்பதி குறிப்பிட்டார், ‘எல்லோரும் சமூகத்திற்கு ஏதோ ஒரு வகையில் நல்ல விஷயங்களைக் கையளித்துக் கொண்டிருக்கிறோம், அது நாம் செய்யும் நன்றிக்கடன்’ என்று!

எண்ணற்ற ரசிகர்களுக்கு அவர்கள் வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள் ஒவ்வொன்றின் போதும் ஒலிக்கும் இசை பின்னெப்போது கேட்கும்போதும் நினைவலைகளைக் கிளர்த்தும் சிலிர்ப்பு மேலிட வைக்கிறது. அதற்குக் காரணமாக அமையும் இசைக்கலைஞர்களில், பி.சுசீலா அவர்களது இசை மகத்தானது. அஞ்சல் துறை அவருக்கு வழங்கியுள்ள பெருமைக்குரிய சிறப்பு பாராட்டுக்குரியது.

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com

குடும்பம் கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்

குடும்பம் கவிதை – சிரஞ்சீவி இராஜமோகன்




அழும் குழந்தைக்காக மனைவியிடம்
பேச்சுக்கு அடி வாங்கி
வெறுமனே கண்ணை கசக்கி அழும்
குடும்ப ஆண்களை விட
அழகான கவிதை ஒன்று சொல்லுங்களேன் கேட்போம்…..!

சிரஞ்சீவி இராஜமோகன்
கும்பகோணம்
9789604577
7708002140