மருத்துவத்திற்கான இந்த ஆண்டு நோபல் பரிசானது காட்டலின் காரிக்கோ என்ற 68 வயது பெண்மணிக்கும், டிரூ வீஸ்மேன் என்ற 63 வயது மருத்துவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. முதலாமவர் ஹங்கேரியைச் சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது அமெரிக்கர். இரண்டாமவரும் அமெரிக்கரே. இருவரும் எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளுக்கான அடிப்படைக் கோட்பாடுகளை நிறுவியவர்கள்.
மனிதர்களுக்கு வைரஸ்களுடன் அறிமுகம்:
விலங்குகளை பழக்கப்படுத்தி வீட்டு வளர்ப்பு விலங்குகளாக மாற்றத் துவங்கிய தருணத்திலிருந்து விலங்குகளிலிருந்து பரவும் வைரஸ் தொற்று நோய்களை மானுடம் சந்தித்து வருகிறது. பல லட்சம் பேரை பலி கொண்ட வைரஸ்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது நீண்ட காலத்திற்கு மானுடத்தின் சவாலாக இருந்தது, தடுப்பூசிக்கான அடிப்படைக் கோட்பாட்டை வரையறுக்குமுன் மனித உடலின் நோயெதிர்ப்பமைப்பை பற்றிய புரிதல் அவசியம். வைரஸ்கள் எவ்வாறு நோய்எதிர்ப்பமைப்பை மீறி ஒரு உடலில் தொடர்ந்து பிழைக்கின்றன என்று ஆராச்சியாளர்கள் ஆராய தொடங்கினர். நோயெதிர்ப்பமைப்பு சில வைரஸ்கள் விஷயத்தில் எப்படித் தோல்வியடைகிறது என்பதையும், அதனைத் தவிர்ப்பது எப்படி என்பதையும் ஆராயத் துவங்கினர். வைரஸ்களை எதிர்த்துப் போராடும் ஆயுதத்தை தயாரிக்கும் ஆற்றல் நோயெதிர்ப்பமைப்பில் உள்ளது என்பதை கண்டறிந்தனர். எனினும் உள்ளே நுழைந்த வைரஸை கண்டறிந்து அதன் தன்மைக்கேற்றாற்போல் ஆயுதம் தயாரித்து வைரஸை எதிர்த்துப் போராடுவதற்குள் வைரஸ்களின் எண்ணிக்கைப் பன்மடங்கு பெருகினால் உயிரிழப்பை தவிர்க்க முடியாது. எனவே வைரஸ் நுழையும் முன்பே அதை எதிர்க்கும் ஆயுதம் உடலில் இருந்தால் நோய் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்று கண்டறிந்தனர். இதற்காக கையாண்ட உபாயமே வைரஸின் வீரியத்தைக் குறைத்து உடலுக்குள் செலுத்தி வைரஸ் தாக்கும் முன்பே எதிர்ப்பாயுதத்தை தயாரிப்பது.
இந்த முயற்சி 1500 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. 15ம் நூற்றாண்டில் பெரியம்மைத் தடுப்பிற்கான முயற்சி பெருமளவில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. எனினும் பெரிய வெற்றி இல்லை. அதுவரை மைக்ரோஸ்கோப் கிடையாது. வைரஸ் என்பது ஒரு அனுமானமே, யாரும் வெறுங்கண்ணால் பார்த்ததில்லை. 17ம் நூற்றாண்டின் மையப்பகுதியில்தான் அன்டோனி வான் ல்யூவென்ஹோக் என்ற டச்சுக்கார லினன் துணி வியாபாரி, துணியின் தரத்தை அறிந்துகொள்ள லென்ஸகளை அடுக்கி ஒரு கருவியை உருவாக்கினார். இதுவே பிற்காலத்தில மைக்ரோஸ்கோப்பாக பரிணமித்தது. மைக்ரோஸ்கோப்களை வைத்து கிருமி நுண்ணியிர்களை பார்க்க முடிந்தது. ஆனால் வைரஸ்களை பார்க்கமுடியாது. மைக்ரோஸ்கோப்கள் மேம்படுத்தப்பட்டு அது எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பாக பரிணமித்து. இது இன்னும் நுண்ணிய பொருட்களை பார்க்க உதவியது. வைரஸ்களை எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பால் பார்க்க முடியும்.
1774ல் பெஞ்சமின் ஜெஸ்ட்டி பெரியம்மை நோய் பசுமாட்டிடம் இருந்து மனிதனுக்கு தாவிய பொவைன் வைரஸ் என்று கண்டறிந்தார். ஆக வைரஸ் அகப்பட்டுவிட்டது. 1796ல் ஆங்கிலேய மருத்துவர் எட்வர்ட் ஜென்னர் பசு அம்மை தொற்றுள்ள ஒரு பசுவளர்க்கும் பெண்ணிடமிருந்து வைரஸைப் பிரித்தெடுத்தார், அதை பலவீனப்படுத்தி ஒரு 8 வயது சிறுவனுக்கு செலுத்தியபின் அச்சிறுவனுக்கு பெரியம்மை தொற்று ஏற்படுவதை தடுக்க முடிகிறது என்பதைக் கண்டறிந்தார். இது தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ஏற்பட்ட ஒரு புரட்சிகர முன்னேற்றம் ஆகும்.
தடுப்பூசிகளுக்கான வேட்டை:
இதனைத் தொடர்ந்து 1885ல் லூயி பாஸ்டர் ராபிஸ் நோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்தார். 1894ல் அன்னா வெஸ்ஸல்ஸ் வில்லியம் என்ற மருத்துவர் டிப்தீரியா என்ற நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்தார். 1918-1920 மானுடத்துக்கு பெருஞ்சவாலாக விளங்கிய ஆண்டுகளாகும். இந்த ஆண்டுகளில் ஸ்பானிஸ் ஃபுளு என்ற நோய் பெருமளவில் பரவி கிட்டத்தட்ட 5 கோடி பேரை மரணத்திற்கு இட்டுச் சென்றது. உடனடியாக தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும் என்ற நெருக்கடி மானுடத்திற்கு இருந்தது. இரண்டு ஆண்டுகளில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனை பரிசோதித்து இறுதி முடிவெடுக்க 1945 வரை காத்திருக்க வேண்டியதிருந்தது.
இதனைத் தொடர்ந்து போலியோ, தட்டம்மை, மஞ்சள் காய்ச்சல் என்று ஒவ்வொரு நோய்களுக்கும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மஞ்சள் காய்ச்சலுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்ததற்காக மாக்ஸ் தைலருக்கு 1951ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் கண்டுபிடித்தது வைரஸ்களை அறிவதில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தியதென்றால், வைரஸ்களை பிரித்தெடுத்து வீரியம் இழக்கச்செய்து தடுப்பூசிகளை தயாரிப்பது இன்னொரு திருப்புமுனையாகும்.
எனினும் தடுப்பூசிகளை கண்டுபிடிப்பது ஒரு சவால் என்பதும் அதனை சோதித்து பயனுக்கு கொண்டு வருவது இன்னொரு சவால் என்பதும், இது நீண்காலம் எடுக்கும் நிகழ்வாகும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த முறையில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்வதற்கும் நீண்ட காலம் எடுக்கும், ஏனென்றால் பிரிக்கப்பட்ட வைரஸ்களை வளர்த்தெடுத்து அதன் தீங்கிழைக்கும் பகுதிகளை செயலிழக்கச் செய்வது என்பதற்கான உற்பத்திகாலம் நிண்டகாலம் எடுக்கும் நடவடிக்கையாகும். ஒரு புதியவைரஸ் அதிவேகத்தில் பரவும் நேரத்தில் நீண்டகாலம் எடுத்து தடுப்பூசி தயாரிப்பதற்குள் பெருமளவு உயிரழப்புகள் ஏற்பட்டுவிடும். தடுப்பூசி விஷயத்தில் இதுவும் சவாலாக இருந்து வந்த அம்சமாகும்.
நுண்ணுயிரியலின் வளர்ச்சி:
இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் நுண்ணுயிரியலில் தாவிப்பாய்ச்சல் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, நுண்ணுயிர்களின் மரபணுக்களை தொகுப்பது சாத்தியப்பட்டது. தொகுக்கப்பட்ட மரபணுத் தொடர்கள் பகுதிவாரியாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. மரபணுத்தொடரின் எந்தப் பகுதி எந்த வேலையை செய்கிறது என்பதையெல்லாம் கண்டறிந்தனர். மரபணுப் பொருட்களுக்குள் குறியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் ஒரு உயிரினத்தின் உடலில் தயாரிக்கப்படும் புரோட்டீனை அதே போன்ற செய்திகளைக் கொண்டு செயற்கையாக புரோட்டீன் தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ்களின் மரபணுக்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. வைரஸ்களின் புரோட்டீன்களும் அவற்றின் மரபணுச் செய்திகளின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டன. இதன்விளைவாக வைரஸ்களின் புரோட்டீனை அடையாளப்படுத்தி அவற்றை அழிக்கும் தடுப்பூசிக்கான ஆய்வுகள் துவங்கின. இவை முழு வைரஸை உடலில் செலுத்தி எதிர்பாயுதத்தை தயாரிக்க வைப்பதற்கு பதில் குறிப்பிட்ட வைரஸில் உள்ள குறிப்பிட்ட புரோட்டீனுக்கான செய்தியை குறியிடுகிற மரபணுவை உண்டாக்கி அதை வைத்து செயற்கையாக வைரஸ் புரோட்டீன் தயாரித்து அதனை உடலில் செலுத்தி அதன் மூலமாக எதிர்ப்பாயுத்தை தயாரிக்க வைக்கும் உத்தி ஆய்வுக்கு வந்தது. இந்த உத்தியின் மூலமாக ஹெப்பாடிட்டிஸ்-பி மற்றும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசிகள் வந்தன. இந்த தடுப்பூசிகள் துணையலகு தடுப்பூசிகள் என்று அழைக்கப்பட்டன ஏனென்றால் வைரஸின் புரோட்டீன் என்பது வைரஸின் ஒரு துணையலகாகும். இந்த உத்தியானது வீரியமிழந்த முழு வைரஸிற்கு பதிலாக அதன் பாகம் ஒன்றை செலுத்தி எதிர்ப்பாயுதம் தயாரிக்க வைக்கும் முறையாகும், எனினும், ஒரு உயிரினத்தின் செல்லுக்கு வெளியேயிருந்து அதே உயிரினத்தின் செல்லுக்குள் மரபணுக்களை தாங்கி நிற்கும் நியூக்ளிக் அமிலங்களை செலுத்தும் உத்தியே இவையிரண்டும். முதலாவதில் முழு வைரசும் செலுத்தப்படும். இரண்டாவதில், அதன் பாகம் மட்டுமே தயாரித்து செலுத்தப்படும்.
1990களின் துவக்கத்தில் டிஎன்ஏ தடுப்பூசிகள் எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் சுன்டெலிகளுக்குச் செலுத்தி பரிசோதிக்கப்பட்டன. டிஎன்ஏ தடுப்பூசிகள், எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளின் செய்முறை மிக எளிது என்பதாலும் இவற்றில் எளிதில் மாற்றங்களை கொண்டுவந்து அடுத்தடுத்த தலைமுறை தடுப்பூசிகளை எளிதில் தயாரிக்க முடியும் என்பதும் சாதகமான அம்சங்களாகும். அத்துடன் நுண்ணுயிரியல் அடிப்படையில் பார்த்தால் இந்தவகை தடுப்பூசிகளுக்கு நோயெதிர்ப்பமைப்பு ஆற்றும் எதிர்வினையானது சற்று வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக, இதர செல்களுக்கு பாதகம் விளைவிக்காமல் வைரஸ் தாக்கிய செல்களை மட்டும் அடையாளம் கண்டு அழிக்கும் ஆற்றல் இருக்கிறது. எனினும், நியூக்ளிக் அமிலங்களைச் சார்ந்த அதாவது டிஎன்ஏ அல்லது எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் மனித உடலில் நோயெதிர்ப்பமைப்பில் உரிய எதிர்வினையை உண்டாக்குமா, இதர பக்க விளைவுகள் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. இதற்கிடையில் டிஎன்ஏ தடுப்பூசிகள் எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் இவற்றில் எதுசிறந்த முறையாக இருக்கமுடியும் என்ற கேள்விகள் எழுந்தன. டிஎன்ஏ தடுப்பூசிகளில் செலுத்தப்பட்ட டிஎன்ஏக்கள் செல்களின் வெளிச்சவ்வைத் தாண்டி உள்ளே சென்று பிறகு செல்கருவின் ஜவ்வையும் தாண்டி உள்ளே சென்றுதான் செய்திகளை படித்து அதற்கான எம்ஆர்என்ஏயை செல்கருவில் உண்டாக்கி அது செல் கருவிற்கு வெளியே வந்து சைட்டோபிளாசத்தில் அச்செய்தியை வைத்து புரோட்டீன்களை தயாரிக்க முடியும். எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளில் உள்ள எம்ஆர்என்ஏ செல்லின் வெளிச்சவ்வை கடந்தபின்பு நேரடியாக சைட்டோபிளாசத்தில் செய்திகளை வைத்து புரோட்டீன்கள் தயாரிக்க முடியும் என்பதால் எம்ஆர்என்ஏ சிறந்தமுறை என்று கருதப்பட்டது. அத்துடன் டிஎன்ஏ தடுப்பூசிகள் மூலம் செல் கருவிற்குள் செல்லும் அந்நிய டிஎன்ஏ அச்செல்கருவிற்குள் உள்ள டிஎன்ஏயுடன் இணைந்தால் பாதகமான விளைவுகள் ஏற்படும். எம்ஆர்என்ஏ தடுப்பூசிக்கு இப்பிரச்சனை கிடையாது. எனினும் எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் நிலையற்றதாக இருப்பதும், தயாரிக்கப்பட்ட எம்ஆர்என்ஏயை எவ்வாறு செல்லுக்குள் செலுத்துவது என்பதும் பிரச்சனையாக எழுந்தது. இதனால் மருத்துவரீதியாக பயன்படுத்துவது கடினம்.
வைரல் வெக்டர்:
1970களில் பால்பெர்க் என்ற நுண்ணுயிரிலாளர் செய்திகளை தாங்கிச் செல்லும் நியூக்ளிக் அமிலங்களை உயிரனங்களின் செல்களில் செலுத்தும் உத்தியை கண்டுபிடித்தார். இது வைரல் வெக்டர் என்று அழைக்கப்படுகிறது. வைரல் வெக்டரை செலுத்த இரண்டு வழிகள் உண்டு. மரபணுச்செய்திகளை தாங்கிநிற்கும் நுண்ணுயிரியல் வேதிப்பொருளானது வாழும் உயிரினத்தின் உள்ளுக்குள்ளேயே நிகழச்செய்யும் மாற்றங்களை ஆய்வு செய்வதை இன்விவோ என்றும் மரபணுச்செய்திகளை தாங்கிநிற்கும் நுண்ணுயிரியல் வேதிப்பொருளானது உயிரினத்திற்கு வெளியே ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் உயிரினத்தின் மாதிரிகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை ஆய்வு செய்வதை இன்விட்ரோ என்றும் அழைக்கப்படுகிறது. இன்விவோ ஆய்வுகள் நேரடியாக வாழும் உயிரினத்தில் நடைபெறுவதால் அந்த உயிரினத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனினும் மாற்றங்கள் நடைபெறுகிறது என்பதை இன்விவோ முறை உறுதி செய்யும். இன்விட்ரோ முறையில் உயிரினத்திற்கு வெளியே செய்யப்படும் ஆய்வுகள் உயிரினத்திற்கு வெளியே நடைபெறுவதால் உயிரினத்தில் எந்த மாறுதலும் இல்லை. இரண்டு ஆய்வு முறைகளின் முடிவுகளும் ஒத்துப்போகாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம், ஏனென்றால் முன்னது வாழும் முழு உயிரினத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது (குறுகிய) பேச்சு மொழியில் கூறினால் சோதனைக்குழாயில் நடைபெறுகிறது.
வைரல் வெக்டார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை செலுத்த முடியுமா என்ற ஆய்வு தீவிரமடைந்தது. 1990களில் இது உச்சகட்டத்தை அடைந்தது. பல்வேறு குழுக்கள் இதுபோன்ற ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தது. இன்விவோ முறையில் இனப்பெருக்க செல்களில் எம்ஆர்என்ஏஐ புகுத்தி புரோட்டீன் தயாரிப்பது வெற்றியடைந்தது. இந்த வெற்றியை ஃபிலிப் ஃபெல்னர் குழுவினர் 1990ல் ஆய்வுத்தாளாக வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு குழுக்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். எம்ஆர்என்ஏ மூலம் வைரஸ் புரோட்டீன் தயாரிப்பு நடக்கிறதா, அந்த புரோட்டீனுக்கு நோயெதிர்ப்பாற்றல் எதிர்வினையாற்றுகிறதா என்பதெல்லாம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டது. இவையெல்லாம் இதர உயிரினங்கள் மத்தியிலேயே பரிசோதித்து உறுதிசெய்யப்பட்டது. இது மனிதர்களைத் தாக்கும் வைரஸ்களின் எம்ஆர்என்ஏயை தயாரித்து, அதன் மூலம் எதிர்ப்பாற்றல் செயல்பாட்டை உறுதி செய்து, எம்ஆர்என்ஏ தடுப்பூசி தயாரித்து, அது பரிசோதனைக்கு கொண்டு வருவதற்கு 20 ஆண்டுகள் பிடித்தது.
இன்விட்ரோ ஆய்வுகள்:
இவையெல்லாம் இன்விவோ ஆய்வுகள். எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தின் சாதகமான அம்சம் என்னவென்றால், எம்ஆர்என்ஏயில் நாம் ஒரு சில காரமூலக்கூறுகளை மாற்ற முடியும். இப்படி மாற்றி ஆய்வு செய்வதற்கு இன்விட்ரோமுறையே சிறந்தது. முதலில் வைரஸ்களின் டிஎன்ஏ அல்லது ஆர்என்ஏ இவற்றின் மரபணுத் தொடரை தொகுக்க வேண்டும். தொடர் பற்றிய தகவல் இருந்தால்தான் நாம் அதன் துண்டுகளை தனித்தனியாக தயாரித்து தொடராக மாற்ற முடியும். செல்கள் விதவிதமான புரோட்டீன்களை தயாரிக்கின்றன. இவற்றின் அடிப்படை – செல் கருவில் உள்ள டிஎன்ஏயில் உள்ள செய்திகளை தனித்தனியாக பிரித்தெடுத்து ஒவ்வொரு குறுஞ்செய்தியையும் தாங்கிச் செல்லும் வாகனமான எம்ஆர்என்ஏ (தூது-ஆர்என்ஏ) கருவிற்கு வெளியே உள்ள சைட்டோபிளாசத்தில் இருக்கும் ரைபோசோமை அடைகிறது. ரைபோசோம் இச்செய்திகளைப் படித்து அதன் அடிப்படையில் புரோட்டீன்களை தயாரிக்கிறது. இதேபோல் பல்வேறு துண்டுகளை இணைத்து டிஎன்ஏஐ உருவாக்கும் என்சைம்கள் உள்ளன. இவை பாலிமெரைஸ் என்று அழைக்கப்படுகின்றன. டிஎன்ஏயின் கட்டமைப்பு கண்டுபிடித்த அடுத்த சில பத்தாண்டுகளில் பல்வேறு பாலிமெரைஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் பாக்டீரியாக்களைத் தாக்கும் வைரஸ்களின் ஆர்என்ஏ பாலிமெரைஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டது முக்கியமானது. பாலிமெரைஸ்களைப் பயன்படுத்தி இன்விட்ரோமுறையில் எம்ஆர்என்ஏக்களை தயாரிக்க முடியும் என்று பால் கிரைக் மற்றும் டக்ளஸ் மெல்டன் ஆகியோர் நிறுவினர். இதனையடுத்து செல்களுக்குள் மரபணுச் செய்திகளை தாங்கி நிற்கும் வேதிப்பொருட்களை செல்களுக்குள் செலுத்தும் முறையின் மீதான ஆய்வுகள் நடைபெற்றது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஃபிலிப் பெல்னர் ஆய்வுத்தாள் இதனை சாத்தியப்படுத்தியது. பாதுகாப்பான முறையில் மரபணுச் செய்திகளை தாங்கி நிற்கும் வேதிப்பொருட்கள் செல்களுக்குள் சேர்ப்பதில் சிக்கல்கள் இருந்தாலும் இச்சிக்கல்களும் விரைவில் தீர்க்கப்பட்டன. பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பீட்டர் குல்லிஸ் இதற்கான வழிமுறைகளை கண்டறிந்தார்.
காரிக்கோ, வீஸ்மேனின் பங்களிப்பு:
இந்தப்பின்னணியில்தான் நோபல் அறிஞர்களான காரிக்கோ கேட்டலினும், ட்ரூ வீஸ்மேன்னும் களத்திற்கு வருகின்றனர். காரிக்கோ ஹங்கேரியாவின் ஸெகெட் நகரில் உள்ள உயிரியல் ஆய்வு மையத்தில் 1982ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்று, ஹங்கேரியன் அக்காடமி ஆஃப் ஸயன்ஸ் பின்முனைவர் பட்ட ஆய்வுக்களை மேற்கொண்டார். பின்னர் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகானத்தில் உள்ள ஃபிலடெல்ஃபியா நகரில் உள்ள டெம்பிள் பல்கலைக் கழகத்தில் ஆய்வாளராக பணியிலமர்ந்தார். 1997ல் அவருக்கென்ற தனி ஆய்வகத்தை பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் உள்ள நியூரோ சர்ஜரித் துறையில் அமைத்துக் கொண்டார்.
அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக் கழக்கத்தில் மருத்துவ மேற்பட்டமும் முனைவர் பட்டமும் 1987ம் ஆண்டு பெற்றவர் ட்ரூ வீஸ்மென். இவரும் 1997ம் ஆண்டு பென்சில்வேனியா பல்கலைக் கழகத்துக்கு வந்தடைந்தார். முன்னவர் எம்ஆர்என்ஏ தடுப்பூசி ஆய்வுகளில் கவனம் செலுத்தினார். பின்னவர் நோயெதிர்ப்பமைப்பின் அங்கமாகிய டென்ட்ரிக்செல்களின் மீதான ஆய்வுகளில் கவனம் செலுத்தினார். டென்ட்ரிக் செல்கள் என்ற செல்கள் இருப்பதை ராஃல்ப் ஸ்டீன்மென் 1973ம் ஆண்டு கண்டுபிடித்தார். இதற்காக இவருக்கு 2011ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இருவரும் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டனர். முதலாமவர் எம்ஆர்என்ஏயை டென்ட்ரிக் செல்லுக்குள் புகுத்துவது பற்றியும் இரண்டாமவர் அது டென்ட்ரிக் செல்களில் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றியும் கவனம் செலுத்தலாம் என்று தங்களுக்குள் வேலைப்பிரிவினை செய்துகொண்டனர்.
இவர்களது முதல் கட்ட ஆய்வுகள் இன்விட்ரோ முறையில் ஹெச்ஐவி வைரஸின் புரேட்டீனுக்கான செய்தியை கண்டறிந்து அதற்கான எம்ஆர்என்ஏஐ தயாரித்து அதை டென்ட்ரிக் செல்களில் செலுத்தினால் உருவாகும் ஆன்டிஜன் டி-செல்களில் ஏற்படுத்தும் எதிர்வினையை அறிந்தனர். இது சாதகமான விளைவு என்று அவர்கள் முடிவெடுத்தாலும் இதன் பாதகமான விளைகள் என்ன என்பதை கவனிக்கத் தவறினர். எனினும் இந்த பரிசோதனை எம்ஆர்என்ஏ தடுப்பூசிக்கான ஒரு முன்முயற்சியாக அமைந்தது. இந்த ஆய்வில் அந்நிய எம்ஆர்என்ஏ டென்ட்ரிக் செல்லில் புகுந்ததலிருந்து விளைவுகள் முற்றுப்பெறும் வரை நடைபெற்ற நிகழ்வுகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படுத்திய சமிக்கைகளை என்ன என்று கேள்வி எழுப்பி ஆய்வுகளைத் தொடர்ந்தனர்.
நடைபெற்ற நிகழ்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக தனித்தனித் நிகழ்வுக்கான விரிவான விளக்கங்களை வந்தடைந்தனர். செயற்கையாக தயாரிக்கப்பட்ட எம்ஆர்என்ஏயானது, இரட்டையிழை ஆர்என்ஏவாக திரிந்துபோய், டென்ரிக் செல்கள் உருவாக்கும் மற்றொரு பொருளானது டி-செல்களை அடைந்து அதன் விளைவாக அதைச் சுற்றிய வீக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நுணுக்கமான செயல்முறைகளை விவரித்தனர். வீக்கம் போன்ற விளைவுகளை சைட்டோக்கைன் விளைவு என்று தொழில்நுட்ப ரீதியாக அழைக்கப்படுகிறது. இந்த விளக்கங்களை 2004ம் ஆண்டு ஆய்வுத்தாள் மூலமாக வெளியிட்டனர். சுருக்கமாக கூறினால் உட்செலுத்தப்படும் அந்நிய எம்ஆர்என்ஏவானது சைட்டோகைன் விளைவை ஏற்படுத்துகிறது.
இந்த கண்டுபிடிப்பானது உட்செலுத்தப்படும் எம்ஆர்என்ஏக்களில் உள்ள காரமூலக்கூறுகளில் மாறுதல்கள் செய்து ஏற்படும் சைட்டோக்கைன் விளைவுகளை ஆய்வுசெய்ய முடிந்தது. வெவ்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தும் வெவ்வேறு வகையான சைட்டோக்கைன் விளைவுகளை வகைப்படுத்தி ஒரு ஆய்வுத்தாளாக 2005ம் ஆண்டு வெளியிட்டனர். இந்த ஆய்வுத்தாளே இன்றைக்கு தயாரிக்கப்படும் எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளுக்கு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. இன்றைய ஆய்வாளர்கள்கு நூற்றுக்கணக்கான மாறுதல்களை எம்ஆர்என்ஏயில் செய்து அவை ஏற்படுத்தும் தாக்கங்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். காரிக்கோவின் பணியும் வீஸ்மேனின் பணியுமே இதற்கு அடிப்படை
கோவிட்-19 வைரஸின் மரபணுத் தொடரிரைப் படித்து அதன் ஸ்பைக் புரோட்டீனுக்காக எம்ஆர்என்ஏயை செயற்கையாக உருவாக்கி தடுப்பூசி தயாரிப்பதே கோவிட்-19 எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளின் அடிப்படை. இவை உட்செலுத்தியவுடன் ஸ்பைக் புரோட்டினுக்கான ஆன்டிஜன் டென்ட்ரிக் செல்லால் தயாரிக்கப்படுகிறது. அதைற்கு டி-செல் எதிர்வினையாற்றுகிறது. டி-செல்கள் வைரஸ் எதிர்ப்புப் போரை நினைவில் தாங்கிநிற்பவை எனவே உண்மையான கோவிட்-19 வைரஸ் வந்தால் அதன் நினைவிலிருந்து எதிர்வினை துவக்கப்படுகிறது. இன்றைக்கு இதுபோன்ற பல எம்ஆர்என்ஏ கொண்ட தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன. இதற்கு அடிப்படையாக அமைந்தது இந்த இரு அறிஞர்களின் ஆய்வுகளே. இந்த இரு அறிஞர்களின் ஆய்வுகளுக்கு முன்னால் நடைபெற்ற பல்வேறு ஆய்வுகளே இந்த இரு அறிஞர்களின் ஆய்வுகளுக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது. அறிவியல் என்பது ஒரு சமூக நடவடிக்கை என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. எனினும் குறிப்பிட்ட கட்டத்தில் குறிப்பிட்ட நபர்கள் ஆற்றும் பணியானது திருப்புமுனை ஏற்படுத்தி விடுகின்றன . அவர்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்படுகிறார்கள். நோபல் பரிசுகளும் இப்படிப்பட்ட அங்கீகரிப்புகளின் ஒரு அங்கமே.
எஸ்.விஜயன் – தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
குறிப்பு: இக்கட்டுரையானது நோபல் இணையதளத்தில் உள்ள கட்டுரையின் நேரடித் தமிழாக்கம் அல்ல. அதனைத் தழுவி எழுதியது. அசல் கட்டுரையை ஆங்கிலத்தில் வாசிக்க பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்
https://www.nobelprize.org/uploads/2023/10/advanced-medicinprize2023-2.pdf
பின்வரும் கலைச்சொற்கள் நுண்ணியிரியல் பயிலாதவர்களுக்கான ஒரு மேற்பூச்சு விளக்கம்
டிஎன்ஏ – உடலின் செல்லுக்குள் உள்ள செல் கருவில் இருக்கும் ஒரு பெரிய மூலக்கூறாகும். இது உயரினத்தின் செய்திகளை தாங்கி நிற்பவை. இது சுழலேணி வடிவத்தில் இருக்கும். ஏணியின் இரு சட்டங்களும் பாஸ்பேட், சர்க்கரை மூலக்கூறுகளால் ஆனது. ஏணியின் படிகள் காரமூலக்கூறுகளால் ஆனது. ஒவ்வொரு படியிலும் இரண்டு காரமூலக்கூறு இருப்பதால் இது கார இணைவு என்றழைக்கப்டுகிறது. கார மூலக்கூறுகள் நான்கு வகைப்படும் இவற்றை ஏ, டி, சி, ஜி என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. ஒவ்வொரு இணைவிலும் உள்ள இரண்டெழுத்துக்களில் ஏயும் டியும் மட்டுமே இணைய முடியும், சியும் ஜியும் மட்டுமே இணைய முடியும்.
ஆர்என்ஏ – இதுவும் செய்திகளை தாங்கிநிற்கும் மூலக்கூறாகும். இது சுழல்நுலிழை வடிவத்தில் இருக்கும் இதிலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒரே ஒரு காரமூலக்கூறு இணைந்திருக்கும் இவை ஏ, யு, சி, ஜி என்ற எழுத்துக்களால் அழைக்கப்படுகின்றன. இவையே உயிரினத்தின் புரோட்டின்கள் தாயரிப்பதற்கான செய்திகளை தாங்கி நிற்பவை
புரோட்டீன்கள் – அமினோ அமிலங்களின் கூட்டுத்தொடர். இவை 20 வகை அமினோ அமிலங்களால் ஆனது. புரோட்டீன்கள் பல்வேறு வகைகள் உள்ளன. புரோட்டீன்களுக்கு பல்வேறு பணிகள் உள்ளன, நமது கவனத்துகுரியது, அவை செல்களின் கட்டமைப்பிலும் செயல்பாட்டிலும் முக்கியப்பங்காற்றுகின்றன என்பதுவே
எம்ஆர்என்ஏ – மெஸஜ்சர் ஆர்என்ஏ – டிஎன்ஏக்களில் உள்ள செய்திகளை செல்கருவிற்குள் படித்து உருவாக்கப்படும் ஆர்என்ஏ இது. இது செல்கருவிற்கு வெளியே வந்து சைட்டோபிளாசத்தில் உள்ள ரைபோசோம் மூலமாக புரோட்டீன் தயாரிப்பதற்கான செய்திகளை வழங்குகின்றன.
இந்த ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பற்றிய சொற்பொழிவு வரும் 28ந்தேதி மாலை 4 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது. சொற்பொழிவை நிகழ்த்துபவர் முனைவர் எலிசபெத் ஹன்னா அவர்கள். இவர் தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிகழத்தைச் சார்ந்த தேசிய காசநோய் ஆய்வு நிறுவனத்தில் முதுநிலை விஞ்ஞானியாக இருக்கிறார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் வெகுஜன அறிவியல் சொற்பொழிவுத் தொடரை கடந்த 5 ஆண்டுகளாக நடத்திவரும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். வாய்ப்பை தவறவிடாதீர்கள். மேலும் விபரங்களுக்கு http://sciencelecture.tnsfchennai.in/