2024 – மருத்துவத்திற்கான நோபல் பரிசு
மருத்துவத்திற்கான நோபல் பரிசு கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் மரபணு சார்ந்த ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது என்பது மரபணு சார்ந்த ஆராய்ச்சியானது நமது வாழ்வில் குறிப்பிட தகுந்த தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது என்பதை உணர்த்துகிறது. மனிதன் போன்ற பல செல் உயிர்களில் மரபணு ஒழுங்கு முறையில் (gene regulation) ஈடுபடும் முற்றிலும் புதிய சிறிய மைக்ரோ அல்லது நுண் ரிபோ நியூக்ளிக் ஆசிட் (micro ribonucleic acid-microRNA) மூலக்கூறுகளை கண்டுபிடித்ததற்காக இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, microRNA எவ்வாறு உருவாகிறது மற்றும் அது எவ்வாறு மரபணு செயல்பாட்டை கட்டுப்படுத்துகிறது என்ற அடிப்படை உடல் செயல்பாடு தத்துவத்தை கண்டுபிடித்த அமெரிக்காவைச் சார்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ், யூனிவர்சிட்டி ஆப் மாசசூசெட்ஸ் மெடிக்கல் ஸ்கூல் (Victor Ambros, University of Massachusetts Medical School) மற்றும் கேரி ருவ்குன் ஹார்ட்வேர்ட் மெடிக்கல் ஸ்கூல் (Gary Ruvkun, Harvard Medical School) விஞ்ஞானிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு மனிதன் உட்பட அனைத்து பல செல் உயிர்களின் செயல்பாடு பற்றி மேலும் அறிவதற்கு மற்றும் ஆராய்வதற்கு மிகவும் இன்றியமையாததாகும்.

இவர்கள் இருவரும் “மரபணு எவ்வாறு உடல் செல்கள் உருவாக்கம், அழிதல் மற்றும் மறு உருவாக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது” என்ற ஆராய்ச்சிக்காக 2002 ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற ராபர்ட் ஹார்விட் (Robert Horvit)- இன் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு தோன்றிய அரிய ஆராய்ச்சி வினா மற்றும் அதற்கான விடை இவர்கள் இந்த பரிசு பெற காரணமானது. அதாவது, நமது செல்லில் உள்ள குரோமோசோம் செல்களின் செயல்பாடு குறிப்புகளை கொண்டுள்ளது, அனைத்து செல்களும் ஒரே மாதிரியான குரோமோசோம், மரபணு மற்றும் மரபணு குறிப்புகளை கொண்டு இருந்தாலும், வெவ்வேறு செல்கள் அதாவது தசை, இதய மற்றும் நரம்பு செல்கள் எவ்வாறு வெவ்வேறு செயல்பாடுகள் மற்றும் பண்புகளை கொண்டிருக்கிறது என்பது தான் அந்த கேள்வி.
இவர்களின் தீவிர ஆராய்ச்சியின் மூலம் இந்தக் கேள்விக்கு அவர்கள் கண்டுபிடித்த விடையானது, microRNA-ஆனது மரபணு ஒழுங்கு படுத்தல் மூலமாக செல்லை குறிப்பிட்ட மரபணு குறிப்பை மட்டும் எடுக்க அறிவுறுத்தி அந்த குறிப்பிற்கு ஏற்றார் போல் தனித்துவமான பண்புகள் மற்றும் செயல்பாடுகளுடன் இருக்க வைக்கிறது என்பது ஆகும்.
இந்த ஆராய்ச்சிக்காக அவர்கள் விலங்குகளை போல பல செல்களை கொண்ட அதாவது நரம்பு மற்றும் தசை செல்கள் போன்றவற்றை கொண்ட சிறிய வட்டப்புழுவில் Caenorhabditis elegans (C. elegans) மரபணு நிகழ்வுகள் மூலம் எவ்வாறு குறிப்பிட்ட நேரத்தில் பல்வேறு வகை செல்கள் உருவாகி மற்றும் செயல்படுகின்றன என்ற ஆராய்ச்சியை தொடர்ந்தனர்.
இந்த வட்டப்பழுவில் இவர்களின் எதிர்பாராத கண்டுபிடிப்பான lin-4 மரபணு உருவாக்கிய குறுகிய புரத உற்பத்தி குறியீடு இல்லாத microRNA, மெசஞ்சர் ரிபோ நியூகிளிக் ஆசிட் (messenger ribonucleic acid- mRNA)-வை கட்டுப்படுத்தி lin-14 என்ற புரத உற்பத்தியை புதிய மரபணு ஒழுங்குபடுத்துதல் மூலம் தடுத்துள்ளது.
மேலும், Ruvkun கண்டுபிடிப்பான let-7 microRNA பல செல் உயிர்களான விலங்குகளிலும் இந்த புதிய முறை மரபணு ஒழுங்குபடுத்துதல் செயல்பட வல்லது என்பதை உறுதிப்படுத்தியது.

டிஆக்சி ரிபோ நியூக்ளிக் ஆசிட் (Deoxyribonucleic acid-DNA)- இல் உள்ள மரபணு தகவலானது படியெடுத்தல் (டிரான்ஸ்கிரிப்ஷன்-transcription) என்ற செயல்முறை மூலமாக mRNA-கு கடத்தப்பட்டு, பிறகு mRNA- இல் உள்ள மரபணு தகவல்கள் ட்ரான்ஸ்லேஷன்-translation செயல் மூலம் புரதமாக உற்பத்தி ஆகிறது.
மரபணு பரிமாற்றம் மற்றும் புரத உற்பத்தியை கட்டுப்படுத்தும் படியெடுத்தல் காரணிகள் (டிரான்ஸ்கிரிப்ஷன் ஃபேக்டர்ஸ்-transcription factors) பற்றி புரிதல் இருந்தாலும், இவர்களின் புதிய வழியிலான மரபணு ஒழுங்குபடுத்துதல் கண்டுபிடிப்பானது, தேவையற்ற புரத உற்பத்தியை தடுத்து, எவ்வாறு ஒரு செல் உயிரிலிருந்து பல செல் உயிர் பரிமாணம் அடைந்தது, மற்றும் எவ்வாறு ஒவ்வொரு செல் வகையும் தனித்த செயல்பாடுகளை பெற்றது என்ற புதிரை விளக்குகிறது.

இந்த ஆராய்ச்சியின் விளைவாக தற்போது பல்வேறு microRNA மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டு மனிதன் தோற்றத்திலிருந்து, செயல்பாடு, நோய் காரணிகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக மருத்துவத்துறையில் இந்த புதிய மரபணு ஒழுங்குபடுத்துதல் (microRNA) மூலமாக புதிய மருந்துகள் நடைமுறையில் இல்லை என்றாலும் வருங்காலத்தில் இது மருத்துவத்துறையில் அளப்பரிய பங்களிப்பு அளிக்கும் என்பது அறிஞர்களின் எண்ணமாகும்.
கட்டுரையாளர் :
கோவர் அந்தோணி ராஜ் , ஆராய்ச்சியாளர்
CSIR- Central Institute of Medicinal and Aromatic Plants, Lucknow
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

