எண்: 13
மோடி அரசாங்கத்தின் பொய்கள், பொய்கள் மேலும் பல பொய்கள்
பொது விநியோகத் திட்டம்
சொன்னது
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 80 கோடி மக்களுக்கு 5 கிலோ இலவச ரேஷன் ஒதுக்கீடு (பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின்கீழ்) நீட்டிக்கப்படும்.
உண்மை நடப்பு
கோவிட்-19 தொற்றுநோயால் உருவான பசி மற்றும் துயரத்தைத் தணிப்பதற்காக, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (என்.எஃப்.எஸ்.ஏ) கீழ் கிடைக்கும் பொருட்களுடன் கூடுதலாக, அனைவருக்கும் இலவச ரேஷன்களை விநியோகிக்க வேண்டும் என்ற இடதுசாரிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (பி.எம்.ஜி.கே.ஏ.ஒய்) ஆரம்பத்தில் ஏப்ரல் 2020இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரருக்கும் கூடுதலாக 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்கியது. மேலும் 5 கிலோ உணவு தானியங்களை மானிய விலையில் என்.எஃப்.எஸ்.ஏ மூலம் பெறவும் உரிமை தந்தது. இதன் விளைவாக, ரேஷன் கார்டுதாரர்கள் ஏப்ரல் 2020 முதல் ஒரு நபருக்கு 10 கிலோ ரேஷன் பெற உரிமை பெற்றனர். இந்த இலவச ரேஷன் ஏற்பாடு ஒரு வருடத்திற்கு நடப்பில் இருக்க வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும் என்று 2023 நவம்பரில் அரசு அறிவித்தது. உண்மையில், மக்கள் ரேஷன் பொருட்களை இழந்து தவிக்கின்றனர். முதலாவதாக, குடும்ப அட்டைதாரர்கள் அணுக முடிந்த மானிய விலையில் ரேஷன் பொருட்கள் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன.
அரசு புள்ளிவிவரங்களின்படி, 2013க்கும் 2021க்கும் இடையில் 4.5 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன. 2013-2021ஆம் ஆண்டில் ஒவ்வொரு ஆண்டும் ரத்து செய்யப்படும் ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அதன் பிறகு பல ஆண்டுகளாக அரசு எந்த புள்ளி விவரங்களையும் வெளியிடவில்லை. இருப்பினும், கடந்த 3 ஆண்டுகளில் மேலும் 1.9 கோடி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த மக்கள்தொகை கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படாததால், சுமார் 10 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வராமல் இருந்திருக்கலாம். மேலும் அவர்கள் இலவச ரேஷன் பொருட்களையும் பெறவில்லை.
இந்த திட்டங்களின் கீழ் பாதுகாப்பு பெறுவதற்கென ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழும் மாநிலமான ஜார்க்கண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோகத் திட்டத்திற்கான 7 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
என்.எஃப்.எஸ்.ஏ.க்கான நிதியை அரசாங்கம் திட்டமிட்டு குறைத்து வருகிறது. 2023-24 நிதியாண்டில் NFSAக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில், ரூ. 2.12 லட்சம் கோடி அனுமதிக்கப்பட்டது. இது 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. 2.05 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கான நிதியை சுமார் 40 சதவீதம் குறைத்துள்ளது.
2016-20க்கு இடையில் 707 மாவட்டங்களில் 314 மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது.
உலகளாவிய பட்டினி குறியீட்டில் 125 நாடுகளில் இந்தியா இப்போது 111 வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற அண்டை நாடுகளை விட நாம் குறைந்த அந்தஸ்தில் இருக்கிறோம். 2014ஆம் ஆண்டில் இந்தியாவின் GHI தரவரிசை 76 நாடுகளில் 55வது இடத்தில் இருந்தது; இப்போது 2024இல் இந்தியா 111 வது இடத்தில் உள்ளது.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (NFHS)படி, இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் எடை குறைவாவர்களாக உள்ளனர். 6-59 மாத குழந்தைகளிடையே இரத்த சோகை பாதிப்பு 67 சதவீதமாகவும், 15-19 வயதுடைய வளரிளம் பெண்களிடையே இது 59 சதவீதமாகவும், இனப்பெருக்க வயதுடைய பெண்களிடையே 57 சதவீதமாகவும், கர்ப்பிணிப் பெண்களிடையே 52 சதவீதமாகவும் உள்ளது.
2019-21க்கு இடையில் வீட்டு உணவுப் பாதுகாப்பின்மை 21 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது. 62 சதவீத குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பிலிருந்து பாதுகாப்பற்ற நிலைக்கு மாறியுள்ளன. 17 சதவீதம் பேர் உணவுப் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர்.இந்தியாவில் 7 கோடி குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை கூட நல்ல உணவு கிடைக்கவில்லை என்று மிக சமீபத்திய அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
இடது ஜனநாயக முன்னணி ஆளும் கேரளா போன்ற ஒரு மாநிலம், தனது சொந்த வளங்களுடன், அனைவருக்குமான பொது விநியோக முறையை (இங்கு ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் கிடைக்கின்றன) தொடர்ந்து செயல்படுத்துகிறது. மேலும் உணவு தானியங்கள் போன்றவற்றை நியாய விலைக் கடைகள் மூலம் வெளிச்சந்தையை விட குறைந்த விலையில் கிடைக்கச் செய்யவும் அரசு முயற்சிக்கிறது. இது நாடு முழுவதும் பின்பற்றப்பட வேண்டும்.
இந்த நிலைமையை சரிசெய்ய, ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 35 கிலோ உணவு தானியங்கள் அல்லது ஒரு தனிநபருக்கு 7 கிலோ உணவு தானியங்கள், இதில் எது அதிகமோ அது, அதிகபட்சமாக ஒரு கிலோ உணவு தானியங்களுக்கு ரூ. 2 என்ற விலையில் வழங்குவதை உறுதி செய்வது அவசியம். இது பொதுவாக வழங்கப்படும் 5 கிலோ இலவச ரேஷன் பொருட்களுடன் கூடுதலாக இருக்க வேண்டும். ரேஷன் கார்டுகளை பெறத் தகுதியுள்ள அனைவருக்கும் இதை வழங்க வேண்டும்.
உணவு தானியங்களுடன், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களையும் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் பொது விநியோக முறையில் வழங்க வேண்டும்.
ஐ.சி.டி.எஸ் மற்றும் மதிய உணவுத் திட்டங்களுக்கு சூடான, சத்தான உணவை உறுதி செய்ய அதிக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும். அதற்கு பதிலாக, மத்திய அரசு ஒரு அற்பத் தொகையை மட்டுமே ஒதுக்குகிறது. இதுவும் கூட சரியான நேரத்தில் வழங்கப்படுவதில்லை. இது ஏழைக் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ. 6000 உதவித்தொகையை நிபந்தனையின்றி அமல்படுத்த வேண்டும். இதனால் கர்ப்பிணி தாய்மார்களும் பிறக்கப்போகும் குழந்தையும் தேவையான ஊட்டச்சத்தைப் பெற முடியும்.
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஆதரவற்றோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு இலவச சமையலறைகள் மற்றும் மானிய விலையில் சிற்றுண்டிச் சாலைகள் அவசியம் தேவைப்படுகின்றன.
பொது விநியோக முறையை வலுப்படுத்தி, அதன் நோக்கத்தை விரிவுபடுத்த வேண்டும். தொலைதூர மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் ஆதிவாசிகள் மற்றும் ஏழை சமூகங்களுக்கு ரேஷன் கடைகள் மற்றும் இலவச மற்றும் மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.
உணவு தானியங்கள், சமையல் எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஏழை குடும்பங்களில் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க அரசு அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தத் தலையிடுவதற்குப் பதிலாக, உண்மையில் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் அகற்ற உறுதிபூண்டுள்ளது. ரேஷன் கடைகள் மற்றும் பொதுவிநியோக திட்டத்தை பணப் பரிமாற்றம் கொண்டதாக மாற்றுவது நிலைமையை மேலும் மோசமாக்கும்; அவை எதிர்க்கப்பட வேண்டும்.
நம் நாட்டில் பல லட்சக்கணக்கான குடும்பங்களை துரத்தி வரும் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு பாஜக அரசின் வெற்று வார்த்தைகளை அம்பலப்படுத்துகின்றன.
பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்தி, விரிவுபடுத்துவோம்!
பாஜகவை தோற்கடிப்போம்!
Communist Party of India (Marxist)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.