Election2024 | மோடி அரசு -சுற்றுச்சூழல்

2024 நாடாளுமன்றத் தேர்தல்: மக்கள் களம் – “சுற்றுச்சூழல்”

எண்: 16

மோடி அரசாங்கத்தின் பொய்கள், பொய்கள் மேலும் பல பொய்கள்

சுற்றுச்சூழல்

சொன்னது

“எங்களைப் பொறுத்தவரை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது அடிப்படையில் நம்பிக்கைக்குரிய விஷயம். நம்மிடம் இப்போது இயற்கை வளங்கள் உள்ளன. ஏனென்றால் நமது முன்னோர் இந்த வளங்களை பாதுகாத்தனர். அதையேதான் நமது எதிர்கால சந்ததியினருக்கும் நாம் செய்ய வேண்டும்” – நரேந்திர மோடி
‘வனப்பரப்பு அதிகரிக்கப்படும்’ மற்றும் ‘வனவாசிகளின், குறிப்பாக பழங்குடி சமூகங்களின் நலன்களைப் பாதுகாத்து மேம்படுத்துவோம்’.
102 நகரங்களில் காற்று மாசுபாடு 35 சதவீதம் குறைக்கப்படும்.

இமயமலைத் தொடர் பகுதியின் பாதுகாப்பு, தீவுகளின் பாதுகாப்பு மேற்கொள்ளப்படும்.

– 2019 பாஜக தேர்தல் அறிக்கை

உண்மை நடப்பு

2014-19ஆம் ஆண்டில், சுற்றுச்சூழல் விதிமுறைகள் சட்டமன்ற மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மூலம் திட்டமிட்ட வகையில் நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. சுரங்கம் தோண்டுவதற்கும், பிற சுரங்கத் தொழில்களுக்கும், குறிப்பாக இந்தத் துறைகளில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கும் காடுகள் திறந்துவிடப்பட்டன.

கடந்த ஐந்து ஆண்டுகளில், சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை மீது தொடர்ச்சியான தாக்குதல் நடைபெற்று வந்துள்ளது. இது சுற்றுச்சூழல் அமைப்பு, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பெரும் தீங்கு விளைவித்துள்ளது. மேலும் இதன் விளைவாக, ஏற்கனவே ஓரங்கட்டப்பட்ட பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தில் கணிசமான அளவில் பாதகமான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

வன அடர்த்தி

பா.ஜ.க. அரசின் கொள்கைகள் காடுகளின் பெரும் பகுதிகளை அழிப்பதன் விளைவாக, பழங்குடியினர் மற்றும் பிற வனவாசிகள், பல்லுயிர் மற்றும் வனவிலங்குகள் மற்றும் பரந்த அளவிலான சுற்றுச்சூழல் சேவைகளுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உண்மையை மறைக்க, வனப்பகுதி தொடர்பான தரவுகளை மாற்றியமைக்க தன்னால் ஆன அனைத்தையும் செய்துள்ளது.

பழங்குடியினர் நிலங்களை மாற்றம் செய்தல்

இந்தியாவின் வனங்கள் குறித்த நிலை அறிக்கை (ISFR) 2021, பதிவு செய்யப்பட்ட வனப்பகுதிகளில் வனப்பகுதியில் மிகக் குறைந்த அளவிற்கே அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. காடு அல்லது மரங்களின் அதிகரிப்பு மத்திய அல்லது மாநில பதிவுகளில் காடுகளாக காட்டப்பட்ட பகுதிகளுக்கு வெளியே திறந்த காடுகளில் வந்துள்ளது. வனம் அல்லாத பயன்பாடுகளுக்கு இவற்றைக் கையளிக்க, குறிப்பாக வன (பாதுகாப்பு) சட்டத் திருத்தங்கள் மூலம் அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் முயற்சித்துள்ளது.

மொத்த வனப்பகுதியில் 60 சதவீதமும், மிகவும் அடர்த்தியான காடுகளில் 70 சதவீதமும் அரசியலமைப்பின் அட்டவணை V இன் கீழ் பட்டியலிடப்பட்ட மாவட்டங்களின் கீழ் வருகின்றன. மேலும் அவை ISFR 2021 இல் “பழங்குடியினர் பகுதி” என்றும் பட்டியலிடப்பட்டுள்ளன. இதனால் பழங்குடி மக்கள் மற்றும் பிற வனவாசிகளின் வாழ்க்கை, வாழ்விடம் மற்றும் வாழ்வாதாரங்களை இது நேரடியாக பாதிக்கிறது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (இ.ஐ.ஏ) விதிகளில் மேற்கொண்ட திருத்தங்களின் கீழ் ஏராளமான திட்ட வகைகளுக்கு இப்போது சுற்றுச்சூழல் அனுமதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட அளவிலான சுரங்கப் பகுதிகள், மின்சார பரிமாற்ற வழிகள், எண்ணெய் / எரிவாயு போன்ற குழாய்கள் பதிப்பு, நெடுஞ்சாலைகள் அல்லது பிற உள்கட்டமைப்பு திட்டங்கள் போன்ற ‘நேரியல் திட்டங்கள்’, ‘தேசிய பாதுகாப்பு’ திட்டங்கள் போன்றவை இவ்வாறு விலக்கு பெற்றுள்ளன.

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் தோல்வி

இந்திய நகரங்கள், குறிப்பாக இந்தோ-கங்கை சமவெளி பகுதியில் உள்ள வட இந்தியாவில் உள்ள நகரங்கள் உலகில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாகும். இவ்வாறு 15க்கும் மேற்பட்ட நகரங்கள் ஆண்டுதோறும் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் முதல் 20 இடங்களில் உள்ளன. இந்த நிலைமையை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இமயமலையை அழித்தல்

மத்திய அரசின் ‘வளர்ச்சி’ என்ற அழிவுகரமான கருத்தாக்கம், பலவீனமான மேற்கு இமயமலை பிராந்தியத்தில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் பொறுப்பற்ற, மோசமாக திட்டமிடப்பட்ட மற்றும் மோசமாக செயல்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள், ஏராளமான நிலச்சரிவுகள், வெள்ளம், மலை நகரங்களில் நிலச்சரிவு மற்றும் பிற பேரழிவு சம்பவங்களுக்கு வழிவகுத்துள்ளன.

காலநிலை மாற்றம் காரணமாக தீவிர மழை நிகழ்வுகள் இந்த சிக்கல்களை மேலும் அதிகரிக்கின்றன. சண்டிகரில் இருந்து மணாலி வரை பல நீண்ட சுரங்கங்களுடன் நெடுஞ்சாலையின் நான்கு வழி பாதை பல விவசாயிகளை இடம்பெயர்த்துள்ளது.

புவியியல் மற்றும் பொறியியல் நிபுணர்களின் எச்சரிக்கை ஆலோசனைகளைப் புறக்கணித்து 900 கி.மீ சார்தாம் நெடுஞ்சாலை போன்ற நெடுஞ்சாலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. EIAவிலிருந்து 100 கி.மீ அல்லது அதற்கும் குறைவான திட்டங்களுக்கு விலக்கு அளிக்கும் விதியை நிறைவேற்றியதன் மூலமும், சார் தாமை பல சிறிய திட்டங்களாக ‘பிரிப்பதன் மூலமும்’ EIA விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டன!

தபோவன்-விஷ்ணுகர் நீர்மின் திட்டம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது, இதனால் தொழிலாளர்கள் மற்றும் பலர் பெரும் உயிர் இழப்புக்கு ஆயினர். சார் தாம் யாத்திரையின் நுழைவாயிலான ஜோஷிமத் நகரத்தின் பாதிக்கும் மேற்பட்டவை தரையிறங்கிவிட்டன. அதேபோல் இப்பகுதியில் உள்ள பல சிறிய நகரங்களும் அவற்றின் சுமக்கும் திறனுக்கு அப்பாற்பட்ட திட்டமிடப்படாத வளர்ச்சியால் வலுக்குறைந்துள்ளன.

பாஜகவின் அழிவுகரமான வளர்ச்சிப் பாதையால் ஏற்பட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட பல பேரழிவுகளில் சமீபத்திய நிகழ்வுதான் உத்தரகாண்டில் உள்ள சில்க்யாராவில் சார் தாம் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை சரிந்த நிகழ்வு ஆகும்.

மென்திறன் கொண்ட தீவு சூழலியலின் அழிவு

சுற்றுச்சூழலை அப்பட்டமாக புறக்கணிக்கும் வகையில், அந்தமானில் சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களின் ஒரு சங்கிலித்தொடர் திட்டங்களுக்கென பெரும் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இது மிகவும் மென்மையான சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட இந்தத் தீவுகளின் தாங்கும் திறனுக்கு அப்பாற்பட்டது. இதில் பெருமளவிற்கு காடழிப்பு மற்றும் உலகில் கடைசியாக எஞ்சியிருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட பழமையான பழங்குடியினர் வசிக்கும் தீவுகள் மற்றும் இந்திய நிலப்பரப்பில் காணப்படாத பல உயிரினங்கள் கொண்ட, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான, புராதன வெப்பமண்டல காடுகளை உள்ளடக்கியதாகும்.

வடகிழக்கு மற்றும் அந்தமான் தீவுகளில் பாமாயில் நுழைவு

பாமாயில் இயக்கத்தின் கீழ் அந்தமான் தீவுகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வேறு சில பகுதிகளில் எண்ணெய் பனை சாகுபடி ஊக்குவிக்கப்படுகிறது. இது அந்தமான் தீவுகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளின் நுட்பமான சுற்றுச்சூழலை அச்சுறுத்துகிறது. அங்கு வன நிலங்கள் எண்ணெய் பனை சாகுபடிக்கு திருப்பி விடப்பட வாய்ப்புள்ளது. எண்ணெய் பனைகளை நடவு செய்வது இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் பெரிய அளவிலான காடழிப்புக்கு வழிவகுத்தது என்பதை நாம் இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது.

சுற்றுச்சூழல் குறித்து எவ்வளவுதான் பேசப்பட்டாலும், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு நமது காடுகள், மலைகள் மற்றும் தீவுகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. மாசுபாடு குறைக்கப்படவில்லை; காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. நமது இயற்கை வளங்களை இந்திய மற்றும் அந்நிய நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்காக திறந்து விடுவதிலேயே அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. நமது நாட்டின் எதிர்காலத்திற்காக இத்தகைய நகர்வுகள் எதிர்க்கப்பட வேண்டும்; தோற்கடிக்கப்பட வேண்டும்.

சுற்றுச்சூழலைக் காப்போம்!

பாஜகவை தோற்கடிப்போம்!

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *