Election2024 | மோடி அரசு -ஊழல்

எண்: 17

மோடி அரசாங்கத்தின் பொய்கள், பொய்கள் மேலும் பல பொய்கள்

ஊழல்

சொன்னது
‘நான் ‘சாப்பிட’ மாட்டேன்; (அதாவது ஊழல் செய்ய மாட்டேன்); வேறு யாரையும் ‘சாப்பிட’ அனுமதிக்க மாட்டேன்’ – நரேந்திர மோடி

உண்மை நடப்பு

மோடியின் பத்தாண்டு கால ஆட்சி மிகவும் வெற்றுத்தனமானது; பொய்யானது என்பதைக் காட்டுகிறது. உண்மை என்னவென்றால், ‘நான் மட்டுமே ‘சாப்பிடுவேன்’; வேறு யாரையும் ’ ‘சாப்பிட’ அனுமதிக்க மாட்டேன்.

இத்தகைய பீற்றலுக்குப் பிந்தைய பத்தாண்டுகளில், பாஜக அரசாங்கங்களால் ஏராளமாக ஊழல்கள் நடந்துள்ளன. வேண்டியவர்களுக்கு மட்டுமே சலுகை காட்டுவது என்பது (க்ரோனிசம்) ஒரு நிலையான வடிவம் பெற்றுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட கைமாறு – கட்சி மாறினால் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அந்தரத்தில் நிற்கும் என்பதற்கு வெட்கக்கேடான பல உதாரணங்கள் உள்ளன. இறுதியாக,

ஊழல் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளைப் பாதுகாப்பது என்ற பெயரில் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன.

மார்ச் 2019 வரை எந்த லோக்பாலும் நியமிக்கப்படவில்லை. இதற்கான விதிகள் மார்ச் 2020இல்தான் அறிவிக்கப்பட்டன. மார்ச் 2023 இல் சமர்ப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை, “லோக்பால் இன்றுவரை ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு நபரைக் கூட விசாரிக்கவில்லை என்று குழுவிடம் சமர்ப்பித்துள்ளது” என்று கூறுகிறது.

சிபிஐ, சிவிசி, அமலாக்க இயக்குநரகம் மற்றும் வருமான வரித் துறை போன்ற அனைத்து விசாரணை அமைப்புகளும் பலவீனப்படுத்தப்பட்டு, பாஜகவின் அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன – அதை எதிர்ப்பவர்கள் மீது வழக்குகளைத் தொடுத்து, சிலரை வழி மாற வற்புறுத்துவதற்கான அழுத்தத்தைப் பயன்படுத்துகின்றன.

அதை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் ஊழல் தடுப்புச் சட்டம் திருத்தப்பட்டது. இதேபோல், உயர் பதவிகளில் ஊழலை அம்பலப்படுத்துபவர்களைப் பாதுகாப்பதற்காக 2014இல் நிறைவேற்றப்பட்ட ஊழலை சுட்டிக் காட்டுவோர் பாதுகாப்பு சட்டம் (டபிள்யூபிபிஏ) பாஜக அரசாங்கத்தால் ஊழல் புகாரளிப்பதை திறம்பட ஊக்கப்படுத்துவது என்ற பெயரில் திருத்தப்பட்டது.

தேர்தல் பத்திரங்கள்

தேர்தல் பத்திரங்கள் மூலம் மற்ற அனைத்து கட்சிகளையும் விட பாஜகவுக்கு அதிக பணம் கிடைத்தது. மத்திய நிறுவனங்களால் சோதனையிடப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு பத்திரங்களை வாங்க நிறுவனங்கள் விரைந்து செல்லும் வழிகளையும் பல்வேறு ஊடக நிறுவனங்களின் செய்திஅறிக்கைகள் நிறுவியுள்ளன.
தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்த டஜன் கணக்கான நிறுவனங்கள் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னரே செயல்பாட்டிற்கு வந்தன. மேலும் பல பெரிய நன்கொடையாளர்கள் தாங்கள் ஈட்டிய லாபத்தை விட பல மடங்கு தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளனர். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் நன்கொடை அளித்த சம்பவங்களும் உண்டு!

இத்திட்டத்தை செயல்படுத்த பல சட்டங்களில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. இதற்கு முன்பு, எந்தவொரு நிறுவனமும் முந்தைய மூன்று ஆண்டுகளில் அதன் சராசரி நிகர லாபத்தில் 7.5 சதவீதத்திற்கு மேல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க இயலாது. இந்த கட்டுப்பாடுகளை நீக்கியதன் மூலம், மோடி அரசாங்கம் வேண்டுமென்றே ஆளும் கட்சியின் கஜானாவுக்குள் பாயும் வரம்பற்ற நிழல் பணத்திற்கு கதவுகளை திறந்துவிட்டது.
தானே-போரிவ்லி சுரங்கப்பாதை திட்டத்திற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு முன்பு, மேகா இன்ஜினியரிங் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் (எம்.இ.ஐ.எல்) தேர்தல் பத்திரங்களாக ஒரு பெரிய தொகையை செலுத்தியது.

35 மருந்து நிறுவனங்கள் பத்திரங்கள் மூலம் ரூ. 1,000 கோடியை வழங்கியுள்ளன. இந்த நிறுவனங்களில், ஏழு நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு, பத்திரங்களை வாங்கியபோது தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்ததாக அவை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன என்பதும் வெளிப்பட்டுள்ளது.
இந்த முழு திட்டமும் வெளிப்படைத்தன்மையை மீறுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்காமல் இருந்திருந்தால், நன்கொடையாளர்கள் மற்றும் கட்சிகள் பெற்ற தொகைகளின் விவரங்களை வெளியிட எஸ்பிஐ மற்றும் தேர்தல் ஆணையத்தை கட்டாயப்படுத்தாமல் இருந்திருந்தால், இந்த மோசடி இப்போதும் தொடர்ந்து கொண்டே இருந்திருக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆரம்பத்திலேயே, 2017 ஆம் ஆண்டிலேயே, இந்த திட்டத்தை எதிர்த்தது. மேலும், இது தேர்தல் நிதியில் ஊழல் நடைமுறைகளுக்கான ஒரு செய்முறை என்றும், ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஆடுகளத்தை திசைதிருப்பும் என்றும் எச்சரித்தது. எனவே பத்திரங்கள் மூலம் எந்த நிதியையும் ஏற்கவும் அது மறுத்துவிட்டது.

பணமதிப்பிழப்பு

பொருளாதாரத்தில் இருந்து கருப்புப் பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு முயற்சி தோல்வியடைந்தது. மாறாக கோடிக்கணக்கான கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற வழி வகுத்தது.

வெளிநாடுகளில் உள்ள வரி ஏய்ப்புக்கான புகலிடங்களில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு கொண்டு வருவோம் என்ற வாக்குறுதி எங்கும் செல்லவில்லை. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன், ஒரு மோசமான வரி புகலிடமான கேமன் தீவுகளில் இருந்து ஒரு ஹெட்ஜ் நிதியை நடத்தி வருவது தெரியவந்தது.
வெளிநாடுகளில் உள்ள கணக்குகளில் இருந்து மீட்கப்பட்ட பணத்தில் இருந்து நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வது பற்றி அரசாங்கத்தில் யாரும் இப்போது பேசுவதில்லை.

மோடி அரசாங்கம், ஊழலை எதிர்த்துப் போராடுவதாக பாசாங்கு செய்தாலும், மேசைக்கு அடியில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு பணம் செலுத்துவதற்கான ஒரு வழிமுறையை நிறுவனமயமாக்கியதன் மூலம் உண்மையில் மிகவும் ஊழல் நிரம்பிய ஒரு கட்சியே பாஜக என்பதை நிரூபித்துள்ளது.
ரஃபேல் ஊழல்

பறக்கும் நிலையில் உள்ள 36 ரஃபேல் விமானங்களை நேரடியாக வாங்குவதற்கு ஆதரவாக 126 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான கிட்டத்தட்ட முழுமைபெற்றிருந்த ஓர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது என்ற மோடி அரசாங்கத்தின் முடிவு இந்திய வரலாற்றில் மிகப்பெரிய, மிகவும் வெட்கக்கேடான பாதுகாப்புத் துறை ஊழலாகும். டசால்ட் ஏவியேஷனுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்திய 126 ரஃபேல் விமானங்களுக்குப் பதிலாக, இறுதியில் இந்திய விமானப்படைக்கு 36 விமானங்கள் மட்டுமே கிடைத்தன.

இந்த 36 விமானங்களின் விலையானது முந்தைய ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட விலையை விட 27.01 மில்லியன் யூரோ அதிகம். இதில் மிகவும் வினோதமான விஷயம் என்னவென்றால், ரஃபேல் ஒப்பந்தத்தில், அனைத்து பாதுகாப்பு ஒப்பந்தங்களிலும் வழக்கமாக இடம்பெறும் தரமான ஊழல் எதிர்ப்பு பிரிவை இந்தியா தள்ளுபடி செய்தது ஆகும். புதிய ஒப்பந்தம் இந்தியாவின் முதன்மையான பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனமான எச்ஏஎல் நிறுவனத்திற்கு பதிலாக அனில் அம்பானிக்கு ஆப்செட் ஒப்பந்தத்தை (ரூ. 21,000 கோடி வணிகம்) பரிசளித்தது.

குற்றம் சாட்டும் காகிதங்கள் மற்றும் நாட்குறிப்புகள்

பிர்லா குழும நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது வருமான வரித் துறையால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மின்னஞ்சல்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் கையால் எழுதப்பட்ட குறிப்புகள், அரசியல்வாதிகள் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு, நடந்து வரும் விசாரணைகளை சீர்குலைக்க பெருமளவில் பணம் கொடுத்த உள்ளீடுகளைக் காட்டின. இவர்களில் அப்போதைய குஜராத் முதல்வர், இப்போது பிரதமராக இருப்பவரும் இருந்தார்.

இதேபோல், சஹாரா குழுமத்தின் மீதான சோதனையில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாகத் தோன்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே குஜராத் முதல்வர் இங்கேயும் குறிப்பிடப்பட்டிருந்தார்.

பிர்லா-சஹாரா பத்திரிகைகள் என்று அழைக்கப்பட்ட பத்திரிகைகள், உதிரித் தாள்கள் எந்த விசாரணைக்கும் தகுதியற்றவை என்று கூறி அமைதியாக புதைக்கப்பட்டன.

இதேபோல், அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் காலிக்கோ புல் ஆகஸ்ட் 2016 இல் தற்கொலை செய்து கொண்டபோது, அவர் ஒரு தற்கொலைக் குறிப்பை விட்டுச் சென்றார். தனது அரசை டிஸ்மிஸ் செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கடுமையான குற்றச்சாட்டுகள் அந்த குறிப்பில் முன்வைக்கப்பட்டன. இந்த நீதிபதிகளில் ஒருவர் பின்னாளில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆன போதிலும், அவரது மகன் புல்லை அணுகி ரூ. 49 கோடிக்கு தீர்ப்பை தனக்கு சாதகமாக நிர்ணயிக்க முன்வந்திருந்தார்.

விசாரணையில் இருந்து தப்பிய மற்றொரு டைரி, கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா எழுதியதாகக் கூறப்படும் டைரி. மற்றவற்றைப் போலவே, இதுவும் மேலோட்டமாகப் பார்த்தால், 2009 வாக்கில் பா.ஜ.க.வின் மூத்த தேசிய தலைவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதை விவரிக்கிறது. இதில் அடங்கியிருந்த மொத்த தொகை ரூ.1,800 கோடி ஆகும். இந்த பதிவுகளின் உண்மைத்தன்மையை தீர்மானிக்க எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

அமித் ஷாவின் மகனின் நிறுவனம் மற்றும் பிற வழக்குகள்

அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்கு சொந்தமான அதிகம் அறியப்படாத டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வரவு-செலவு 2014-15 ஆம் ஆண்டில் வெறும் ரூ. 50,000 ஆக இருந்தது. இது 2015-16 ஆம் ஆண்டில் ரூ. 80.5 கோடியாக உயர்ந்தது – அதாவது ஒரே வருடத்தில் 16,000 மடங்கு உயர்வு.
நம் கவனத்தை கவரும் வகையில், அதே காலகட்டத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூத்த நிர்வாகி பரிமல் நத்வானியின் மைத்துனர் ராஜேஷ் கந்த்வாலுக்கு சொந்தமான ஒரு நிதி நிறுவனம், ஷாவின் நிறுவனத்திற்கு ரூ. 15.78 கோடி பிணையமற்ற கடனை முன்வைத்தது!

அமித் ஷா இயக்குநராக இருந்த அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட 5 நாட்களில் ரூ.745.59 கோடியை டெபாசிட் செய்துள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாவட்ட கூட்டுறவு வங்கியும் செல்லாத நோட்டுகளை இவ்வளவு அதிக அளவில் டெபாசிட் செய்ததில்லை.
மோடி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த பியூஷ் கோயல், அவருக்கும் அவரது மனைவிக்கும் சொந்தமான ஒரு நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் அஜய் பிரமல் குழுமத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு, பங்குகளின் முகமதிப்பை விட கிட்டத்தட்ட 1,000 மடங்கு அதிக விலைக்கு விற்றார். கோயல் அமைச்சரான பின்னர் இந்த விற்பனை நடந்தது. ஆனால் நிறுவனத்தின் முந்தைய உரிமையோ அல்லது விற்பனை செய்யப்பட்ட 2014 அல்லது 2015ஆம் ஆண்டில் அமைச்சராக இருந்த கோயலின் சொத்து அறிவிப்புகளிலோ இது குறிப்பிடப்படவில்லை.
வேண்டியவர்களுக்கு வார் வழங்கல் (குரோனிசம்)

முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) க்கு சாதகமாக தொலைத் தொடர்புத் துறையின் விதிகள் பலமுறை மாற்றப்பட்டுள்ளன. இதைவிட அப்பட்டமாக மனிதவள அமைச்சகம் ரிலையன்ஸ் குழுமத்தால் நிறுவப்படவிருந்த ஒரு பல்கலைக்கழகத்திற்கு “இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினென்ஸ்” என்ற பட்டத்தை வழங்கியது.

இந்த அரசாங்கத்தின் தாராள மனப்பான்மையின் மற்றொரு முக்கிய பயனாளியாக அதானி குழுமம் உள்ளது. ஒன்றன் பின் ஒன்றாக மோசடிகளில் மீண்டும் மீண்டும் அதன் பெயர் எழுந்துள்ளது. ஆனால் சிறிதளவு பயனும் இல்லை. ஹிண்டன்பர்க் அறிக்கை, அதானி குழுமம் அதன் நிறுவனங்களின் பங்கு விலைகளை கையாள வரி ஏய்ப்பு தீவுகளில் பதிவு செய்யப்பட்ட முன்னணி நிறுவனங்களை பயன்படுத்திய விதத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. அதானி, எஸ்ஸார் மற்றும் அனில் அம்பானி குழுமங்கள் தங்கள் மின் திட்டங்களுக்கு நிலக்கரி இறக்குமதியை அதிகப்படியான விலைப்பட்டியல் மூலம் கூடுதலாக ரூ. 50,000 கோடி சம்பாதித்ததாகவும், பின்னர் இந்த உயர்த்தப்பட்ட செலவுகளின் அடிப்படையில் அதிக கட்டணங்களை வலியுறுத்தியதாகவும் விசாரணை அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி, சத்தீஸ்கரில் உள்ள சில அடர்த்தியான வனப்பகுதிகளில் திறந்தவெளி வார்ப்பு சுரங்கத்திற்கு அனுமதிக்கப்பட்ட ராஜஸ்தான் பொதுத்துறை நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்க ஒப்பந்தக்காரர்களாக அதானிகளும் முக்கிய பயனாளிகளாக உள்ளனர்.

மல்லையா, நீரவ் மோடி மற்றும் பலர் தப்பித்த வங்கி மோசடி

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி மற்றும் பலர் பொதுத்துறை வங்கிகளில் பல்லாயிரக்கணக்கான கோடிகளை கடனாக வாங்கி, திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற விதம் அனைவரும் அறிந்ததுதான். பொதுமக்களின் சீற்றம் அவர்களை மீண்டும் நீதியின் முன் நிறுத்துவதற்கான தீர்மானங்களை நிறைவேற்ற அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியது. எனினும் அரசின் முயற்சிகள் தீவிரமாக இல்லாததால் அவை வெற்றி பெறவில்லை.

சத்தீஸ்கரில் பி.டி.எஸ் ஊழல், மத்தியப் பிரதேசத்தில் வியாபம் ஊழல் அல்லது கர்நாடகாவில் சுரங்க ஊழல் என சிபிஐ அல்லது அமலாக்கத்துறையின் எந்தவொரு சோதனையையும் அவற்றை எதிர்கொள்ளும் முதல்வர்களை கண்டறியவில்லை. இதற்கான ஒரே காரணம் அவர்கள் அனைவருமே பாஜகவை சேர்ந்தவர்கள் என்பதுதான்.

மோடி ஆட்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஊழல், மோசடிகள் நடந்துள்ளன. அவர்கள் முழு அமைப்பையும் சீரழித்துள்ளனர். அதைப் போன்றே ஜனநாயக நிறுவனங்களையும் திட்டமிட்ட வகையில் சீரழித்து வருகின்றனர்.

வரலாறு காணாத ஊழலை எதிர்த்துப் போராடுவோம்!

பாஜகவை தோற்கடிப்போம்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *