Hindu communalism - Modi government | மோடி அரசு - இந்துத்துவ வகுப்புவாதம்

மக்கள் களம் – “இந்துத்துவ வகுப்புவாதம்”

2024 நாடாளுமன்றத் தேர்தல்

பரப்புரை எண்: 2

மோடி அரசின் பொய்கள், பொய்கள், மேலும் பல பொய்கள்

இந்துத்துவ வகுப்புவாதம்

சொன்னது

“அனைவரோடும் சேர்ந்து, அனைவரின் நன்மைக்காக, அனைவரின் நம்பிக்கையைப் பெற்று, அனைவரின் முயற்சியோடும் நாம் முன்னேறுவோம்”
“எவரொருவரையும் திருப்திப்படுத்த அல்லாமல், அனைவருக்குமான நீதியை நிலைநாட்டுவோம்”

உண்மை நடப்பு

மோடி அரசின் பத்தாண்டுகால ஆட்சியானது மதச்சார்பின்மையின் மீது கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளதோடு, இந்திய அரசை மதச்சார்பின்மையிலிருந்து விலக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்துள்ளது.

அரசை மதச்சார்பின்மையிலிருந்து விலக்குதல்

2024 ஜனவரி 22 அன்று அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் திறப்புவிழா ஒரு திருப்புமுனை நிகழ்வாகும். நாட்டின் பிரதமர் தலைமை குருவாக இருந்து செயல்பட்ட, அரசு அனுசரணையுடன் நடைபெற்ற இந்த விழா அரசும் மதமும் ஒன்றிணைவதை குறிப்பதாக இருந்தது. மற்ற எல்லா மத நம்பிக்கைகளுக்கும் மேலாக இந்து மதத்திற்கு முன்னுரிமை அளித்ததன் மூலம் மதச்சார்பற்ற கோட்பாட்டின் அடிப்படையை மீறியதையும் அது குறித்தது.

அமைச்சரவை தீர்மானத்தைத் தொடர்ந்து ராமர் கோயில் திறப்புவிழா குறித்து நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானம் இந்தக் கோயிலை ‘தேசிய உணர்வின் சின்னமாகவும்’ ‘நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் மறக்கமுடியாத ஒரு தருணமாகவும்’ மாற்ற முயன்றுள்ளது. இதனால் ஒரு மதத்தின் வழிபாட்டுத் தலம் ‘இந்தியாவின் தொலைநோக்காக, தத்துவமாக மற்றும் பாதையின் அடையாளமாக’ உயர்த்தப்பட்டுள்ளது.

காசியில் உள்ள ஞான வாபி மசூதியையும், மதுராவில் உள்ள ஈத்காவையும் கோயில்களாக மாற்ற ஆர் எஸ் எஸ் மற்றும் இந்துத்துவா சக்திகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இது அரசு நிர்வாகம் மற்றும் நீதித்துறையின் உடந்தையோடு, வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 1991-ஐ மீறுவதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

குடியுரிமையை மத அடையாளத்துடன் இணைத்தல்

2019 டிசம்பரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது மோடி அரசு. குடியுரிமையை மத அடையாளத்துடன் இணைப்பதன் மூலம் குடியுரிமை என்ற மதசார்பற்ற கருத்தை மீறும் ஒரு சட்டம் அது. சட்டபூர்வமான ஆவணங்கள் ஏதுமில்லாமல் அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய மக்களுக்கு அவர்கள் இந்து, சீக்கிய, பவுத்த அல்லது கிறித்துவ மதங்களை சேர்ந்தவர்களாக இருப்பின் குடியுரிமை வழங்கப்படும். மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பிற்கு சில நாட்களுக்கு முன்பாக, 2024 மார்ச் 11 அன்று இந்தச் சட்டத்தின் கீழ் விதிகள் அறிவிக்கப்பட்டன.

குடியுரிமை திருத்தச் சட்டத்துடன் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டைப் புதுப்பிக்கவும், அதன் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்கவும் மோடி அரசு விரும்புகிறது. அதில் இந்தியாவில் வசிக்கும் குடிமக்களின் முன்னோர்கள் குறித்துச் சரிபார்க்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள்

சிறுபான்மையினரை குறிவைத்து பல்வேறு மாநில அரசுகள் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. அவற்றில் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் பசுவதை தடுப்புச் சட்டங்கள்; கட்டாய மத மாற்றங்களுக்கு எதிரான சட்டங்கள்; லவ் ஜிஹாத் எனப்படும் மதத்தை மீறிய திருமணங்களுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அதைப் போன்றே குஜராத், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களிலும் இத்தகைய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தச் சட்டங்கள் முஸ்லீம்களுக்கு எதிராக, குறிப்பாக கால்நடை வர்த்தகம் மற்றும் இறைச்சி விற்பனையில் ஈடுபடுவோருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன. உத்திரப் பிரதேசம் போன்ற ஒரு மாநிலத்தில் கலப்புத் திருமணத்தை மேற்கொண்டமைக்காக ஏராளமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

உத்தராகண்ட் மாநிலம் சமச்சீரான குடிமக்கள் விதிமுறையை (யுசிசி) ஏற்றுக் கொண்டுள்ளது. இது அடிப்படையில் பெரும்பான்மை பிரிவினருக்கு ஆதரவானதே தவிர, சமச்சீரானதோ அல்லது மக்களுக்கானதோ அல்ல. பாஜக ஆளும் பிற மாநிலங்களில் இதுபோன்ற விதிமுறைகளை அமலாக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

இரண்டாம் தர குடிமக்கள்

களத்தில், முஸ்லீம்களின் வாழ்வாதாரமான கால்நடைத் தொழில், இறைச்சிக் கடைகள் ஆகியவற்றைக் குறிவைத்து பசுவதை அல்லது மாட்டிறைச்சி விற்பதாக குற்றம் சாட்டுகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் இயற்றப்பட்ட சட்டங்கள் கால்நடை மற்றும் இறைச்சி வர்த்தகத்தை தடைசெய்யப் பயன்படுத்தப்படுகின்றன.

மத்தியப் பிரதேசம் (இந்தூர்), ராஜஸ்தான் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் வியாபாரிகளாகவோ அல்லது ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்களாகவோ தங்கள் வாழ்க்கையை நடத்தும் முஸ்லீம்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்கள் தங்கள் வாழ்வாதார வழிகளை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

உத்திரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லீம்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பது வழக்கமானதொரு நிகழ்வாக ஆகிவிட்டது. உதாரணமாக, ஹரியானா மாநில நிர்வாகத்தால் நுஹ் நகரில் 1208 கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள் தரைமட்டமாக்கப்பட்டன.

சிறுபான்மையினர் மீதான வன்முறையும் துன்புறுத்தலும்

கால்நடைகளைக் கொண்டு சென்றதாக அல்லது சந்தேகத்திற்குரிய வகையில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டு, அவர்களை கும்பலாகச் சேர்ந்து அடித்துக் கொல்வது வழக்கமானதொரு நிகழ்வாகி விட்டது. 2015ஆம் ஆண்டில் தாத்ரியில் (உத்திரப்பிரதேசம்) முகமது அக்லக் மீதான முதல் கும்பல் கொலைக்குப் பிறகு இத்தகைய கும்பல் கொலைகள் அதிகரித்துள்ளன. உதாரணமாக, 2019ஆம் ஆண்டில் 107 கும்பல் கொலை சம்பவங்கள் பத்திரிக்கைகளில் பதிவாகியுள்ளன. கும்பல் கொலைகள் மற்றும் வெறுப்பு அடிப்படையிலான குற்றங்கள் குறித்த புள்ளிவிவரங்களை சேகரிப்பது 2017ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட பிறகு இதுகுறித்து அதிகாரபூர்வ பதிவு ஏதும் இல்லை.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தல் (என்சிஆர்பி) இந்திய தண்டனைகள் சட்டப் பிரிவு 153ஏயின் கீழ் பதிவு செய்யப்பட்ட மதம், இனம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் குழுக்களிடையே பகைமையை வளர்ப்பதற்கான வெறுக்கத்தக்க பேச்சுகள் மற்றும் பிற செயல்கள் குறித்த புள்ளிவிவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதன்படி 2021ஆம் ஆண்டில் இதுபோன்ற 993 வழக்குகள் இருந்தன. 2022இல் இது 1444 ஆக உயர்ந்தது என தெரிய வந்துள்ளது.

ராமநவமி ஊர்வலங்கள் முஸ்லீம்களுக்கு எதிரான வகுப்புவாத வன்முறையை தூண்டுவதற்கான மற்றொரு வழிமுறையாக மாறியுள்ளன. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற மோதல்கள் முஸ்லீம்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பதற்கான சாக்குப்போக்காக மாறுகின்றன. 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் ராமநவமியின்போது பீகார், மகாராஷ்ட்ரா, உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற வன்முறைகள் நிகழ்ந்தன.

ஐக்கிய கிறித்துவ மன்றம் (யுசிஎஃப்) தெரிவிக்கும் தரவுகளின் படி 2023இல் தேவாலயங்கள், மத போதகர்கள் மற்றும் சபைகளின் மீது 720 தாக்குதல்கள் நடந்தன. 2014இல் இதுபோன்ற 147 தாக்குதல்கள் நடைபெற்றன. அதை ஒப்பிடுகையில் 2021இல் 505 தாக்குதல்களும் 2022இல் 509 தாக்குதல்களும் நடந்தன.
தங்கள் ஆட்சியில் கலவரங்கள் ஏதும் நடக்கவில்லை என்று பாஜக அரசு தொடர்ந்து கூறிவருகிறது. இதுகுறித்த உண்மை மிகவும் வித்தியாசமானதாகும். 2017க்கும் 2022க்கும் இடையில் 2900 வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாக உள்துறை இணை அமைச்சர் நித்யநாத் ராய் 2022 டிசம்பர் 7 என்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.

பியூ ஆராய்ச்சி மையம் அதன் ‘சமூக விரோத குறியீட்டில்’ பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் இந்தியாவை ‘மிக உயர்ந்த’ பிரிவில் வைத்துள்ளது. மேலும் 2019க்கும் 2020க்கும் இடைப்பட்ட காலத்தில் இது மேலும் மோசமடையும் போக்கை குறிப்பதாகவும் தெரிவித்திருந்தது.
கல்வி முறையை மறுவடிவமைத்தல்

மத்திய, மாநில அரசு மட்டங்களில் பள்ளிகளுக்கான வரலாற்றுப் பாட நூல்களை மீண்டும் திருத்தி எழுத தீவிரமான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் மத விழுமியங்களையும் இந்துத்துவ சித்தாந்தங்களையும் பாட திட்டத்திலும், படிப்பிற்கான கட்டமைப்பிலும் புகுத்த முயல்கிறது.

இந்துத்துவ ராஷ்ட்ரத்திற்கான நடவடிக்கை

பாஜக – ஆர் எஸ் எஸ் ஆட்சியின் கீழ், மதசார்பற்ற கோட்பாட்டின்மீது அனைத்துவகையான தாக்குதல்களும் நிகழ்ந்துள்ளன. அது அரசியல் அமைப்பு முன்வைக்கும் விழுமியங்களாக இருந்தாலும் சரி, அரசு எந்தவொரு மதத்திற்கும் முன்னுரிமை அளிக்காமல் சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதி செய்வதாக இருந்தாலும் சரி, அவற்றின் மீது இத்தகைய தாக்குதல்கள் நீடிக்கின்றன.

இந்திய அரசை மதச்சார்பின்மை கோட்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சி, கருத்தியல், அரசு நிர்வாகம், அரசியல் அமைப்பு ஆகிய தளங்களில் முன்னெடுக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜகவிற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்தால், அரசியல் அமைப்பை மாற்றுவோம் என்பது குறித்தும் பேசப்படுகிறது.

மோடி அரசும், பாஜகவும் ஆட்சியில் நீடிக்குமானால், மதச்சார்பின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ‘இந்து ராஷ்ட்ரம்’ கட்டமைக்கப்படும். வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது என்பது குடியரசின் மதசார்பற்ற தன்மையை பாதுகாப்பதற்கான முன் நிபந்தனை ஆகும். இதில் அனைத்து குடிமக்களும் மதவேறுபாடுகளை கருதாமல் ஈடுபடுவதன் மூலமே சம அந்தஸ்தையும் ஜனநாயக உரிமைகளையும் பெறுவார்கள்.

மநுவாத இந்துராஷ்ட்ரத்தை நோக்கிய நகர்வை எதிர்ப்போம்!

பாஜகவை தோற்கடிப்போம்!!

 

Communist Party of India (Marxist)

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *