Election2024- Modi- economy | மோடி அரசு - பொருளாதாரம்

எண் : 8

மோடி அரசாங்கத்தின் பொய்கள், பொய்கள், மேலும் பல பொய்கள்

பொருளாதாரம்

சொன்னது

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. இன்னும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் நான்காவது பெரிய அல்லது மூன்றாவது பெரிய நாடாக அது மாறும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு அல்லது அந்த ஆண்டில் 5 டிரில்லியன் அல்லது 10 டிரில்லியனை எட்டும்…
‘நல்ல நாள்’, ‘அமிர்த காலம்’, ‘உன்னத பாரதம்’ போன்ற வழக்காறுகள் புதிதாக நம் முன்னால் தோன்றியுள்ளன.

உண்மை நடப்பு

இந்திய மற்றும் உலகளாவிய பங்குச் சந்தை மற்றும் கார்ப்பரேட் உலகம் இந்த வகையான பேச்சையே விரும்புகிறது. ஏனெனில் இது அவர்களுக்கு மேலதிக சூப்பர் லாபத்திற்கான பொன்னான வாய்ப்புகளை உருவாக்குகிறது.

பல சாமானிய மக்கள் இந்த பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, இந்தியாவின் பொருளாதாரம் கர்ஜிக்கிறது என்றும், ‘அச்சே தின்’ (நல்ல நாள்) மிக அருகில்தான் உள்ளது என்றும் நம்பத் தொடங்குகிறார்கள். இது மோடியின் விளம்பர மேலாளர்களால் ஊட்டி வளர்க்கப்பட்ட முழுமையானதொரு மாயையே ஆகும்.

உயர்ந்த ஜிடிபி வளர்ச்சி மற்றும் பெரிய பொருளாதாரம் ஆகியவற்றால் நாட்டின் சாமானிய மக்கள் பயனடைகிறார்கள் என்று இதற்குப் பொருளல்ல.

நடைமுறையில் உள்ள பணவீக்க விகிதங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.3 சதவீதத்திலிருந்து 3 சதவீதத்திற்கும் குறைவான நிலைக்கு குறையும். உண்மையான சித்திரம் மேலும் மோசமாகவும் இருக்கலாம். ஏனென்றால்

பணமதிப்பிழப்புக்குப் பிந்தைய காலகட்டத்தில் அமைப்புசாரா துறையின் நிலையைப் படம்பிடிக்க புதுப்பிக்கப்பட்ட குறிகாட்டிகள் எதுவும் நம்மிடம் இல்லை.

பெரிய ஜிடிபி அல்லது அதிக வளர்ச்சி என்பது வளமான மக்களை அர்த்தப்படுத்தாது என்பதற்கு இந்தியா ஒரு சிறந்த உதாரணம். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதன் மக்கள்தொகை அடிப்படையில் வகுத்தால் – அதாவது ஒரு நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிட்டால் – உண்மை உடனடியாக அம்பலமாகும்.

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் 213 நாடுகள் / பிரதேசங்களில் இந்தியா 147 வது இடத்தில் உள்ளது. உண்மை என்னவென்றால், இந்தியா, உலகின் மிக அதிக அளவில் ஏழை மக்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.

உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 2016 இல் 118 நாடுகளில் 97 வது இடத்தில் இருந்தது. இது 2023 இல் 125 நாடுகளில் 111 ஆக சரிந்தது.

மக்களின் செழிப்புக்கு சான்றாக, அதிகரித்த வங்கிக் கணக்குகளை அரசு காட்சிப்படுத்துகிறது. 52 கோடி ஜன் தன் கணக்குகள் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது – இந்த எண்ணிக்கை வயது வந்த இந்திய மக்கள் தொகையில் பாதி பேருக்கு சமம். இந்த கணக்குகளில் உள்ள வைப்புத்தொகைகள் மிகக் குறைந்த பங்கைக் கொண்டுள்ளன – தனிநபர்கள் வைத்திருக்கும் வங்கிகளின் மொத்த வைப்புத்தொகையில் 2.5 சதவீதத்திற்கும் குறைவானது – மற்றும் தனிநபர்கள் வைத்திருக்கும் அனைத்து சேமிப்பு வைப்புகளில் 4.5 சதவீதம் மட்டுமே. ஜன் தன் கணக்குகளில் சராசரி இருப்பு 20.02.2024 நிலவரப்படி வெறும் ரூ .4227 மட்டுமே. 4.3 கோடி கணக்குகளில் ஜீரோ பேலன்ஸ் உள்ளது.

மோடி ஆட்சியின் தொடக்கத்தில், மக்களின் அவமதிப்பை பெற்றுக் கொண்ட ரங்கராஜன் கமிட்டி, நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ. 47க்கு குறைவாகவும், கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ. 32க்கு குறைவாகவும் சம்பாதிப்பவர்கள் மட்டுமே வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர் என்று கூறியது. 5 சதவீத மக்கள் மட்டுமே ஏழைகள் என்று நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் இந்த அபத்தமான வரையறையே செல்வாக்கு செலுத்துகிறது.

அவர்கள் வறுமையை எவ்வாறு அளவிடுகிறார்கள்? வருமானத்தையோ, சம்பாத்தியத்தையோ கருத்தில் கொண்டு அல்ல. கழிப்பறை, குடிநீர், நல்ல சமையல் எரிபொருள், வங்கிக் கணக்கு அல்லது தொலைபேசி இல்லாதது உள்ளிட்ட 12 குறிகாட்டிகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர். கட்டப்பட்ட கழிப்பறைகளின் எண்ணிக்கை அரசாங்க தரவுகளை நம்பி கணக்கிடப்பட்டுள்ளது. இது மிகவும் நம்பகத்தன்மையற்றது. உதாரணமாக, பல கழிப்பறைகள் இல்லை. மேலும் பல,

தண்ணீர் வழங்கல் அல்லது கழிவுநீர் குழாய் இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
மொபைல் போன்கள் இப்போது ஓர் அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டதே தவிர, அது செழிப்பின் குறிகாட்டி அல்ல. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட ஊதியம் மற்றும் அரசாங்க சலுகைகள் போன்றவற்றைப் பெற வங்கிக் கணக்குகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மேலும் கடுமையான வறுமை காரணமாக, பலர் அதைப் பயன்படுத்தப்படாமல் உள்ளனர். ஆனால், காகிதத்தில், இவற்றை வைத்திருப்பது வறுமையை ‘குறைப்பதை’ நிரூபிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த வரையறையின்படி, பருவகாலத்தில் மட்டுமே கிடைக்கும் வேலையில் நாளொன்றுக்கு ரூ. 240 சம்பாதிக்கும் நிலமற்ற தொழிலாளி இனி ஏழையாக கருதப்பட மாட்டார்!

32 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 சதவீத குடும்பங்கள் நல்ல சமையல் எரிவாயுவைப் பயன்படுத்தவில்லை. 30 சதவீத குடும்பங்களுக்கு முறையான சுகாதார வசதிகள் இல்லை. 41 சதவீத குடும்பங்களுக்கு போதுமான வீடுகள் இல்லை என்பதை நிதி ஆயோக் அறிக்கையே ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட 2022-23 ஆம் ஆண்டிற்கான நுகர்வு செலவு தரவுகள், கிராமப்புறங்களில், நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் சராசரி மாத செலவு 2011-12 விலையில் ரூ. 8032 அல்லது தற்போதைய விலைகளில் ரூ .15,092 ஆகும். இதேபோல், நகர்ப்புறங்களில், அத்தகைய குடும்பம் 2011-12 விலையில் சராசரியாக ரூ. 10,520 அல்லது தற்போதைய விலையில் ரூ. 25,836 செலவிடுகிறது.

2018-19ஆம் ஆண்டில் ஒரு அரசாங்க கணக்கெடுப்பில், விவசாய குடும்பங்களின் சராசரி வருமானம் மாதத்திற்கு வெறும் ரூ.10,218 ஆகும். அதாவது அவர்களின் செலவினங்களை விடக் குறைவு. எனவே அவர்களில் பலர் பெரும் கடனில் உள்ளனர். 2022-23ஆம் ஆண்டிற்கான குறிப்பிட்ட கால அளவிலான தொழிலாளர் படை குறித்த (பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ்) கணக்கெடுப்பில், வழக்கமான ஊழியர்கள் மாதத்திற்கு சுமார் ரூ. 20,000 சம்பாதிக்கும் நிலையில், சாதாரண தொழிலாளர்கள் மாதத்திற்கு ரூ. 12,000 மட்டுமே பெற்றனர்; சுயதொழில் செய்பவர்கள் சராசரியாக மாதத்திற்கு ரூ. 13,000 சம்பாதித்தனர். இந்த வருமானங்கள் மேலே குறிப்பிட்ட சராசரி நுகர்வை விட மிகக் குறைவு.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதாக அரசு உறுதியளித்த போதிலும், அதை கட்டுப்படுத்த அரசாங்கம் விரும்பாததால் ஏழைகள் மேலும் மேலும் கொள்ளையடிக்கப்படுகிறார்கள். நுகர்வோர் விலைக் குறியீடு குறித்த சமீபத்திய அரசாங்க தரவுகளின்படி, ஜூன் 2014க்கும் ஜனவரி 2024க்கும் இடையில், தானியங்கள் மற்றும் பொருட்களின் விலை 54 சதவீதமும், இறைச்சி மற்றும் மீன் 73 சதவீதமும், முட்டை 77 சதவீதமும், பால் மற்றும் பொருட்கள் 53 சதவீதமும், எண்ணெய் மற்றும் கொழுப்புகள் 48 சதவீதமும், காய்கறிகள் 48 சதவீதமும் அதிகரித்துள்ளன. பருப்பு வகைகள் மற்றும் பொருட்கள் 82 சதவீதமும், நறுமணப் பொருட்கள் 112 சதவீதமும் அதிகரித்துள்ளன.

இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களைத் தவிர, சுகாதார செலவுகள் 71 சதவீதமும், கல்விக்கான செலவுகள் கிட்டத்தட்ட 60 சதவீதமும் அதிகரித்துள்ளன. ஒட்டுமொத்தமாக, இந்த காலகட்டத்தில் பொது விலைக் குறியீடு கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

வேண்டுமென்றே விலையை உயர்த்துவதில் அரசாங்கத்தின் நேரடி பங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விஷயத்தில் வெளிப்படுகிறது. மே 2014 முதல் பிப்ரவரி 2024 வரை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் குறைந்திருந்தாலும், உள்நாட்டில் பெட்ரோல் விலை 35 சதவீதமும், டீசல் விலை 62 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஏனென்றால் மோடி அரசு அதிக வரிகளையும், கூடுதல் தீர்வைகளையும் விதித்து இவற்றின் விலைகளை உயர்த்தி வைத்துள்ளது. இது மக்களுக்கு மறைமுக வரி விதிக்கும் ஒரு வழியாகும்.

2014-15 முதல் 2023-24 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பெட்ரோலியப் பொருட்களில் இருந்து வசூலிக்கப்பட்ட மொத்த வரி ரூ. 28.33 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 82 சதவீதத்திற்கும் அதிகமானவை மத்திய அரசு விதித்த கலால் வரி காரணமாகும். ஏழை மற்றும் கீழ் நடுத்தர வர்க்க வீடுகளில் உள்ள பெண்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை தேவைப்படும்போது மீண்டும் நிரப்ப முடியாத அளவுக்கு சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. பிப்ரவரியில், ஒரு சிலிண்டரின் விலை ரூ. 25/- உயர்த்தப்பட்டது. அண்மையில் ரூ. 100/- விலை குறைக்கப்பட்டது. நிச்சயமாக இது ஒரு தேர்தல் கால பசப்பு வார்த்தையே தவிர வேறல்ல.

ஏழைகள் ஏதாவது ஒரு பொருளை வாங்கும் ஒவ்வொரு முறையும் செலுத்தும் மறைமுக வரிகள்தான் இந்தியாவின் அரசாங்க வருவாயில் மூன்றில் இரண்டு பங்கிற்கு பங்களிக்கின்றன, அதே நேரத்தில் பணக்காரர்களில் முதல் 10 சதவீதம் பேர் – தேசிய வருமானத்தில் பாதிக்கும் மேல் உள்ளவர்கள் – நேரடி வரிகளாக மூன்றில் ஒரு பங்கை மட்டுமே பங்களிக்கின்றனர்.

2021-22ஆம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்த 9.65 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில், 5.81 லட்சம் நிறுவனங்கள் இழப்பு அல்லது பூஜ்ஜிய லாபத்தைப் பதிவு செய்துள்ள நிலையில், வெறும் 520 நிறுவனங்கள் மட்டுமே அனைத்து நிறுவனங்களின் மொத்த வருமானத்தில் 56.4 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன. மேலும் 1757 நிறுவனங்கள் கூடுதலாக 18.7 சதவீதத்தைக் கொண்டுள்ளன. பெருநிறுவன இலாபங்களும் பெருமளவில் குவிந்துள்ளன!

உண்மையில், கார்ப்பரேட் உலகம், பெரிய வர்த்தகர்கள் மற்றும் நிலப்பிரபுக்கள் செழித்து வளர்ந்து, தங்களுக்கென மட்டுமே உருவாக்கப்பட்ட அமிர்த காலத்தில் அதீத லாபத்தை அறுவடை செய்து கொண்டிருக்கையில், இந்திய மக்கள் பணவீக்கம், தொடர்ச்சியான வேலையின்மை மற்றும் குறைந்த வருமானம் ஆகியவற்றால் இரக்கமற்ற வகையில் கசக்கிப் பிழியப்படுகிறார்கள்.

2022ஆம் ஆண்டில், இந்தியாவின் மக்கள்தொகையில் பணக்கார 10 சதவீதம் பேர் தேசிய வருமானத்தில் 57 சதவீதத்தை எடுத்துக் கொண்டனர், அதே நேரத்தில் ஏழையாக உள்ள 50 சதவீதம் பேர் சுமார் 13 சதவீதத்தை மட்டுமே பெற முடிந்தது என்று உலக சமத்துவமின்மை தரவுத்தளம் தெரிவித்துள்ளது.

செல்வத்தின் உரிமையைப் பொறுத்தவரை, பணக்கார 10 சதவீதம் பேர் நாட்டின் தனியார் செல்வத்தில் கிட்டத்தட்ட 67 சதவீதத்தை வைத்திருக்கிறார்கள், அதே நேரத்தில் நடுத்தர 40 சதவீதம் பேர் 29.5 சதவீதமும், ஏழை 50 சதவீதம் பேர் 6 சதவீதத்திற்கும் குறைவாகவும் வைத்துள்ளனர். முதல் 10 சதவீதத்தினர் கீழ்மட்ட 50 சதவீதத்தினரை விட 20 மடங்கு அதிகமாக சம்பாதிக்கின்றனர்.

பொருளாதாரத்தின் உயர்ந்த வளர்ச்சி ஏழைகளுக்கு உதவவோ அல்லது வேலைவாய்ப்பை அதிகரிக்கவோ இல்லை. மாறாக, உண்மையில் அது மிகப்பெரியதான, வளர்ந்து வரும் சமத்துவமின்மையை உறுதிப்படுத்துகிறது, ஏனெனில் வளர்ச்சியின் நன்மைகள் அனைத்தும் உயரடுக்கின் ஒரு சிறிய பிரிவினரால் கைப்பற்றப்பட்டு விடுகின்றன.

நுகர்வோர் செலவினம் குறித்த முடிவுகளில் வெளியான குறைந்த வருமானம், தொடர்ச்சியான வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றின் காரணமாக, மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்களுக்கு சிறந்த உணவு மற்றும் பிற வாழ்க்கைத் தேவைகள் தேவைப்படும் போதிலும், பொருளாதாரம் தேவையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் கார்ப்பரேட் வரியில் பெருமளவு குறைப்பு மற்றும் கிட்டத்தட்ட ரூ. 15 லட்சம் கோடி மதிப்புள்ள வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வது உள்ளிட்டு அனைத்து வகையான பரிசுகள் மற்றும் சலுகைகளை அரசாங்கம் வழங்கிய போதிலும், பயனுள்ள தேவை

இல்லாததால், தனியார் துறையால் உற்பத்தி வசதிகளில் முதலீடு செய்யப்படவில்லை.

ஆனால், பொருளாதாரம் மீண்டு வர அரசு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய மறுக்கிறது. அரசாங்கம் தனது சொந்த செலவுகளைக் குறைத்து, தனியார் துறை எல்லாவற்றையும் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று மோடி நம்புகிறார். நவீன தாராளமயக் கோட்பாட்டின் மீதான இந்த குருட்டு நம்பிக்கையின் விளைவாக தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்க செலவினங்கள் 10-11 சதவீதமாக உள்ளன.

மத்திய அரசின் திட்டங்கள்/திட்டங்களுக்கான செலவினம், 2020-21 மற்றும் 2023-24 க்கு இடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவீதத்திலிருந்து 4.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களுக்கான செலவினமும் 1.9 சதவீதத்திலிருந்து 1.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், 2022-23 மற்றும் 2023-24 இல், PM-கிசான், உணவு மானியம், வீட்டுவசதி (PM-AWAS) மற்றும் MGNREGA ஆகியவற்றின் செலவுகள் முழுமையான தொகைகளில் வெட்டுக்களை சந்தித்துள்ளன. 2023-24 ஆம் ஆண்டில் இந்த நான்கு தலைப்புகளுக்கான ஒருங்கிணைந்த செலவு (திருத்தப்பட்ட மதிப்பீடுகள்) 2021-22 ஆம் ஆண்டின் செலவினத்தை விட 24 சதவீதம் குறைவாக இருந்தது.

பி.எம்-உஜ்வாலா திட்டம் மே 2016 இல் அசல் தொடங்கப்பட்டதிலிருந்து எல்பிஜி இணைப்புகளின் எண்ணிக்கையை 10 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது, அவற்றில் உஜ்வாலா 2.0 இன் போது அதாவது 2020 முதல் சுமார் 2.3 கோடி சேர்க்கப்பட்டுள்ளன, இந்த 10 கோடி இணைப்புகள் இந்தியாவில் உள்ள மொத்த எல்பிஜி இணைப்புகளில் சுமார் 30 சதவீதம் ஆகும். இந்தியாவில் மொத்த எல்பிஜி நுகர்வு 2015-16க்கும் 2019-20க்கும் இடையில் 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இது முந்தைய நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட 28 சதவீத அதிகரிப்பை விட மிக அதிகமாக இல்லை. உஜ்வாலா 2.0 இன் போது, வளர்ச்சி இன்னும் மெதுவாக இருந்தது. 2019-20க்கும் 2023-24க்கும் இடையில், இந்த அதிகரிப்பு வெறும் 11 சதவீதமாக இருந்தது.

அரசு என்ன செய்திருக்க வேண்டும்? வளங்களைத் திரட்ட பணக்காரர்கள் மீது வரி விதித்திருக்க வேண்டும், அந்தப் பணத்தை மக்களுக்கு சிறந்த கல்வி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு போன்றவற்றை வழங்க செலவழித்திருக்க வேண்டும். இது தொழில்துறை முதலீடுகளை ஊக்குவித்து மேலும் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்க வேண்டும். பொது விநியோக முறையை விரிவுபடுத்துவதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அதிக நலத்திட்டங்களை உறுதி செய்திருக்க வேண்டும். மாறாக, மக்கள் மீது தாக்குதலை தொடுத்து, அவர்களின் சுமைகளையும், சுரண்டலையும் அதிகரித்து, தேசிய, சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தையும் சுரண்டலையும் அதிகரிக்க அனைத்தையும் அது செய்துள்ளது

(தரவு ஆதாரங்கள்: உலக வங்கி; நிதி ஆயோக்; என்.எஸ்.எஸ்.ஓ; MoSPI; பாராளுமன்ற கேள்விகள்.)

பொருளாதாரத்தை வலுப்படுத்துக! ஏழைகளுக்கு நிவாரணம் வழங்குக!

பாஜகவை தோற்கடிப்பீர்!

 

Communist Party of India (Marxist)

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *