நேர மேலாண்மை (Time Management): இனிமேலாவது நேரப்பயன்பாடு ஆக்கபூர்வமாகட்டும் | 2025 New Year Resolution | 2025 புத்தாண்டு தீர்மானம் - https://bookday.in/

இனிமேலாவது நேரப்பயன்பாடு ஆக்கபூர்வமாகட்டும்

இனிமேலாவது நேரப்பயன்பாடு ஆக்கபூர்வமாகட்டும்

2024 ஆண்டு முடிந்து 2025 அடி எடுத்து வைக்க உள்ளோம். குடும்பத்தில், சமூகத்தில், நாட்டில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த கால நிகழ்வுகளை வரலாறாக படிக்கலாம். ஆனால் திரும்பப் பெற முடியாது. ஆக்கபூர்வமாக செலவழித்த நேரத்திற்கு பலன் நிச்சயம் கிடைத்திருக்கும். சிலருக்கு தாமதமாகலாம். உழைப்புக்கான பலன் நிச்சயம் உண்டு. கடந்த காலத்தில் நேரத்தை அதிகம் விரயம் செய்திருக்கலாம். இனியும் அவ்வாறு செய்தால் காலங்கள் நம்மை மன்னிக்குமா என்ற கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

வருத்தப்படுவதை விட அந்தத் தவறை மீண்டும் வருங்காலத்தில் செய்யாதிருப்பது புத்திசாலித்தனம். இங்கு தவறு என்பது நமது நேரம் ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு முதலீடு செய்யப்பட்டதா என்பதை குறிக்கிறது. பொருளியலில், ஒரு பண்டம் பணிக்கான காலப் பயன்பாட்டை (Time Utility) பொறுத்து அதன் மதிப்பு வேறுபடுகிறது. அதே சமயம் சரியான திட்டமிடுதல் முயற்சி பயிற்சி இருந்தால் நமது நேரத்தை ஆக்கபூர்வமான வழிகளில் செலவழித்து எல்லா காலங்களிலும் விலைமதிப்பற்றதாகவும் மாற்ற முடியும். உதாரணம் நேர மேலாண்மை (Time Management) சரியாக இருந்தால் 24 மணி நேரத்தில் உணவு மற்றும் அன்றாட வீட்டு வேலைகளுக்காக 3 மணி நேரம்(12.5%); உறக்கத்திற்கு 8 மணி நேரம்(33.3%); செய்யும் தொழிலுக்கு 8 மணி நேரம் ( 33.3%); உடற்பயிற்சி மற்றும் மன பயிற்சிக்காக 1 மணி நேரம்(4.2%); உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக 1 மணி நேரம்(4.2%); போக்குவரத்து, பொழுதுபோக்கு மற்றும் எதிர்பாரா பணிகளுக்காக 3 மணி நேரம்(12.5%) செலவு செய்யலாம். திட்டமிடாதவர்களுக்கு நேரம் மேலாண்மை பொருந்தாது.

ஆய்வுக்காக நூறு நபர்களிடம் நேர மேலாண்மை (Time Management) சம்பந்தமான கேள்விகள் கேட்கப்பட்டால் பெரும்பாலும் சமூக ஊடகங்களுக்கு, முக்கியமாக கைபேசிக்கு செலவழிப்பதை நாம் அறிய முடியும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஜாதி மதம் இனம் வயது பாலின பாகுபாடு இன்றி கைப்பேசி பயன்பாடு நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. அதனை ஆக்கபூர்வமாக பயன்படுத்துகிறோமா, இதன் மூலம் மனித உறவுகள் மேம்பட்டு இருக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்ற பதில் தான் வரும். வணிக நிறுவனங்கள் சமூக ஊடகங்களை சரியாக பயன்படுத்தி வருகின்றன.

தகவல் பரிமாற்றத்தில் தொடங்கி எல்லாவற்றிற்கும் கைப்பேசி பயன்பாடு என்ற நிலை உருவாகி குடும்பமே கைப்பேசியில் நடக்க கூடிய சூழ்நிலை உருவாகிவிட்டது. கைப்பேசி பயன்பாட்டிற்கு பலர் அடிமையாகி வருவது உண்மை. வரும் தலைமுறையினர் மத்தியில் வாசிப்பு பழக்கம் எழுதும் பழக்கம் பன்மடங்கு குறைந்து வருவது உண்மை. அதிலும் செயற்கை நுண்ணறிவு வசதி நமது சிந்தனைகளை மிகவும் எளிதாக்கிவிட்டது. இதனை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் போது முன்னேற்றம் அடைகிறோம். அதில் மூழ்கும் போது மிகவும் பாதிப்பு அடைகிறோம். சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் உணர்வுகளை தூண்டுவதாகவும், இளைஞர்கள் சிறுவர்கள் தவறான பாதைக்கு செல்லக்கூடிய சூழலும் இருக்கிறது. சமூக ஊடகங்களை பொறுப்புடன், சமூக அக்கறையுடன் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை. இன்றைய உலகமயமாதல் சூழ்நிலையில் மனிதனின் நேரத்தை அதிகம் சமூக ஊடகங்கள் எடுப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாழ்க்கைப் பயணம் :

வாழ்க்கைப் பயணம் பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிவடைகிறது. இந்த பயணம் சிலருக்கு இனிதாகவும், பலருக்கு சிக்கலாகவும் அமைவதற்கு நேர மேலாண்மை (Time Management)-யே முக்கியமான காரணம். நேரம் விலை மதிப்பற்றது என்று சும்மா கூறவில்லை. இழந்த பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்து விடலாம். ஆனால் இழந்த நேரத்தைச் சம்பாதிக்க முடியாது. ஏழைக்கும் பணக்காரனுக்கும் நேரம் மட்டுமே சரிசமமாகக் கிடைக்கிறது. அந்த நேரத்தைச் சரியாக ஆக்கப்பூர்வமாகச் செலவு செய்பவர்கள் வெற்றியாளர்களாகி விடுகின்றனர். காலத்தின் அருமையை உணர்ந்தவர்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கின்றனர். மனமகிழ்வோடு பயணத்தை முடிக்கின்றனர். பலர் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்றே தெரியாமல் பயணம் செய்கின்றனர். இவர்கள் வெந்தால் சோறு; விதி வந்தால் சாவு என்ற நிலையில் வாழ்கின்றனர். அவர்களுக்கு நேரப் பயன்பாடு மதிப்பு தெரிவதில்லை. இந்த உலகம் நமக்கு சொந்தம் இல்லை என்பதை உணர வேண்டும்.

தள்ளிப் போடாதே:

சிலர் காலத்தின் அருமை தெரிந்தாலும் தள்ளிப் போடுதல் என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆம் நமது வாழ்க்கையில் எல்லோருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நமது வேலைகளைத் தள்ளிப்போட்டிருப்போம் பின்பு வருத்தப்பட்டிருப்போம். நானும் இதைச் செய்திருக்கிறேன். அதற்கான பாதிப்புகளையும் அடைந்திருக்கிறேன். பல நேரங்களில் இதனால் வருத்தப்பட்டிருக்கிறேன். இதனை மிக மோசமான நோய் என்றே கூறலாம். அதாவது சோம்பல், நாளை பார்த்துக் கொள்வோம் என்று நமக்கு நாமே கூறிக்கொள்ளும் பொறுப்பற்ற நிலை.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் (குறள்: 605)

அதாவது காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறிய தூக்கம் ஆகிய இந்நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாகும். இப்படிப்பட்ட குணம் படைத்த மனிதன் தன்னையும், தன் குடும்பத்தையும் வறுமை நிலையிலேயே வைத்திருப்பான் என்கிறது குறல். அப்படிப்பட்ட குணம் உடையவரிடம் எதிர்மறையான சிந்தனை, விரக்தி அதிகமாக இருக்கும். இவர்கள் கற்பனை கவலை உலகத்திலேயே வாழ்ந்து மறைவார்கள். இவர்களால் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படாது.

நிலவின் கீழே துயில் கொண்டிருந்தான்
சூரியனின் கீழே குளிர் காய்ந்திருந்தான்
செய்யத்தான் போகிறோம் என்றே வாழ்ந்திருந்தான் –
எதுவும் செய்யாமலே மாய்ந்துவிட்டான்.

என்று ஜேம்ஸ் அல்பெரி கூறுகிறார். சோம்பல் என்பது மிக மோசமான குணமாகும். அந்தக் குணத்தின் செயல் பூர்வமான வெளிப்பாடுதான் தள்ளிப் போடுதல் அல்லது ஒத்திப் போடுதல். தள்ளிப்போடுவதால் நமது வாழ்வின் பல அற்புதமான விசயங்களை இழந்து வருகிறோம். அதை வாழ்வின் இறுதியில் உணர்கிறோம். இளமையில் நேரத்தை விரயம் செய்துவிட்டு முதுமையில் வருந்துவதால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. நேர பயன்பாட்டை உணரக்கூடியவர்கள் தனது ஜாதகத்தையும் கணித்துக் கொள்ள முடியும்.

நேரம் தவறுதல் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறோம். பயம், பதட்டம், சோர்வு போன்ற பல விசயங்களுக்கு நேரம் தவறுதலே முக்கியக் காரணமாக இருக்க முடியும். பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள இந்த வாழ்க்கைப் பயணத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டிய விசயங்கள் பல உள்ளன. சிலர் அனுபவிக்கின்றனர். பலர் கிடைத்த வாய்ப்புகளை இழந்து விட்டு வருத்தப்பட்டது தான் மிச்சம்.

“வரம் கொடுக்கும் தேவதைகள்
வந்த போது தூங்கினேன்
வந்த போது தூங்கிவிட்டு
காலம் முழுவதும் ஏங்கினேன்”

என்று காலத்தின் அருமையைக் கவிஞர். மு.மேத்தா கூறுகிறார். சின்னஞ்சிறு பையன் ஒருவன் நான் பெரியவனாகி விட்டால் இதைச் செய்வேன், அதைச் செய்வேன் நான் சந்தோசமாக இருப்பேன் என்பான். அவன் பெரிய பையன் ஆகிவிட்டபோது நான் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் இதைச் செய்வேன், அதைச் செய்வேன், நான் சந்தோசமாக இருப்பேன் என்றெல்லாம் சொல்லுவான். அவன் கல்லூரிப் படிப்பு முடித்தவுடன், வேலை கிடைத்தவுடன், திருமணம் முடிந்தவுடனும் என் குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் நான் இதைச் செய்வேன், அதைச் செய்வேன், நான் சந்தோசமாக இருப்பேன் என்றே சொல்வான். பிள்ளைகள் பள்ளிப்படிப்பை முடித்த பின்பும், நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவுடன் நான் இதைச் செய்வேன், அதைச் செய்வேன், நான் சந்தோசமாக இருப்பேன் என்றெல்லாம் சொல்லுவான். அவன் வேலையிலிருந்து ஒய்வு பெற்றவுடன் அவன் எதைப் பார்க்கிறான்? தன் கண்களுக்கு முன்னாலேயே அவனது வாழ்க்கை கடந்து போய் விட்டதைப் பார்க்கிறான். சிலர், நான் சூழ்நிலையை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன், நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு வேலைகளைத் தள்ளிப் போடுவார்கள். நிகழ்காலத்தை முழுமையாக அனுபவிப்பதை விட்டு விட்டு எதிர்காலத்தை எண்ணி காரியங்களைத் தள்ளிப்போடுவது நம்மை அல்ல. நமது வெற்றியை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நொடியின் அருமை, ஒரு நிமிடத்தின் அருமை, ஒரு மணியின் அருமை அந்த சமயத்தில் செய்யமுடியாமல், தவறவிட்ட மனிதனைக் கேட்டால் தெரியும். நாம் காலங்களை எண்ணிக் காத்திருக்கலாம். ஆனால் காலங்கள் நமக்காக ஒருபோதும் காத்திருக்காது. இது இப்படி இருந்திருக்கலாம். நான் இதைச் செய்திருக்க வேண்டும் நான் இதைச் செய்திருக்க முடியும். இதை மட்டும் நான் செய்திருந்தால்… நான் மட்டும் இன்னும் கொஞ்சம் அதிகம் முயற்சி எடுத்திருந்தால்… போன்ற வார்த்தைகளைப் பேசுவதால் மட்டும் மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை. அதனை உடனே செய்து முடிக்க வேண்டும்.

இன்றே உங்களால் செய்ய முடிந்ததை ஒரு போதும் நாளை வரை தள்ளிப் போடாதீர்கள் என்று பென்ஜமின் ஃப்ராங்களின் கூறுகிறார். வாழ்க்கை என்பது வாழ்வதற்கான ஒரு வாய்ப்பு. இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தவும், மகிழ்ச்சியாக அனுபவிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். அதனை ஆக்கப்பூர்வமான வழிகளில் மனித நலனுக்காகச் செலவழிக்க வேண்டும். காலத்தின் அருமையை நன்கு உணர்ந்து கடினமாக உழைத்தால் சாப்பாடு, தூக்கம், பொழுதுபோக்கு போன்றவை ஒரு பெரிய விசயமாகத் தெரியாது. வெற்றி மட்டுமே கண்ணுக்குத் தெரியும். அது வாழ்க்கையை வென்றவர்களின் வரலாற்றைப் படித்தால், வாழ்வில் அனுபவித்தால் புரியும். இனியாவது நேரத்தின் அருமையைப் புரிந்து கொண்டு தள்ளிப் போடாமல் நிகழ்கால கடமைகளையும், எதிர்கால திட்டங்களையும் செய்து முடித்து வெற்றி காண்போம். ஒவ்வொரு பிறந்தநாளும், புத்தாண்டும் இனிப்புடன் கொண்டாடுவதற்காக மட்டுமல்ல. வாழ்ந்த காலங்களை முழுமையாக ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தியிருக்கிறோமா என்பதை சிந்திப்பதற்காகவும் தான். இனிவரக்கூடிய 2025 புத்தாண்டினை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் நேர பயன்பாடு ஆக்கப்பூர்வமாக அமையட்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையில். வாழ்வது ஒருமுறை. வாழ்த்தட்டும் தலைமுறை.

நன்றியுடன்

கட்டுரையாளர் : 

சுற்றுச்சூழலும் கடல்சார் வணிகமும் - Book Day

முனைவர் இல.சுருளிவேல்

உதவிப் பேராசிரியர், மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
டாக்டர் எம். ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
பொன்னேரி-601 204
மின்னஞ்சல்: surulivel@tnfu.ac.in

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *