2026 இலக்கிய நோபல் பரிசு: எழுப்பும் சில கேள்விகள் - ஆயிஷா இரா.நடராசன் | 2026 Nobel Prize in Literature: Some Questions to Raise | www.bookday.in

2026 இலக்கிய நோபல் பரிசு: எழுப்பும் சில கேள்விகள் – ஆயிஷா இரா.நடராசன்

2026 இலக்கிய நோபல் பரிசு: எழுப்பும் சில கேள்விகள்

– ஆயிஷா இரா.நடராசன்

நான் நோபல் பரிசை மறுக்கிறேன். என் பெயருடன் நோபல் பரிசு பெற்றவர் என்பதை சேர்ப்பது என் எழுத்துக்களின் புறநிலை போராட்ட முக்கியத்துவத்தை சிதைத்து இந்த யுத்த காலத்தில் வாசகர்களின் மீது நிறுவன ரீதியிலான அழுத்தத்தை ஏற்படுத்தும். அமெரிக்க சார்பு யுத்தம் கொன்று குவித்த  மக்களின் சடலங்கள் மீது ஏறி நின்று ஒரு ஸ்தாபனக் குழுவிடமிருந்து அங்கீகாரத்தை ஏற்றுக் கொள்வதற்கு எனக்கு மனம் இல்லை.   – ழின் பால் சார்த்தர் (1964 நோபல் கமிட்டிக்கு எழுதிய கடிதம்)

2026 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு கனடாவின் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் ஆன் கார்சன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.. செவ்வியல் ஒப்பிலக்கியம் படைப்பு ஆளுமை கிரேக்க துயர நாடகங்களின் மொழிபெயர்ப்புகள் என்று பரவலாக அறியப்பட்டவர்தான் என்றாலும்.. நாம் அவருடைய அடிப்படை சுய வரலாற்று குறிப்புகளைக் கடந்து ஒரு இலக்கிய நோபல் பரிசை அணுக வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை முதலிலேயே பதிவு செய்து விடுகிறேன்.

இதுவரையில் இரண்டு புத்தகங்கள் நான் அவருடையது வாசித்திருக்கிறேன்.. இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு நோபல் பரிசு குறித்து உலகம் அதிகமாக உரையாடியது.. குறிப்பாக இலக்கிய நோபல் குறித்து உலகெங்கிலும் வழக்கமாக ஆண்டுதோறும் நடைபெறுகின்ற சூதாட்டம் ஒன்று உண்டு.. அதாவது இன்னார்தான் வெற்றி பெறுவார் என்று பணம் பெட் கட்டுவது. அந்த எழுத்தாளர்களில் பட்டியலில் ஆன் கார்சன் இடம்பெறவில்லை. இப்படி இதுவரை நடந்தது கிடையாது.

முதலில் இந்த பட்டியலில் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை பார்ப்போம். அதிகமாக பெட் கட்டப்பட்டவர் சீன எழுத்தாளர் கென் சூ.. மேற்கத்திய இலக்கிய மையங்களுக்கு வெளியே உருவாகும் சோதனை இலக்கியங்கள் என்கிற அடிப்படையில் சர்வதேச அங்கீகாரம் கண்டிப்பாக தேவை. மரபான யதார்த்தவாத கதை முறையை மீறுகின்ற சோதனை முயற்சிகள் இவருடையவை.. ஜப்பான் தேசத்தின் அருகி முரகாமி அடுத்து வருபவர். தொழில்நுட்பம் அறிவியல் அன்றாட வாழ்க்கை தனிமை கனவுகள் அன்னியமாதல் குறித்த சிறப்பான நாவல்கள் பரவலான வாசகர்களின் இலக்கிய மதிப்பீடுகளுக்கு இடையிலான உறவை கேள்விக்குட்படுத்தும் எழுத்து.. மூன்றாவதாக ஆஸ்திரேலியாவின் ஜெரால்ட் மார்னேன் பெயர் அடிபட்டது. ஏனெனில் மரபான கதை அமைப்புகளை தகர்த்தி எறியும் தனித்துவம் இவருடையது.. அமெரிக்காவின் தாமஸ் பின்சன் இவரைக் குறித்து அறிந்திருப்பீர்கள் சிக்கலான இலக்கிய வடிவங்கள் அதிகார அமைப்புகளையும் முதலாளித்துவ முரண்பாடுகளையும் எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்பதை துல்லியமாக வெளிப்படுத்துபவை இவருடைய எழுத்துக்கள்..   இவர்களைத் தவிர மெக்சிக்கோவின் கிறிஸ்டினா ரிவேரா அதே கனடாவை சேர்ந்த மார்கரேட் அட்வுட்..  இந்தியாவில் பிறந்த இங்கிலாந்தின் மிகப் பிரபலமான எழுத்தாளர் சல்மான் ருஷ்டி என்ற பெயர்களும் அடிபட்டன

Canadian Author Anne Carson Awarded 2026 Nobel Prize in Literature

ஆன் கார்சனுக்கு இந்த விருதை அறிவித்திருப்பதன் மூலம் பெண்களின் இலக்கிய உலகிற்கு பத்தொன்பதாவது அங்கீகாரத்தை நோபல் கமிட்டி வழங்கியுள்ளது.. உண்மைதான் 1901 ஆண்டிலிருந்தே விருதின் வரலாற்றில் பெண்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை பற்றி ஆராய்வதற்கு இது ஒரு வாய்ப்பு பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் பெண்ணின் குரல் எவ்வாறு இலக்கிய வரலாற்றில் இடம்பெற்றன அந்தப் படைப்புகள் எப்படிப் பாதுகாக்கப்பட்டன மொழிபெயர்க்கப்பட்டன வாசிக்கப்பட்டன என்பது குறித்த உலகளாவிய கட்டுரைகள் வருடம் முழுவதும் வெளிவந்து கொண்டிருக்கும்.. நோபல் கமிட்டி புவியியல் சமத்துவத்தை இம்மி அளவிற்கு கூட மதிக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள்குறித்தோ அரசியல் குறித்தோ இந்த வகையான கட்டுரைகள் ஒருபோதும் பேசப்போவதில்லை. புனித நோபலை பற்றிய புனித கருத்தாளர்களை கடந்து செல்வோம்.

இப்போது நாம் ஆன் கார்சனுக்குத் திரும்புவோம். கனடா நாட்டின் கவிஞர் கட்டுரையாளர் மொழிபெயர்ப்பாளர் இவர். பண்டைய இலக்கிய மரபுகளுடன் புதுமையான உரையாடலை நிகழ்த்தி சமகால இலக்கியத்திற்கு புதிய வடிவங்களை உருவாக்கியதற்காக அவருக்கு இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. இவருடைய இலக்கியத்தைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான ஒரு கேள்வி உள்ளது..

அப்படியானால் உலகைப் பற்றிய புதிய உண்மைகளைச் சொல்லும் எழுத்தாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறதா அல்லது இலக்கியம் சிந்திக்கும் முறையையே மாற்றும் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறதா அல்லது எங்கெல்லாம் அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் மிகப்பெரிய தாக்குதலை ஒரு சமூகம் சந்திக்கிறதோ அந்த சமூகத்தின் ஆதரவு குரலுக்கு வழங்கப்படுகிறதா..

நான் முதலில் சொன்ன இரண்டு காரணங்களையும் ஆண் கார்சனின் எழுத்துக்களில் நாம் பார்க்கலாம்.. நான் ஏற்கனவே சொன்னது போல இரண்டு புத்தகங்கள் நான் வாசித்திருக்கிறேன்..EROS THE BITTERSWEET..1986 அம்மாண்டில் வெளிவந்த நூல். காதல் விருப்பம் இயக்கம் ஆகியவற்றை பண்டை கிரேக்க கவிதைகளின் வழியே ஆராயும் புத்தகம். காதல் என்பது வெறும் தனிப்பட்ட உணர்ச்சி மட்டுமல்ல நாம் விரும்புவதற்கும் நம்மால் அடைய முடிவதற்கும் இடையில் உருவாகும் இடைவெளியும் கூட காதலின் ஒரு அங்கம்தான் என்பதை பேசும் கவிதைகள்.

ஆனால் நான் மிகவும் விரும்பி வாங்கி வாசித்த புத்தகம். AUTOBIOGRAPHY OF RED. 1998 ஆம் ஆண்டு வெளிவந்தது என்று நினைக்கிறேன்.. இதை சிவப்பின் தொன்மமாக நான் பார்த்தேன்.. பண்டைய கிரேக்க தொன்மத்தின் வழியே ஜெரியான் என்ற சிறகுகளைக் கொண்ட சிவப்பு நிற உயிரினத்தை ஒரு நவீன கதாபாத்திரமாக வடிவமைத்து மறுவாசிப்பிற்கு உட்படுத்தும் அற்புதத்தை இந்த புத்தகத்தில் அவர் நிகழ்த்தியிருந்தார். சிவப்பு காதல் அடையாளம் பாதிப்பு வளர் இளம் பருவம் ஆகியவற்றை ஆராயும் இந்த படைப்பை பல இடங்களில் நான் பேசியிருக்கிறேன். பழைய தொன்மங்களை அப்படியே மீண்டும் சொல்வதற்கு பதிலாக அவற்றுக்கு புதிய நவீன அரசியல் சாயத்தைப் பூசுகின்ற இலக்கிய முயற்சி இது.

இப்படி நாம் அவருடைய THE BEAUTY OF THE HUSBAND, NOX,ANTIGONIC போன்ற படைப்புகள் பற்றி பேச முடியாது.. ஒருவேளை நான் இன்னும் அவற்றை ஆழமாக வாசிக்க வேண்டி இருக்கலாம்.. ஆன்கார்சனின் சிறப்பு அவருடைய கவிதை எழுதுவதில் மட்டுமல்ல, அவருடைய கவிதைகளின் ஊடாகப் பயணம் செய்யும் புனைகதை பண்டைய இலக்கியத்தில் புதிய கோணத்தில் அணுகுதல்.. துண்டிக்கப்பட்ட வடிவங்களை திரும்ப எடுத்து பயன்படுத்துதல்.. அறிவார்த்த அணுகுமுறையுடன் உணர்ச்சியை இணைத்தல்.. ஆகிய மூன்று அம்சங்களில் அவருடைய இலக்கியம் ஏனைய பெண்ணிய பார்வையோடு சற்றே வேறுபடுகிறது என்பது உண்மைதான்.

ஒரு எழுத்தாளரின் தனிப்பட்ட நிலைப்பாடு வேறு அவருடைய படைப்புகள் வெளிவரும் விதம் வேறு.. என்று பேசுவது இன்றைக்கு ஒரு வகை ஃபேஷன் ஆகிவிட்டது.. இலக்கியத்திற்குள் ஒரு மனிதனும் சொந்த நிலைப்பாடுகளுக்குள் வேறு ஒரு மனிதனும் நம்மைப் பொறுத்தவரை இருக்க வாய்ப்பில்லை இருக்கக் கூடாது..

ஆண் கார்சனை நாம் நம் பார்வையில் சரியாக கட்டுடைக்க வேண்டுமென்றால்.. பின்வரும் ஐந்து விஷயங்களை கருத்தில் கொள்ளலாம்

  1. பண்டைத் தொன்மங்களை மறு வாசிப்பு செய்வது: அதாவது மரபுகளுக்கு ஒரே அதிகாரப்பூர்வமான விளக்கம் தான் இருக்க வேண்டும் என்ற கருத்தை கேள்விக்கு உட்படுத்துதல்
  2. ஜெரியான் போன்ற ஒதுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த கதாபாத்திரத்தை மறுவடிவமைத்தல்: அதாவது அதிகாரத்தால் ஒதுக்கப்படும் அடையாளங்கள் வேறுபாடுகள் பாதிப்புகள் ஆகியவற்றைக் குறித்து தொன்மங்களுக்குள் இருந்து கொண்டு உறக்க பேசுதல்.
  3. காதல் திருமணம் துரோகம் ஆகிய அம்சங்களை பெண் பார்வையில் ஆராய்தல்: பாலினம் நெருக்கமான உறவுகளின் ஊடாக பெண்ணின் மீது செலுத்தப்படும் அதிகாரம் இவற்றில் எப்போதும் புதைக்கப்படும் பெண்ணிய கண்ணோட்டம் ஆகியவற்றை வெளிச்சமிட்டு காட்டுதல்.
  4. புதிய இலக்கிய வடிவங்களை நோக்கி உலகை இட்டுச் செல்லுதல்: இலக்கியம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் மரபுவழி அதிகாரத்தை உடைத்தல்.
  5. பழங்காலத்தையும் நவீனத்தையும் இணைக்கும் முயற்சிகளை பாரம்பரியம் என்கிற பெயரில் திணிக்கப்படுபவற்றை கேள்விக்குட்படுத்துதல்: பண்பாடு மரபுகள் இவைதான் கல்வி அறிவுக்கான அணுகுமுறை என்பதை எதிர்த்தல்.

இவை இந்த நோபல் அறிஞரின் தனிப்பட்ட அரசியல் நம்பிக்கைகளுக்கான நேரடி ஆதாரங்கள் என்று வகைப்படுத்தப்பட முடியும் அவருடைய படைப்புகளை புரிந்து கொள்வதற்கான சாத்தியமான விமர்சனமாகவும் இதை நாம் பார்க்கிறோம் மொழி மற்றும் இலக்கிய வடிவத்தில் நிகழுகின்ற மாற்றம் புரட்சி என்று அழைக்கப்பட முடியுமா.. சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான புரட்சியாக இதை மாற்ற முடியுமா என்றெல்லாம் நீங்கள் கேட்க முடியாது.

ஆன்கார்சனின் படைப்புகள் பண்பாட்டு அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்துகின்றன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவை செல்வத்தின் உரிமை கல்வியின் கட்டுப்பாடு உழைப்புச் சுரண்டல் ஏகாதிபத்தியம் எண்ணெய் அரசியல் கலாச்சார உற்பத்தியின் சந்தை ஏற்றத்தாழ்வுகள் போன்ற இன்றைய சிக்கல்களை எந்த அளவுக்கு ஆராய்கின்றன என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது என்பதை தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

Greek Classicist Anne Carson Wins Nobel Prize in Literature

ஆன்கார்சனின் படைப்புகள் பண்டை கிரேக்க இலக்கியம் செவ்வியல் மொழிகள் ஆழமான இலக்கிய ஆய்வு ஆகியவற்றுடன் தொடர்புடையவை. இவருடைய கல்வி ஆய்வுப் பின்புலம் தனித்துவமான எழுத்து போன்றவற்றை இனி உலகம் கொண்டாடும் ஆனால் என்னுடைய இடதுசாரி மூளை வழக்கம் போல் பின்வரும் கேள்விகளை முன்வைக்கிறது.

  • இவர்கள் முன்வைக்கும் செவ்வியல் கல்வி என்பது எல்லாவர்க்கத்தினரையும் அனைத்து வகை மக்களையும் சமமாக நடத்துகிறதா?
  • சர்வதேச இலக்கிய உலகில் சில எதிர் எதார்த்தவாத வகையான ‘அறிவார்த்த’ எழுத்துக்களுக்கு மிகுந்த மதிப்பு கிடைக்கும்பொழுது உழைக்கும் மக்களின் வாழ்க்கையை பேசும் இலக்கியங்கள் ஏன் அதே அளவிலான கவனத்தைப் பெறுவதில்லை?
  • கடினமான இலக்கியத்தை.. வாசிப்பு என்பதை சர்க்கஸ் போல மிகக் கடினமாக்கும் இறுகிப்போன இலக்கியமே உயர்ந்த பண்பாட்டின் அடையாளம் என்று கருதுவதும் அன்றாட வாழ்வின் இந்த நூற்றாண்டிலும் தொடருகின்ற கொடூர யதார்த்தத்தை எழுதுவதை இரண்டாம் தர மூன்றாம் தர எழுத்து என்று முத்திரையிட்டு தூக்கி எறியும் போக்கு இன்றும் தொடர்வது ஏன்?

அறிவார்த்த புதுமையின் சமூக மதிப்பு அது சலுகை பெற்ற கல்விச் சூழல்களுக்கு வெளியேயும் சென்றடையக்கூடியதாக இருக்கிறதா என்பதோடு தொடர்புடையது மேற்கண்ட இந்த ஐந்து கேள்விகளும். இலக்கியவாதமா பொருளாதார யதார்த்தமா என்று கேட்டால் ஆன்கர்சனின் மொழி இலக்கிய வகை மொழிபெயர்ப்பு பண்டை தொன்பங்களின் பார்வை ஆகியவற்றில் புதுமைகளை நிகழ்த்தியதாக நாம் எழுதலாம்.. ஆனால் நம்முடைய வழமையான இடதுசாரி விமர்சனம் இன்னொரு கேள்வியையும் எழுப்புகிறது இலக்கிய வடிவத்தில் நிகழும் மாற்றம் மட்டுமே சமூக மாற்றத்துக்கு போதுமானதா?

ஆன் கார்சன் பண்டைய கிரேக்க மரபுகளை பயன்படுத்துவது ஒரு பெரிய கேள்வியை எழுப்புகிறது. உலக இலக்கியத்தில் ஒரு சில பண்டைய மரபுகளுக்கு மட்டும் ஏன் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.. உதாரணமாக ராமாயணம் மகாபாரதம் போன்றவை மண்டைய மரபுகள் என்றால்.. ஊர் சாமிகளான முனியப்பன் போன்றவர்களின் கதைகள் எந்த இடத்தில் வைத்து இந்த சமூகத்தால் பார்க்கப்படுகின்றன..

இந்தியாவிலிருந்து எழுதும் ஒரு விமர்சகர் கிரேக்க இலக்கியத்திற்கு உலகளவில் கிடைக்கும் கவனத்தை தமிழின் சங்க இலக்கியம் முதல் சீன இலக்கியம் வரை ஆப்பிரிக்க வாய்வழி இலக்கிய மரபுகள் பழங்குடியின மக்களின் கதை மரபுகள் பிற மொழிகளின் செவ்வியல் இலக்கியங்கள் என்று தொடர்பு படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது.

நோபல் ஒரு நிறுவனம். ஒரு மரபை உயர்த்தி மற்றொரு மரபை தாழ்த்துவது எங்கள் நோக்கமல்ல என்று அறிவிக்கும் நவீன கருவி.. ஆனால் மொழிபெயர்ப்பு நிறுவனங்கள் கல்வி அமைப்புகள் பதிப்பகங்கள் சர்வதேச இலக்கிய நிறுவனங்கள் ஆகியவை எந்தப் பண்பாட்டு மரபுகளை உலகம் அறிந்துகொள்கிறது என்பதை எவ்வாறு தீர்மானிக்கின்றன என்பதில் ஒரு முக்கிய சக்தியாக ஆற்றல் மிக்க நிறுவன தலையீடாக நோபல் இருப்பதை பல முறை நிரூபித்திருக்கிறார்கள்.

நியாயமாக பார்த்தால்.. சந்தை உருவாக்கத்தின் தொடக்கம்.. என்று நோபல் பரிசை சார்த்தர் வர்ணித்தது உங்களுக்கு புரியும். நோபல் பரிந்துரை ஒரு எழுத்தாளருக்கு மிகப் பெரிய சர்வதேச கவனத்தைக் கொடுக்கிறது இதன் மூலம் மொழிபெயர்ப்புகள் புத்தக விற்பனை பதிப்பக ஒப்பந்தம் கல்வி நிறுவனங்களின் கவனம் ஆகியவை ஒரே நாளில் அதிகரிக்கப்படுகின்றன. எந்தப் பதிப்பகங்களுக்கு ஒரு எழுத்தாளரின் படைப்பை உலக சந்தைக்கு எடுத்துச் செல்லும் திறன் இருக்கிறதோ அவர்கள் சார்ந்ததாக இந்த உலகம் வணிக ரீதியில் மாற்றப்பட்டுவிட்டது என்பது மிகப் பெரிய துயரம்.

நியாயமாக இந்த ஆண்டு நாம் விருதை யாருக்கு எதிர்பார்த்தோம் என்பதை முன்வைத்து இந்தக் கட்டுரையை முடிப்பது சரியாக இருக்கும்.

நான் பாலஸ்தீனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.. குறிப்பாக என் ஆதர்சன கவிஞன் அன்புத் தோழன் முசாப் அபு தோஹா இந்த ஆண்டும் நோபல் பரிசு பெறவில்லை. நவம்பர் மாதம் 2023 முதல் சிறைச்சாலையிலும் அயல் நாடுகளிலுமாக அகதியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புத கவிஞன்.. குறிப்பாக அவருடையFOREST OF NOISE கண்டிப்பாக நோபல் பெற வேண்டிய போராட்ட இலக்கியம்.. இவரோடு சேர்ந்து அதோனியோ ஷிப்லி, நஜ்வான், தர்வீஷ் ஷெஹாத்தே, சகர் காலிஃபா.. போன்ற பாலஸ்தீன எழுத்துலக போராளிகள்.. கேட்கப்படாத செவியின் முன் தோற்றார்கள்.

சரி உங்களுடைய அமெரிக்க சார்பு பாலஸ்தீன கவிஞரை போராளியை அங்கீகரிக்க விடாது.. ஆனால் ஆன்டிகுவாவின் ஜமைக்கா கின்கைட்.. காலனித்துவ பிந்தைய உலகின் வரலாற்றை யார் எழுதுகிறார்கள் யாருடைய குரல்கள் கொடுக்கப்படுகின்றன என்ற கேள்வியை .. சுற்றுலா தொழில் என்பதன் மூலம் செயற்கை நுண்ணறிவு அறிவியல் என்பதன் மூலம் மறு காலனியம் நோக்கி இந்த உலகம் செல்வதை அதிகார உறவுகள் இனம் குடும்பம் இவற்றின் அடையாளப் பார்வையோடு விமர்சனம் செய்யும் இவருடைய எழுத்துக்கள் இறுதியான படிநிலையில் இருக்கும் பெண் என்கிற கருப்பின குரலோடு அங்கீகாரம் பெறும் என்று நினைத்தேன்.

ஜமைக்காவின் லிண்டன் க்வேசி. வீதிவீதியாக சென்று தன் கவிதைகளை மக்கள் பாடல்களாக மாற்றும் துயரக்கவிஞன் சிறையிலும் வெளியிலுமாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவனுடைய பாடல்கள் ஒலிக்கும் குரல்கள் இனவெறி காவல்துறை வன்முறை தொழிலாளர் ஒடுக்குமுறை சமூக விடுதலை என்ற படைப்புகளை மையமிடும் மக்கள் இசைக்காரனுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்ததும் தவறு.

நோபல் பரிசு ஒரு எழுத்தாளரின் மதிப்பைத் தீர்மானிக்கும் ஒரே அளவுகோல் அல்ல உலகின் சக்தி வாய்ந்த இலக்கிய நிறுவனங்கள் எந்த மொழிகளில் செயல்படுகின்றன என்பதை வைத்துத்தான் இந்த விருது தீர்மானிக்கப்படுகிறது.. இலக்கிய வடிவங்களில் புரட்சி செய்தவர் என்கிற பெயரில் ஆண்கார்சன் இந்த ஆண்டு விருது பெறுகிறார் இலக்கியத்தில் இரண்டு தேவைகள் இருக்கின்றன முதலாவதாக நான் கருதுவது மக்கள் இலக்கியம் வெவ்வேறு போராட்டப் பின்னணியிலிருந்து எழுகின்ற மக்களின் குரல் அதில் எதிரெதார்த்தவாதமும் கலந்துதான் இருக்கிறது புதிய கலைச்சாத்தியங்களை உருவாக்கும் சோதனை முயற்சிகளையும் நாம் புறந்தல்வதற்கில்லை அந்த வகையில் ஆண்கார்சன் இந்த ஆண்டு முக்கியத்துவம் பெறுகிறார்.    மற்றபடி இந்த 2026 இலக்கிய நோபல் பரிசு எனக்குள் தேடலைவிட கேள்விகளையே அதிகம் விதைத்துள்ளது… ஆன் கார்சனுக்கு வாழ்த்துக்கள்.

துணை நின்றவை:

  1. நோபல் பரிசின் அதிகாரப்பூர்வ இணையதளம். பரிசு அறிவிப்பு மற்றும் காரணம்.
  2. தி பாரிஸ் ரிவ்யூ இதழ் ஆண் கார்பனின் எழுத்துகுறித்த நேர்காணல்கள் மற்றும் இலக்கிய பார்வைகள்
  3. த கார்டியன் இதழ் இணையத்தில் வாசித்தது அவருடைய படைப்புகளை எங்கிருந்து வாசிக்கத் தொடங்கலாம் என்பதற்கான வழிகாட்டி.
  4. த இந்தியன் எக்ஸ்பிரஸ் புதுடெல்லி மதிப்பு இலக்கிய வகைகளின் எல்லைகளை அவர் எவ்வாறு கடக்கிறார் என்பது குறித்த விளக்கம்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 1 Comment

1 Comment

  1. 2026 வருடம் திருமதி.ஆன்கார்சன்க்கு வழங்கபட்ட உரிய நோபல் தெரிவு ஐரோப்பா கண்டத்துக்கு மிகவும் புகழ் வாய்ந்தது.கவிஞர்,கிரேக்க நூல் மொழிபெயர்ப்பு தொன்மையின் புதிய வடிவம் அற்புதம்.இருந்தும் பாலஸ்ஸினம் கவிஞர் .இன்னும் பிறநாட்டு சிந்தனை எழுத்தாளரின் நோபில் எதிர்பார்ப்பு இல்லை எனினும் இலட்சியத்தின் இலக்குகள் தொடரும்.நோபிலை எதிர்நோக்காமல் நோபில் உயரிய சிந்தனையாளரை தேடுவது உயர்ந்தது.இஃது சைவர் மாணிக்கவாசகரை சிவனே குருந்த மரத்தடியில் காத்திருந்தற்கு ஒப்பாகும்.இஃது மனிதனைக் தேடி இறைவன்.

    கா.வ.பரந்தாமன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *