பாபர் மசூதியை இடிப்பதற்கென்று எந்தவொரு திட்டமும் இருக்கவில்லை என்ற புதிய உண்மை ஒன்று இறுதியாக நமக்குக் கிடைத்திருக்கிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 32 பேரையும், மசூதியை இடித்து வீழ்த்த சதி செய்ததாகக் கூறப்படுவதை நிரூபிப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்ற அடிப்படையிலே சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது. எந்தவொரு சதியும் இல்லை, எந்தவொரு திட்டமும் இல்லை என்றால், அவ்வளவு பெரிய மசூதி தானாகவே இடிந்து கீழே விழுந்திருப்பது மட்டும்தான் இங்கே இருக்கின்ற ஒரே வாய்ப்பாகும். இந்திய கட்டுமானத் துறையில் நிலவிய மிகவும் மோசமான முறைகேடுகள் காரணமாக மட்டுமே அது சாத்தியமாகி இருக்கும். ஒருவேளை அந்த நாட்களில் கட்டிட ஒப்பந்தக்காரர்கள் தரமற்ற சிமென்ட்டைப் பயன்படுத்தியிருக்கக் கூடும்.
இன்றைக்கு நாம் அனைவரும் தேசபக்தர்களாகி இருப்பதால், இதுவரையிலும் உண்மைகள் என்று நாம் ஏற்றுக்கொண்டிருந்தவை குறித்து இப்போது நமக்கு இரண்டாவது பார்வை நிச்சயம் தேவைப்படுகிறது. அன்றைக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ‘தன்னார்வலர்கள்’ அயோத்தியில் கூடியிருந்தனர். அவர்கள் மண்வெட்டி, கயிறு, கடப்பாரை போன்ற கருவிகளை வெளிப்படையாக ஆயுதங்களாக ஏந்தியிருந்தனர். அங்கே முக்கியமான இடத்தில் அமர்ந்து கொண்டு எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி போன்ற அரசியல் தலைவர்கள் அந்த தன்னார்வலர்களுக்குப் புத்துணர்வை அளித்துக் கொண்டிருந்தனர்.
இவையனைத்தும் அனைவராலும் நன்கு அறியப்பட்ட, பதிவு செய்யப்பட்டிருக்கின்ற உண்மைகள். அவை லிபரான் என்ற நீதிபதியால் சட்டப்பூர்வமாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. அந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை சங்பரிவார் அமைப்புகள் சேகரித்ததாகவும், கரசேவகர்கள் அயோத்தி மற்றும் பைசாபாத்தில் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் ராணுவம் போன்ற ஒழுக்கத்துடன் திட்டமிட்டு ஒன்றிணைந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது அந்த மசூதியை அவ்வாறு சமூக விரோத சக்திகள் இடிப்பதைத் தடுப்பதற்கே அத்வானி-ஜோஷி ஆகியோர் அங்கே கூடியிருந்தனர் என்பதே சிபிஐ நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ள கண்டுபிடிப்பாக இருக்கின்றது.
இப்போது வழங்கப்பட்டிருக்கும் அந்த தீர்ப்பு தேசபக்தி குறித்து இருக்கின்ற புதிய கருத்துக்களுடன் சிறப்பாக இணைந்து செல்வதற்கான ஒப்புதலாகவே அமைந்துள்ளது. தன்னுடைய சமரசமற்ற சுதந்திரத்திற்காகவும், தன்னாட்சி குறித்து தனக்கென்றிருந்த உறுதிப்பாட்டிற்காகவும் நீதித்துறை கவலை கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்றோ தேசபக்தி, நீதித்துறை சுதந்திரம் பற்றிய கருத்துக்கள், மக்களால் மக்களுக்காக மக்களுடைய ஆட்சியின் நவீன கருத்துகளுக்கு ஏற்ப மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன. ஆட்சியாளர்களுக்கு நல்லது எதுவோ அதுவே ஆளப்படுபவர்களுக்கும் நல்லது என்பதே இன்றைய அரசிடம் வழிகாட்டும் கொள்கையாக இருக்கிறது.
நீதிமன்றங்களால் வழங்கப்படுகின்ற தீர்ப்புகள் மீது பொதுமக்கள் சிறிதளவிலே நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பது மற்றொரு கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கின்றது. மேல்முறையீட்டிற்காக உயர் நீதிமன்றங்களுக்குச் செல்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், பல நிறுவனங்கள் இதுகுறித்து ஏற்கனவே தங்களுடைய விமர்சனத்தை முன்வைத்துள்ளன. அத்தகைய நகர்வுகள் அவற்றின் வேகத்தில் மெதுவாகத் தொடரக்கூடும் என்றாலும், நாம் தற்போதைய தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களைத் தவறவிடவோ அல்லது புறக்கணித்து விடவோ முடியாது. அரசரைக் காட்டிலும் விசுவாசமாக இருப்பதை அனைவரும் காணக்கூடிய வகையிலேயே நீதித்துறை வழங்கியிருக்கும் அந்த தீர்ப்பு இருக்கின்றது.
இந்திராகாந்தியின் 1975 அவசரநிலைக் காலத்தில் நீதித்துறையில் தொடங்கிய வீழ்ச்சி, இப்போது மிகவும் துரிதமாகி இருக்கிறது. அப்போது நெருக்கடிநிலை போன்றதொரு தீவிரமான நடவடிக்கையை, நீதித்துறையின் மாண்பை எதிர்த்துப் போராடுவதற்காகவே அவர் மேற்கொண்டிருந்தார். நீதித்துறையை மண்டியிட வைப்பதில் அவர் வெற்றியும் கண்டார். மண்டியிட மறுத்த நீதிபதி எச்.ஆர்.கன்னா, கரும்பட்டியலில் சேர்க்கப்பட்டு அதற்கான விலையைச் செலுத்த வேண்டி வந்தது.
தற்போது நீதித்துறையிடம் காணப்படுகின்ற இந்தப் பாரபட்சம், முகலாய வரலாற்றுக் காலத்தை நமது நினைவுகளிலிருந்தும், பதிவுகளிலிருந்தும் அழித்து விட வேண்டும் என்ற ஹிந்துத்துவா ஆதரவாளர்களின் நிலைப்பாட்டை அங்கீகரிப்பதாக இருப்பது உண்மையில் கவலையளிப்பதாக உள்ளது. பாடப்புத்தகங்களை மாற்றலாம் என்று கொள்ளலாம் என்றாலும், முகலாயப் பெருமைகளின் எச்சங்களை முழுமையாக அழித்து விட வேண்டும் என்ற இந்தப் பார்வையை எந்த அளவிற்கு நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும்? தாஜ்மஹாலுடன், தில்லியில் உள்ள செங்கோட்டை மற்றும் ஆக்ராவில் உள்ள கோட்டை ஆகியவற்றுடன் ஹுமாயூன் கல்லறை, ஃபதேபூர் சிக்ரி, ஜும்மா மசூதி, அஜ்மீரில் உள்ள அக்பாரி கோட்டை மற்றும் அருங்காட்சியகம், போபாலில் இருக்கின்ற அற்புதமான தாஜ்-உல்-மசூதி மற்றும் அவுரங்காபாத்தில் தாஜ்மஹால் போன்று இருக்கின்ற பீபி கா மக்பரா போன்றவற்றை உள்ளடக்கியதாக, இந்த முகலாயப் பெருமைகளின் எச்சங்கள் இருக்கின்றன.
பாதுகாக்கப்படவேண்டிய நினைவுச் சின்னங்களுக்கான சட்டங்களின் கீழ் தகுதி பெற்றவையாக, உலகளவில் போற்றப்படுகின்ற தலைசிறந்த படைப்புகளை, இன்றைய இந்தியாவில் வகுப்புவாத அடிப்படையில் நாம் காண வேண்டியிருப்பது உண்மையில் பரிதாபமே. கங்கை, யமுனையின் சங்கமத்தில் இருக்கின்ற அலகாபாத் கோட்டை போன்றதொரு அமைப்பு அக்பரின் மரபை மட்டும் குறிப்பதாக இருக்கவில்லை; அது இலஹாபாஸ் (கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட) என்று பெயரிடப்பட்டு, சந்நியாசிகளுக்கான புனித யாத்திரை மையமாக மாறிய, முகலாய சக்கரவர்த்தியிடமிருந்து கிடைக்கப் பெற்ற பகுதியாகவும் இருக்கிறது. மற்ற கடவுள்களை வணங்குபவர்களுக்கு பெரும்பாலும் மரியாதை செலுத்தி வந்தவர்களாகவே, அந்த நாட்களிலிருந்த பேரரசர்கள் இருந்தனர். ஆனால் இன்றைய பேரரசர்களோ தங்களிடம் மாற்றுக் கருத்து கொண்டவர்களிடம் சற்றும் சகிப்புத்தன்மை இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.
மசூதி இடிப்பை அதிர்ச்சியளிக்கின்ற வகையிலான ‘சட்டத்தின் விதி மீறல்’ என்று விவரித்த உச்சநீதிமன்றம், ராமர் கோவிலை அமைக்க விரும்பி மசூதியை இடித்தவர்களிடமே மசூதி இடிக்கப்பட்டதன் மூலம் கிடைத்த பகுதியை ஒப்படைத்திருக்கிறது. மீறுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சி, இடிப்பு மற்றும் கட்டுமானம், மதத்தின் அரசியல் மற்றும் அரசியலின் மதம் போன்ற சொற்களின் மாறுபட்ட அர்த்தங்களைப் புரிந்து கொள்வதற்கு நாம் பயிற்றுவிக்கப்படுகிறோம்.
இப்போது நீதித்துறையின் சட்டப்பூர்வமாக்கல் ராமஜன்மபூமி என்ற கருத்துக்கான புதிய முகத்தை அளித்துள்ளது. இதன் மூலம், இரண்டு மாதங்களுக்கு முன்பாக நடந்த அடிக்கல் நாட்டு விழாவை அதன் தர்க்கரீதியான முடிவுக்குக் கொண்டு செல்ல முடியும். அடிக்கல் நாட்டப்பட்ட அன்றைய தினம் அயோத்தியில் 3,500 காவல்துறையினர், ஆயுதப்படையின் 40 கம்பெனிகள், விரைவு அதிரடிப்படையின் 10 கம்பெனிகள் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரிகள் இருவர் நிறுத்தப்பட்டிருந்தனர். தங்களைப் பாதுகாப்பதற்கு இந்தியக் காவல்துறை இருக்கிறது என்று அந்தக் கடவுள்கள் அன்றைக்கு நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்.
நன்றி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 2020 அக்டோபர் 04
தமிழில்: தா.சந்திரகுரு