மோடி அரசின் மூன்று பொய்களும் மற்றும் அதன் எதார்த்தமும் – ஜி. ராமகிருஷ்ணன்

G. Ramakrishnan article on 3 lies of Modi government and reality“இந்தியா கடந்த 7 ஆண்டுகளில் வேகமாக முன்னேறி வருகிறது…” “எங்கள் ஆட்சிக் காலத்தில் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்…” – இப்படி கடந்த மே 30அன்று மன் கி பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.“பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது கொடிய அலையை வெற்றிகரமாக தோற்கடித்து விட்டோம்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருக்கிறார்.நிலையான வளர்ச்சி இலக்கில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக நிதி ஆயோக் மிகச் சமீபத்தில் கூறியுள்ளது.இந்த மூன்று கூற்றுகளும் உண்மைக்கும் எதார்த்தத்துக்கும் முரணானவை.

வேகமான வளர்ச்சியா?

கடந்த ஆண்டு (2020-21) கொரோனா முதல் அலையால் லட்சத்துக்கு மேற்பட்டோர் இறந்தது மட்டுமல்லாமல், இந்தியப் பொருளாதாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு சரிவை நோக்கிப் போய்விட்டது. அதிகாரப்பூர்வ தகவல்படியே 2020-21ல் ஜிடிபி மைனஸ் 7.3% என்ற அளவிற்கு சரிந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி இது.ஒன்றிய அரசு அமலாக்கிய பணமதிப்பு நீக்க நடவடிக்கை,ஜிஎஸ்டி வரித்திட்டம் போன்ற தவறான பொருளாதாரக் கொள்கையினால், பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே குறைந்து கொண்டிருந்தது. கொரோனா அதை மேலும் வீழ்ச்சிக்குத் தள்ளியது.வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவு வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல. இதற்குப் பின்னால் உள்ள விளைவுகள் என்ன? மொத்த வேலைவாய்ப்பில் மாதாந்திர ஊதியம் பெறுபவர்கள் 31%. இவர்களில் பெரும்பான்மையோர் கொரோனா முதல் அலைக் காலத்தில் வேலை இழந்தார்கள். மோடி அறிவித்த திடீர் ஊரடங்கால் புலம் பெயர்த் தொழிலாளர்கள் 14 கோடிப் பேர் வேலை இழந்தனர். இதற்கு மேலும் கோடிக்கணக்கான முறைசாரா தொழிலாளர்கள் தாங்கள் செய்து வந்த வேலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மொத்தத்தில் தேசத்தின் உழைக்கும் மக்களில் பெரும்பகுதியினர் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் இழந்திருந்தனர். இதன் விளைவாக, 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நுகர்வு சக்தி 2020ல் 50 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

மேலும், பெட்ரோல் – டீசல் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்தது. 2014ஆம் ஆண்டில் மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற போது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 71 ரூபாய். சர்வதேச சந்தையில் ஒருபேரல் கச்சா எண்ணெய் விலை 109 டாலர். தற்போது, சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 53 டாலராக குறைந்த பிறகும் இங்கே பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 100 ரூபாயைத் தொட்டுவிட்டது. ஒரு புறம் மக்கள் வேலைவாய்ப்பை இழந்து, வருமானமின்றி அவர்களுடைய நுகர்வு சக்தி குறைந்துள்ளது. அதே நேரத்தில் நுகர்வுப் பொருட்களின் விலையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இத்தகைய சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பொருளாதார வல்லுனர்களும் ஒன்றிய அரசு உடனடியாக அதனுடைய பொதுச் செலவினத்தை அதிகப்படுத்தி, மக்கள்மத்தியில் பணப்புழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்கள். வருமான வரி வரம்புக்குள் வராத குடும்பங்களுக்கு மாதம் 7500 ரூபாய் நேரடி ரொக்கமாக அளிக்க வேண்டும் என்றும்; ரேசன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்க வேண்டும் எனவும் கோரினோம். (ஓராண்டுக்குப் பிறகு கடுமையான நிர்பந்தத்தால் தற்போது நவம்பர் வரையில் ரேசன் கடையில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்திருக்கிறார். இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) தலைவர் உதய் கோடக் கூட மக்களுக்கு பணப்பட்டுவாடா உள்ளிட்ட நிதி உதவித் திட்டங்கள் மூலமாக மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கூறினார்.

கடந்த ஆண்டு வீழ்ச்சியை சந்தித்த இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த ஒன்றிய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காத பின்னணியில், இரண்டாவது அலைக் காலத்தில்இந்தியப் பொருளாதாரம் மேலும் அதல பாதாளத்திற்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல், மே, ஜூன்) கொரோனா இரண்டாவது அலை எல்லா மாநிலங்களையும் பாதித்தது. இந்தப் பின்னணியில் ஊரடங்கால் மீண்டும்சிறுகுறு தொழில்கள், முறைசாரா தொழில்கள், தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தியதால் நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டு முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி)யில் சரிவு ஏற்படும். ஒன்றிய அரசு பொதுச் செலவினத்தை அதிகப்படுத்தாத காரணத்தினால் 2021-22 முழுவதும் எதிர்பார்த்த வளர்ச்சி இருக்காது என வல்லுநர்கள் கூறுகிறார்கள். 2021 மே மாதத்தில் வேலையின்மை 12 சதவிகிதமாகவும், நகர்ப்புற வேலையின்மை 15 சதவிகிதமாகவும் இருந்தது என பொருளாதார கண்காணிப்பு மையம் (சி.எம்.ஐ.இ) கூறுகிறது. இந்தப்புள்ளிவிவரம் பொருளாதார நடவடிக்கைகள் முடக்கப்பட்டதைக் காட்டுகிறது.

ஒன்றிய அரசு நடப்பாண்டுக்கான பட்ஜெட்டில் பொதுச்செலவினம் அதிகரிக்க வேண்டிய இந்தக் காலகட்டத்தில் கடந்த ஆண்டைவிடக் கூடுதல் ஒதுக்கீடு செய்யவில்லை. கார்ப்பரேட் கம்பெனிகளுக்குக் கடந்த ஆண்டிலும், நடப்பாண்டிலும் வரிச்சலுகை அளித்துவிட்டு, பொதுத்துறையின் பங்குகளையும், பொதுத்துறைகளையும் விற்பதன் மூலம் 2 லட்சம்கோடிக்கு மேல் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. மேலும் ரிசர்வ்வங்கியிடமிருந்து கணிசமான தொகையை தனது வருவாயாக மடை மாற்றியுள்ளது. இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் நமது நாட்டில் உள்ள 100 பெரும் பணக்காரர்களின் செல்வம், கடந்த ஆண்டில் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 55 புதிய மகா கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இதுதான்உண்மை நிலை.

கொரோனா பெருந்தொற்று தோற்கடிக்கப்பட்டு விட்டதா?

முதல் அலையைவிட இரண்டாவது அலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். ஒரே மாதத்தில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் மரணமடைந்துள்ளார்கள். தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை இல்லை; சேர்ந்தவர்களுக்கு ஆக்சிஜனும், உயிர்காக்கும் மருந்தும் கிடைக்கவில்லை. ஆக்சிஜன் படுக்கை கிடைக்காததால் மருத்துவமனை வாசலிலேயே காத்திருந்து இறந்தவர்கள் பலர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனைகளில் இறந்தவர்கள் பலர். இதனால், இரண்டாவது அலையில் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமானது.தொற்றால் இறந்தவர்களை புதைப்பதற்கோ எரிப்பதற்கோ சுடுகாட்டில் இடமும் கிடைக்கவில்லை என்ற துயரம் கடந்த 74 ஆண்டுகளில் இந்தியா சந்தித்ததில்லை. கங்கை நதியில்தொற்றால் மரணம் அடைந்தவர்களின் சடலங்கள் மிதந்தன,நாய்கள் சடலங்களை வேட்டையாடின; கங்கை ஆற்றங்கரையில் சரியாக புதைக்கப்படாத ஏராளமான சடலங்கள் மணலுக்கு வெளியே தெரியத் தொடங்கின. இந்தக் கொடூரக் காட்சிகள்சர்வதேச ஊடகங்களில் எல்லாம் வெளிவந்தன. சுமார் 10 ஆயிரம் குழந்தைகள் இரண்டாவது அலையில், தமது தாயையோ, தந்தையையோ அல்லது இரண்டு பேரையும் இழந்து தவிக்கிறார்கள்.

ஆபத்தை முன்னுணர்ந்து பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களைக் கொண்டு தடுப்பூசி தயாரித்திருந்தால் இந்நேரம் இங்கிலாந்து, அமெரிக்காவைப் போல 50-60 சதவிகித மக்களுக்கு நாம் தடுப்பூசி போட்டிருக்க முடியும். ஆனால், இரண்டே இரண்டு தனியார் நிறுவனங்களிடம் உற்பத்தியை விட்டுவிட்டு தடுப்பூசி தட்டுப்பாட்டை செயற்கையாக ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அந்த நிறுவனங்களே மூன்று விதமான விலை நிர்ணயம் செய்த கொடூரத்தை நிகழ்த்தியது மோடி அரசாங்கம். நாடே கொந்தளித்து, உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்த பிறகு, இறுதியாக மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குகிறோம் என மோடி அறிவித்திருக்கிறார்.

தடுப்பூசிக்கு ஒன்றிய அரசாங்கம் பட்ஜெட்டில் 35000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்ட மக்கள்தொகை 109 கோடி. இவர்களுக்கு தடுப்பூசி போட 218 கோடி ஊசிகள் தேவைப்படும். ஒரு ஊசிக்கு 300 ரூபாய் என ஒதுக்கினால், ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டிய தொகை 65,108 கோடி. ஆனால் அது ஒதுக்கியுள்ளதோ பாதிதொகை தான் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜனும், பிரதமரின் முன்னாள் முதன்மை கொள்கை ஆலோசகருமான டி.கே.ஸ்ரீவத்சவாவும் இந்து நாளிதழ் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்கள். 2021-22ஆம் ஆண்டின் சுகாதாரத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.71269 கோடி. சென்ற ஆண்டின் ஒதுக்கீடோ ரூ.78,866 கோடி. சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைவு. இரண்டாண்டுகளாக கொரோனா நம்மை புரட்டிப் போட்டு வரும் சூழலில் சுகாதாரத்துறைக்கு நிதி வெட்டு என்பது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் உணரலாம்.

நிலையான வளர்ச்சி இலக்கில் முன்னேற்றமா?

ஐ.நா அமைப்பு நிர்ணயித்த நிலையான வளர்ச்சி இலக்கில், இந்தியா கடந்த 2019 ஆம் ஆண்டில் 60 புள்ளிகளை எட்டியிருந்தது; தூய்மையான எரிசக்தி, நகர்ப்புறவளர்ச்சி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சியால் அது 2021 ஆம் ஆண்டில் 66 ஆக உயர்ந்துள்ளது என ஒன்றிய அரசின் நிதி ஆயோக் சமீபத்தில் கூறியிருக்கிறது. கொரோனா காலத்தில் பொருளாதார சமத்துவமின்மையைக் கணிப்பதற்கான அளவீடுகளை எல்லாம் முறையாகப் பின்பற்றாமல், கண்துடைப்பாக பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கியதாகவும்; நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் தலித் மக்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கியதாகவும் கூறி அவற்றை சமூகக் காரணிகளாகக் கணக்கில் எடுத்து, இந்த 66 புள்ளிக் கணக்கைக் காட்டுகிறது நிதி ஆயோக். மோடி அரசின் அழுத்தம் இல்லாமல் நிதி ஆயோக் போன்ற ஒரு அமைப்பு இப்படி ஒரு பித்தலாட்டக் கணக்கைச் சொல்ல முடியாது.எனவே பிரதமர் 30 ஆம் தேதி நாம் வளர்ந்து வருகிறோம் எனப் பேசியதோ, அமித் ஷா இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனாவைத் தோற்கடித்துவிட்டோம் எனக் கூறியதோ, நிதி ஆயோக் ஜூன் 3 ஆம் தேதி நிலையான வளர்ச்சி இலக்குகுறித்து அளந்த கதையோ தனித்தனி நிகழ்வாகத் தோன்றினாலும், இவை திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட தொடர் நிகழ்வுகளே. மூன்று தளங்களிலும் பொய்யைச் சொல்லி, திட்டமிட்டுமக்கள் மனதில் மாயத் தோற்றத்தைக் கட்டமைக்க முயல்கிறார்கள். பொய் நெல் குத்தி பொங்கல் வைக்க மோடி முயல்கிறார். ஒருபோதும் மக்கள் ஏமாற மாட்டார்கள்.

கட்டுரையாளர்: ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)