நந்திதா ஜெயராஜ் & ஆஷிமா ஃப்ரைடாக் (தமிழில்: சதீஷ் வெங்கடேசன்) எழுதிய "31 அற்புத அறிவியல் சாகசங்கள்" புத்தகம் | 31 Arputha Ariviyal Sagasangal Tamil Book Review | www.bookday.in

நந்திதா ஜெயராஜ் & ஆஷிமா ஃப்ரைடாக் (தமிழில்: சதீஷ் வெங்கடேசன்) எழுதிய “31 அற்புத அறிவியல் சாகசங்கள்” – நூல் அறிமுகம்

31 அற்புத அறிவியல் சாகசங்கள்

– ச.சுப்பாராவ்

அறிவியல் எழுத்தாளர்களான நந்திதாவும், அஷிமாவும் எழுதிய அற்புதமான நூல் இது. இந்திய பெண் விஞ்ஞானிகள் பற்றி நமக்கு ஏன் எதுவுமே தெரிவதில்லை எனற கேள்வி அவர்களுக்குள் எழுந்ததன் விளைவாக உருவான நூல். நம்மில் எத்தனை பேருக்கு ஒரு இந்திய பெண் அல்லது ஆண் விஞ்ஞானியின் பெயரை சட்டென்று சொல்லி விட முடியும்? நம் நாட்டில் அறிவியல் பாடங்களை சமமான எண்ணிக்கை ஆண் – பெண் மாணவர்கள் படித்தாலும், 14 சதம் பெண்கள் மட்டுமே விஞ்ஞானிகளாக உள்ளார்கள். அவர்களில் 31 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களோடு உடனிருந்து அவர்களது ஆய்வுகளைப் பார்த்து, உரையாடி எழுதப்பட்டது இது.

அறிவியல் என்று நமக்கு பொதுவாக மட்டும்தான் தெரிகிறது. அதில் தான் எத்தனை எத்தனை பிரிவுகள் ! எத்தனை எத்தனை அபூர்வமான துறைகள் ! இமயமலை அடிவாரத்தில் காலிம்போங்கில் ஆரஞ்சு மரங்களுக்கு வரும் நோய்கள் பற்றி ஆராயும் நதாஷா குருங், தொல்பொருள் உலோகவியல் அறிஞர் சாரதா சீனிவாசன், மருந்து தயாரிக்கும் பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மசூம்தார் ஷா, கணினி உயிரியல் வல்லுனர் லிபி துக்ரல். ஜுராசிக் பார்க் படம் பார்த்து புதைபடிவ ஆராய்ச்சியாராக மாறிய ஜானவி புனேகர், புலிகளைக் காப்பாற்றும் சிங்கப் பெண்ணான சூழலியல் விஞ்ஞானி உமா ராமகிருஷ்ணன் – இயற்கையின் ஏன்களுக்கு விடை கண்டுபிடிப்பது டிடெக்டிவ் வேலை மாதிரி என்கிறார் இவர் – ஈக்களை ஆய்வு செய்து நம் மரபணு ரகசியங்களைக் கண்டுபிடிக்கும் செல் உயிரியலாளர் ரிச்சா ரிக்கி, ஹுலாக் கிப்பன் குரங்குகள் – இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கினம் இதுதானாம் ! (மனிதனைத் தவிர என்று ஒரு நக்கலான குறிப்பும் இந்த வரியோடு சேர்ந்து வருகிறது) – பற்றி ஆராயும் ஜீன் செபாஸ்டியன், அண்டார்ட்டிக் கண்டத்தில் 403 நாட்கள் பென்குயின்களோடு பெண் குயினாகத் தங்கி விண்வெளி ஆராய்ச்சி செய்த இஸ்ரோவின் விஞ்ஞானி மங்களா மணி – அப்போது அவருக்கு வயது 56 ! – இப்படி இந்தியப் பெண் விஞ்ஞானிக்ள் பற்றி அவர்கள் சொல்லச் சொல்ல நம் வியப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.

இது வெறுமனே விஞ்ஞானிகளின் வெற்றிக் கதை மட்டுமல்ல. இவர்கள் ஒவ்வொருவரின் ஆய்வும் தனித்துவமானது. மனித இனத்தின் வாழ்வை, ஏனைய உயிரினங்களின் வாழ்வை, மொத்தமாக இந்தப் புவியை, இயற்கையை ஒவ்வொரு படியாக உயர்த்திக் கொண்டே செல்லும் ஆய்வுகள். இந்த ஆய்வுகள், அவற்றின் பின்னால் உள்ள அடிப்படை அறிவியல் கருத்தாக்கங்கள், ஆய்வுக் கூடங்கள், அவற்றின் மிக பிரும்மாண்டமான, அதே சமயம் மிக நுட்பமான கருவிகள் எல்லாவற்றையும் அறிவியல் அறியாத எளியவரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியிருக்கிறார்கள். கருந்துளைகளை ஆய்வு செய்யும் பிரஜ்வல் சாஸ்திரி பயன்படுத்தும் ராட்சத டெலஸ்கோப்புகள் விண்வெளியில் மிதப்பவை. அவற்றை தன் அறையிலிருந்து தன் கணினி மூலம் தனக்கு வேண்டிய திசைக்குத் திருப்புகிறது அந்தச் சிறுபெண் விஞ்ஞானி ! இந்துமதி நியூட்ரினோவை ஆய்வு செய்ய தேனியில் பூமிக்கடியில் உள்ள ஆய்வுக்கூடத்தில் பயன்படுத்தும் நியூட்ரினோ டிடக்டரின் எடை வெறும் 50000000 கிலோ – 5 கோடி கிலோ !

இன்றைய அறிவியல் என்பது ஒரு துறைக்குள் மட்டும் அடங்கி விடாது. இவர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் தலைப்புகள் மிகவும் சிக்கலானவை. இயற்பியல், புவியியல், வானவியல் என்று ஒற்றை வரியில் அவற்றைச் சுருக்கி விட முடியாது. இந்த சிக்கலான விஷயங்களை எளிதாகப் புரிந்து கொள்ளும்படி எழுதி, அறிவியலோடு இந்த சாதனைப் பெண்களை அறிமுகம் செய்கிறது இந்த நூல். அதை அதே எளிமையோடு தமிழில் தந்துள்ளார் சதீஷ் வெங்கடேசன்.

பொதுவாக அறிவியல் நூல்களை தமிழில் படிக்கும் போது, சமயங்களில் இதை பேசாமல் இங்கிலீஷ்லயே படிச்சுத் தொலஞ்சுருக்கலாம் என்று தோன்றும்படி மொழிபெயர்ப்பாளர்கள் – என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன் ! – கொலையாய்க் கொன்று விடுவார்கள். ஆனால் இந்த மொழிபெயர்ப்பு அப்படியல்ல. மூல நூலில் நடை எப்படி இருந்ததோ, எனக்குத் தெரியாது. தமிழில் கடினமான இந்த அறிவியல் சமாச்சாரங்களை புன்னகையோடு ரசித்துப் படிக்கும் படியான ஒரு மொழியில் இருக்கிறது. புதைபடிவங்கள் – ஃபாஸில் என்று சொல்லும் போதே பிராக்கெட்டில் சினிமா டைரக்டர் அல்ல என்றொரு குறிப்பு ! புலிகளை கணக்கெடுக்கும் பழைய டெக்னாலஜி சிவாஜி- எம்ஜிஆர் காலத்தது என்றொரு வரி. எதிர்மறைப் படைப்பாற்றல் பற்றிச் சொல்லும் போது பரீட்சையில் காப்பியடிக்க புதுப் புது நவீன உத்திகளைக் கையாள்வது என்றொரு உதாரணம். அதே சமயம் பார்ட்டிகிள் டிடெக்டர், பார்ட்டிகிள் அக்சலரேட்டர், பார்ட்டிகிள் கொலைடர் போன்றவற்றிற்கு அருமையான தமிழ் சொற்கள். கட்டுரைகளின் தலைப்பும் வேடிக்கையும், கவித்துவமுமாக இருக்கின்றன. ஒரு மொழிபெயர்ப்பாளனாக பொதுவாக என் கண்ணில் மொழிபெயர்ப்புக் குளறுபடிகள் மட்டும்தான் அதிகம் படும். அவ்வாறின்றி, மொழிபெயர்ப்பைப் பாராட்டி என்னை ஒரு பத்தி எழுத வைத்துள்ள மொழிபெயர்ப்பாளருக்கு என் மனமார்ந்த பாராட்டும், வாழ்த்தும், அன்பும்.

எளிய தமிழில் தந்தால் அறிவியல் புத்தகங்கள் ஒரு நாவலைப் போன்று சுவையானவையாக இருக்கும் என்பதற்கு இந்த நூல் மிகச் சிறந்த உதாரணம். வெளியிட்டிருக்கும் புக்ஸ் ஃபார் சில்ரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

குழந்தைகள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். அதைவிட முக்கியமாக, தன் குழந்தை பொறியியல் அல்லது மருத்துவம் மட்டுமே படிக்க வேண்டும் என்று பெட்ரோமாக்ஸ் லைட் மட்டுமே வாங்க வரிசையில் நிற்கும் பெற்றோர்கள் அவசியமாக இதைப் படிக்க வேண்டும். பெட்ரோமாக்ஸ் லைட்டை விட நல்ல ஒளி வீசும் ஆயிரமாயிரம் அறிவியல் விளக்குகள் உள்ளன. குழந்தைகளுக்கு அந்த எல்லா விளக்குகளையும் அறிமுகம் செய்வோம். எல்லா விளக்குகளும் ஒளி வீசுபவையே…

நூலின் விவரங்கள்:

புத்தகம் : 31 அற்புத அறிவியல் சாகசங்கள் (31 Arputha Ariviyal Sagasangal)
ஆசிரியர்: நந்திதா ஜெயராஜ் & ஆஷிமா ஃப்ரைடாக் (தமிழில்: சதீஷ் வெங்கடேசன்)
பதிப்பகம் :
பக்கங்கள்: 192
விலை: ரூ.240
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

எழுதியவர் : 

✍🏻 – ச.சுப்பாராவ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *