ஒலிம்பிக் போட்டியின் மிக முக்கியமான நோக்கம் வெற்றி பெறுவது அல்ல, அதில் பங்கேற்பதுதான்; அதுவும் நேர்மை, ஒழுக்கம் என்ற பண்புகளில் நம்பிக்கை கொண்டவராகப் பங்கேற்றல்; வாழ்க்கையிலும் முக்கியமான இலக்கு வெற்றி அல்ல, போராட்டம்; இது தான் எக்காலத்திலும் உண்மை.
தொடக்கக் காலத்தில் நான்காண்டுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டி விளையாட்டுகள் நடைபெற்றன. ஆனால் பின்னாளில் பனிக்கட்டி பரப்பில் நடை பெறும் விளையாட்டுகளான பனிச்சறுக்கு,கிராஸ் கன்ட்ரி பனிச்சறுக்கு ப்ரீஸ் டைல் பனிச்சறுக்கு, போன்ற விளையாட்டுகள் நடத்தக் குளிர்கால ஒலிம்பிக் என்றும் மற்ற விளையாட்டுகளுக்காக கோடைக்கால ஒலிம்பிக் என்றும் பிரிக்கப்பட்டது. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளும் (PARALYMPIC) குறிப்பிட்ட காலத்தில் நடைபெறுகின்றன.
2020 மார்ச்சில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் 2021 ஜூலை 23 முதல் ஆகஸ்டு 8 வரை நடக்குமாறு தள்ளி வைக்கப்பட்டது. காரணம் கொரானா எனும் பெருந்தொற்று. இதற்கு முன்னதாக இப்படி ஒரு போதும் தள்ளி வைக்கப் பட்டதில்லை. எனவே இது பற்றிய எதிர்பார்ப்பு வீரர்கள் மற்றும் மக்களிடையே மிகவும் அதிகமாகி விட்டது; மக்கள் இது பற்றிப் பேச ஆரம்பித்துள்ளனர். முகக்கவசம்,கிருமி நாசினி, கையுறை, சானிடைசர் போன்ற மருத்துவ சாதனங்கள் தூய்மைப் பணியாளர்கள் மருத்துவர்கள் இன்னும் போதுமான வசதிகளுடன் டோக்கியோ நகரம் தயாராகி வருகிறது. 10000 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நகரத்தில் பெருந்தொற்றின் பரவல் மிகுந்துள்ளதால் பார்வையாளர்கள் இல்லாமலே போட்டிகள் நடக்கும் நிலை உருவாகியுள்ளது. ஒலிம்பிக்கால் நோய்த்தொற்று பரவல் மேலும் அதிகமாகும் என்று எண்ணி ஒலிம்பிக்கை எதிர்த்து ஜப்பானியர் பலர் போராடி வருகின்றனர். அங்கு அவசரக்காலமும் (EMERGENCY) அறிவிக்கப்பட்டுள்ளது.
2016 ரியோடி ஜெனிரா ஒலிம்பிக்கில் 63 ஆடவர் 54 மகளிர் என 117 பேர் பங்கேற்ற நிலையில் இந்தியா 2 பதக்கங்கள் மட்டுமே வென்றெடுக்க முடிந்தது. அதுவும், மகளிர் ஒற்றையர் பாட்மிட்டன் ஆட்டத்தில் P V சிந்து வெள்ளிப் பதக்கமும், 58 கிலோ பிரிவில் மற்போர் வீராங்கனை சாக்சி மாலிக் வெண்கலப் பதக்கமும் பெற்றதுதான். அன்று மகளிரால் நாடு பெருமை பெற்றது.
இப்போது நடக்க இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் 120 வீரர் வீராங்கனைகள் இந்தியாவின் சார்பாக விளையாடத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் தமிழ் நாட்டைச்சேர்ந்தவர் 12 பேர். ஆடவரும் மகளிரும் சம எண்ணிக்கையில் பங்கு கொள்கின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரியது.

இளவேனில் வாலறிவன் (துப்பாக்கி சுடும் போட்டி)
கடலூரைச் சேர்ந்தவர்; அண்ணன் இராணுவத்திலிருந்ததால் வீட்டுக்கு விடு முறையில் வரும்போதெல்லாம் பொம்மை துப்பாக்கியைத் தூர எறிந்து விட்டு அவரது கைத்துப்பாக்கி கன் போன்ற ஆயுதங்களை வாங்கிப் பார்த்துப் பார்த்து அதில் இளவேனிலுக்கு ஆர்வம் ஏற்பட்டது. இவருக்குக் கோச்சாக அமர்ந்து சிறப்பாக பயிற்சி கொடுத்தவர் புனே நகரத்தைச் சேர்ந்த ஒலிம்பிக் பதக்கம் பெற்றிருந்த ககன் நரங். இளவேனில் இதுவரை 4 தங்கப்பதக்கங்களும், ஏராளமான பரிசுகளும் பெற்றுள்ளார்.

பவானி தேவி (வாள் வீச்சாளர்)
சென்னையைச் சேர்ந்த இவர் 2௦14 இல் பிலிப்பைன்சில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் 23 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2012 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார். 2020 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய வாள் வீச்சாளர். இவர் அமெரிக்கா சென்று பயிற்சி பெற முன்னாள் முதல் அமைச்சர் ஜெ ஜெயலலிதா இவருக்கு 3 இலட்சம் வழங்கினார்.

நேத்ரா குமணன் (படகு ஓட்டும் போட்டி)
சென்னை வாசியான நேத்ரா குமணன் அமெரிக்காவின் மியாமியில் நடந்த படகு ஓட்டும் விளையாட்டில் உலகக் கோப்பைக்கான போட்டியில் கலந்துகொண்டார். பாய்மர படகோட்டும் போட்டியில் உலகக் கோப்பை பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளத் தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண் படகோட்டி.

கே சி கணபதி & வருண் தாக்கர்
சென்னையைச்சேர்ந்த 25 வயதே நிரம்பியுள்ள K C கணபதி ஓமன் நாட்டின் முசானாஹ் சேம்பியன்ஷிப் படகு ஓட்டும் போட்டியில் வெற்றி பெற்று டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கு பெற தகுதி பெற்றார். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வருண் தாக்கருடன் ஜோடி சேர்ந்து வெண்கலம் பெற்றார்.
இந்திய தொழில் முறை படகோட்டியான வருண் தாக்கர் கணபதியின் சம வயதினர். இவர் தற்போது லேசர் ஸ்டாண்டர்டு மற்றும் ரெக்காடா பிரிவில் அனைத்துலக அளவில் இந்தியாவின் சார்பாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கு கொள்கிறார்.

அசந்தா சரத் கமல்
மாநில தொழில் முறை மேசைப் பந்தாட்ட வீரர். 2004 கோலாலம்பூரில் நடை பெற்ற காமன் வெல்த்போட்டியில் ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் தங்கம் வென்றார். அர்ஜுன் மற்றும் பத்ம விருதுகள் பெற்றுள்ளார்.

சத்தியன் ஞானசேகரன்
இவர் முதல் இந்திய மேசைப்பந்து துடுப்பாட்டக்காரர். அனைத்துலக மேசைப் பந்து கூட்டமைப்பு 2017 தாய்லாந்தில் நடத்திய போட்டியில் வெண்கலம் வென்றார். பெல்ஜியம் ஸ்வீடன் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் ஸ்பானிய ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கமும் வென்றார். இவருக்கு அர்ஜுனா விருது 2018 ஆண்டில் வழங்கப்பட்டது.

தொடர் ஓட்டத்தில் பங்கு பெற இருக்கும் நம் தமிழ் சொந்தங்கள்
திருச்சியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் மற்றும் கலப்பு 4 x 400 தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்; அர்ஜுன் விருதும் பெற்றுள்ளார்.
தமிழக காவல் துறையில் பணியாற்றும் நாகநாதன் பாண்டி கமுதி சிங்க புலியாபட்டியைச் சேர்ந்தவர். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் மார்ச்சு மாதம் நடந்த தேசிய தடகளப் போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
திருச்சி குண்டூர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்த தடகளப் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும் 200 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளார்.நூறு மீட்டர் தூரத்தை 11.39 வினாடிகளில் கடந்து பி டி உஷாவின் வரலாற்றுச் சாதனையை முறியடித்துள்ளார்.
காவல் துறையில் பணியாற்றிய என் தாத்தாதான் என்னை உற்சாகப் படுத்தி ஓடவைத்து என்னை ஓட்டப் பந்தயங்களில் பங்கு கொள்ள வைத்தார் என்று சொல்கிறார் சுபா. இவர் எட்டு அனைத்துலக போட்டிகளில் ஓடி 3 பதக்கங்கள் பெற்றுள்ளார்.
மதுரை மாவட்டம் சக்கி மங்கலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனையான ரேவதி டோக்கியோ 4 x 400 மீட்டர் கலப்புத் தொடர் ஓட்டத்தில் பங்கு கொள்ளத் தகுதி பெற்றுள்ளார்.பெற்றோரை இழந்த இவர் தாய் வழிப்பாட்டியான ஆரம்மாள் அரவணைப்பில் வளர்ந்துள்ளார். பயிற்சியாளர் கண்ணன் இவருக்குப் பல உதவிகள் செய்து வழி காட்டியுள்ளார். பாட்டியையும் பயிற்சியாளரையும் எல்லாப் பேட்டிகளிலும் நன்றியுடன் நினைவுகூர்கிறார். தமிழ் நாட்டிலிருந்து டோக்கியோவில் பங்கு கொள்ளும் எல்லா வீரர் வீராங்கனைகளுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தலா 5 இலட்சம் வழங்கியுள்ளார். தமிழக அனைத்து வீரர் வீராங்கனைகளும் வெற்றிபெற வாழ்த்துவோம். அவர்கள் திறமை மற்றும் துணிவைப் பாராட்டுவோம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.