பாடல் என்கிற சொல் மூன்று எழுத்துக்களைத் தொடுத்த வெறும் கோலமல்ல. எந்த ஒரு உணர்வையும் பிரதிபலிக்காத கோலம் கூட கோலமல்ல தான். மண்ணில் வாழுகிற சீவராசிகளின் துயரத்தைச் சொல்லும் பாடல் என்பது பாடலல்ல அது கண்ணீரின் பிரதி. பாடல் என்பது புனைபெயர் தான்.
பல்லவி:
வாக்கப்பட ஆச – நா
வளவிதொட ஆச
அப்பன் வீட்டப் பிரிஞ்சு கொஞ்சம்
அழுதுபாக்க ஆச
கோபுரமா நா கேட்டேன் சாமி
குயில் ஒக்கார கூடுஒண்ணு காமி
சரணம்:
செத்துப்போன அண்ணன் போல பெத்துக் கொள்ள ஆச
சீமையிலே இல்லாத
பேரு வைக்க ஆச
வீட்டுக்கொரு கடுதாசி
போட்டு விட ஆச
வெள்ளச்சாமி வாத்தியாரக்
கேட்டு விட ஆச
வச்சுவிட்டு வந்த செடி
போயிப் பாக்க ஆச
தங்கச்சிக்கு மூக்குத்தி
வாங்கிப் போக ஆச
ஜாதியால வெட்டிக்கிட்ட
ஊரு கத பேச
சீர்வரிச செய்ய வீட்ட
வித்த கதப் பேச
எனக்கெப்போ வருமந்த
திருநாளு
தெனந்தோறும் கிழியுதுங்க
தேதித் தாளு
வாங்கி வந்த வரமா – நா
கருவேல மரமா
இந்தப் பாடலுக்கு கரிசல் குயில் கிருஷ்ணசாமி அண்ணன் அமைத்த மெட்டு என் உயிரை நனைத்தது. இதுவரை அமைத்திருக்கும் அவரின் நூற்றுக்கணக்கான பாடல்களில் இதற்கு முதலிடம் கொடுக்கலாமென்றே தோன்றுகிறது.
திரைப்படங்களில் பெரும்பாலும் காதல் பாடல்களே வாய்ப்பாக வருகின்ற சூழலில்தான் நான் என் விருப்பங்களை தனி இசைப் பாடல்கள் வழியாக நிறைவேற்றிக் கொள்கிறேன்.
ஒவ்வொரு இயக்குனரும் ஒரு கதையை உருவாக்குகையில், சொல்லிப் பார்க்கவும் அபிப்பிராயம் கேட்கவும் ஒரு நண்பரையோ ஒரு உதவி இயக்குனரையோ கூடவே வைத்துக் கொள்வர். ஆயிரம் பேர் இருப்பினும் ஒவ்வொருவருக்கும் ஒருவர் நெருடலின்றி பொருத்திப் போவர். அப்படி எனக்கு ஒருவர் எங்கள் ஊரைச் சேர்ந்த தம்பி செந்தில்குமார். நான் திரைப்பட உதவி இயக்குனராக இருந்தபோதே அவர்களது தோட்டம் நிறைய தென்னம்பிள்ளை நடப்பட்ட நாளில் மரங்கள் பெரிதானபின் இவையின் நிழலில் நாம் கதை விவாதம் வைத்துக்கொள்ளலாம் என்றவர். பிற்காலத்தில் அவரும் உதவி இயக்குனராக பணிசெய்து அனுபவம் பெற்றார். நான் இதுவரை சொன்ன கதையிலும் சொல்லயிருக்கும் கதையிலும் என் தம்பி செந்தில்குமாரின் தலையசைப்பும் கேள்விகளும் இருக்கும்.
நான் ஆகஸ்ட் 18, 1999 வருடம் லட்சியம் வெல்ல வாழ்த்தியவர்கள் ஏராளம். எங்கள் வீட்டுக் கூரை இற்றுப் பிய்ந்து கிடப்பதை சாலையில் போகும்போது எதார்த்தமாக பார்த்தவிட்டு மறுநாளே தென்னங் கிடுகுகளை வண்டிகட்டி ஏற்றிவிட்ட என் நண்பனும் பள்ளித்தோழனுமாகிய லோகநாத்.
நான் சென்னைக்கு கிளம்பும் போது என் கையில் இருபது ரூபாயை கொடுத்த ஜெயராஜ் மாப்பிள்ளை, நான் மதுரை வந்து சென்னை திரும்பும் போதெல்லாம் பால்விற்ற காசு நூறோ இருநூறோ கையில் அகப்படும் காசுகளை அள்ளி எண்ணாமல் கொடுத்த நண்பர் துளசி, எனக்கு திருமணமாகும்வரை இந்த நண்பர்கள் தான் நான் மதுரை வந்தபோதெல்லாம் வழியனுப்பி வைத்தார்கள். அவர்கள் தான் சீட்டுப் பிடித்து உட்காரவும் வைப்பார்கள். அப்போதெல்லாம் நான் ரயில் பயணத்திற்காக முன்பதிவு செய்வதில்லை. நண்பர்களே எல்லாமாவும் இருந்தார்கள்.
நண்பர் இயக்குநர் ரவிஅரசு அவர்கள் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் உதவியாளர். சாதிக்க வேண்டும் என்பதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அகத்தில் தீவிரம் காட்டும் அன்புக்காரர். எஸ். மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவான “ஈட்டி” எனும் திரைப்படம் நண்பர் ரவிஅரசுக்கு முதல்படம். நான் மேல் பத்தியில் சொன்னவை போன்ற அனுபவம் இந்த படத்தில் உணரக் கிடைத்தது. நண்பர்கள் சூழ்ந்த சென்னை நாயகன் அதர்வா. தஞ்சாவூர் பெண்ணான ஸ்ரீ திவ்யாவைக் காதலிக்கிறான். முகம்பாரா காதல். கைப்பேசி வழியாக மட்டுமே காதலுருகும் சிறகுகளின் வாசமே இந்தப் பாடலின் சூழல். தன் காதலின் அழகைச் சிலாகிக்கும் நாயகனும் கலாய்க்கும் நண்பர்களும்.
பல்லவி:
நாயகன்:
பஞ்சுமிட்டாய் மேல தீய
பத்த வச்சாடா
ராட்டினத்தை போல என்ன
சுத்த வச்சடா
மேலே மேலே
அவ மின்னலத்தான்
போலே போலே
கீழே கீழே என்ன
கொன்னுபுட்டாளே
கையில சிறகை
கட்டி விட்டாளே
பறவையாய் ஆனேனே
நண்பர்கள்:
சங்கத் தமிழா தங்கச் சிலையா
ஒத்து வருமாடா – அவ
சோழ நாட்டு சொர்ண கிளியா
சொல்லித் தொலடா
சரணம் – 1
நாயகன்:
மயிலா குயிலா தெரியாது
மணி குரல் என்ன வாட்டுதடா
நண்பர்கள்:
கொல்லுறான் கொல்லுறான் தத்துவம் சொல்லுறான்
ஐயோ தாங்கலடா – இவன்
ஓவரா பேசுறான் கேக்குற காதுல
ரத்தம் ஊத்துதடா
நாயகன்:
இரவு பகலும் பாக்காம
பேயப் போல ஆட்டுதடா
தஞ்சை கோபுர நிழலோ
நிலவுக்கு சித்தப்பன் மகளோ
நதி தந்தாளே அலை தந்தாளே பாராமலே
சரணம் – 2
நாயகன்:
ஓசி கனவு வரும் போது
ஒரு நொடி கூட தூங்கலையே
நண்பர்கள்:
பரோட்டா தின்னுட்டு கொறட்ட விட்டியே பொய்க்கொரு அளவில்லையா
கொசுக்கடி தாங்கல நீயும் தூங்கல
அள்ளி விடுறடா
நாயகன்:
நிறுத்தம் தாண்டி தூங்கிபுட்டேன் பஸ்ஸுல விசிலு கேக்கலையே
ஒலையென கொதிக்குது மனமே
அணைத்திட வாங்கடா சனமே
மழபேஞ்சாலும் வெயிலடிச்சாலும்
எருமை போலானேன்
நண்பர்கள்:
சங்கத் தமிழா தங்கச் சிலையா
ஒத்து வருமாடா – அவ
சோழ நாட்டு சொர்ண கிளியா
சொல்லி தொலடா
இதே படத்தில் இன்னொரு பாடல். அது டூயட். நாயகனும் நாயகியும் கைப்பேசி வழியாக காதல் வளர்ப்பது பாடலின் சூழல். ஏழு பல்லவி எழுதியதில் இயக்குநர் ஒன்றைத் தேர்வு செய்தார். ஆனால் ரவிஅரசின் குருவான இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு, “மரிக்கொழுந்து வாசப்புள்ள” எனத் தொடங்கும் பல்லவியே பிடித்திருந்தது. ஆனால் படத்தின் இயக்குநர் ரவிஅரசு தேர்வு செய்ததும் பாடல் பதிவானதும் கீழ்வருவது.
பல்லவி:
ஆண்:
நாம்புடிச்ச மொசக்குட்டியே
ஏம்மனச கசக்கிட்டியே
உன்னோட நானும் சேர்ந்திட சேர்ந்திட
நத்தைக்கு கூடா வாழ்ந்திட வாழ்ந்திட
வேண்டான்னு சொல்லாத
வேல் குத்தி கொல்லாத
போகாது ஓங்கிறுக்கு
பெண்:
ஏ உசுர திருடிப்புட்டு
ஏன்டா பையா அடகு வச்ச
கண்ணாடி பொம்மை நான்
பாத்துக்க பாத்துக்க
கையால என்ன தான்
போத்திக்க போத்திக்க
சாச்சாயே சொல்லால
மூச்செல்லாம் உம்மேல
காத்தாகி ஒன்னத் தொடுவேன்
சரணம் :1
ஆண்:
மீசை கொண்டு
ஊசி நான் போடணும்
பெண்:
ஆசை வச்ச
ஆளத்தான் பாக்கணும்
ஆண்:
பாய்க்கு லீவு விட்டாயே
பெண்:
நோயிக்கு டோக்கன் தந்தாயே
ஆண்:
நாற்காலியா நான் மாறவா
தேவதையே உட்கார வா
பெண்:
தூரம் தானே ஈரம் பேசும்
அருகே வந்தால் மோசமாய் போகுமே
சரணம் – 2
ஆண்:
ஃபோனு நம்பர்
போதைய ஏத்துது
பெண்:
பேச்சு இப்ப
பாதைய மாத்துது
ஆண்:
நூலின்றி
ஊசி கோர்த்தேனே
பெண்:
மீன் வாங்கி
சாம்பார் வச்சேனே
ஆண்:
ஹைக்கூ பேச்சா ஆரம்பிச்சு
நாவல் போலே ஆகிப்போச்சு
பெண்
பட்டாம் பூச்சி றெக்கை வாங்கி
இதயம் ரெண்டு வண்ணங்கள் பூசுதே
இந்தப் பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் காதல் போதையை மூளைக்கேற்றிப் பாடியிருப்பார். ஷக்திஸ்ரீ கோபாலன் அவர்கள் ஈடுகொடுத்துப் பாடி எல்லோரின் இதயங்களையும் சல்லடையாக்கும் வேலையைச் செவ்வனே செய்திருப்பார்.
நண்பர்கள் காலகாலமாக காதலுக்குத் துணைபுரிந்து வந்திருக்கிறார்கள் என்பதை தமிழ் சினிமா மூலம் அதிகமும் இலக்கியத்தில் கொஞ்சமும் அறியப்பட்டிருப்போம். நண்பர்கள் வாழ்விற்கும் துணையாய் தூணாய் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு நானும் என் நண்பர்களும் கூட சாட்சிதான் என்னை மருத்துவராக்கி அழகு பார்க்க ஆசைப்பட்டு கடைசியில் நான் கவிஞனாகிப் போனதில் கவலையுறாமல் கண்மலரந்த என் தாய்மாமன் மாமா பாண்டி அவர்களும், என் சகல கலை அனுபவங்களுக்குள்ளும் வாஞ்சையோடும் வழிகாட்டுதலோடும் இருந்த என் அண்ணன் சுந்தரபாண்டியனும், வெளிநாட்டிலிருந்து என்னை எல்லா வகையிலும் ஊக்கப்படுத்திய ருக்மணி அக்காவும், நான் சென்னையில் தங்குவதற்காக போரூரில் அறை பார்த்து வைத்தது தொடங்கி நான் இயக்குனராகும்வரை அன்பை அள்ளித்தந்து அரவணைத்துக் கொண்ட மாமா மலர்க்கொடி அக்கா மணிமேகலை தம்பதியரும், நான் சாப்பிடவில்லை என்றால் கட்டிவைத்து அடிக்கும் பரணி ஸ்டுடியோ அண்ணன் பாண்டி அக்கா இந்திராணி அவர்களும், மற்றும் செக்காணூரனி தமுஎகச நண்பர்களும் என்னைப் பொருத்தவரை பூ பூத்து காய் காய்த்து கனிதரும் மரங்கள். இந்த மரங்களின் கிளைகளிலெல்லாம் அமர்ந்து அழகாகியிருக்கும் வானம்பாடி நான். இலையுதிர் காலத்தில் அந்த மரங்களுக்கெல்லாம் என் இறகுகளை இலைகளாக்கியும் இருக்கிறேன்.
என் பாட்டுப் பயணத்தில் மிக அருகிருந்த ஒருவன். தன்னுடன் பிறந்த நான்கு அண்ணன் தம்பிகளையும் தள்ளிவைத்து என்னை அண்ணனாய் ஏற்றுக் கொண்டவன். என்னிடம் புகைப்படம் எடுப்பதையும், கடவுள் மறுபையும் கற்றுக்கொண்டவன் வாழ்வின் சிக்கலை அவிழ்க்க இயலாமல் போனவன். நான் என் முதல்படத்திற்கு லொகேஷன் பார்ப்பதற்காக திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த நள்ளிரவில் அவன் கைப்பேசியிலிருந்தே அவன் இறந்துவிட்ட சேதி. அவன் பெயர் விஜயக்குமார். நான் கதைகளில் பாத்திரங்களை உருவாக்கிக் கொண்டு சென்ற வேளைகளில் நண்பர்களும் தோழர்களும் உதிர்ந்துகொண்டிருந்த நிகழ்வுகளை மறக்கத்தான் முடியுமோ.
முந்தைய தொடர்களை வாசிக்க:
தொடர் 1: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 2: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 3: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 4: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
தொடர் 5: பாடல் என்பது புனைப்பெயர் – கவிஞர் ஏகாதசி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.