அக்டோபர் 4 : உலக விலங்கு தினம் - World Animal Day - 4th October - Animal Protection - Environment - Yercaud Ilango - https://bookday.in/

அக்டோபர் 4 : உலக விலங்கு தினம்

அக்டோபர் 4 : உலக விலங்கு தினம்


                                                                                                             – ஏற்காடு இளங்கோ


    விலங்கு (Animal) என்ற சொல் இலத்தீன் மொழியில் இருந்து வந்தது. விலங்குகள் முதன் முதலில் கடலில் தான் தோன்றியது. பூமியில் இதுவரை வாழ்ந்த 5 பில்லியனுக்கும் அதிகமான உயிரினங்களில் 99 சதவீதம் அழிந்துவிட்டது. தற்போது பூமியில் சுமார் 10 மில்லியன் விலங்கு இனங்கள் மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் 1.52 மில்லியன் விலங்கு இனங்கள் மட்டுமே அறிவியல் பூர்வமாக விவரிக்கப்பட்டுள்ளன.


       பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரினம் முதல் 110 அடி நீளம் கொண்ட  மிகப் பெரிய நீலத் திமிங்கிலம் வரை வாழ்கிறது. அனைத்து விலங்குகளும் ஏதாவது ஒரு வகையில் பாலியல் இனப்பெருக்கம் செய்கிறது. அரிஸ்டாட்டில் விலங்குகளை இரத்தம் உள்ளவை மற்றும் இரத்தம் இல்லாதவை என இரண்டு வகையாகப் பிரித்தார். அதன் பிறகு 1758 ஆம் ஆண்டில் கார்ல் லின்னேயஸ் என்பவர்தான் உயிரியல் வகைபாட்டினை உருவாக்கினார்.

Why scientists need your help to spot blue whales off Australia’s east coast
நீலத் திமிங்கிலம்


விலங்குகளின் அழிவு


        பரிணாம வளர்ச்சியின் மூலம் இனங்கள் உருவாகின்றன. மாறிவரும் சூழ்நிலைகளில் அல்லது உயர்ந்த போட்டிக்கு எதிராக வாழ முடியாத போது இனங்கள் அழிந்துவிடும். விலங்குகளுக்கும் அவற்றின் சுற்றுச்சூழல் இடங்களுக்கும் இடையே ஒரு உறுதியான உறவு நிறுவப்பட்டுள்ளது. அந்த உறவு பாதிக்கப்படும்போது உயிரினங்கள் அழிய நேரிடும். ஒரு இனத்தின் சராசரி ஆயுட்காலம் 1 முதல் 10 மில்லியன் ஆண்டுகள் ஆகும். ஆனால் அதற்குள் அந்த இனம் அழிந்து விடுகிறது.


       விலங்குகளின் அழிவுகள் சமீப காலத்தில்தான் பதிவு செய்யப்படுகின்றன. தற்போது விலங்குகளின் அழிவு விகிதம் அதிகரித்து வருகின்றது. 2019 ஆம் ஆண்டின் உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கையின்படி காட்டு பாலூட்டிகளின் எண்ணிக்கை 85 சதவீதமாக குறைந்துள்ளது. இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பு தங்கள் பரப்பளவில் பாதியை இழந்து விட்டது.


     இதனால் ஒரு மில்லியன் இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன. குறிப்பாக மனித நடவடிக்கையின் காரணமாக விலங்கினங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன. விவசாயம் செய்வதற்காக வனங்கள் அழிக்கப்படுகின்றன. வாழ்விட இழப்பு, பாலைவனமாக்கல், மாசடைதல், காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் மற்றும் வேட்டையாடுதல் போன்ற  காரணங்களால் விலங்கு இனங்கள் தினமும் அழிவைச் சந்திக்கின்றன.


துன்புறுத்தல்


      ஆண்டுதோறும் 80 பில்லியன் நில விலங்குகள் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. 56 பில்லியன் விலங்குகள் மக்களின் உணவு முறையில் சிக்கியுள்ளன. மனிதர்களுக்கு தேவையான இறைச்சி, முட்டை, பால், தோல், உரோமம், கம்பளி போன்றவை விலங்குகளிடமிருந்து பெறப்படுகின்றன. வளர்ப்பு விலங்கு, செல்லப்பிராணி, விளையாட்டு, பொழுதுபோக்கு, போட்டி, போர், வேட்டைக்கு என விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. இதில் நீர் வாழ் விலங்குகளும் அடங்கும்.


       பண்ணையில் விலங்குகள் இயற்கைக்கு மாறான சூழலில் வாழ்கின்றன. அவை தேவையற்ற மற்றும் தீவிர உளவியல் மற்றும் உடல் ரீதியான துன்பங்களைச் சந்திக்கின்றன. பில்லியன் கணக்கான பண்ணை விலங்குகளுக்கு உணவளிக்க பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. இதற்காக காட்டு விலங்குகளின் வாழ்விடங்களும் அழிக்கப்படுகின்றன.


      பெரிய விலங்கான யானைகள் சிறைபிடிக்கப்பட்டு சங்கிலியால் கட்டப்படுகின்றன. யானைகளுக்கு தங்கள் சமூகத்துடன் தொடர்பு இல்லாமலே போய் விடுகின்றன. போதிய உணவு இல்லாமல் மன அழுத்தம் மற்றும் உடல்நல பிரச்சனைகளைச் சந்திக்கின்றன. இவை சுற்றுலாத் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. யானைகளுக்கு காடுகளே சொந்தமானவை. ஆனால் பல ஆண்டுகள் சிறைபிடிக்கப்பட்ட யானைகளை மீண்டும் காட்டுக்குள் விடுவது சாத்தியம் இல்லாமல் போகிறது.


     தற்போது உலகெங்கிலும் உள்ள உயிரியல் பூங்காக்கள், மீன்வளம் அல்லது கடல் பூங்காக்களில் சுமார் 3,000 திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் தங்கள் தாய்மார்களிடமிருந்து மிகவும் இளம் வயதில் பிரிக்கப்படுகின்றன. அவை மிகச் சிறிய தொட்டிகளில் அடைத்து வைக்கப்படுகின்றன. மேலும் பயிற்சி நோக்கங்களுக்காக அவை உணவை இழக்க நேரிடுகின்றன.

File:Sea World1.jpg - Wikimedia Commons
டால்பின்


      இது அவைகளுக்கு நிலையான மன அழுத்தத்தையும், துன்பத்தையும் ஏற்படுத்துகின்றது. பொழுதுபோக்கு என்ற பெயரில் கடுமையான துன்பத்தைச் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பல்வேறு விலங்கினங்கள் மனிதர்களால் பல்வேறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. விலங்குகளுக்கு ஏற்படும் துன்பங்களுக்கு முடிவு கட்டுவது, விலங்குகளின் நலனைப் பாதுகாப்பது என்ற நோக்கில் உலக விலங்குகள் தினத்தை ஹென்ரிச் சிம்மர்மேன் (Heinrich Zimmermann) என்பவர் உருவாக்கினார்.


ஹென்ரிச் சிம்மர்மேன்


       இவர் 1887 ஆம் ஆண்டு போலந்து நாட்டில் பிறந்தார். இவர் ஒரு எழுத்தாளர், ஆசிரியர், பத்திரிக்கையாளர் மற்றும் விலங்கு பாதுகாப்பு ஆர்வலர் ஆவார். இவர் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு இயக்கத்தின் முக்கிய அமைப்பாளராக இருந்தார். இவர் நாய் பற்றிய ஆய்வுகள் செய்த ஒரு ஜினோலஜிஸ்ட் (Cynologist) ஆவார். இவர் மனிதன் மற்றும் நாய் (Man and Dog) என்ற இதழின் வெளியீட்டாளராகவும் இருந்தார்.

World Animal Day: Its Significance And Ways You Can Contribute Personally | Femina.in
ஹென்ரிச் சிம்மர்மேன்


     இந்த இதழை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வெளியிட்டார். இந்த இதழைப் பயன்படுத்தி விலங்குகளின் நலன் சார்ந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினார். உலகம் முழுவதும் விலங்குகளின் நலன் பற்றிய கருத்துக்களைப் பரப்பினார். மேலும் உலக விலங்கு தினக் குழுவை நிறுவினார்.


உலக விலங்கு தினம்


       உலக விலங்கு தினம் (World Animal Day) என்பது சில இடங்களில் உலக விலங்கு நல தினம் (World Anmal Welfare Day) அல்லது உலக விலங்கு பாதுகாப்பு தினம் (World Animal Protection Day) என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் அக்டோபர் 4 அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இது விலங்கு உரிமைகள் மற்றும் விலங்கு நலனைக் கொண்டாடும் ஒரு நிகழ்வாகும்.

World Animal Day - Wikipedia
உலக விலங்கு தினம்


      உலக விலங்குகள் தினம் முதன் முதலில் 1925 ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று ஜெர்மனியில் கொண்டாடப்பட்டது. இந்த முதல் நிகழ்வு பெர்லினில் உள்ள விளையாட்டு திடலில் நடைபெற்றது. இதில் 5,000 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ஹென்ரிச் சிம்மர்மேனால் ஏற்பாடு செய்யப்பட்டது.


   ‌‌   இந்த தினம் அக்டோபர் 4 அன்று நடத்த திட்டமிடப்பட்டது. ஏனென்றால் இது சூழலியலின் புரவலர், புனித பிரான்சிஸ் அசிசி அவர்களின் பண்டிகை தினத்தன்று வருகிறது. ஆனால் அப்போது இந்த தினம் கொண்டாட  இடம் கிடைக்கவில்லை. அதன் பிறகு இந்த நிகழ்வு 1929 ஆம் ஆண்டு முதல் முறையாக அக்டோபர் 4 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் உலக விலங்கு தினத்தை மேம்படுத்துவதில் சிம்மர்மேன் அயராது உழைத்தார்.

40+ Beautiful Saint Francis Of Assisi Images - Saint Images
பிரான்சிஸ் அசிசி

     இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் சர்வதேச விலங்குகள் பாதுகாப்பு மாநாடு 1931 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிம்மர்மேன் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதன்படி அக்டோபர் 4 ஆம் தேதியை உலக விலங்கு தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் போலந்து பாராளுமன்றம் அக்டோபர் 4 ஆம் தேதியை விலங்குகள் தினமாக 2006 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டது.


அசிசி


      புனித பிரான்சிஸ் அசிசி (Saint Francis of Assisi) என்பவர் ஒரு ஆன்மீகவாதி, கவிஞர் மற்றும் கத்தோலிக்கப் பிரியர். இவர் கிறிஸ்துவத்தில் மிகவும் மதிப்புமிக்க நபர்களில் ஒருவர். இவர் 1226 ஆம் ஆண்டு அக்டோபர் 3 அன்று இயற்கை எய்தினார். இவருக்கு 1228 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இவர் விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்டவர்.

       இவர் விலங்குகளின் உரிமைகள் இயக்கத்தின் முன்னோடியாக இருந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக இது அமைந்தது. அவரது பண்டிகை நாளான அக்டோபர் 4 அன்று தேவாலயங்களில் விலங்குகளுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. பின்னர் இது ஒரு வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது.


விலங்கு பாதுகாப்பு


      விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் பழங்காலம் முதலே இருந்து வருகிறது. இந்தியாவில் கி.மு முதல் நூற்றாண்டில் பிராணிகள் பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டன. பல இந்திய மன்னர்கள் விலங்குகளுக்காக மருத்துவமனைகளைக் கட்டினார்கள். அசோகர் (கி.மு 304 – 232) அகிம்சை கோட்பாட்டின்படி வேட்டையாடுதல் மற்றும் விலங்குகளைப் படுகொலை செய்வதற்கு எதிராக உத்தரவுகளைப் பிறப்பித்தார்.


       கி.பி 13 ஆம் நூற்றாண்டில் செங்கிஸ் கான் மங்கோலியாவில் இனப்பெருக்க காலத்தில் (மார்ச் முதல் அக்டோபர் வரை) வனவிலங்குகளைப் பாதுகாத்தார். ஐரிஸ் நாட்டின் எம்.பி ரிச்சர்ட் மார்ட்டின் என்பவர் கால்நடைகள், குதிரைகள் மற்றும் செம்மறி ஆடுகளைக் கொடுமைப்படுத்துவதில் இருந்து பாதுகாப்பை வழங்கும் “கால்நடைகளை கொடுமைப்படுத்தும் சட்டம் 1822” என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்.

अंग्रेज़ों से पहले भारत के सबसे बड़े भू-भाग पर राज करने वाले सम्राट की  कहानी- विवेचना - BBC News हिंदी
அசோகர்


     இங்கிலாந்தில் விலங்கு நல அமைப்பு 1824 ஆம் ஆண்டில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. விலங்குகளைப் பாதுகாப்பதற்காக இங்கிலாந்து நாட்டில் “விலங்குகள் மீதான வன்கொடுமைச் சட்டம்” 1835 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. ஜெர்மன் நாட்டின் மந்திரி ஆல்பர்ட் நாப் என்பவர் 1837 ஆம் ஆண்டில் ஜெர்மன் விலங்கு நல சங்கத்தை நிறுவினார். மேலும் இங்கிலாந்தில் “விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1911” என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.


      உலகின் பல்வேறு நாடுகளிலும் விலங்குகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இவை விலங்கு உரிமைகள் பற்றியதாகும். விலங்குகளை மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும், அவற்றின் வாழ்க்கை, சுதந்திரம், சுகாதாரம் மற்றும் சித்திரவதையில் இருந்து விடுதலை ஆகியவற்றுக்கான உரிமைகள் இதில் இடம் பெற்றிருந்தன.


இந்தியா


      இந்தியாவில் இந்திய விலங்கு நல வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்திய விலங்குகள் நல வாரியத்தை ஸ்ரீமதி என்பவரால் தொடங்கப்பட்டது. இது விலங்குகள் நலச் சட்டங்கள் குறித்த சட்டபூர்வ ஆலோசனை அமைப்பாகும். இது நாட்டில் விலங்குகளின் நலனை மேம்படுத்துகிறது. இதற்காக “விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960” பிரிவு 4 இன் கீழ் 1962 இல் உருவாக்கப்பட்டது.


       இந்த வாரியம் நாட்டில் விலங்குகள் நலச் சட்டங்கள் பின்பற்றுவதை உறுதி செய்கிறது. விலங்குகள் நல அமைப்புகளுக்கு மானியங்களை வழங்குகிறது. விலங்குகள் நலப் பிரச்சினைகளில் இந்திய அரசுக்கு ஆலோசனை வழங்குகிறது. இந்த வாரியத்தில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 28 உறுப்பினர்கள் உள்ளனர். விலங்குகளின் நலனைப் பாதுகாக்க இந்த வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


   கட்டுரையாளர் : 

 – ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *