தங்கேஸ் எழுதிய 5 கவிதைகள் (5 Poems Written by Thanges) | ஞாபகத்தின் நதிக்கரையில் | பொழுது | ஞாபகங்கள் | நினைவு | மஞ்சள் காகிதம் |

தங்கேஸ் எழுதிய 5 கவிதைகள்

தங்கேஸ் எழுதிய 5 கவிதைகள்
1. ஞாபகத்தின் நதிக்கரையில்

ஞாபகத்தின் நதிக்கரையில்
வெறும் மணல் வெளி
நடக்கும் பாதங்களின் மீது
குத்தும் மீன் முட்கள்

இந்த நதியில் கரை கொள்ளா
வெள்ளம் வந்தது
படித்துறையில் படுத்திருந்த
தண்ணீர்ப் பாம்பு
நம் காலடியோசை கேட்டு
பளிச்சென்று தண்ணீருக்குள்
குதித்து ஓடியது
யாவும் கண் முன்
கனவாய் நிழலாடுகிறது

அத்தனைச் சுழல்களிலும்
ரொங்கும் வெண் நுரைகள்

நுரைகளில் நீர்க் குமிழிகள்
வெடிக்கும் போது
நாணற் செடிகளின் நுனிக் கிளைகள்
எப்போதும் நதியில்
மூழ்கிக் கொண்டிருக்கும்

மேகத்தைக் கையிலேந்திப் பார்த்த
காலம் போய்
இப்போது வெறும் கைகளையே
மேகத்தைப் பார்த்து
ஏந்திக் கொண்டிருக்கிறோம்

பிரார்த்தனைக்குக் கூட ஒரு துளி
விழவில்லை

சபிக்கப்பட்ட மனதுகள்
எந்த மணல் வெளியில்
முள்ளாய்ப் புதைந்து கிடக்கின்றவோ?

சரி
இன்னொரு வெள்ளம் வந்தாலும்
முள்ளாவது பிழைத்துக் கிடக்க வேண்டுமே
யார் கண்டது ?

2. பொழுது

வாசற் கோலத்தை
இழுத்துச் செல்லும்
சிற்றெறும்புகளை
வேடிக்கை பார்க்கத்
தொடங்கியதிலிருந்து
ஆரம்பித்து விட்டது
இன்றைய பொழுது

இன்னும் கட்டி முடிக்கப்படாத
மதில் சுவரின் மீது
குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி
சோம்பல் முறிக்கும்
வெள்ளைப் பூனைக்கு
எந்த எலி உணவாகப் போகிறதோ
இன்று?

சற்று ஆசுவாசமாய்
புரண்டு படுத்திருந்த
தெருக்களெல்லாம்
கயமையின் காலடிகளைச் சுமக்க
தங்கள் முதுகுகளைத்
தயார்ப்படுத்திக் கொள்கின்றன

3. ஞாபகங்கள்

வாசல் நாற்காலி
மழையில் நனைந்து கொண்டிருப்பது
நீயே நனைவது போல் இருக்கிறது
பார்ப்பதற்கு

மின்சாரம் இழையறுந்த பொழுதுகளில் தான்
பின்னிப் பின்னி மேலேறுகின்றன
இந்நினைவுகள்

யார் வீட்டிலிருந்து வந்தாலும்
அழுகைச் சத்தம் முதலில் தொடுவது
இதயத்தை தானே?

ஒரு சிறிய மின்னல் தீற்றில்
ஜொலிக்கத் தான்
இந்த பூமி
இன்னும் இருட்டாகவே இருக்கிறது

மழை மேகங்கள் தீர்ந்து போன நாளில்
எஞ்சியிருப்பவை
வற்றிய மடுவைப் போன்ற
வெற்று வானமும்
சிதிலமான ஞாபகங்களும் தவிர
வேறில்லை

4. நினைவு

புல்லிக் கிடந்தது
புடை பெயர்ந்தது
அவ்வளவில் அள்ளிக் கொண்டது
உன் நினைப்பு சகி !

நினைவு ஒன்று தானே
மரித்தாலும் உயிர்த்தெழுவது?

சங்குப் பூனைக்கு வீசும்
ஒரு சிறிய ரொட்டித் துண்டைப் போல
நீ வீசி விட்டுப் போன நேசம்
இப்போது உடைக்க முடியாத
பாறாங்கல்லாய் இருக்கிறது

நினைவுகளைச் சுமக்க முடியாத மனிதர்களுக்கு
இரண்டு நெஞ்சங்கள் வழங்கப்படவில்லையே
இன்னும்

புது மழைக்குப் பின்
சகலத்தையும் அடித்துச் செல்லும்
பேராறு போலத்தான்
இந்த நேசமும்

கடலில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்குள்
எத்தனை அருவிகளில்
தலைகீழாய் குதிக்கச் சொல்கிறது
மனிதர்களை?

மனதின் நினைவுகளை
மனதே அழிக்க வேண்டுமென்ற
விதியின் படி தோற்றுப் போய்
ஆலிலைச் சருகு போல்
அலைந்து கொண்டிருக்கும்
கோடியில் ஒரு மனது தான்
இந்தக் கவிதையை
உன்னிடம் சேர்ப்பது.

5. மஞ்சள் காகிதம்

இந்த மஞ்சள் காகிதம் முழுவதும்
நனைந்து முடிந்திருக்கும்போது
நீ அருகில் வந்து விடுவாய்

இந்த இரவு சிறிய கரும்புள்ளியாய்த் தேய்ந்திருக்கும் போது
நீ அண்மையில் வந்து விடுவாய்

தூரத்தில் கேட்கும்
உன் காலடி ஓசைக்கு லயமாக
என் இதயத்தின் துடிப்போசைகள்
தன்னைத் தகவமைத்துக் கொண்டிருக்கும் நேரம்
நீ என் கண் முன் வந்து நிற்பாய்

நான் ஒரு மலர் மாலை ஆகி
உன் காலடியில் வீழ்வேன்

நீசூடிக்கொண்ட பின்
உன்மார்பில் புரளும்
இதழ்களிலிருந்து கசியும் வாசமாகி
உன் காதிற்குள் வந்து முணுமுணுப்பேன்

“என்னை மறந்து விடு”

நீ எதிர்பார்ப்பதும் இது தானே?

நீ அண்ணாந்து பார்ப்பாய்
அவ்வளவு அதிகாலையில்
வானில் விடைபெற்றுப் போகும்
ஒரு நுண்ணிய பறவை
வேறு யார் கண்களுக்கும்புலப்படாது.

எழுதியவர்:

தங்கேஸ்

Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *