தூத்துக்குடியில் 5 – வது புத்தக திருவிழா தொடக்கம்
தூத்துக்குடி புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழா – 2024, தூத்துக்குடி சங்கர பேரி சாலைப் பிரிவில் உள்ள திடலில் 5ஆவது புத்தகத் திருவிழாவை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி முன்னிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம் பகவத் தலைமையிலும் நடைபெறுகிறது. இன்று 3ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தில் அழைத்துவரப்பட்டு புத்தகக் கண்காட்சியைக் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியின் கலாச்சாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, மதத் திருவிழாக்கள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் கண்காட்சியாக வைப்பதற்குத் தனியாக அரங்கம் அமைக்கப்பட்டது, அந்த புகைப்பட கண்காட்சியையும் அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். முன்னதாக, அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோர் விழிப்புணர்வு ராட்சத பலூனை பறக்க விட்டார்.
தூத்துக்குடியின் கலாச்சாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, மதத் திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள், மக்கள் வாழ்க்கை முறை, மீனவ சமூகத்தின் வாழ்க்கை, தூத்துக்குடி இயற்கைக் காட்சிகள் (கடற் பரப்புக்கள் நதிக் காட்சிகள். ஈர நிலங்கள், நகர்ப்புற காட்சிகள்) வனவிலங்குகள் மற்றும் ஈரநில பறவைகள், தொழிலாளர்கள் (தொழில்துறை. மீன்பிடித்தல்), விளையாட்டு போன்ற புகைப்படங்கள் இடம்பெறவுள்ளன.
இந்த விழாவில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தார்.
தினமும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் பங்குபெறும் சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. புத்தகக் கண்காட்சியுடன் இணைந்து புகைப்பட கண்காட்சியும் நடைபெறுகிறது. மேலும், நெய்தல் கலைத் திருவிழா அக். 11 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கலைத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.
நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தூத்துக்குடியின் சிறப்பு உணவுகளுடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் 40-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.