பல்கலைகழக மானியக்குழு வெளியிட்ட வரைவு அறிக்கையை திரும்பப்பெறக்கோரி 900க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கல்வியாளர்கள் எதிர்ப்பு அறிக்கை…!
19-9-25 மற்றும் 13-10-25 ஆகிய தேதிகளில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களில் வெளியான கட்டுரைகளை தழுவி எழுதப்பட்டது
தமிழில் – மோசஸ் பிரபு
இந்தியாவில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் மட்டுமே இதுவரை தேசிய கல்விக் கொள்கை-2020 ஐ வரவேற்றுள்ளன, ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பான பாரதிய சிக்ஷா மண்டல் என்ற அமைப்பு தேசிய கல்விக்கொள்கை உருவாக்கத்தின் போது பல்வேறு பரிந்துரைகளை கல்விக்கொள்கை குழுவிற்கு சமர்பித்துள்ளது அதில் கிட்டத்தட்ட 60 சதவீதம் வரைவு அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர். எனவே இப்படியான பின்னியோடு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையும் அதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பல்கலைகழக மானியக்குழு வெளியிட்டுள்ள உயர்கல்விக்கான வரைவு அறிக்கையும் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் நன்கு அறிவோம் இந்த வரைவு, நமது பாடத்திட்டத்தை முழுவதுமாக ஆர்.எஸ்.எஸ் சித்தாந்திற்கு வலுசேர்க்கும் வகையில் மாற்ற முயல்கிறது. தேசிய கல்விக் கொள்கை 2020 வரைவு வெளியானதும் பலரும் முன்வைத்த விமர்சனம் என்ன..? இந்தக் கொள்கை நமது கல்வி முறையை வணிகமயமாக்கவும், வகுப்புவாதமயமாக்கவும், மற்றும் மாநில உரிமைகளை பறித்து அனைத்து அதிகாரத்தையும் மத்தியத்துவப்படுத்தும் முடிவுகளை உள்ளடக்கியுள்ளது என்பதை நாம் சுட்டிக்காட்டினோம். அது அவ்வாறே அமுலாகிறது
தற்போது கற்றல் விளைவுகள் அடிப்படையாக (Learning OutComes based curriculum Framework-LOCF) வெளியிடப்பட்ட இந்த உயர்கல்வி பாடத்திட்டத்திற்கான வரைவு அறிக்கையின் மூலம், அவர்கள் நம் கல்வித் துறையை எவ்வாறு மாற்றவும் கைப்பற்றவும் விரும்புகிறார்கள் என்பது மீண்டும் தெளிவாகிறது. இந்திய அறிவுத்திறன் அமைப்புமுறையின் கீழ் பாரதீய பிஜூகணிதம், கால கணம், பஞ்சாகம், இந்திய நாட்காட்டி முறை, நல்ல நேரங்களின் கணக்கீடு , மூகூர்த்த நேரங்கள், நாரத புராணங்கள், போன்ற தலைப்புகளை இணைக்க முயற்சிக்கின்றனர். மேற்கூறிய அனைத்தும் அறிவியல் வளர்ச்சி முழுமையாக வளராத காலக்கட்டத்தில் பயன்பாட்டிலிருந்த கணக்கீட்டு முறைகள் அறிவியல் வளர்ச்சி வளர்ந்த இக்காலக்கட்டத்தில் அதன் பயன்பாடு தேவைப்படாத சூழலில் அதை உயர்கல்வி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இணைப்பதில் எந்த நன்மையும் மாணவர்களூக்கு ஏற்படபோவதில்லை பல்கலைகழக மானியக்குழுவின் இந்த நடவடிக்கை ஆர்.எஸ்.எஸ். விரும்பும் காவிமயமாக்கலை தீவிரப்படுத்துவதையும், உயர்கல்வியில் அறிவியல் பார்வைக்கு எதிரான மனப்பான்மையை வளர்ப்பதையுமே ஊக்குவிக்கிறது.
இந்த வரைவு அறிக்கை வெளியானவுடன் நம் இந்திய நாட்டின் புகழ்பெற்ற சுமார் 900க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் வாயிலாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் வினீத் ஜோஷிக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில், தற்போது வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையை உடனடியாக திரும்பப்பெற்று நம் நாட்டின் சிறந்த கணிதவியலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் குழுவால் மீண்டும் வரைவு அறிக்கையை வடிவமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தற்போதைய ஆவணம் அடிப்படை பாடங்களை முக்கியத்துவம் இல்லாமல் மாற்றுகிறது அதே நேரத்தில் காலாவதியான மற்றும் பொருத்தமற்ற பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் இந்த வரைவு அறிக்கை இந்தியாவின் உயர்கல்வியை நாசாப்படுத்துவதோடு இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் என எச்சரித்துள்ளனர். அதில் பலரும் இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படும் பத்ம விருதுகள் மற்றும் சாந்தி சுவரூப் விருது உள்ளிட்ட பல மதிப்புமிகு விருதுகளை பெற்றவர்கள்.
கணித அறிஞர்கள் விமர்சிக்கும் முக்கிய பகுதிகள் என்னென்ன..?
1. மெய் பகுப்பாய்வு( REAL ANALYSIS), நேரியல் இயற்கணிதம்(LINEAR ALGEBRA) மற்றும் நவீன இயற்கணிதம் (MODERN ALGEBRA) போன்ற முக்கிய பாடங்கள் போதுமான அளவு இணைக்கப்படவில்லை அல்லது ஒரே பருவத்திற்கு (SEMESTER) மட்டும் குறைந்தளவில் கொடுக்கப்பட்டுள்ளன, இதனால் கணித அறிவின் இயல்பான முன்னேற்றத்திற்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் போகும்.
2. நிரலாக்கம்(PROGRAMMING) மற்றும் எண்முறைகள் (NUMERICAL METHOD) ஆகியவை முக்கியப்பகுதியிலிருந்து விலக்கப்பட்டுள்ளது, பயன்பாட்டு கணிதம்(APPLIED MATHEMATICS) ஓரங்கட்டப்பட்டுள்ளது. புள்ளியியல் பாடப்பிரிவு செய்முறை பயிற்சி இல்லாத ஒற்றை பாடமாக குறைக்கப்பட்டுள்ளது, இயந்திர கற்றல் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் புள்ளியியலை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை கணக்கில் கொள்ளாமல் அலட்சியப்படுத்தியுள்ளது.
3. முக்கிய பாடப்பிரிவோடு தேர்வு செய்து படிக்கும் பாடப்பகுதிகள் பொதுவாக உயர்கல்வியில் இடம்பெறும் இது மிக மோசமாக கட்டமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, “இசையில் கணிதம்” என்ற பாடத்தை தேர்வு செய்ய 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு போதுமானது. அது உயர்கல்வியில் கணிதம் முதன்மை பாடமாக எடுத்து படிப்பவர்களுக்கு அவசியமில்லை. ஃபோரியர் சீரியஸ் பகுப்பாய்வு (FOURIER SERIES ANALYSIS) மற்றும் மார்கோவ் சங்கிலிகள் (MARKOV CHAINS) போன்ற முக்கிய கணித தலைப்புகளில் குறைவான பகுதிகளே இடம்பெற்றுள்ளன, அதே நேரத்தில் “இயந்திர கற்றலில் கணிதம்” உள்ளிட்ட மேம்பட்ட கருத்துக்களை வெறும் 15 மணி நேரத்தில் உள்ளடக்க முயற்சிக்கிறது.
4.புதிதாக இணைக்கப்பட்ட பல பாடப்பிரிவுகள் பெரும்பாலான கணித ஆசிரியர்களின் நிபுணத்துவத்திற்கு அப்பாற்பட்டவை. கணிதத்தோடு இணைக்கப்பட்டுள்ள தியானம், நாடகம், கலை ஆகியவை இளங்கலை படிப்புக்கு பொருத்தமில்லாதவை என கூறியுள்ளனர்

மேலும் இது குறித்து பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கூறுகையில்
டெல்லி பல்கலைக்கழகத்தின் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியின் கணிதத் துறையின் இணைப் பேராசிரியர் (ஓய்வு) நந்திதா நரேன் அவர்கள் கணிதப் பாடத்திட்டம் தொடர்பாக வரைவு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள குறைபாடுகளைப் பற்றி டைம்ஸ் பத்திரிகையிடம் விவாதித்தார்.
சமீபத்தில் பல்கலைகழக மானியக்குழுவால் (UGC) “முன்மொழியப்பட்ட பாடத்திட்டம் இந்தியாவில் உயர்கல்வியில் உள்ள கணிதத்தை சுமார் 56 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளுகிறது. 1969 ஆம் ஆண்டில், நவீன கணிதம் முதன்முறையாக யுஜிசி பாடத்திட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது அதில் நவீன இயற்கணிதம், மெய்பகுப்பாய்வு கணிதம் ஆகியவை மட்டுமே தோராயமாக 65% முதல் 75% வரை இருந்தது. சர்வதேச அளவில் போட்டியிட மாணவர்களை தயார்படுத்துவதற்காக நவீன கணிதப் பாடத்திட்டம் இணைக்கப்பட்டது இது ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தியது. இவை உயர் கணிதத்தின் தூண்களாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. தற்போதைய பாடத்திட்டத்தில், 14 முக்கிய கணிதத் தாள்களில் மெய்பகுப்பாய்வு(REAL ANALYSIS) பகுதியிலிருந்து 6 தாள்கள் மற்றும் நவீன இயற்கணிதம்(MODERN ALGEBRA) பகுதியிலிருந்து 5 தாள்கள் ஆகிய 11 தாள்கள், இந்த இரண்டு முக்கிய பகுதிகளிலிருந்தும் ஒவ்வொரு பருவத்தேர்வின் போது இடம்பெற்றன. ஆனால் தற்போது முன்மொழியப்பட்ட பாடத்திட்டம் இந்த எண்ணிக்கையை 14 தாள்கள் என்ற நிலையிருந்து வெறும் 3 தாள்களாக குறைத்துள்ளது, மெய் பகுப்பாய்வில் ஒரு தாள் மட்டுமே ஏழாவது பருவத்தில் இடம்பெறுகிறது. இதனால் பாடத்திட்டத்தில் ஒட்டுமொத்த கணிதத்தின் உள்ளடக்கம் கடுமையாக நீர்த்துப்போகச் செய்யப்படுகிறது. மொத்தம் உள்ள 36 வினாத்தாள்களில் முக்கிய கணித வினாத்தாள்கள் 14 மட்டுமே இடம்பெற்றுள்ளது. இது முழுமையான கணிதப் பாடத்திட்டம் போல் தெரியவில்லை, இந்திய அறிவுத்திறன் முறை, மதிப்பு சேர்க்கப்பட்ட பாடப்பிரிவுகள் (VALUE ADDED COURSE), திறன் மேம்பாட்டுப் பாடநெறிகள் ஆகியவற்றின் ஆதிக்கம் சர்வதேச அளவில் மாணவர்களை பலவீனமானவர்களாக மாற்றும் மாணவர்களை சோர்வடையச் செய்து, குழப்பமடையச் செய்யும், அவர்களின் முக்கிய பாடத்தைப் பற்றிய அறியாமையில் ஆழ்த்தும் என்றார்.
பாடத்திட்டத்தில் பல்வேறு கூறுகளை இணைப்பதன் மூலம் ஏற்படும் விளைவுகளை விமர்சித்து, ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் கணிதத் துறை பேராசிரியர் அம்பர் ஹபீப், கூறுகையில் “அனைத்தையும் கலந்து ஒரு தொகுப்பாக உருவாக்கப்பட்ட இந்த பாடத்திட்டத்தை கவனிக்கும் போது இதை வடிவமைத்தவர்களுக்கு எந்தவொரு தொலைநோக்கு பார்வையும் இல்லை என்பதையும், அவர்கள் வெறுமனே நினைத்தையெல்லாம் இணைக்கலாம் என்ற எண்ணத்தில் கணித பாடங்களை கருதியிருக்க முடியும் என்றும் கருதுகிறேன். கணிதத்தில் பாரம்பரிய வரலாற்று பின்னனியின் தொடர்பையும் இடைக்கால கணித அறிவையும் இணைக்கலாம் ஆனால் அது தற்போதைய கணிதப்பாடத்தை செழுமைப்படுத்த வேண்டும் அதற்கு பதிலாக அதை அடியோடு மாற்றும் முயற்சி இங்கு நடைபெறுகிறது என்னை பொறுத்தவரை UGC வரைவு அறிக்கையில் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கான முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்றே கருதுகிறேன்.” பாடத்திட்டத்தின் கவனம் இந்திய அறிவுத்திறன் அமைப்புமுறையின் பாரம்பர்ய அறிவு என சொல்லப்படும் அம்சங்களை முன்னிலைப்படுத்துவதில் மட்டுமே உள்ளது. இதன் மூலம் “பண்டைய இந்தியாவின் கணித பங்களிப்புகள் நவீன அறிவுக்கு மாற்றாக செயல்பட முடியும் என்று மாணவர்கள் நம்ப வைக்கப்படுவார்கள். இது ஆபத்தமானது, மெய் பகுப்பாய்வு மற்றும் இயற்கணிதம் போன்ற முக்கிய பகுதிகள் அவர்களுக்கு வேகமாகவும் முழுமையற்ற முறையிலும் கற்பிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது, மேலும் அவர்கள் இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கு போதுமான தகுதிகள் இல்லாதவர்களாக மாற்றப்படுவார்கள்” என்றும் எச்சரிக்கிறார்.
குறிப்பிட்ட நெறிமுறை சார்ந்த தேர்வுப்பாடங்களில் (DISCIPLINE SPECIFIC ELECTIVES) 28 இல் 12 இடங்களையும், மதிப்பு சேர்க்கை பாடங்களில் 14 இல் 12 இடங்களையும் கொண்டுள்ளது. “மீதமுள்ள 16 ஒழுக்கம் சார்ந்த தேர்வுப்பாடங்களில் கணினி மொழிகள் (4) அல்லது பயன்பாட்டு கணிதம் (10) தொடர்பானதாக உள்ளது, இதில் முழுமையான கணித பாடங்கள் இரண்டு மட்டுமே உள்ளன, அவை இயற்கணிதம் மற்றும் மெய் பகுப்பாய்வில் முக்கியமான உள்ளடக்கத்தை கொண்டிருக்கவில்லை. மேம்பட்ட முழுமையான கணிதம் பாடத்திட்டம் கிட்டத்தட்ட மறைந்துவிட்டது, அரை நூற்றாண்டு முன்னேற்றத்தை இந்த மாற்றம் பின்னோக்கி இழுத்துள்ளது,” என்று நரேன் கூறுகிறார்.
பொதுவாக ஒரு பருவத்தேர்வுக்கு 60 மணிநேரம் அன்ற அளவில் கற்பிக்க நீடிக்கும் பாடத்திட்ட முறை ஏற்கனவே நிலவிய சூழலில் இந்திய அறிவுத்திறன் அமைப்புமுறையின் பாடங்கள் கணிதம் அல்லாதவை என்பதால், பல ஆசிரியர்களுக்கு இந்த உள்ளடக்கத்தை கற்பிக்க 20 மணிநேரம் கூட ஆகாது. பெரும்பாலும் இதன் உள்ளடக்கம் சிந்திக்க தூண்டாமல் மனப்பாடம் செய்ய வேண்டிய வகையிலே உள்ளது என்று பேராசிரியர் ஹபீப் கூறுகிறார்.
கணித பாடத்திட்டத்தில் இந்திய அறிவுத்திறன் அமைப்புமுறை சேர்க்கப்படுவது மாணவர்களை வேலைவாய்ப்புக்கு ஏற்றவர்களாக மாற்றப் போவதில்லை என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர். இதில் உள்ள பகுதிகள் அனைத்தும் வெறும் அலங்காரச் சேர்க்கை மட்டுமே, அறிவியல் முன்னேற்றத்தில் எந்தப் பயனும் ஏற்பட போவதில்லை, இதற்கு பதிலாக, எண் முறைகள் மற்றும் புள்ளியியல் (STATISTICS) பயன்பாட்டு கணிதம் போன்றவை பொறியியலில் ஆராய்ச்சி செய்வதற்கு அவசியமானவை, மேலும் இவை முக்கிய பாடங்களில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்,” என்கிறார் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பி.வி. நவநீதகிருஷ்ணன்.
கணித மாணவர்களுக்கான மையக் கூறு இந்திய அறிவுத்திறன் அமைப்புமுறையில் இல்லாத போதிலும், விருப்பத் தேர்வில் (ELECTIVE COURSE) அந்த பாடங்கள் அதிக அளவில் இணைக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டு UG திட்டத்தில் கூடுதலாக நவீன கணிதப்பாடங்களை வழங்கியிருக்க வேண்டும். அதற்கு பதிலாக, சூத்திர அடிப்படையிலான எண்கணிதம், ஷல்வ சூத்திரங்களில் உள்ள வடிவியல் மற்றும் பாரதிய கண்டுபிடிப்புகள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது என்று பேராசிரியர் ஹபீப் கூறுகிறார். “நமது முன்னோர்கள் எண்கள் மற்றும் வடிவங்களை நேசிப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சிதான், இது கணிதத்தின் மீது மிகவும் நேர்மறையான அணுகுமுறைக்கு வழிவகுக்கும் என்பதும் உண்மைதான். ஆனால் இதற்குப் பொருத்தமான இடம் பல்கலைக்கழகத்தை விட பள்ளிதான். பல்கலைக்கழக கணிதப் பாடத்திட்டத்தில் சேரும் மாணவர் இன்றைய கணிதத்தையும் அதன் பயன்பாடுகளையும் அறிந்துகொள்ள வேண்டும்.” காலாவதியான கணித முறைகளையல்ல.
பாடத்திட்டம் தேவையான அளவிற்கு வரலாற்று அம்சங்களுடன் எதிர்காலத்திற்கு பொருத்தமானதாக கூடுதல் முக்கியத்தும் கொடுத்து தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவின் பாரம்பர்ய கணிதம் பற்றிய சிறப்பம்சங்களை விரிவுரைகள் அல்லது கருத்தரங்குகள் மூலம் மிக சிறப்பாக அறிமுகப்படுத்தலாம். கல்வி வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டுமெனில், தொழில் வல்லுநர்கள் பாடத்திட்டம் இறுதி செய்வதில் ஒரு பகுதியாக இருந்தால் போதுமானது. புதிய பாடத்திட்டம் சிறப்பாக வடிவமைக்க கல்வியாளர்கள் மற்றும் அந்தந்த பாடத்திட்ட நிபுணர்களுக்குத்தான் அதிக பொறுப்புள்ளது. நவீன கல்விக்கு மாற்றாக பாரம்பர்யம் என்ற பெயரில் பிற்போக்குத்தனமான சித்தாந்த திணிப்பு நடந்தால் மாணவர்கள் நம் சமூக வளர்ச்சியின் பங்கேற்பாளராக இருக்க முடியாது,” என்கிறார் பெங்களூருவின் கிறிஸ்ட் நிகழ்நிலைப் பல்கலைக்கழக கணிதத் துறையின் மூத்த பேராசிரியரும் கணிதத் தேவைகளுக்கான மையத்தின் இயக்குநருமான பிரதீப் ஜி சித்தேஷ்வர்.
19-9-25 மற்றும் 13-10-25 ஆகிய தேதிகளில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களில் வெளியான கட்டுரைகளை தழுவி எழுதப்பட்டது
எழுதியவர் :
✍🏻 தமிழில் – மோசஸ் பிரபு
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
