“சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை
– கு.மணி
பப்பர …. பப்பர …. பப்பர … ஒலிச் சத்தம் மாணவர்களின் காதுகளை கிழித்தது. சவ்வு மிட்டாய்காரர் தகரத்தால செய்யப்பட்ட நீண்ட புனல் போன்ற வடிவில் செய்யப்பட்ட ஒலி வாங்கிக்கொண்டு ஊதி கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் மாணவர்கள் காசிருப்போர் படையெடுத்து வந்தனர் சவ்வு மிட்டாய் வாங்கிட.
ராமண்ணாவின் சவ்வு மிட்டாய்க்கு பெரியவர் முதல் சிறியவர் வரை அடிமை. அவரின் ஊதல் சப்தம் கேட்டாலே பலர் அவர் முன் குவிந்திடுவர் காரணம் அவரது சவ்வு மிட்டாய் மட்டுமல்ல. அந்த சவ்வு மிட்டாயை சுற்றி இருக்கும் மூங்கில் மேலே இருக்கும் பொம்மையின் கைத்தாளத்தை வேடிக்கை பார்ப்பதற்கே ஒரு கூட்டம் கூடிவிடும்.
ராமண்ணா மிகவும் நல்லவர். அவரின் பரம்பரையே சவ்வுமிட்டாய் தொழில் செய்பவர்கள். ராமண்ணா காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து சவ்வுமிட்டாய் தயாரிக்க ஆரம்பித்துவிடுவார். சீனி பாகு, லெமன், கலர் முதலியவற்றை சரியான முறையில் கலந்து பக்குவப்படுத்தி அதை இழுத்துப் பார்த்து நீண்ட பெரிய மூங்கிலிலே சுற்றி விடுவார். அதன் மீது ஈக்கள் புகாத வண்ணம் தரமான சவ்வுக்காகிதம் கொண்டு சுற்றிவிட்டு மூங்கிலின் மேலே அழகிய பொம்மை ஒன்றை வைத்து அதற்கு சட்டை, பாவாடை முதலியவற்றை அணிவதோடு பொம்மை காதினில் கடுக்கணும் மூக்கினில் மூக்குத்தியும் பொம்மையின் இரு கைகளிலும் வட்டமான ஜால்ரா கருவி (சிஞ்சா) யை பொருத்திவிட்டு மூங்கிலை தனது தோளிலே சுமந்தபடி 8 மணிக்கெல்லாம் ஆரம்பப் பள்ளியின் வாசலுக்கு வந்து விடுவார். அதன் பின்பு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊர் சுற்றுவது என்று வாடிக்கையாக கொள்வார்.
ராமண்ணா காலை 8 மணிக்கு ஆரம்பப் பள்ளி வாசல் வந்தவுடன் அவரது பப்பர பப்பர ஓசை முழங்கிடும். ஆரம்பப்பள்ளியின் அருகே ஒருமணி நேரம் வியாபாரம். உணவு இடைவேளையின் போது உயர்நிலைப்பள்ளிஅருகே வியாபாரம் அதன் பின்பு ஊர் சுற்றி வியாபாரம் என வாடிக்கையாக வியாபாரம் செய்பவர். இவரின் ஊதல்சத்தம் கேட்டாலேசிறுவர் சிறுமியர் ஆர்வத்துடன் வெளியே வருவர்.
ராமண்ணா ராமண்ணா எனக்கு ஒரு வாட்ச், அன்னம், ரயில், வாத்து என மாணவர்கள் அனைவரும் அவரிடம் துளைத்துக் கொண்டு கேட்பர். ராமண்ணா ஒரு மிட்டாய்க்கு ஒரு விலை வைத்திருப்பார் 10 பைசா 20 பைசா 25 பைசா என டிசைனுக்கு தகுந்தவாறு சவ்வு மிட்டாயின் விலை அதிகரிக்கும். அதிகமாக வாட்ச் விற்பனையாகும். ஓசி மிட்டாய் கேட்டு ராமண்ணாவை குழந்தைகள் நச்சரிக்கும். சிறிது சவ்வுமிட்டாயைப் பிய்ந்து அவர்களது கன்னங்களில் ஒட்டி விடுவார். எந்தவித கள்ளம், கபடம் இல்லாது. குழந்தைகளைக் கூட அய்யா அம்மா என்றுதான் அழைப்பார். குழந்தைகளுக்கு ராமண்ணா மீது தனிப்பிரியம் இதுபோன்றுதான் உயர்நிலைப் பள்ளியிலும் விற்பனை..
அதோடு மட்டுமல்லாது ஊர் முழுவதும் வலம் வருவார். ஆண்கள், பெண்கள் என எல்லோரும் தங்களுக்குப்பிடித்த சவ்வுமிட்டாயை விரும்பிச் சாப்பிடுவர். யாரிடமும் கடுகடு என்று விழமாட்டார். யாராவது பையன் ராமண்ணா கடன் கொடுங்கள் நாளைக்கு தருகிறேன் என்றால் தம்பி இந்த வயதில் கடன் வாங்காதீர்கள் அது நல்ல பழக்கம் இல்லை. உங்களுக்கு சவ்வுமிட்டாய் வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அன்புடன் இலவசமாக கொடுப்பார்.இதுவே அவர் வாழ்வின் வாடிக்கையாகிப்போனது.
ஒருநாள் காலை தன் வேலையெல்லாம் முடித்துவிட்டு காலை 8 மணிக்கு தனது பப்பரப் பப்பர ஓசையை குழந்தைகளுக்கு அறிவித்தார். குழந்தைகள் வழக்கம்போல் சவ்வுமிட்டாய் வாங்க வந்தன. மூங்கிலில் உள்ள குச்சியில் உள்ள பொம்மையை கைத்தாளம் போட வைத்தார். குழந்தைகளும் அந்த பொம்மை போல கைத்தளம் போட்டுக்கொண்டு ஆடத் தொடங்கினார்கள். ராமண்ணா சவ்வு மிட்டாய் விற்பனை செய்து கொண்டிருந்தபோதே நிலை தடுமாறி கீழே விழுந்தார் சவ்வுமிட்டாய் மூங்கில் கட்டை “டம்“ என கீழே விழுந்தது.
சில குழந்தைகள் பயந்து போய் ஓட்டம் பிடித்தன. சில குழந்தைகள் ராமண்ணா ராமண்ணா என்று எழுப்பி பார்த்தனர் .அவர் எழுந்தபாடில்லை. குழந்தைகள் ஆசிரியைரை நோக்கி படையெடுத்தனர்.சார் ராமண்ணா கீழே விழுந்து விட்டார் சார் அவருக்கு என்னாச்சு என்று தெரியவில்லை. குழந்தைகள் மாணிக்கம் ஆசிரியரிடம் சொல்ல அவருடன் கமலா டீச்சரும் சென்றார்..
மாணிக்கம் அருகில் வந்து அவரது கை கால்களை கசக்கி விட்டனர். ஒன்றும் உணர்வில்லை. சுற்றிவர குழந்தைகள் நின்று கொண்டு அழுதவாறு இருந்தன. ராமண்ணாவிற்கு ஒன்றுமில்லை அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனால் சரியாயிடும். நீங்க எல்லோரும் அவரவர் வகுப்பிற்கு போங்க கமலா டீச்சர் அறிவுரை.
மனமில்லாமல் கண்கலங்கியவாறே குழந்தைகள் வகுப்புக்குச் சென்றனர். சார் முதல்லே ராமண்ணா வீட்டிற்கு தகவல் தெரிவியுங்கள். ஆம்புலன்ஸ்க்கு போன் செய்யுங்கள் மதிவண்ணன் ராமண்ணா குடும்பத்திற்கு தகவல் தந்த பின்பு பள்ளியின்அருகில் தொலைபேசி உள்ள வீட்டிற்குச்சென்று ஆம்புலன்ஸிற்கு போன்செய்தார்.. சிறிது நேரத்திற்கு பின்பு ராமண்ணாவின் உறவுகள் அனைத்தும் பதறி அடித்தபடி பள்ளிக்கு அருகில் வந்தனர். ஆம்புலன்சும் வந்தது. சார் யார் போன் செய்தது? நான் தான் சார். என் பெயர் மாணிக்கம் இந்த ஸ்கூல் டீச்சரா ஒர்க் பண்றேன்.
மாணிக்கம் அண்ணன் சவ்வுமிட்டாய் வித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து விட்டாருன்னு குழந்தைகள் வந்து சொன்னாங்க அதான் உடனே உங்களுக்கு கால் பண்ணினேன் ஆம்புலன்ஸில் வந்த நர்ஸ் உதவியாளர்கள் ராமையாவை தொட்டுப் பார்த்தார்கள்.
சார் உயிர் போய் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கு மேலே ஆகிருச்சு மாரடைப்பால் உயிர் பிரிஞ்சிடுச்சு. ஆக வேண்டிய காரியத்தை குடும்பத்தில் உள்ளவரிடம் சொல்லி பார்க்கச் சொல்லுங்க. இது இயற்கை மரணங்கிறதுனாலா தாரளமா பிணத்தை வீட்டுக்கு எடுத்து சொல்லுங்க இருந்தாலும் சில பார்மாட்டிகளை முடித்து தருகிறோம். ராமண்ணாவின் மனைவி, மகன் உறவினர் என கதறி அழுதனர். பள்ளிக்கூடம் விடுமுறை அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ஏ.இ.ஓ விடம் அனுமதி வாங்கி பள்ளிக்கு விடுமுறை அளித்தார். குழந்தைகள் அழுது கொண்டே தங்களின் வீட்டிற்கு சென்றனர்
ராமண்ணாவின் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. குழந்தைகள் கனத்த இதயத்துடன் அவரவர்கள் வீட்டிற்கு சென்றனர். மாலை ராமண்ணாவின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. சுடுகாடு எடுத்துச் செல்லப்பட்டது. நீ இறந்த பின்பு உன் பின்னால் வரும் கூட்டமே உன்னை முடிவு செய்யும் என்பார். முஃ ப்தி ஓமர்.
அதுபோல ராமண்ணாவின் இறுதி சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இவற்றிற்கெல்லாம் காரணம் ராமண்ணாவின் நல்ல உள்ளமும் அவரின் சவ்வுமிட்டாய் ருசியும் தான்.
மறுநாள் காலை எட்டு மணி ராமண்ணாவின் “ பப்பரப் பப்பர“ ஒலி ஏதும் கேட்கவில்லை. குழந்தைகள் அவர் விற்கும் இடத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். ராமண்ணா மிட்டாய் செய்து தருவது போன்றும் அந்த பொம்மை தாளமிடுவது போன்ற காட்சிகள் அந்த குழந்தைகளின் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. ஒவ்வொருவராக வந்து அந்த இடத்தை பார்த்துவிட்டு அழுதபடியே பள்ளிக்குள் சென்றனர்.
இப்படியே ஒரு மாதம் கழிந்தது திடீரென்று மீண்டும் “பப்பரப்பப்பர“ சத்தம் குழந்தைகளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஓடிவந்து பள்ளியின் நுழைவாயில் கேட்டருகே வந்து நின்றனர்.
ராண்ணாவின் மகன் முருகன் அந்த இடத்தில் சவ்வுமிட்டாய் விற்றுக் கொண்டிருந்தார். குழந்தைகள் அவரிடம் செல்ல தயக்கம் காட்டினர். அவரும் அப்பா போல அய்யாவே அம்மாவே வாங்க என்று அன்பாய் அழைத்தார். குழந்தைகள் ராமண்ணா இறந்து போயிட்டாரா? அவரு யாரு உங்க அப்பாவா? உங்க பேரு என்ன?
என்பேரு முருகன். நாங்க உங்களை முருகண்ணா என்று கூப்பிடலாமா? தாரளமாக் கூப்பிடுங்க முருகன்னா எனக்கு ஒரு வாட்ச் கட்டி விடுங்க எனக்கொரு மயில் வேணும்
”தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்பதை உணர்ந்த மகன் முருகன் ஒவ்வொருவருக்கும் கண்ணீர் வடித்தபடியே சவ்வு மிட்டாய் விற்பனையை தொடங்கினார். ராமண்ணா : சாரி முருகண்ணா! நாளைக்கும் வாங்க. அப்பா மாதிரியே சவ்வுமிட்டாய் ருசி அப்படியே இருக்கு என்ற குழந்தைகளின் பேச்சு முருகனுக்கு ஆறுதல் தந்தது. பப்பர பப்பர ஒலி மீண்டும் கேட்டது. குழந்தைப்பொம்மையின் கைதட்டல் சிறார்களை மகிழ்வித்தது.
எழுதியவர்:

– கு. மணி
த/பெ:குருசாமி
தெற்குப்புதுத் தெரு
சக்கம்பட்டி -625512
ஆண்டிபட்டி வட்டம், தேனி மாவட்டம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
