9500 தகவல் தொடர்பு தலைவர்கள், 72000 வாட்சப் குழுக்கள் – பீகார் தேர்தலுக்கு எப்படி பாஜக ஆயத்தமாகிறது – ஷங்கர் அர்னிமேஷ் (தமிழில்; கி.ரா.சு.)

 

பீகாரில் ஐ.டி. தலைவர்கள்தான் தேர்தல் பிரச்சாரத்தின் உண்மையான போராளிகள்.  வாட்சப் குழுக்கள் வாக்காளர்களுக்குக் கட்சியின் செய்திகளையும், முன்முயற்சிகளையும் கொண்டு செல்லும்.

ஷங்கர் அர்னிமேஷ்

ஜுலை 1, 2020

புதுதில்லி: பல மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட இணையவழி பேரணிகளை நடத்திய பிறகு பாஜக இப்போது இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தல்களை டிஜிட்டல் முறையில் போராட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.

பீகாரின் ஒவ்வொரு சக்தி கேந்திரத்திலும் கட்சி 9500 ஐ.டி. செல் தலைவர்களை நியமித்துள்ளது.  அவர்கள் பாஜகவின் அரசியல் செய்திகளை மக்களுக்குப் பரப்புவதில் முக்கியமான பங்கை வகிப்பார்கள்.

தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒரு பாஜக தலைவர், பீகாரின் இணையவழித் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த 9500 ஐ.டி.செல் தலைவர்கள்தான் உண்மையான போராளிகளாக இருப்பார்கள் என்று தெரிவித்தார்.

இந்த ஐ.டி.செல் தலைவர்களைத் தவிர, பாஜக ஒவ்வொரு பூத்துக்கு ஒன்றென 72000 வாட்சப் குழுக்களைத் தொடங்கவும் ஆயத்தமாகி வருகிறது.  தேர்தலுக்கு முன்பாகவே கட்சியின் முன்முயற்சிகளை வாக்களர்களுக்கு அளிக்கும் முயற்சி இது.  கடந்த இரண்டு மாதங்களில் கட்சி சுமார் 50000 வாட்சப் குழுக்களை உருவாக்கியுள்ளது.

இந்த வாட்சப் குழுக்கள் மூலமாக, கட்சி விவரிப்புகள் செய்யவும், பாஜக தலைவர்களின் உரைகள் அடங்கிய வீடியோக்களைப் பகிரவும், கட்சியின் செய்திகளை நேரடியாகக் கொண்டு சேர்க்கவும் செய்யும்.

இந்த வாட்சப் குழுக்களை பூத் அளவிலான தொண்டர்கள் நிர்வகிப்பர். அனைத்து ஐ.டி. செல் தலைவர்களும் பாஜகவின் தேசிய ஐ.டி.செல் தலைவர் அமித் மாலவியாவின் கீழ் பணிபுரிவர்.

மே மாதத்தில் கட்சி உயர்தலைமைக்கும் மாநிலத் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வாலுக்கும் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு 9500 ஐ.டி. செல் தலைவர்கள் நியமிக்கப் பட்டதாக தி பிரிண்ட்டிடம் பாஜக தலைவர் கூறினார்.

பீகாரில் 5500மண்டல்களும், 9500 சக்தி கேந்திரங்களும், 72000 பூத்துக்களும் உள்ளன.  ஒவ்வொரு சக்தி கேந்திரத்திலும் குறைந்தது 6-7 பூத்துக்கள் உள்ளன.

The traditional BJP voter is upper caste, upper class & a staunch ...

”இந்த முறை பாரம்பரியமாக நடைபெறும் பிரச்சாரத்திலிருந்து சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் வேறுபடும் என்பது தெளிவாக இருப்பதால், நாங்கள் எங்களது டிஜிட்டல் கட்டமைப்பை மக்களைச் சென்றடைய பெருமளவு மேம்படுத்திக்  கொண்டிருக்கிறோம்.  தொடக்கத்திலிருந்தே பாஜகதான் தேர்தல் பிரச்சாரத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முன்னணியில் இருக்கிறது – அது 2004இல் வாஜ்பாயின் (முன்னாள் பிரதமர்) முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி செய்தியாகட்டும் அல்லது 3 பரிமாண வேன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாகட்டும், 2014 இல் மிஸ்டு கால் சோதனையாகட்டும், நாங்கள்தான் அந்தப் போக்கை நிலைநிறுத்தியவர்கள்” என்று பாஜக தலைவர் கூறினார்.

”கோவிட் காரணமாக இருக்கும் வரம்புகள் காரணமாக, இந்த முறை தொழில்நுட்பத்தை மிகப் பிரும்மாண்டமான முறையில் பயன்படுத்த எங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்  என்று மேலும் கூறினார்.

2 கோடி வாக்காளர்களை இணைக்கப் போகும் வாட்சப் குழுக்கள்

கட்சியின் பிரச்சாரத்தை விளக்கும் போது, மண்டல ஐ.டி. செல் தலைவர்கள் செய்திகளையும், பேரணி வீடியோக்களையும், உரைகளையும் சக்தி கேந்திர ஐ.டி. செல் தலைவர்களுக்கு முதலில் அளிப்பார்கள் என்றும், பிறகு பூத் அளவில் அளிப்பார்களென்றும் பிரிண்டுக்கு பாஜக தலைவர் கூறினார்.

ஆனால், டிஜிட்டல் பிரச்சாரத்தின் மிக முக்கியமான கருவியாக வாட்சப் குழுக்கள் இருக்கும்.  அவற்றின் மூலமாக கட்சி 2 கோடிப் பேரை இணைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு வாட்சப் குழுவிலும் 256 உறுப்பினர்களை இணைக்க முடியும்.  எனவே இந்த வகையில், கட்சி ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் 2 கோடி மக்களைச் சென்றடைய முடியும் என்றார் அந்தத் தலைவர்.

The Infamous BJP IT Cell Is In News Again, For All The Wrong Reasons

பீகார் ஐ.டி.செல் தலைவர் மனன் கிருஷ்ணன் தி பிரிண்டிடம் கூறியதாவது: இந்தக் கட்டமைப்பு பூத் தலைவர், சக்தி கேந்திர தலைவர் ஆகியவற்றுடன் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.  அரசியல் செய்திகளை அளிப்பதிலும், விவரிப்பதிலும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் முக்கியமான கருவியாக இருப்பதால் இந்தக் குழுக்களில் இளம், தொழில்நுட்ப ஆர்வலர்களைக் கொண்டு செயல்படுவோம்.  டிஜிட்டல் பிரச்சாரத்துக்கு ஆயத்தமாவதற்காக எங்கள் ஐ.டி. தலைவர்கள் பலர் ஜூம் லைசன்ஸ் கூட எடுத்துள்ளனர்.”

”வாட்சப் குழுக்களில் ஐந்து குழுக்களுக்கு மட்டுமே ஒரு நேரத்தில் தகவல் அனுப்ப முடியும் என்ற வரைமுறை உள்ளதால், சரியான நேரத்தில் தகவல்களை முன்னனுப்பப் பல குழுக்களை நாங்கள் உருவாக்க வேண்டியுள்ளது.  ஒரே சமயத்தில் 2-3 கோடி மக்களைச் சென்றடையும் திறன் எங்களுக்கு இருந்தால், எங்களுக்கு தொலைக்காட்சியோ, செய்தித் தாள்களோ பிற ஊடகங்களோ மக்களைச் சென்றடைவதற்குத் தேவைப்படாது.”

பிரச்சாரங்களுக்கு முப்பரிமாண வேன்களும் திரும்பக் கூடும்

ஜூன் 7 அன்று தனது இணையவழிப் பிரச்சாரத்தின் போது மத்திய இணையமைச்சர் அமித் ஷா நிதிஷ் குமாரின் அரசில் “லால்டன் ராஜ்”இலிருந்து “எல்.இ.டி. ராஜுக்கு”ச் சென்று விட்டார்.

மாநிலம் முழுதும் 72000 பூத்துகளில் அவரது உரை எல்.இ.டி. வழியாகத் திரையிடப்பட்ட்து.

2014இல் உத்தர பிரதேசத்திற்கு பொறுப்பாக இருந்த பாஜக பொதுச்செயலாளர் ஷா தொலைக்காட்சிகளும், செய்தித்தாள்களும் கூடச் சென்றடையாத தொலைதூர இடங்களைத் தனது முப்பரிமாண வேன்கள் மூலம் சென்றடைந்து மக்களுடன் தொடர்பு கொண்டதாக சில நிருபர்களிடம் கூறினார்.

இந்த வேன்களில் முப்பரிமாண புரொஜெக்டர்கள் இருந்தன.  அவை பிரதமர் மோடியின் உரைகளை நேரடியாக ஒளிபரப்பின.  பீகார் தேர்தல்களுக்கு இவை திரும்ப வரக்கூடும்.

”பெரிய பேரணிகள் நடைபெறாவிட்டால், பிறகு நாங்கள் கிராமங்களில் முப்பரிமாண வேன்களைப் பயன்படுத்துவோம்.  அதில் பிரதமர் மோடி, ஷா ஆகியோரின் உரைகளை ஒளிபரப்பலாம்.  எல்.இ.டி.க்கள், முப்பரிமாண வேன்களைப் பயன்படுத்தி இன்னும் அதிக சிக்கனமான வழியில் மக்களைச் சென்றடையலாம்” என்றார் இன்னொரு பாஜக தலைவர்.

தி பிரிண்ட்

தமிழில்; கி.ரா.சு.