வாழ்வை விளையாட்டாக நினைக்காதவர் – அகவி
கவிதை:வண்ணத்தைக் கொண்டுபோனவள் – அகவி
அகவி கவிதை
மொழியற்ற பூக்களின் கவிதைகள் – அகவி
சாதி மயிர் அகவி கவிதை – விநாயக மூர்த்தி
மனிதர்களுக்குள் கோயில் எல்லை
வேறுவேறாய்
கட்டப்பட்டது
அப்பட்டமாய் புலப்படும்
கிராமத் திருவிழாக்களில்
அரசாங்கக் கவனிப்பில்
அசலூர்களில்
பெருங்கோயில்களில்
குடும்ப சகிதமாய்ப் போய்
மொட்டை போட்டு
கவுரவமாய் செலுத்துவர்
காணிக்கை
அங்கெல்லாம் மொட்டை போடும் மயிர்
எந்த சாதியென
எவனுக்கும் தெரியாது
திருவிழா வரும்போதெல்லாம்
பூஜை போக்குவரத்து
வெற்றுச் செயல்தான்
அர்த்த ராத்திரி
ஆடல் பாடலே
பிரதானம்
நன்கொடை
கொடுக்க விரும்பினாலும்
வாங்குவதில்லை நம்மிடத்தில் அவர்கள்
மாடி வீடு படிப்பு பதவி
நிலபுலம்
வளர்ந்து நிற்பவனையும்
பொருட்படுத்துவதில்லை
நாளுக்கொரு நாட்டியம் வகையறாக்களின் பங்களிப்பு
கச்சேரி
கரகாட்டம் கதா காலட்சேபம்
சனங்களும்
ஊரில் திருவிழா என்று
கறிகாய் ஆக்கி
அருகாமை உறவுகளை அழைக்கின்றனர்
போன மாதந்தான் முயல்வேட்டை திருவிழா கொண்டாடினாலும்
பெரிய தெரு திருவிழா என்றால்
சனங்களுக்கும் இருப்பு கொள்ளாது
நீலா அண்ணி
நெற்றி நிறைய நீருடன்
சும்மாடு கோலி
சடச்சுட பொங்கல் பானையை
தூக்கி வருவதைப்பார்த்து
நான் தான் கேட்டேன்
கோயிலுக்குள் போகலாமா நாம் என
நமக்குஅங்க வேலை இல்ல
‘நமக்கு இடம் இருக்கு தம்பி’
கோயிலத் தள்ளி
சனங்க அங்க தான் பொங்க வைக்கும்’
கோயிலுக்குள் மட்டுந்தான்
உடமாட்டாங்க
தெருவுக்கு சாமி வராதே ஒழிய
அங்கனையே ஒதுங்கி நின்னு
படைக்கலாம்’
மாரியாத்தா அருள் ஒளிர
அண்ணி சொன்னார்கள்
‘முயல் வேட்டை மாரியம்மனை
கும்புட்டதோட நிக்க வேண்டியதுதானே
திரும்ப என்ன
பெரிய தெரு மாரியம்மன் மயிறு தெரு மாரியம்மன்’
என்று சொல்ல
வாய் வரைக்கும்
வார்த்தை வந்தது சொல்லவில்லை
இந்த ஊரில்
மாவட்டம்
ஒன்றியம்
சட்டமன்றம்
பாராளுமன்றமென
அரசியல் மயிருக்குக்
குறையொன்றுமில்லை.
– விநாயக மூர்த்தி
அன்பின் பதிலி கவிதை – அகவி
கடிதம் எழுதுதல்
தன்னை எழுதுதல்
இப்போதெல்லாம்
கடித கர்ப்பிணி
யாய்
தினம்தினம் அலையும்
தபால்காரரை
காணவே முடியவில்லை
நொடியில்
குரல் கேட்கும்
முகம் பார்க்கும் காலமிது
அன்பின் கசிந்துணர்வை தரவோ பெறவோ
இயலுகிறதா
நவீன கரங்களால்.
அன்புள்ள
எனத் தொடங்கி
உயிருக்குள்
உயிர் ஊறவைக்கும்
கடுதாசி காலம்
அரிதாகிப்போனது
உறவுமுறைக் கடிதங்கள்
எனும் பாடத்தை
நடத்தி முடித்தேன்.
பின் பயிற்சிக்காக
ஐம்பது அஞ்சல் அட்டை வாங்கி அப்பாவுக்கோ அம்மாவுக்கோ
கடிதம் எழுதுங்கள்
என்றேன்
சிலர் மட்டும்
மாமாவுக்கு
சித்தப்பாவுக்கு
தாத்தாவுக்கு என எழுதினர்
பிறகுதான் தெரிந்து
திடுக்கிட்டேன்
இவர்களுக்கு தாய் தந்தை
இல்லை என்று
பதிலித் தாய் தந்தையாய்
மாமா, தாத்தா
சித்தப்பா
போதுமா
மனிதராக இருக்கும்
எவரும் இருக்கலாம்
பதிலித்தாய் தந்தையாய்
இன்று
பதிலித் தபால்காரராய் இருக்கும்
கூரியர் இளைஞரைப் போல.
தொலைந்தது எது? கவிதை – அகவி
உங்கள் செல்பேசி எண்
தொலைந்துவிட்டது
என் எண்ணும்
தொலைந்துவிட்டதா
இதோ எண் ……….
நமது எண்கள்
நம் இருவரின்
கையில் இருந்தும்
ஓராண்டாய்
பேசிக்கொள்ளாமல்
இருப்பதன் காரணம்
விளங்கவில்லை
தொலைந்தது
நாமா? எண்களா?
என் மரணச்செய்தியை
நானே சொல்லமுடியுமா?
ஆனால்
என் இருப்பை
நான்தான் வெளிப்படுத்த வேண்டும்
உங்கள் இருப்பை
உங்களைப் போல
வெளிப்படுத்த யாருளர்
உங்களைத் தவிர ?
முகவரியிலிருந்து
எப்போது மனிதன்
எண்களால் அடையாளப்பட்டானோ
அப்போதிருந்துதான்
தொடங்கியது
கழித்தல்!
வாசல் வழி
மனிதம் வெளியேறத்
தொடங்கியது
பாஸ்வேர்டை தொலைத்ததனால்
அடைந்த நட்டத்தால்
பைத்தியமானான்
மெத்தப்படித்த ஒருவன்!
நீங்களும்
நானும்
சித்த நலத்துடன் இருக்கிறோம் இதுபோதும்
இப்போதைக்கு
எண்களாய் மாறி
என்ன
கிழிக்கப்போகிறோம்?
ஞானத்தின் சுவடு – அகவி
மூன்று மாதத்திற்கு
முன்பு நிகழ்ந்த
மரணம் ஒன்றை
விசாரிக்க
குடும்பத்துடன்
வீட்டிற்கு வந்தார்
உறவினர் ஒருவர்
தகப்பனின்
உயிரை
தன் கண்ணீர் கோடுகளால்
வரைந்து வரைந்து பார்க்கும்
என் மனைவியை
அழவைக்காமல்
எதையும் நினைவூட்டாமல்
பேசி சென்றவர்
நிகழ்காலத்தை
அதிநிதானத்தில்
கையாள்கிறார்
என்று மட்டும்
வரையறுத்தல் தகுமா?
துக்கச் சொற்களற்று
துக்கத்தைப் பகிர்தல்
என்பது
நிகழ்ப்பொழுதைப்பாதுகாத்தல்
எதையுமே கட்டத் தெரியாமல்
எதையுமே
அவிழ்க்கத் தெரியாமல்
தொளதொள சொற்களால்
காலத்தைக கடப்பர் அனேகர்
அதிகம் பேசாமலேயே
உங்களை
இருகக் கட்டியும்
ஏதோ ஒன்றை
அவிழ்த்துவிடவும் செய்ய
உங்கள்
இல்லத்திற்கு
யாராவது வந்திருக்கின்றனரா?
எங்கள்
வீட்டிற்கு வந்த உறவினர்
இந்நேரம்
ஒரு மிகப்பெரிய
சந்தோசமான
ஒன்றை
மிகச்சாதாரன தொனியில்
பகிர்ந்து கொண்டிருப்பார்
யாரிடமாவது








