ஒரு நாக்கின் நீளம்
*****************************
அதிகாரத்தின்
நாக்குக்குச்
சிறகுகள் முளைக்கத் தொடங்குகின்றன.
அது வாய்க்கு வெளியே
வெகுதூரம் பிரயாணம் செய்து
சென்று சேருமிடம் கொலைக்களம்.
வளையும் உலோகத்தாலான அதன் நாக்கு
பொய்களின் உலைக்களத்தில்
வடிவமைக்கப்படுகிறது.
செய்நேர்த்தியுடன் செய்வதற்கு
நாட்பட்ட தீயில்
இதமான சூட்டில்
வாட்டி எடுக்க வேண்டும்.
நடனமிடும் நாக்கு
அழகாகக் குரைப்பதற்குப் பயிற்சிகள்
எடுத்துக் கொள்கிறது.
கால்களை நாவால் சுத்தம் செய்யும்
தொழில் நுட்பம் பழக்க
நிறைய தொழிற்கூடங்கள்..
சுருக்கம் விழுந்த வயிறுகளின் பட்டினிதான்
பொய்களின் நாவுகளுக்கான
ரொட்டித்துண்டு.
சப்பாத்துகளின் தோல் ருசியில்
நாகரிகமாகப் பருத்துவிடுகிறது
நாக்கு.
உலகின் எந்த நதியைவிடவும் நீளமானது
உலகின் எந்த மலையை விடவும் பெரிதானது
உலகின் எந்தக் கடலைவிடவும் ஆழமானது
பொய்களின் நாக்குதான்.
அது புரள்வதற்காக வதைமுகாம்களின் குருதியில்
உமிழ்நீர் சுரந்துகொள்கிறது.
கோட்டை அகழியின்
முதலைகளைத் தீனியாக்கிக் கொள்கிறது.
அதன் ஒற்றை உடலைச் சுமப்பதற்கு
எட்டுக்கால் நாய்கள்
எப்போதும் தயாராய் இருக்கின்றன..
கான்கிரீட் சவப்பெட்டியில் பாதுகாப்பான அறையில்
தனது காதலியுடன் இறந்துபோன ஒரு குரங்கை
காட்டுக்கு ராஜாவாகிவிட்டதாகக்
கதை சொல்கிறது.
இப்போதோ சுவற்றில் எழுதப்பட்ட
சரஜீவோ என்கிற வார்த்தையைக் கண்ட
பாபிலோனிய பெல்ஷாஜ்ஜர் போல
மரணத்தின் வீதிகளில்
தலைதெறிக்க ஓடத் தொடங்கிவிட்டது.
கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்
பின்குறிப்பு
இட்லரின் பிரச்சார அமைச்சனை அறிஞர் அண்ணா–கோணிப்புளுகன் கோயபல்ஸ் என்பார்.
இட்லர் செத்த பின்பும்கூட கோயபல்ஸ் கடைசி நேரத்தில்
—
சிவப்பு மிருகங்களுக்கெதிராக -தலைநகரின் மையத்தைப்பாதுகாப்பதற்காக இட்லர் முன்னணிப்படையில் நிற்கிறார்- என்று புளுகினான்.
அதற்கு ஒரு எழுத்தாளன் பதில் எழுதினான்—
உண்மையில் அந்தக்குரங்கு தனது காதலியோடு கான்கிரீட் சவப்பெட்டியில் பாதுகாப்பான அறையின்
ஆழத்தில் இறந்து கிடக்கிறது–என்று.
பின்பு பாசிஸ்டுகள் அனைவரும் செஞ்சேனையால் அழிக்கப்பட்டனர். வரலாறு மறப்பதேயில்லை.